Thursday, September 21, 2023

சாணக்கியன் 75

 

முதல் கலவரம் முடிந்து நான்கு நாட்கள் எந்த அசம்பாவிதமும் நடக்காமல் எல்லாப் பகுதிகளிலும் அமைதி நிலவியது. ஆனால் பிலிப்பாலும் அவனுடைய படைகளாலும் அமைதியாக இருக்க முடியவில்லை. என்ன நடக்குமோ, எப்போது நடக்குமோ என்று தொடர்ந்து எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கையில், வெளியே அமைதி நிலவினாலும் கூட எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களின் மன அழுத்தம் அதிகரிக்காமல் இருப்பதில்லை. ஏனென்றால் வெளியே நிலவும் அமைதி நிச்சயமில்லாததால் அதுகுறித்து சந்தோஷப்பட்டு அமைதிக்குத் திரும்ப மனம் சம்மதிப்பதில்லை.

 

முதல் முறையாக பிலிப் ஆச்சாரியரின் புத்திசாலித்தனத்தை உணர்ந்தான். அவர்கள் கேகயத்திற்கு எதிராகப் பயன்படுத்திய தந்திரத்தை இப்போது ஆச்சாரியர் பயன்படுத்துவது போலத் தோன்றியது. அலெக்ஸாண்டர் கேகயத்துக்கு எதிராகப் பயன்படுத்திய யுக்தி போல ஆச்சாரியர் ஏதோ ஒரு யுக்தியைப் பயன்படுத்தக் காத்திருக்க வாய்ப்பிருக்கிறது. அது என்ன என்று தெரியாதவரை நிம்மதியாக இருக்க முடியாத நிலையில் பிலிப் இருந்தான்.

 

அடுத்த கலவரம் ஐந்தாவது நாள் அனைத்து இடங்களிலும் நடந்தது.  இந்த முறை முதியவர்களும், சிறுவர்களும் வீதிகளில் முழக்கமிட்டபடி சென்றார்கள். அவர்களுடன் சில இளைஞர்களும், நடுத்தர வயதினரும் கூட இருந்தார்கள் என்றாலும் அதிகமான இளைஞர்களும், நடுத்தர வயதினரும், சில இடங்களில் பெண்களும் வீட்டின் கூரைகளின் மேலிருந்தும், மரங்களின் மீதிருந்தும், மறைவான இடங்களில் இருந்து கொண்டும் கற்களை எறிந்து வீரர்களைத் தாக்கினார்கள். தாக்கப்பட்டவர்களிலும் அதிகமாக யவன வீரர்களாக இருந்தார்கள். பல இடங்களில் இருந்தும் சரமாரியாக கற்கள் வீசப்பட்டதால் யவன வீரர்கள் கடுமையாகக் காயமடைந்தார்கள். எதிரிலோ அருகிலோ இல்லாமல் தொலைவிலிருந்தோ, மறைவிலிருந்தோ கற்கள் வீசப்பட்டதால் வீசியவர்களைப் பிடிக்க சில சமயங்களில் குதிரைகளிலிருந்து அவர்கள் இறங்கிச் செல்ல வேண்டியிருந்தது. அது அவர்களுக்கு மேலும் பிரச்சினையாகியது. ஒருவனை அவர்கள் பிடிக்க முடிவதற்கு முன் பலரிடமிருந்து காயப்பட வேண்டியிருந்தது.

 

மாளவத்தில் ஓரிடத்தில் சிறுவர் கூட்டம் ஒன்றை மாளவப் படைத்தலைவன் வீரசேனனும், யவனப்படைத் தலைவன் ஒருவனும் சேர்ந்து கண்டார்கள். பல இடங்களில் தங்கள் வீரர்கள் காயப்பட்டிருந்ததால் யவனப்படைத்தலைவன் இந்தச் சிறுவர்களிடம் அந்தக் கோபத்தைக் காட்டித் தணித்துக் கொள்ளத் தீர்மானித்தான். அவன் வாளை உருவிப் பாய முற்பட்ட போது வீரசேனன் அதிர்ந்தான். அவனுக்கு இந்த வயதில் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். மேலும் குழந்தைகளிடம் வீரத்தைக் காட்டுவது ஒரு வீரனுக்கு அழகல்ல என்ற அபிப்பிராயமும் அவனிடம் இருந்தது. அந்த யவனப்படைத் தலைவனைத் தடுத்து விட்டு அந்தச் சிறுவர்களிடம் கடுமையான குரலில் வீரசேனன் சொன்னான். “கலைந்து செல்லுங்கள் சிறுவர்களே. இல்லா விட்டால் சிறுவர்கள் என்றும் பாராமல் நாங்கள் உங்களைத் தண்டிக்க வேண்டி வரும்

 

ஒரு சிறுவன் வீரசேனனிடம் கேட்டான். “நம் பூமியில் இவர்கள் ஆதிக்கம் செய்வது ஏன்? நாம் இவர்கள் மண்ணுக்குச் சென்று ஆக்கிரமித்தால் இவர்கள் பொறுத்துக் கொள்வார்களா? பின் ஏன் நாம் மட்டும் இவர்கள் நம்மை ஆள்வதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்?”

 

வீரசேனன் என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்து நிற்க யவனப் படைத்தலைவன் கோபத்துடன் வீரசேனனிடம் சொன்னான். “இந்த அளவு பேசுபவர்களை சிறுவர்கள் என்று விட்டு விட்டால் நாளை மேலும் அதிகம் பேர் இவர்களுடன் சேர்ந்து கொள்வார்கள். ஏன் இவர்களிடம் பேசிக் கொண்டு இருக்கிறாய்? முதலில் தாக்கு அவர்களை

 

வீரசேனன் தன்னையும் அறியாமல் யவனப் படைத்தலைவனுக்கும், சிறுவர்களுக்கும் இடையில் குதிரையை நகர்த்தினான். கடுமையாக விழிகளை உருட்டிசென்று விடுங்கள் சிறுவர்களே. இது என் கட்டளைஎன்று மிரட்ட சிறுவர்கள் ஆபத்தை உணர்ந்தவர்களாக வேகமாக அங்கிருந்து கலைந்து சென்றார்கள். வீரசேனன் யவனத்தலைவனிடம் சொன்னான். “நம் கோபத்தைச் சிறுவர்களிடம் காட்டுவது நம் வீரத்துக்கு அழகல்ல

 

யவனப் படைத்தலைவன் கோபத்துடன் ஏதோ பதில் சொல்ல முற்பட்ட போது தொலைவில் குதிரைகள் பல வேகமாக வரும் ஓசையும், “புனித பாரதம் வாழ்க, பாரதத்திற்கே வெற்றிஎன்ற வீர முழக்கமும் கேட்டன. அவர்களும் அவர்கள் வீரர்களும் உடனே சத்தம் கேட்ட திசை நோக்கி விரைந்தார்கள். சந்திரகுப்தன் தலைமையில் வந்திருந்த வீரர்கள் பராக்கிரமத்தோடு அவர்களைத் தாக்க ஆரம்பித்தார்கள். அந்தத் தாக்குதலிலும் கூட அவர்கள் அதிகம் குறி வைத்தது யவனர்களைத் தான். இருபக்கத்தினரும் ஆக்ரோஷமாகப் போரிட்ட போதும் சந்திரகுப்தனும், அவன் வீரர்களும் மின்னல் வேகத்தில் இயங்க முடிந்தவர்களாக இருந்ததால் எதிரிகளை வீழ்த்துவதிலும் காயப்படுத்துவதிலும் அவர்கள் வெற்றி கண்டார்கள்.

 

அதன் பின் அவர்கள் அங்கே அதிகம் தாமதிக்காமல் வந்த வழியே வேகமாகத் திரும்பிச் சென்றார்கள். வீரசேனனும் அவனுடைய சில வீரர்களும் அவர்களைத் துரத்திக் கொண்டு விரைந்தார்கள். யவனப் படைத்தலைவனும், எஞ்சியிருந்த ஒரு சில யவன வீரர்களும் அவர்களுடன் செல்லத் தயங்கிப் பின்தங்கினார்கள்.

 

ன் முன் கடுங்கோபத்துடன் வந்து நின்ற யவனப்படைத் தலைவனை பிலிப் கேட்டான். “என்ன ஆயிற்று?”

 

யவனப்படைத் தலைவன் கோபத்தில் குரல் நடுங்கியபடி சொன்னான். “உங்களை வந்து சந்தித்துத் தகவலைச் சொல்ல எனக்கு உயிர் மிச்சமிருக்கிறது சத்ரப். நம் படையினர் பலர் அந்தப் பாக்கியம் இல்லாமல் உயிர்விட்டும், உயிருக்குப் போராடிக் கொண்டுமிருக்கிறார்கள்.”

 

பிலிப் அந்தப் படைத்தலைவன் தோளில் தோழமையுடன் கை வைத்துமுதலில் அமைதியடை. உட்கார். தண்ணீர் குடிஎன்று சொன்னான். அவன் பார்வையால் கட்டளையிட அவன் சேவகன் வேகமாக ஒரு பெரிய குடுவையில் தண்ணீர் கொண்டு வந்து அந்த யவனப் படைத்தலைவனிடம் தந்தான்.

 

படைத்தலைவன் அங்குள்ள இருக்கையில் அமர்ந்து தண்ணீரைக் குடித்த பின் ஓரளவு அமைதி அடைந்து மாளவத்தில் நடந்ததைச் சொன்னான். கேட்கக் கேட்க பிலிப்பின் திகைப்பும் கோபமும் அதிகமாயின. முடிவில் படைத்தலைவன் சொன்னான். “சத்ரப். இங்கே நம் வீரர்களின் உயிருக்குப் பாதுகாப்பில்லை. மொத்தப் படையினரில் நம் வீரர்களின் எண்ணிக்கை விகிதம் குறைவாக இருந்த போதும் இன்று மரணமடைந்தவர்களிலும், காயப்பட்டவர்களிலும் நம் வீரர்களே அதிகம். உடன் போரிடும் மற்ற வீரர்களை எங்களால் நம்ப முடியவில்லை. கலவரக்காரர்களும் எங்களைத் தான் குறிவைக்கிறார்கள்இந்த நிலை தொடருமானால் இங்கு இருக்க எங்களுக்கு விருப்பமில்லை. எங்களைத் தாயகம் திரும்பிச் செல்லத் தயவு செய்து அனுமதியுங்கள். அதற்கு அனுமதி இல்லா விட்டால் தயவு செய்து உங்கள் கையாலேயே எங்களைக் கொன்று விடுங்கள். இங்குள்ள ஆட்கள் கையால் சாவதை விட உங்கள் கையால் சாவது மேலானது என்று ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் தயவு செய்து இந்தக் கலவரத்தை ஒடுக்கும் வேலையில் எங்களை ஈடுபடுத்தாதீர்கள்.”

 

யவனப்படைத்தலைவன் உறுதியான குரலில் சொன்னதைக் கேட்ட பிலிப் நிலைமை பூதாகரமாவதை உணர்ந்தான். மாளவம் ஒன்றின் நிலைமையைத் தான் கேள்விப்பட்டிருக்கிறான். மற்ற இடங்களில் என்ன நிலைமை என்பது தெரிய சில நாட்களாவது ஆகும்.  படைவீரர்கள் இப்படி தைரியம் இழந்தால் எங்கும் தாக்குப் பிடிப்பது தான் எப்படி? தன் மனதில் எழுந்த கவலையை வெளியே சிறிதும் காட்டிக் கொள்ளாமல் பிலிப் கேட்டான். “வீரசேனன் தற்போது எங்கேயிருக்கிறான்?”

 

தெரியவில்லை. அவன் அந்தக் கலவரக்காரர்களின் படையினர் பின் தொடர்ந்து சென்றிருக்கிறான். சென்றவன் திரும்பி வராததால் அவர்களுக்கும் அவனுக்கும் முன்பே தொடர்பு இருக்கவும் வாய்ப்பிருப்பதாக இப்போது எனக்குத் தோன்றுகிறது.”

 

பிலிப் எச்சரிக்கை உணர்வுடன் சொன்னான். “உண்மை தெரியாமல் சந்தேகத்தில் யூகிக்கும் யூகங்கள் ஆபத்தானவை. அவன் வரட்டும். விசாரிப்போம். அவனுடைய சகோதரன் சூரசேனன்?”

 

அவன் இங்கே தான் இருக்கிறான்.”

 

எதற்கும் அவன் மீது நம் கண்காணிப்பு இருந்து கொண்டிருக்கட்டும். கலவரக்காரர்களுக்கு உதவ வந்த படையினர் எங்கிருந்து வந்தார்கள். எங்கே சென்றார்கள்?”

 

அருகிலிருந்த காட்டுப்பகுதியிலிருந்து வந்தார்கள். அங்கேயே திரும்பச் சென்றிருக்கிறார்கள்

 

இப்போது கலவரக்காரர்களால் ஏற்பட்டிருக்கும் நிலைமையை எப்படிச் சமாளித்து கட்டுப்படுவது என்று நான் யோசித்து முடிவெடுக்கிறேன். நீ சிறிதும் தைரியம் இழக்க வேண்டாம் படைத்தலைவனே. அலெக்ஸாண்டரின் படைத் தளபதியான நீயே தைரியம் இழப்பது சரியல்ல. நம் வீரர்களின் பாதுகாப்புக்கு  என்ன செய்ய வேண்டுமோ அதை உடனடியாகச் செய்கிறோம். நீ கவலைப்படாமல் போ

 

மிக அமைதியாக பிலிப் உறுதியாகச் சொன்னதும் சிறிது அமைதியடைந்த படைத்தலைவன் அங்கிருந்து சென்றான். ஆனால் பிலிப்பின் அமைதி தொலைந்திருந்தது. ’மற்ற பகுதிகளில் என்னவெல்லாம் நடந்திருக்கும்?’

 

(தொடரும்)

   

என்.கணேசன்      


1 comment:

  1. இதுவரை வெற்றியை மட்டுமே கண்ட யவன படைக்கு இது ஒரு சவாலான விசயம்... சாணக்கியரின் பேச்சை முன்பே கேட்டிருந்தால் அலெக்சாண்டரை எல்லையிலேயே விரட்டியடித்திருக்கலாம்...

    ReplyDelete