Monday, January 22, 2024

யோகி 33

 


ரசுராமன் சதானந்தனிடமிருந்து கற்றது அதிகம். போய் இரண்டு ஆண்டுகள் கழித்து அந்த மந்திர தந்திரச் சடங்குகளில் அவர் சதானந்தனுடைய உதவியாளனாக மாறினார். அவர் என்னவெல்லாம் செய்கிறார், எப்படி எல்லாம் செய்கிறார் என்பதை அருகிலிருந்து பார்த்தது பரசுராமனுக்கு மிக உதவியாக இருந்தது. அடுத்து மூன்று ஆண்டுகள் பரசுராமனையே சில பிரயோகங்களைச் செய்யச் சொல்லி, அவர் செய்ததில் அவரையறியாமல் இருந்த சிறு தவறுகளை அவர் திருத்தினார். நாளடைவில் பரசுராமனும் மந்திர தந்திரங்களில் ஓரளவு நல்ல தேர்ச்சி பெற்றார்.

 

ஆனாலும் கூட அந்த வேண்டுதல்களுக்காக பக்தர்கள் செலுத்திய காணிக்கையை அவர் பரசுராமனுக்குத் தந்ததில்லை. பரசுராமன் அதை பெரிதுபடுத்தியது இல்லை. காரணம் அவர் கற்றுத் தந்ததற்கும் பரசுராமன் எந்தக் கட்டணமும் தந்ததில்லை. அவர் பணம் எதுவும் தருவதில்லை என்பதற்காக பரசுராமன் தான் செய்யும் வேலைகளில் குறை இருக்கும்படி அலட்சியமாக இருந்ததுமில்லை.

 

பரசுராமன் சதானந்தனுடன் ஏழாண்டு காலம் இருந்தார். ஏழாண்டுகள் கழித்து ஒரு நாள் காலை சதானந்தன் அவரை அழைத்து ஒரு பணப்பையைத் தந்தார். அதில் பத்து லட்சம் ரூபாய் இருந்தது. 

 

பரசுராமன் குழப்பத்துடன் கேட்டார். “இது எதுக்கு?”

 

இங்கே என் கூட இருந்து நிறைய வேலை செஞ்சிருக்கே.. அதுக்கு நான் இதுவரை எதுவும் கொடுத்ததில்லை.”

 

சரி இப்ப எதுக்கு தர்றீங்க?”

 

நான் ரெண்டு அல்லது மூனு நாள்ல இறந்துடுவேன். அதனால தான் இப்பவே தர்றேன்

 

பரசுராமன் அதிர்ந்தார். சதானந்தனுக்கு அப்போது வயது அறுபத்தொன்று தான் ஆகியிருந்தது. அவர் பார்க்க ஆரோக்கியமாகவே தெரிந்தார். பரசுராமன் கண்கள் தானாகக் கலங்கின. ஆனால் சதானந்தன் அமைதியாகச் சொன்னார். “வருத்தப்பட எதுவுமில்லை. ஆரோக்கியமாய் இருக்கறப்பவே சாக முடியறது ஒரு விதத்துல பாக்கியம் தான். இனி நீ என்ன செய்யப் போறேன்னு தீர்மானிச்சுக்கோ. இங்கேயே இருந்து இந்த ஆசிரமத்த நடத்துறதுன்னாலும் நடத்தலாம். போயிடறதுன்னாலும் போயிடலாம்…”

 

பரசுராமனுக்கு அங்கே அவரில்லாமல் அவர் ஸ்தானத்தில் ஆசிரமம் நடத்த மனமிருக்கவில்லை. அவருக்கு வேறு சிலவற்றைக் கற்கும் ஆர்வம் சமீப காலமாக ஏற்பட்டிருந்தது. அதைக் கற்கச் செல்ல நினைத்தார். அவர் அதை சதானந்தனிடம் சொன்ன போது அவர் அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் தலை அசைத்தார்.

 

பின் கடைசியாக அவர் பரசுராமனுக்கு ஒரு அறிவுரை சொன்னார். “பணம் சம்பாதிக்கறது முக்கியம்னாலும் சக்திகளைப் பணத்துக்காக எப்பவுமே விற்காதே. ஒரு தர்மத்துக்கு உட்பட்டு நீ எப்பவும் நடந்துக்கற வரைக்கும் உன் சக்திகள் உன்னைக் காப்பாத்தும்.”       

 

அன்றே அவர் தன் வேலையாளுக்கும் ஒரு பெரிய தொகையைக் கொடுத்தார்.  மீதியுள்ள பணத்தைத் தர்ம காரியங்களுக்குத் தந்து விட்டார். இரண்டு நாட்கள் கழித்து அதிகாலையில் அவர் இறந்து போனார். பரிசோதித்த டாக்டர் மாரடைப்பைக் காரணமாகச் சொன்னார்.

 

பரசுராமன் அடுத்த நாளே அங்கிருந்து கிளம்பினார். சென்னை சென்று பெற்றோருடன் ஒரு மாதம் இருந்து விட்டு அடுத்து வூடு வித்தைகளைக் கற்க ஹைத்தி தீவுக்குக் கிளம்பினார்.

 

 

ரசுராமனின் ஹைத்தி அனுபவங்களும் அவருக்கு மிக சுவாரசியமாகவும், பல அமானுஷ்ய மந்திரவாத நுட்பங்களைக் கற்றுத் தருவனவாகவும் இருந்தன. ஆனால் இந்தியாவில் ஒரு நல்ல குரு மிகச் சுலபமாகக் கிடைத்தது போல ஹைத்தியில் அவருக்கு ஆரம்பத்திலேயே கிடைத்து விடவில்லை. சில போலிகளைத் தாண்டியே வூடு நுட்பங்களை ஆழமாய் அறிந்த ஒரு குருவை அவரால் கண்டுபிடிக்க முடிந்தது.

 

சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன்பே பெனின் என்ற மேற்கு ஆப்பிரிக்க நாட்டிலிருந்து ஹைத்திக்கு குடியேறி இருந்த அந்த வயதான குருவுக்கு ஆங்கிலம் முழுவதுமாகப் புரிந்ததும், ஆங்கிலத்தில் அரைகுறையாகவாவது பேச முடிந்ததும் பரசுராமனுக்கு பேருதவியாய் இருந்தது. அந்த வூடு குரு ஆங்கிலத்தில் சொல்ல முடியாததை சைகையாலும், முகபாவனைகளாலும் அவருக்குத் தெரிவிக்க முடிந்தவராக இருந்தார்.  

 

உண்மையில் இரு வகை உலகங்கள் இருப்பதாக அந்த வயதான குரு சொன்னார். காண முடிந்த உலகம், காண முடியாத சூட்சும உலகம் என்ற இரு வகை உலகங்களில், இரண்டாவது வகை காண முடியாததாக இருந்த போதிலும், அந்த உலகம் காண முடிந்த உலகத்தைப் போலவே நிஜமானது என்று சொன்னார். இரண்டு உலகங்களும் எப்போதும் ஒன்றோடு ஒன்று பின்னி இணைந்தே இருக்கிறது, இணைந்தே இயங்குகிறது என்று சொன்னார். பொதுவாக மனிதன் இறந்த பின்னர் சூட்சும உலகிற்குள் பிரவேசிக்கிறான், அதை அறிகிறான் என்ற போதும், வாழும் போதே அவன் வூடு சடங்குகளின் மூலம் அந்த உலகைத் தொடர்பு கொள்ளலாம் என்று சொன்னார்.

 

சர்வ வல்லமையுள்ள இறைவனுக்கு அடுத்தபடியாக, சக்தி வாய்ந்த பல வூடு தேவதைகளும், அதற்கும் அடுத்தபடியாக இறந்தவர்களின் ஆவிகளும் அந்தச் சூட்சும உலகில் இருப்பதாகவும்  சொன்ன அவர் அவற்றை எப்படித் தொடர்பு கொள்வது என்று விளக்கமாகச் சொல்லிக் கொடுத்தார். முறைப்படியான வழிபாடுகள், சடங்குகள் மூலமாகத் தேவதைகளை அணுகினால் ஒரு மனிதன் அந்த மேலான உலகில் இருந்து எல்லா விதமான உதவிகளும் பெற முடியும் என்று சொன்ன அவர் விரிவான சடங்கு முறைகளும், ஆப்பிரிக்க மொழியில் மந்திரங்களும், பாடல்களும் சொல்லித் தந்தார். பரசுராமனுக்கு அந்தச் சடங்குகளைக் கற்றுக் கொள்வதில் பெரிதாய் சிரமம் தெரியவில்லை. அந்த வூடு குரு அவற்றின் சூட்சுமங்களை, பின்னணியில் உள்ள அர்த்தங்களோடு சொல்லிக் கொடுத்ததால் அவற்றைச் சுலபமாகப் புரிந்து கொள்ளவும், நினைவில் கொள்ளவும் முடிந்தது. ஆனால் அந்த ஆப்பிரிக்க மந்திரங்கள் கற்க அவர் நிறையவே சிரமப்பட்டார் என்றாலும் ஓரளவு சீக்கிரமாகவே கற்றுக் கொண்டார்.

 

தான் கற்றுக் கொண்டவைகளில் பரசுராமனுக்கு மிகவும் சுவாரசியமாகவும், பரபரப்பாகவும் இருந்தது, இறந்தோரது ஆவிகளையும், தேவதைகளையும் யார் மீதாவது வரவழைத்துக் கேள்விகள் கேட்பது தான். வழிபாடுகள், சடங்குகள், மந்திரங்கள் மூலமாக தேவதைகளையும், இறந்தோரது ஆவியையும் ஒரு குறிப்பிட்ட மனிதன் மீது வரவழைக்கும் வித்தையை அவர் அந்த வூடு குருவிடம் கற்றுக் கொண்டார்.

 

பெரும்பாலும் அந்த வூடு வழிபாட்டுச் சடங்குகளை வூடு ராணி எனப்படும் பெண்களே செய்வது அந்தக் காலத்தில் வழக்கமாய் இருந்தது. ஏனென்றால் அந்தச் சடங்குகளை ஆரம்பிப்பது பெரிதல்ல; ஆவிகள் பிரவேசமான பின் போகப் போக எல்லாம் கட்டுப்பாட்டை மீறிப் போவதுமுண்டு. அந்தச் சமயங்களில் பாண்டித்தியமும், நல்ல அனுபவமும் கொண்டவர்களாலேயே எல்லாவற்றையும் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். அதனால் சடங்குகளை அறிந்திருந்தாலும், பயம் காரணமாக பலரும் தலைமை ஏற்று நடத்தத் துணிவதில்லை.  ஆனால் அவனுடைய வூடு குரு அதில் நிபுணர் மற்றும் வயதான அனுபவஸ்தர் என்பதால், அந்தச் சடங்குகளைச் சிறப்பாகவே நடத்தினார். பரசுராமனுக்கு உடனிருந்து அவற்றை எல்லாம் கவனிக்கும் வாய்ப்பு கிடைத்தது.  

 

அப்படி ஒரு தேவதையோ, ஆவியோ ஒருவனை ஆக்கிரமிக்கும் போது அந்த மனிதன் தன்னுடைய இயல்பான அம்சங்களை இழந்து அந்த தேவதை அல்லது ஆவியின் அம்சங்களைப் பெற்று விடுவதை பரசுராமன் பார்த்து பல முறை வியந்திருக்கிறானர். சுமார் எழுபது வயதையும் தாண்டிய கிழவனை ஆக்கிரமித்திருப்பது இளைஞனின் ஆவியாகவோ, ஆக்ரோஷ சக்தியாகவோ இருக்குமானால் அந்த கிழவனின் உடல் முறுக்கேறி தோற்றத்திலும், குரலிலும், பேச்சிலும், செய்கைகளிலும் இளமையின் முறுக்கு தெளிவாகவே தெரியும். சாதாரணமாக அந்தக் கிழவருக்கு சாத்தியமாகவே இருக்காத செயல்களை எல்லாம் அந்த வேளையில் கிழவருக்கு சர்வ சாதாரணமாகச் செய்ய முடியும்.  வேகமாய் நடனமாடுவது, நீண்ட தூரங்களுக்குத் துள்ளிக் குதிப்பது எல்லாம் அந்த சக்தியால் ஆட்கொள்ளப்பட்டிருந்த காலத்தில் வெகு உடலில் குடியேறுவது கிழவரது ஆவியாக இருக்குமானால் எல்லாமே தலைகீழாகி விடும். நகர்வது கூட மிக நிதானமாக இருக்கும்.  சிறிது நேரத்திலேயே களைப்பு மேலிடும். மூச்சு வாங்கும். பேச்சு பலவீனமாக வரும். இதெல்லாம் நேரில் பார்க்கையில் பரசுராமனுக்குப் பிரமிப்பாக இருக்கும்.

 

இந்த நேரங்களில் தனக்கு என்ன நடக்கிறது என்பதோ, என்ன பேசினோம், என்ன கேட்டோம் என்பதோ ஆக்கிரமிக்கப்பட்ட ஆளுக்குத் தெரியாது. கடைசியில் மயங்கி விழும் அவனுக்கு விழிப்புணர்வு வரும் போது நினைவில் எல்லாமே வெறுமையாக இருக்கும். அவன் மீது குடியேறிய சக்தி வலிமையானதாக இருந்தால் அவன் மயங்கி விழும் போது அவன் உடலில் இருக்கும் இயல்பான சக்திகள் அனைத்தும் தீர்ந்து போயிருக்கும். அவன் விழிப்புணர்வு பெற்றும் பழைய நிலைக்குத் திரும்புவது சில மணி நேரங்கள் கழித்தே இருக்கும்.

 

தொடரும்

என்.கணேசன்


4 comments:

  1. Interesting...so Parasuram is going to call Saithra's soul?

    ReplyDelete
  2. Wow interesting .waiting for saithra's ....

    ReplyDelete
  3. யோகாலயம் விசயத்துல பரசுராமன் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்துவார்...என நினைக்கிறேன்....

    ReplyDelete