Thursday, January 25, 2024

சாணக்கியன் 93

 

ந்திரகுப்தனின் தாய்மாமனும் ஓய்வு பெற்ற சிறைக் காப்பாளனைப் போலவே ராக்ஷசரிடம் வருவதில் பெரும் சங்கடத்தை உணர்ந்தார். என்ன தவறு செய்திருப்போம், எதனால் ராக்ஷசர் ஒரு சாதாரணக் குடிமகனான அவரை வரச் சொல்கிறார் என்ற கேள்விகளுடன் ராக்ஷசரின் எதிரே வந்து நின்று தலை தாழ்த்தி கைகூப்பி வணங்கினார்..

 

ராக்ஷசர் தன் வழக்கமான கண்டிப்பான பார்வை பார்த்து விட்டுஉமக்கு ஆச்சாரியர் விஷ்ணுகுப்தரை எவ்வளவு காலமாகத் தெரியும்?” என்று கேட்டார்.

 

சந்திரகுப்தனின் தாய்மாமனுக்கு ஆச்சாரியர் விஷ்ணுகுப்தர் யாரென்று உடனே நினைவுக்கு வரவில்லை. “எனக்கு எந்த ஆச்சாரியரையும் தெரியாது பிரபு. நான் படிப்பறிவில்லாதவன்என்று அவர் யதார்த்தமாகப் பதில் சொன்னார்;.

 

அவர் கிண்டலாகப் பேசுவது போல் தோன்றினாலும் உண்மையில் யதார்த்தமாகத் தான் பேசுகிறார் என்பது புரிந்தாலும் ராக்ஷசர் தன் முகத்தில் கடுமையைக் கூட்டியபடி சொன்னார். “அவர் யாரென்று தெரியாமலா அவருடன் உங்கள் வீட்டுப் பிள்ளையைத் தட்சசீலத்திற்கு அனுப்பி வைத்தீர்கள்?”

 

அப்போது தான் சந்திரகுப்தனை அழைத்துச் சென்ற ஆசிரியரை ராக்ஷசர் கேட்கிறார் என்பது அந்த முதியவருக்குப் புரிந்தது. “ஓ அவரைக் கேட்கிறீர்களா? அவர் பெயர் எனக்கு சடாரென்று நினைவுக்கு வரவில்லை. அவர் என் மருமகனுக்குக் கல்வி கற்றுத் தருவதாகச் சொல்லி அவனை அழைத்துப் போவதற்கு முன்பு எங்களுக்கு அறிமுகமில்லாதவர். அதன் பின்னும் அவரை ஒரே ஒரு முறை தான் சந்தித்திருக்கிறேன்.”

 

அது எப்போது?”

 

அவர் என் மருமகனின் கல்வி முன்னேற்றம் பற்றிச் சொல்வதற்கு எங்கள் வீட்டுக்கு வந்த போது

 

நகைச்சுவையாகப் பேசும் நோக்கம் அவருக்கு இல்லா விட்டாலும் கூட அவர் பேசுவதே பிடிகொடுத்துப் பேசாத மாதிரி தான் இருக்கிறது என்று நினைத்த ராக்ஷசர்அது தான் எப்போது என்று கேட்டேன்என்று கடுமையாகக் கேட்க நினைத்தாலும் தெரிந்த விஷயத்தை இந்த ஆளிடம் கேட்க அதிக சக்தி விரயம் செய்ய விரும்பாமல் மற்றதைக் கேட்டுத் தெரிந்து கொள்ள எண்ணினார். ”உங்கள் வீட்டில் பிள்ளைகள் அனைவரும் கல்வி கற்றவர்களா?”

 

என் மகன் உட்பட நாங்கள் யாரும் கல்வி கற்றவர்கள் அல்ல பிரபு. ஆனால் என் மருமகனுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அந்த ஆசிரியர் முன்பின் தெரியாதவராக இருந்தாலும் பெரிய மனதுடன் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்

 

முன்பின் தெரியாத ஒருவருடன் உங்கள் மருமகனை எப்படி நீங்கள் அனுப்பினீர்கள்? தட்சசீலக் கல்விக்கூடத்தில் கற்பது சாதாரண விஷயமல்லவே, அப்படி இருக்கையில் அவ்வளவு தொலைவில் அவனை அனுப்பி வைத்துக் கற்பிக்கும் அளவு உங்களிடம் செல்வமிருக்கிறதா?”  

 

என் சகோதரி தெய்வ பக்தி மிக்கவள் பிரபு. திருமணமாகி சில வருடங்களிலேயே அவள் கணவனைப் பறி கொடுத்தாலும் அவள் கடவுள் நம்பிக்கையை இழந்து விடவில்லை. அதற்கு அருள் புரியும் விதமாக அவள் மகனுக்கு இந்த வாய்ப்பை இறைவன் அளித்தாரோ என்னவோ? அந்த ஆசிரியர் தானாகவே வந்து அவனுக்கு நல்ல அறிவிருக்கிறது. கல்வி கற்க வைத்தால் நல்ல எதிர்காலமும் அமையும் என்று சொல்லி எங்களிடம் எதையும் எதிர்பார்க்காமல், தானே கல்வி கற்க வைப்பதாக வாக்களித்து அவனை அழைத்துச் சென்றார்.”

 

ராக்ஷசரை விஷ்ணுகுப்தர் குழப்பினார். அவர் முன் பின் தெரியாத ஒரு ஏழைச் சிறுவனிடம் இவ்வளவு அன்பு ஏன் காட்ட வேண்டும்? ராக்ஷசர் முணுமுணுத்தார். “ஆச்சரியமாக இருக்கிறது

 

எங்களுக்கும் தான் பிரபு

 

ராக்ஷசர் தன்னையும் மீறி எழவிருந்த புன்னகையை ஆரம்பத்திலேயே அடக்கினார். “உங்கள் மருமகன் கடைசியாக எப்போது உங்களைக் காண வந்தான்?”

 

அவன் இது வரை ஒரு முறை கூட வரவில்லை பிரபு. தட்சசீலம் அருகில் இல்லையே.”

 

அவரது மருமகன் மூலமாக விஷ்ணுகுப்தரைப் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பில்லை என்பது புரிந்ததால் ராக்ஷசர் சுவாரசியம் இழந்தார். ஆனாலும் அவர் மனதில் முன்பு எழுந்த கேள்விக்குப் பதில் கிடைக்காமல் அந்த முதியவரை அனுப்ப அவருக்கு மனம் வரவில்லை. அவர் கேட்டார். “உங்கள் மருமகனை மட்டும் ஆச்சாரியர் தேர்ந்தெடுத்துத் தன்னுடன் அழைத்துச் செல்லக் காரணம் என்ன? அவனை ஆச்சாரியர் எப்போது எப்படி சந்தித்தார்

 

அவர் போகிற வழியில் அவன் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறான் பிரபு. அவன் சிறு வயதிலிருந்தே விளையாட்டுப் பிரியன். மாடு மேய்க்கும் போதும் மாடுகளை மரங்களில் கட்டி வைத்து விட்டு அவன் அரசன் போலவும், அவன் நண்பர்கள் பிரஜைகள் போலவும் பாவித்து விளையாடுவார்கள். சதா காலம் தன்னை அரசனாகப் பாவித்து விளையாடும் அவனை நானே பல முறை கண்டித்திருக்கிறேன். ஏழைகள் அதிகம் கனவு காணக்கூடாது. அது கண்டிப்பாக மனவருத்தத்திலேயே முடியும் என்று சொல்வேன். ஆனால் தந்தை இல்லாத பிள்ளை என்று என் தங்கை அவனைக் கண்டிப்பதே இல்லை.... அவன் அப்படி விளையாடிக் கொண்டிருந்த போது அவனைக் கண்ட அந்த ஆசிரியர் அவனுக்குச் சிறப்பான எதிர்காலம் இருப்பதாகச் சொல்லி அவனைக் கல்வி கற்க அழைத்துப் போனார். அவர் எதிர்பார்த்தபடியே அவன் நன்றாகக் கற்பதாகவும், பல கலைகளில் முதலாமிடத்தில் இருப்பதாகவும் சென்ற முறை வந்த போது சொன்னார். நானும் என் தங்கையும் சந்தோஷப்பட்டோம். அவர் மட்டும் அவனை அழைத்துச் சென்றிருக்கா விட்டால் அவன் என் மகனைப் போலவே மாடு மேய்த்துக் கொண்டிருப்பான்...”

 

எப்போதுமே தன்னை அரசனாகப் பாவித்து விளையாடும் ஒரு சிறுவனை விஷ்ணுகுப்தர் தன்னுடன் அழைத்துப் போயிருக்கிறார் என்ற தகவல் ராக்ஷசரை யோசிக்க வைத்தது. அவர் மெல்லக் கேட்டார். “உமது மருமகன் பெயர் என்ன?”

 

சந்திரகுப்தன் பிரபு

 

ராக்ஷசர் திடுக்கிட்டார். விஷ்ணுகுப்தர் தற்போது வாஹிக் பிரதேசத்தின் அரசனாக முடிசூட்டியிருப்பதும் சந்திரகுப்தன் என்ற இளைஞனைத் தான்.... இரண்டும் ஒருவன் தானா? இல்லை, ஒரே பெயரில் இருவர் இருக்கின்றார்களா? அவர் மெல்லக் கேட்டார். “தற்போது உங்கள் மருமகன் அரசனாகி விட்டானா?”

 

சந்திரகுப்தனின் மாமனுக்கு ராக்ஷசரும் விளையாட்டாகப் பேசியது வேடிக்கையாக இருந்தது. புன்னகையுடன் சொன்னார். “ஏழைகளின் கனவு என்று பலித்திருக்கிறது பிரபு? கற்றுத் தேர்ந்ததனால் அவன் அந்தக் கனவைத் தாண்டியிருப்பான். அவனும் ஒரு நாள் ஆசிரியனாகலாம். அதுவே எங்களைப் பொருத்த வரை மிக உயர்வு தான். ஆனால் அவன் வழக்கமான கல்வியில் மட்டுமல்லாமல் வாள் பயிற்சியிலும், போர்ப்பயிற்சியிலும் கூட வல்லவனாக இருப்பதாக அந்த ஆசிரியர் பெருமையுடன் சொன்னார்

 

அதைக் கேட்கையில் அரசன் சந்திரகுப்தன் இவர் மருமகன் தான் என்று அவரது உள்ளுணர்வு சொல்லியது. அது உண்மையானால் இவருக்கு அதை ஆச்சாரியர் தெரிவித்திருக்கவில்லை போலிருக்கிறது. ராக்ஷசர் அந்தத் தகவலால் உள்ளூரப் பரபரப்படைந்தாலும் அதை வெளியே காட்டவில்லை. மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவனை அரசனாக்கி ஆச்சாரியர் வெறும் ஆசிரியர் அல்ல தான் என்று தன்னை நிரூபித்து விட்டிருப்பதாக ராக்ஷசருக்குத் தோன்றியது. இப்போது யோசிக்கையில் விஷ்ணுகுப்தரின் சபதம் தனநந்தன் நினைப்பது போல பைத்தியக்காரத் தனமாகத் தோன்றவில்லை. மாடு மேய்ப்பவனை ஒரு தேசத்தின் அரசனாக்க முடிந்த அவருக்கு, மகதத்திலும் அதை அரங்கேற்ற முடியாதா என்ன? தர்க்க ரீதியாகச் சரியாகத் தோன்றினாலும் யோசிக்கையில் அது கசந்தது. ஏதோ ஒரு பகுதியும் மகதமும் ஒன்றாகி விட முடியாது என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்ட ராக்ஷசர் யோசனையுடன் சந்திரகுப்தனின் மாமனைப் பார்த்தார்.

 

ஒருவேளை இவர் மருமகன் தான் வாஹிக் பிரதேசத்தின் அரசன் என்றால் இவர் சகோதரி இங்கேயிருப்பது நல்லது. அவசியமானால் அந்தத் தாயை வைத்து சந்திரகுப்தனைக் கட்டுப்படுத்தலாம்

 

ராக்ஷசர் மெல்லச் சொன்னார். “தங்கள் சகோதரியிடமும் எனக்குச் சில கேள்விகள் கேட்க இருக்கின்றன

 

அவள் இப்போது இங்கு இல்லையே பிரபு. சென்ற பௌர்ணமியன்று அவளை அழைத்துப் போக சந்திரகுப்தன் பல்லக்கோடு ஆட்களை அனுப்பியிருந்தான். அவள் போய் விட்டாள். என்னையும் ஒரு முறை வந்து போக அவன் சொல்லியிருந்தான். ஆனால் நீண்ட பயணம் போய் வரும் நிலையில் என் உடல்நிலை இல்லை என்பதால் நான் போகவில்லை...”

 

ராக்ஷசருக்கு அந்தத் தகவல் ஏமாற்றத்தை அளித்தது. அவள் இங்கிருப்பது ஆபத்து என்று தான் முன்கூட்டியே சந்திரகுப்தன் அவளை அழைத்துச் சென்று விட்டானோ? இது அவர்களது அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு முன் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கூட இருக்கலாம். ஆனால் அவர்களால் எப்படி வலிமையான மகதத்தை எதிர்க்க முடியும், அவர்களால் என்ன தான் செய்ய முடியும் என்பது தான் அவருக்கு விளங்கவில்லை.

 

(தொடரும்)

என்.கணேசன்   




2 comments:

  1. super ... going interestingly

    ReplyDelete
  2. ராக்‌ஷசர் .... விஸ்ணுகுப்தரை புரிந்து கொள்ள முடியாமல் குழம்பும் இடங்களை அற்புதமாக காட்டியுள்ளீர்கள் ஐயா....

    அதிலும்... அந்த அரசன் சந்திரகுப்தன் தான் என்று தெரிந்து கொள்ளும் இடம்....
    சந்திரகுப்தன் தன் தாயை அழைத்துக் கொண்டு சென்ற இடம்....
    இந்த சம்பவங்களை கூறிய விதம் ... அதில் அவர் மனநிலையை காட்டிய விதம்....அருமை...

    ReplyDelete