Monday, September 18, 2023

யோகி 14

 

சேதுமாதவன் தங்கள் வாழ்க்கையை உலுக்கிப் போட்ட நிகழ்வுகளை அருணாச்சலத்திடம் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார்.

 

“… எங்களோட தனிப்பட்ட துக்கம், பிரச்சினை பத்திரிக்கைகளுக்கும் டிவிக்கும் வியாபாரமாச்சு. சில நாட்கள் தொடர்ந்து எல்லா பத்திரிக்கைகள்லயும், டிவி சேனல்கள்லயும் எங்களப் பத்தின செய்திகள் தான். சிலர் எங்களுக்கு ஆதரவாகவும், யோகாலயத்துக்கு எதிராகவும் செய்திகள் வெளியிட்டாங்க. சிலர் எங்களுக்கு எதிராகவும், யோகாலயத்துக்கு ஆதரவாகவும் செய்திகள் வெளியிட்டாங்க. ஆனா உள்ளதை உள்ளபடி செய்திகள் வெளியிடற நேர்மை யாருக்கும் இருக்கறதா தெரியல. நாங்க சொன்னது கூடச் சொல்லாததும் சேர்ந்து நாங்க சொன்னதாய் வெளியாச்சு. மீடியா இவ்வளவு மோசமாகவும், மனசாட்சி இல்லாததாகவும் இருக்கும்கிறதை எங்க கஷ்ட காலத்துல தெரிஞ்சுக்க வேண்டியதாச்சு. இதுல சில மத கோஷ்டிகளும் வந்து சேர்ந்துகிட்டாங்க. சிலர் எங்க மதத்துக்கு வந்துடுங்க, நாங்க எல்லாத்தையும் பார்த்துக்கறோம்னு சொன்னாங்க. சில பேர் மத அடையாளம் தெரியாதபடி பொதுவான பெயர்களோட வந்து எங்க மேல அக்கறை இருக்கறவங்களா காமிச்சுகிட்டு  கடைசில அவங்க மத உயர்வு பத்தின பேச்சை ஆரம்பிச்சாங்க. சிலர் நம்ம மதத்தை நாமளே இழிவுபடுத்தலாமா, யோகாலயத்து மேல வழக்கு போடலாமா, தயவு செஞ்சு வழக்கை வாபஸ் வாங்குங்கன்னு கெஞ்சினாங்க.  எங்க பிரச்சினைக்கும் மதத்துக்கும் என்ன சம்பந்தம்னே புரியல. ஒட்டு மொத்தமாய் கோர்ட்ல ஒரு முடிவு வர்ற வரைக்கும் ஒவ்வொரு நாளும் எங்களுக்குச் சித்திரவதை தான்…”

 

நினைவுகளின் கசப்பில் ஒரு கணம் சேதுமாதவன் கண்களை மூடிக் கொண்டார். அருணாச்சலத்துக்கு நண்பரைப் பார்க்கப் பாவமாக இருந்தது. சேதுமாதவன் மிக நல்ல மனிதர். சிறு வயதிலிருந்தே எந்த வம்பு தும்புக்கும் போகாதவர். தானுண்டு தன் படிப்புண்டு என்று இருந்தவர். முடிந்த வரை அடுத்தவர்களுக்கு உதவியாக இருந்தவர். அருணாச்சலத்துக்கு ஆரம்ப வகுப்புகளில் இருந்தே கணிதம் மிகவும் கடினமான பாடமாக இருந்தது. மற்ற பாடங்களில் ஓரளவு நல்ல மதிப்பெண் பெற்றாலும் கணிதத்தில் தேர்ச்சி பெற குறைந்த பட்ச மதிப்பெண் பெறுவது அவருக்கு இமயமலை ஏறுவது போலத் தான் இருந்தது. ஒவ்வொரு வருடமும் அவரை கணிதத்தில் தேர்ச்சி பெற வைத்தவர் சேதுமாதவன் தான். அவர் தான் பொறுமையாகச் சொல்லிக் கொடுப்பார். ஒவ்வொரு வருடமும் கணிதப் பொதுத் தேர்வுக்கு முந்தைய நாள் கஷ்டப்பட்டு அவர் சொல்லிக் கொடுத்ததை அருணாச்சலம் என்றுமே மறக்க முடியாது. கல்வியிலும், ஒழுக்கத்திலும், நேர்மையிலும் சிறந்து விளங்கிய சேதுமாதவன், படித்து முடித்தவுடனேயே மத்திய அரசுப் பணியும் கிடைத்து விட்டதால், சமூக அவலங்கள் அதிகமாய் நேரடியாய் அறியும் வாய்ப்பு பெறாதவர். பொது வாழ்க்கையின் கொடூரங்களையும், கசப்புகளையும் அறியாதவர். அதனால் திடீரென்று அவற்றை ஒருசேரச் சந்திக்கையில் அவருக்கு எப்படி இருந்திருக்கும் என்பதை அருணாச்சலத்தால் புரிந்து கொள்ள முடிந்தது….

 

சேதுமாதவன் தொடர்ந்து சொன்னார். “எனக்கு அமீர் பாய்னு ஒரு இஸ்லாமிய நண்பர் இருக்கார். அவர் இந்த ரெட்டை வேஷம் போடற மதவாதிகளையும், மீடியாவையும் சைத்தான்கள்னு சுருக்கமாய் சொன்னார். அது ரொம்பச் சரின்னு புரிஞ்சுகிட்டது கசப்பான அனுபவம்மீடியா வியாபார நோக்கத்துல அப்படியாகறதையாவது என்னால புரிஞ்சுக்க முடியுது. ஆனா தெய்வீகத்துக்கு மனுஷனை அழைச்சுட்டுப் போக வேண்டிய மதங்கள், இப்படி தரம் தாழ்ந்த மனிதர்கள் கிட்ட சிக்கிகிட்டதைத் தான் தாங்க முடியலை அருணா

 

அந்தக் காலத்திலேயே சேதுமாதவன் ஆன்மீக நூல்களை விரும்பிப் படிப்பதை அருணாச்சலம் பார்த்திருக்கிறார். ஒவ்வொன்றும் மிகத் தடிமனான புத்தகங்கள். தன் மதப் புத்தகங்கள் மட்டுமல்லாமல் மற்ற மத நூல்களையும் படிக்கக்கூடியவர் அவர். அப்படிப்பட்ட புத்தகங்களில் அந்த இளமைக் காலத்திலேயே மூழ்க முடிந்த நண்பரிடம் அருணாச்சலம் மென்மையாகச் சொன்னார். “ஆன்மீகத்தை ஆழமாய் புரிஞ்சு ஞானமடைஞ்ச ஆளுக ட்ரைவிங் சீட்டுல இருந்திருந்தா மதம் சரியான தெய்வீகப் பாதைல முன்னேறும். ஆனா ட்ரைவிங் சீட்டுல சைத்தானை விட்டுட்டு, ஆழமான ஞானம் இருக்கற ஆள்க பின்னாடி உட்கார்ந்துட்டதுல வந்த பிரச்சனை தான் இதெல்லாம் சேது. அதனால தான் எல்லாம் தடம் மாறிப் போகுது. மதத்தோட பேர்ல மோசடியும், வியாபாரமும் சகஜமாய் நடக்குது…” 

 

வழிநடத்த முடிந்த அளவு ஞானமுள்ளவன், பொறுப்பை எடுத்துக் கொள்ளாமல் பின் வாங்கியதின் விளைவே, மதங்கள் இன்று சந்திக்கும் வீழ்ச்சி என்பதை அருணாச்சலம் சுட்டிக் காட்டியது சேதுமாதவனை யோசிக்க வைத்தது. உண்மை தான்! இன்னொரு சந்தர்ப்பமாக இருந்திருந்தால் இந்த விஷயத்தை நண்பருடன் சேர்த்து அவர் அலசியிருப்பார். ஆனால் அதற்கு வேண்டிய காலமும், மனமும் இப்போது அவரிடம் இல்லை. அவர் கனத்த இதயத்துடன், அடுத்து தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைத் தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தார்.

 

தொலைபேசி மணியடித்தது. முதல்வரின் காரியதரிசி சலிப்புடன் கடிகாரத்தைப் பார்த்தான்.  மணி 9.32. அழைப்பது யாரென்று பார்த்தான். யோகாலயம்! ரிசீவரை எடுத்துப் பேசினான். “ஹலோ

 

வணக்கம் சார். யோகாலயத்துல இருந்து பேசறோம். பூஜ்ய யோகிஜி முதலமைச்சரோட நலம் விசாரிக்கணும்னு விரும்பினார்முதல்வரோட பர்சனல் மொபைல் போன் ஸ்விட்ச் ஆஃப் ஆயிருக்காம்…”

 

இப்ப முதல்வர் அவரோட நண்பர் ஒருவரோட பேசிகிட்டிருக்கார்.”

 

அவர் அப்பாயின்மெண்ட் எப்ப முடியும்?”

 

இது கடைசி அப்பாயின்மெண்ட். நண்பர்ங்கறதால எப்ப முடியும்னு சொல்ல முடியாது.”

 

பூஜ்ய யோகிஜி நலம் விசாரிக்கத் தான் கூப்பிடறார். அதிகபட்சமாய் அஞ்சு நிமிஷத்துக்கு மேல அவர் பேச மாட்டார். அவரும் பிசி தான்….”

 

முதல்வரின் காரியதரிசி எரிச்சலுடன் சொன்னான். “மன்னிக்கணும். இடையில் எந்தத் தொந்தரவும் செய்யக் கூடாதுன்னு சி.எம் சொல்லி இருக்கார்.”

 

ஒரு நிமிஷம்…” சிறிது நேர நிசப்தம்.

 

காரியதரிசி ரிசீவரைக் கீழே வைக்க எண்ணுகையில் யோகி பிரம்மானந்தாவின் கணீர் குரல் கேட்டது. “சௌக்கியமா தம்பி

 

காரியதரிசி குரலில் பணிவைக் காட்டினான். “உங்க ஆசிர்வாதத்துல சௌக்கியம்ஜீ

 

முதலமைச்சர் எப்படி இருக்கார்ப்பா?”

 

நலமாயிருக்கார்ஜி. ஆனா நிறைய ஓய்வு தேவைன்னு டாக்டர்கள் சொல்லியிருக்காங்க

 

ஆனாலும் அப்பாயின்மெண்ட்ஸ் எல்லாம் கொடுக்க ஆரம்பிச்சுட்டீங்க போல இருக்கே

 

இல்லைஜி. பிரதமரும், பக்கத்து மாநில முதலமைச்சர்களும், நம்ம கேபினட் அமைச்சர்கள் ரெண்டு பேரையும் தவிர முதலமைச்சரைப் பார்க்க யாரையுமே அனுமதிக்கல. இப்ப பேசிகிட்டிருக்கிறவர் முதல்வரோட இளவயது நண்பராம். அதனால் வெளியாள் அவர் ஒருத்தருக்கு மட்டும் தான் அப்பாயின்மெண்ட் தந்திருக்கார்…”

 

அது நல்லது தம்பி. நண்பர்களோட பேசிகிட்டிருந்தாலே மனசுல இருக்கற ஸ்ட்ரெஸ் எல்லாம் குறைஞ்சுடும். உண்மைல முதல்வருக்கு இப்போதைய தேவை அது தான்…”

 

அதனால தான் அவர் இடையில எந்த போன்காலும் தரவேண்டாம்னு சொல்லிட்டார்என்றான் காரியதரிசி. இனி அவரும் அந்த வேண்டுகோள் விடுக்க வேண்டாம்!

 

அது சரி தான் தம்பி. இடையில தொந்தரவு செய்யறது நியாயமும் அல்ல. நாகரிகமும் அல்ல. நான் நலம் விசாரிச்சேன்னு மட்டும் அவர் கிட்ட சொல்லு. ஒரு வாரம் கழிச்சு முதல்வர் கிட்ட நான் பேசிக்கறேன்…”

 

முதலில் பேசியவனைப் போல் பேசாமல் பிரம்மானந்தா நாகரிகமாக நடந்து கொண்டது முதல்வரின் காரியதரிசிக்குத் திருப்தியாக இருந்தது. முதலில் பேசியவன் பிரம்மானந்தாவின் காரியதரிசியா, சீடனா, டெலிபோன் ஆபரேட்டரா என்று தெரியவில்லை.

 

அவன் மனம் சேதுமாதவன் பற்றி எண்ண ஆரம்பித்தது. நேற்றிரவு முதல்வர் சேதுமாதவன் என்று சொன்னவுடனே ஆச்சரியமும், ஆனந்தமும் அடைந்துசேதுவா பேசினான்என்று கேட்டு விட்டு சேதுமாதவனின் போன் நம்பரை வாங்கி உடனே பேசவும் முற்பட்ட போது தான் அந்த நபர் அந்த அளவு முதல்வரின் மனதுக்கு நெருக்கமான நண்பர் என்பது அவனுக்குப் புரிந்தது.

 

நண்பனை அழைக்க முற்பட்ட முதல்வர் ஒரு கணம் தாமதித்துமுதல்ல அவன் கிட்ட சண்டை போடணும். போன்ல சரியாகாது. சரி நீயே போன் பண்ணி நாளைக்கு வரச் சொல்லு. நிறைய பேச வேண்டியிருக்கு. அதனால டாக்டர்கள் ராத்திரி வந்து போன பிறகு வரச் சொல்லு. அப்ப தான் யார் தொந்தரவும் இருக்காது. தேவைப்பட்டா கார் அனுப்பி வை…”

 

முதல்வருக்கு இந்த அளவு நெருக்கமான சேதுமாதவன் ஏன் இத்தனை காலம் முதல்வருடன் தொடர்பில் இல்லாமல் இருந்தார் என்று காரியதரிசி யோசித்தான். ஒன்றும் புரியவில்லை. முதல்வர் நேரில் சந்தித்துச் சண்டை போட வேண்டும் என்று சொன்னது இப்போதும் அவனைப் புன்னகைகைக்க வைத்தது. கிழவர்களானாலும், நண்பர்கள் என்றும் நண்பர்கள் தான்! இப்போதும் நண்பர்கள் இருவரும் பேசிக் கொண்டு தானிருக்கிறார்கள். சண்டை முடிந்து விட்டதா என்று தெரியவில்லைஇருவரும் என்ன பேசிக் கொண்டிருப்பார்கள் என்ற கேள்வி ஒரு கணம் அவன் மனதில் வந்து போனது. 

 

(தொடரும்)

என்.கணேசன்




4 comments:

  1. இடையில் பிரம்மானந்தா தலையிட்டவுடன் குழப்பம் ஏற்படுத்துவார்கள்னு நினைத்தேன் ... நல்ல வேளை அப்படி ஒன்றும் நடக்கவில்லை....

    ReplyDelete
  2. “ஆன்மீகத்தை ஆழமாய் புரிஞ்சு ஞானமடைஞ்ச ஆளுக ட்ரைவிங் சீட்டுல இருந்திருந்தா மதம் சரியான தெய்வீகப் பாதைல முன்னேறும். ஆனா ட்ரைவிங் சீட்டுல சைத்தானை விட்டுட்டு, ஆழமான ஞானம் இருக்கற ஆள்க பின்னாடி உட்கார்ந்துட்டதுல வந்த பிரச்சனை தான் இதெல்லாம் சேது. அதனால தான் எல்லாம் தடம் மாறிப் போகுது. மதத்தோட பேர்ல மோசடியும், வியாபாரமும் சகஜமாய் நடக்குது…” 100% Promising words.

    ReplyDelete
  3. Enna than rendu perum udkandu ponalum Karu oduduppa appo rendu perum than pakanum

    ReplyDelete
  4. Yogi ku sethu Aruna vai சந்தித்து பேசி கொண்டிருக்கிறார் என்ற.விஷயம் போஇருக்கும்.

    ReplyDelete