Monday, January 29, 2024

யோகி 34

 

ரசுராமன் ஹைத்தி தீவில் சில ஆண்டுகள் தங்கி நிறைய கற்றார். சதானந்தனைப் போலவே அந்த வூடு குருவும் அவருக்கு நிறைய நுணுக்கங்களையும், சூட்சுமங்களையும் சொல்லித் தந்தார். எதெல்லாம் ஆபத்தானது, எதில் எல்லாம் மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை அவர் மனதிலும் அறிவிலும் அழுத்தமாகவே பதிய வைத்தார். முக்கியமாய் நல்ல மனிதர்களுக்குத் தீங்கு ஏற்படுத்தும் எந்தச் செயலிலும் ஈடுபடுவது ஆபத்தானது என்பதைத் திரும்பத் திரும்பச் சொன்னார். அப்படிச் செய்தால் நல்ல மனிதர்கள் அப்போதைக்குப் பாதிக்கப்பட்டாலும், தங்கள் நன்மைகளின் காரணமாக சீக்கிரமாகவே அந்தப் பாதிப்பிலிருந்து மீண்டு விடுவார்கள் என்றும், ஆனால் அவர்களுக்குத் தீங்கு செய்ய முயன்றவர்கள் பலமடங்கு தீமைகளைத் தங்கள் வாழ்க்கையில் காத்திருந்தாவது அனுபவிக்க வேண்டிவரும் என்று அவர் சொன்னார்.

 

சதானந்தனும் பரசுராமனிடம்  கிட்டத்தட்ட இதையே வலியுறுத்திச் சொல்லி இருந்ததால், பரசுராமன் அதைத் தன் வாழ்க்கையில் வேத வாக்காக எடுத்துக் கொண்டார். வூடு குருவிடமிருந்து பிரிந்த போதும் அவருக்கு மிகவும் வருத்தமாகத் தான் இருந்தது.  அவர் கிளம்பும் போது வூடு குரு அவருக்கு ஆசி வழங்கிக் கடைசியாய் ஒரு அறிவுரை சொன்னார். “உன் நோக்கத்தின் படியே உன் செய்கைகள் இருக்க முடியும். உன் செய்கைகளின் படியே உனக்கு நல்லதும், கெட்டதும் அமைய முடியும். அதனால் உன் நோக்கத்தைத் தூய்மையாக வைத்துக் கொள். உன் நோக்கம் தவறாக இருந்தால், அதன் பின் எந்த சக்திகளும் உன்னைக் காப்பாற்ற முடியாது

 

ஹைத்தியிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பி வந்த பரசுராமன்  இந்தியாவில் முழுமையாக பாரம்பரிய முறையில் வூடு சடங்குகளைச் செய்ய முடியாது என்பதைப் புரிந்து வைத்திருந்தார். அதனால் சதானந்தனிடம் கற்றதையும், வூடு குருவிடமிருந்து கற்றதையும் வைத்து நிறைய பரிசோதனைகள் செய்து தானே ஒரு கலவை முறை உருவாக்கி அந்த மந்திர தந்திரங்களின் விற்பன்னர் ஆனார். அதிலும் ஒரு சக்தி வாய்ந்த மேல் நிலையை எட்ட, மேலும் சில ஆண்டுகள் அவருக்குத் தேவைப்பட்டது. ஒரு முறை அவரிடம் வந்தவர்கள் திரும்பத் திரும்ப வர ஆரம்பித்தார்கள். ஒரு முறை அவரை அழைத்தவர்கள் திரும்பத் திரும்ப அழைக்க ஆரம்பித்தார்கள். அவர் வாடிக்கையாளர்கள் அவரால் ஏற்படுத்த முடிந்த விளைவுகளில் பிரமிப்பும், பரம திருப்தியும் அடைந்தார்கள். அவர்கள் மூலம் வேறு பலரும் அவரை நாடி வர ஆரம்பித்தார்கள். தங்கள் பகுதிகளுக்கு அவரை அழைத்தார்கள்.

 

பரசுராமன் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் சீக்கிரமே மிகவும் பிரபலமானார். சிலர் அவரை யோகி என்றழைத்தார்கள். சிலர் அவரை தெய்வாம்சம் கொண்டவராக நினைத்தார்கள். கோடிக் கணக்கில் அவர் காலடியில் பணத்தைக் கொட்டினார்கள். மகன் பொறுப்பில்லாமல் திரிகிறான் என்று முன்பு கவலைப்பட்ட பரசுராமனின் பெற்றோர் மகன் எட்டிய உயரத்தைப் பார்த்துப் பெருமைப் பட்டார்கள். அவர் தாயும் தந்தையும் சில மாத இடைவெளிகளில் இறந்து போனார்கள். பெற்றோரின் மறைவுக்குப் பின் பரசுராமன் அதிகம் வெளிநாட்டுப் பயணங்களிலேயே இருந்தார்.

 

அருணாச்சலம் தன் தாய்மாமன் மகன் படிப்படியாக முன்னேறியதையும், மந்திர தந்திரங்களில் செய்து காட்டிய வித்தைகளையும் பார்த்து அதிசயித்தவர். இப்போது பரசுராமன் அவரை அழைத்துப் பேசியவுடன் சைத்ரா, டாக்டர் வாசுதேவன் கொலைகள் விஷயமாக பரசுராமனிடம் பேசினால் என்ன என்று யோசித்தார். யோசிக்க, யோசிக்க, பரசுராமனுடனான நாளைய சந்திப்பு சுவாரசியமாக இருக்கும் என்று அவருக்குத் தோன்ற ஆரம்பித்தது.

 

யோகாலயத்தில் தொடர்ந்த நாட்களில் பெரிதாகவோ, புதிதாகவோ எதையும் ஷ்ரவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. வகுப்புகள் பயனுள்ளதாய் இருந்தன. வகுப்புகளை நடத்தியவர்களும் சிறப்பான முறையிலேயே அனைத்தையும் சொல்லித் தந்தார்கள்.  ஸ்ரீகாந்த் வழக்கம் போலவே கண்காணிக்கப்பட்டான். அவன் எப்போதும் போலவே அது தெரியாமல் தனக்குத் தோன்றியபடியெல்லாம் இயல்பாக நடந்து கொண்டான். இந்த நாட்களில் பிரம்மானந்தர் யோகாலயத்துக்குள்ளேயே இருந்த போதிலும் அவர் ஷ்ரவன் பார்வையில் படவில்லை.

 

பொதுவாக வெளியார் வாகனங்கள் யோகாலயத்தின் உட்புறம் நுழைய அனுமதி இல்லை என்ற போதும் பிரபலமான முக்கியஸ்தர்களுக்கு விதிவிலக்கு இருந்ததை ஷ்ரவன் கவனிக்க முடிந்தது. ஒரு நாள் வகுப்பு இடைவேளையில் அவர்கள்க்ரீன் டீகுடித்துக் கொண்டு இருந்த போது ஒரு விலையுயர்ந்த கார் வெளி கேட்டைத் தாண்டி உள்ளே வருவதை ஜன்னல் வழியே அவன் பார்த்தான். ஸ்ரீகாந்த் அந்தக் கார் நம்பரைப் பார்த்தவுடனேயே ஒரு பிரபல முன்னணி நடிகரின் கார் அது என்பதைக் கண்டுபிடித்து ஷ்ரவனிடம் தெரிவித்தான்.

 

யோசித்த போது ஷ்ரவனுக்கு சைத்ரா கொலை வழக்கில் இருக்க முடிந்த இன்னொரு கோணமும் திடீரென்று புலப்பட்டது. ஒரு வேளை இப்படி வெளியே இருந்து வந்து போனவர்கள் யாராவது கூட அவள் கொலைக்குக் காரணமாக இருந்திருக்கலாமோ?

 

கடைசி நாளுக்கு முந்தைய இரவு நீண்ட நேரம் ஷ்ரவனுக்கு உறக்கம் வரவில்லை. ஸ்ரீகாந்தின் குறட்டையின் ஒலி அன்று கூடியது கூட அதற்குக் காரணமாய் இருக்கலாம் என்று நினைத்தபடியே ஷ்ரவன் படுக்கையிலிருந்து எழுந்தான். ஜன்னல் வழியே நிலவொளி உள்ளே படிந்தது மிக ரம்மியமாய் இருந்தது. ஷ்ரவன் ஜன்னலருகே சென்று நின்று கொண்டு நிலவையும், வெட்ட வெளியையும் ரசித்தான். ஜன்னலின் ஒரு ஓரப்பகுதியில் நின்று பார்த்தால் வெளி கேட் தெரியும். ஏதோ யோசனையுடன் ஷ்ரவன் அப்படி நின்று வெளிகேட்டைப் பார்த்தான். அப்போது ஒரு வெள்ளை நிற பென்ஸ் கார் உள்ளேயிருந்து வெளியே சென்று கொண்டிருந்தது. 

 

ஷ்ரவன் ஆர்வத்துடன் அந்தக் காரைக் கூர்ந்து கவனித்தான். அந்த பென்ஸ் காரின் கருப்புக் கண்ணாடிகள் மேலே ஏற்றப்பட்டு இருந்ததால் உள்ளே இருப்பது யார் என்று அவனால் பார்க்க முடியவில்லை. காரின் எண்ணைப் பார்த்தான். தற்போது நடப்பு சென்னை ரெஜிஸ்டிரேஷன் வரிசையில் இருந்தது. கேட்டைத் திறந்து நின்றிருந்த கூர்க்கா பயபக்தியுடன் சல்யூட் அடிப்பதை ஷ்ரவன் பார்க்க முடிந்தது. காருக்குள் இருந்தது பிரம்மானந்தா தானா, அல்லது வேறு யாராவதா என்று யோசித்தபடியே படுக்கையில் ஷ்ரவன் சாய்ந்தான். ஸ்ரீகாந்தின் குறட்டை ஒலி சற்று குறைய ஆரம்பித்ததால் அவனுக்குச் சீக்கிரமே உறக்கம் வந்தது.  

 

கடைசி நாள் காலை வகுப்புக்கு வந்த ஒரு துறவி பேசும் போது, இப்போது சொல்லித் தரும் பயிற்சிகளை எல்லாம் தொடர்ந்து 21 நாட்கள் செய்பவர்கள் அடுத்த நிலைப் பயிற்சிக்கு அடுத்த மாதம் வரலாம் என்றும், அதில் மிக ஆழமான நிறைய நுட்பங்கள் சொல்லித்தரப்படும் என்றும் சொன்னார்.

 

மதிய உணவின் போது ஷ்ரவன் ஸ்ரீகாந்திடம் ஷ்ரவன் கேட்டான். “நீ அடுத்த மாதம் அடுத்த பயிற்சிகள் படிக்க வருவாயா?”

 

ஸ்ரீகாந்த் சொன்னான். “ஐயோ, அதுலயும் வந்து பிரம்மானந்தா புராணம் கேட்க எனக்குப் பொறுமையில்லை ஷ்ரவன். பிரம்மானந்தா பாடம் எடுக்க வந்தாலாவது அந்த ஆளை எதாவது கேள்விகள் கேட்டு கலாய்க்கலாம். அந்த ஆள் அடுத்த வகுப்புகள் எடுக்கவும் வர மாட்டாராம். அதனால நான் கண்டிப்பாய் வர மாட்டேன். போரடிச்சுடும்.”

 

ஸ்ரீகாந்த் வராவிட்டால் யோகாலயத்து ஆட்கள் நிம்மதியடைவார்கள் என்று நினைத்த போது ஷ்ரவன் முகத்தில் புன்னகை அரும்பியது.

 

மதிய வகுப்பிற்கு ஸ்வாமினி கல்பனானந்தா வந்தாள். வயது சுமார் நாற்பத்தைந்திலிருந்து ஐம்பதிற்குள் இருக்கலாம் என்று ஷ்ரவன் யூகித்தான். கல்பனானந்தாவின் தோற்றத்தில் சாந்தமும், கம்பீரமும் தெரிந்தன.  அவள் பேசியதில் புத்திசாலித்தனம் இருந்தது. இத்தனை நாட்கள் வகுப்பில் சொல்லித் தந்த பயிற்சிகளைத் தொடந்து செய்ய வேண்டிய அவசியத்தை வார்த்தை ஜாலங்கள் இல்லாமல் எளிமையாகவும் தெளிவாகவும் அவள் விளக்கினாள். தியானம் செய்யத் தீர்மானித்த பின் அதைச் செயல்படுத்தும் விதங்களில் இருக்கும் சிக்கல்கள் என்ன, அவை ஏன் ஏற்படுகின்றன, அவற்றைத் தவிர்க்க என்னவெல்லாம் செய்ய வேண்டும், என்பதை விளக்குகையில் அவள் சொன்ன குறிப்புகள் உபயோகமாக இருப்பதாக ஷ்ரவனுக்குத் தோன்றியது. ஸ்ரீகாந்த் கூட வழக்கமான இடைமறித்தல், சலிப்பு, கிண்டல் இல்லாமல் கூர்ந்து கவனித்துக் கேட்டான்.

 

பின் யோகாலயம் ஆன்மீக மார்க்கத்தில் ஆற்றும் பணிகள் என்ன, யோகாலயத்தின் சிறப்புகள் என்ன என்று முடிவுரையில் அவள் விளக்கி விட்டுச் சொன்னாள். “யாருக்கு என்ன சந்தேகம் இருந்தாலும் கேட்கலாம். நான் முடிந்தவரை உங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய முயற்சிக்கிறேன்.”


(தொடரும்)

என்.கணேசன்




2 comments:

  1. Finally yogi yaarunu therinjidichi..

    ReplyDelete
  2. "நல்ல மனிதர்கள் அப்போதைக்குப் பாதிக்கப்பட்டாலும், தங்கள் நன்மைகளின் காரணமாக சீக்கிரமாகவே அந்தப் பாதிப்பிலிருந்து மீண்டு விடுவார்கள்".... இது முற்றிலும் உண்மை.... சிலர் சூழ்ச்சிகளின் மூலம் ஒரே வருடத்தில் கடன் நிலைக்கு சென்று மீண்டு வந்தேன்....

    ReplyDelete