Monday, September 25, 2023

யோகி 15

டந்ததையெல்லாம் சொல்லி முடித்து விட்டு, சேதுமாதவன் கைகூப்பியபடி சொன்னார். “எனக்கு இந்த ஒரு உதவி மட்டும் நீ செய்யணும் அருணா. என் பேத்தியையும் அந்த டாக்டரையும் கொலை செஞ்ச கொலைகாரங்களுக்குக் கண்டிப்பா தண்டனை கிடைக்கணும். என் மகனோட கடைசி ஆசையை நீ எனக்காக நிறைவேற்றித் தரணும்... யோகி பிரம்மானந்தா உனக்கு ரொம்ப வேண்டப்பட்டவர், நெருக்கமானவர்னு எல்லாம் பத்திரிக்கைகள்ல படிச்சிருக்கேன். சம்பந்தப்பட்டவர், வேண்டியவர்ங்கறதாலேயே இதுல நடவடிக்கை எடுக்க உனக்கு கஷ்டமாய் இருக்கலாம். ஆனாலும் எனக்கு உன்னை விட்டா அதிகார வட்டத்துல வேற யாரையும் தெரியாது. வேற யாராலயும் எனக்கு உதவி செய்ய முடியும்னும் எனக்கு தோணல...”

 

அருணாச்சலம் தன் நண்பனின் கூப்பிய கைகளை விலக்கியபடி அமைதியாகச் சொன்னார். “என்னை மாதிரி உயர்ந்த பதவில இருக்கறவங்களுக்கு எல்லாரும் நெருக்கமானவங்க தான். எல்லாரும் வேண்டப்பட்டவங்க தான். ஆனாலும் அருணாச்சலம்கிற தனிமனிதனுக்கு சேதுமாதவன்கிற நண்பன் அளவுக்கு நெருக்கமானவங்களும், வேண்டியவர்களும் குறைவு. அதனால என்னால என்ன முடியுமோ அதைக் கண்டிப்பா செய்யறேன் சேது...”

 

சேதுமாதவன் கண்களிலிருந்து கண்ணீர் மடைதிறந்த வெள்ளம் போல் கிளம்பியது. பேச வார்த்தைகள் கிடைக்காமல் அழுத நண்பனைப் பார்க்கையில் அருணாச்சலத்துக்கும் கண்கள் கலங்கின.

 

அருணாச்சலம் கேட்டார். “கிருஷ்ணா கிட்ட அந்த டாக்டர் சொன்னதைப் பத்தியோ, அந்த ஆளும் இறந்ததைப் பத்தியோ யார் கிட்டயாவது நீங்க சொல்லியிருக்கீங்களா? முக்கியமா மீடியால யார் கிட்டயாவது அது பற்றிப் பேசியிருக்கீங்களா?”

 

என்னோட நெருங்கிய நண்பர்கள் ரெண்டு பேரைத்தவிர நாங்க யார்கிட்டயும் பேசலை... முந்தைய அனுபவங்க எங்க வாயை அடைச்சிடுச்சு. யார் கிட்ட சொல்லியும் எந்தப் பிரயோஜனமும் இல்லங்கறது புரிஞ்சு போனதால யார் கிட்டயும் அது பத்தி எதுவும் சொல்லலை.”

 

நல்லது. இப்ப நம்ம முன்னாடி ரெண்டு வழிகள் இருக்கு சேது. ஒன்னு சட்டபூர்வமாய் நீ புகார் தந்து நான் விசாரணைக்கு ஏற்பாடு செய்யலாம். ஆனால் அது நீ முதல்லயே புரிஞ்சுகிட்ட மாதிரி பலருக்கும் மெல்ல அவல் கிடைச்ச மாதிரி தான் ஆகும். பின்ன, யோகாலயம் அகில இந்திய அளவுல பிரபலமான ஒரு அமைப்பு. பிரம்மானந்தாவும் சாதாரணமான ஆள் அல்ல. அவங்க கிட்ட பணபலமும் நிறையவே இருக்கு. சட்டத்துல இருக்கற ஓட்டைகளை அவங்க அனாயாசமாய் பயன்படுத்திக்குவாங்க. நீ அவங்க பேரைக் கெடுக்கறதுக்காகவே உள்நோக்கத்துல புகார் செய்யறதா உன் மேலேயே வழக்கும் போட்டு உன்னை கோர்ட்டுக்கு பல தடவை இழுத்தடிச்சு உன்னை அலைக்கழிக்கவும் அவங்களால முடியும். அதனால அந்த வழி நமக்கு வேண்டாம். இன்னொரு வழி உண்மையில் என்ன நடந்தது, ஏன் நடந்தது, யார் குற்றவாளிகள்னு நாம மறைமுகமாய் விசாரிச்சு தெரிஞ்சுக்கறது. அதை முதல்ல கண்டுபிடிப்போம். பிறகு அதை வெச்சு என்ன செய்ய முடியும்னு யோசிப்போம். இந்த இரண்டாவது வழி தான் நமக்குப் பிரச்சினை இல்லாதது. அதற்கு நான் ஏற்பாடு செய்யறேன்

 

சேதுமாதவன் நன்றியுணர்வோடு கண்கலங்கியபடி சொன்னார். “அது போதும் அருணா. உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.”

 

அருணாச்சலம் நெகிழ்ச்சியுடன் சொன்னார். “நண்பர்களுக்குள்ளே நன்றிங்கற வார்த்தையே அவசியமில்லாதது சேது. எனக்கு கணக்கு சொல்லித் தர நீ வருஷக்கணக்குல பட்ட பாட்டையெல்லாம் யோசிச்சுப் பார்த்தா நான் எத்தனை நன்றி சொன்னாலும் போதாது. அதனால தான் நான் நன்றி சொன்னதேயில்லை..”

 

சேதுமாதவன் மீண்டும் கண்கலங்கினார். இனி என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து அதைத் தெரிவித்த பின், இறுக்கமான சூழலின் கனத்தைக் குறைக்க, அருணாச்சலத்துக்கு நண்பனைச் சீண்டத் தோன்றியது. 

 

எனக்கு ஒரு சந்தேகம் சேது. இந்த வேண்டுகோள் இல்லாமலிருந்தால் நீ கடைசி வரைக்கும் என்னைப் பார்க்கவே வந்திருக்க மாட்டாய். இல்லையா?”

 

அந்தக் கேள்வி சேதுமாதவனின் கண்ணீரை நிறுத்தி குற்றவுணர்வை அதிகப்படுத்தியது. கண்களைத் துடைத்தபடியே பலவீனமான குரலில் சொன்னார். “என்னை மன்னிச்சுடு அருணா. உயரங்களுக்குப் போன பிறகு நிறைய பேருக்கு தாழ்ந்த நிலையில இருக்கறவங்களை நண்பர்களாய் கொண்டாடற மனநிலை இருக்கறதில்லை.... ஆரம்பத்துல இருந்தே தொடர்பில் இருந்திருந்தா உன் மனநிலை எனக்குத் தெரிஞ்சிருக்கும். ஆரம்பத்துல உத்தியோக விஷயமா வெளியூர்கள்லயே தூர தூரமாய் இருந்தேன். நீ எம். எல்.ஏ ஆகி, எதிர்க்கட்சித் தலைவர் ஆகி, முதலமைச்சரும் ஆகற வரைக்கும் தொலைவுலயே இருக்கற சூழ்நிலை. நானும் பிசியாவே இருந்துட்டேன். ரிடையர் ஆகி சென்னை வந்தப்பறம் நான் ஃப்ரியாயிட்டேன். ஆனா முதலமைச்சராகி எப்பவுமே பிசியாய் இருக்கற உன்னை பெரிய காரணம் எதுவுமில்லாம தொந்தரவு செய்ய மனசு வரலை...”

 

நண்பனின் மனநிலையை அவர் சொல்லாமலேயே முழுவதுமாய் ஊகிக்க முடிந்தாலும் அருணாச்சலம் நண்பரின் மனதைத் துக்கத்திலிருந்து திருப்ப சண்டை போடுவது என்று தீர்மானித்தார். “நானும் உன் விலாசத்தை எப்படியாவது கண்டுபிடிச்சு உன்னைத் தொடர்பு கொள்ள சில சமயம் நினைச்சதுண்டு. ஆனா எனக்காவது உன் விலாசத்தைக் கண்டுபிடிக்கணும். என் விலாசம் ஊரறிஞ்ச விலாசம். அது உனக்கும் தெரிஞ்சிருந்தும் உனக்கே என்னைச் சந்திக்க மனசில்லாமல் இருக்கறப்ப, நான் தொடர்பு கொள்றது உனக்குத் தொந்தரவாகுமோன்னு நினைச்சு பேசாம இருந்துட்டேன்.”

 

ஐயோ அப்படியெல்லாம் இல்லை அருணா...” சேதுமாதவனுக்குத் தான் செய்தது சிறிதும் சரியல்ல என்ற உணர்வு கூடியது. தலையைச் சற்றுத் தாழ்த்திக் கொண்டார்.

 

அருணாச்சலத்துக்கு நண்பனைப் பார்க்கப் பாவமாக இருந்தாலும் அவர் விடுவதாய் இல்லை. “சரி விடு. உன் மகன் கல்யாணத்துக்காவது வந்து கூப்ட்டிருக்கலாமில்ல

 

தலை தாழ்த்தியபடியே சேதுமாதவன் சொன்னார். “வந்து சந்திக்காட்டியும் நான் தபால்ல அழைப்பிதழ் அனுப்பிச்சிருந்தேன்.”

 

எனக்கு வர்ற தபால்கள் அத்தனையும் என் பார்வைக்கு வந்தா அதுக்கே எனக்கு நேரம் போதாது. தினமும் எத்தனையோ அழைப்பிதழ்கள் வரும். அதில் முக்கியமானதுன்னு எதை என் செக்ரட்டரி நினைக்கிறானோ அது மட்டும் தான் என் பார்வைக்கு வரும்...” உண்மையிலேயே அந்த அழைப்பிதழ் அவர் பார்வைக்கு வந்திருந்தால் கண்டிப்பாக அந்தத் திருமணத்திற்குச் சென்று மணமக்களை வாழ்த்தி, தனியாக சேதுமாதவனிடம் இத்தனை காலம் தொடர்பு கொள்ளாமலிருந்ததற்குச் சண்டை போட்டு வந்திருப்பார். 

 

அருணாச்சலத்துக்கு, தானும் தன் மகளின் திருமணத்திற்கு சேதுமாதவனை அழைக்கவில்லை, அழைப்பிதழையும் அவருக்கு அனுப்பி வைக்கவில்லை என்பது சட்டென்று நினைவுக்கு வந்தது. சேதுமாதவன் அறிவுக்கு அது எட்டாமல் இருக்க வழியில்லை. ஆனாலும் அவர் பதிலுக்கு அதைச் சுட்டிக்காட்ட முற்படவில்லை என்பதை அருணாச்சலம் கவனித்தார். அப்படிச் சுட்டிக்காட்டாமல் இருக்கக் காரணம் நண்பன் முதலமைச்சராக இருப்பதோ, தற்போது அவரிடம் உதவி கேட்டு வந்திருப்பதோ அல்ல என்பதையும் அருணாச்சலம் அறிவார். ஒருவேளை அவர் நண்பர் தனியார் நிறுவன குமாஸ்தாவாகவோ, ஒரு பெட்டிக்கடை வைத்திருப்பவராகவோ இருந்து சண்டை போட்டிருந்தாலும் கூட சேதுமாதவன் அவரிடம் சுட்டிக்காட்டியிருக்க மாட்டார். இது இளமைக்காலத்திலிருந்தே சேதுமாதவனிடம் உள்ள உயர்ந்த குணம். அவருடைய குறையை யாராவது சுட்டிக் காட்டினால், அது உண்மையாக இருக்குமானால் உடனடியாக ஏற்றுக் கொள்வாரேயொழிய, யாரையும்நீ ரொம்ப ஒழுங்கோ?” என்று கேட்டதில்லை. தவறைச் சுட்டிக்காட்டியவர்களின் குறையை அவர் என்றுமே பட்டியல் போட முயன்றதில்லை. 

 

பொதுவாழ்வில் லட்சக்கணக்கான மனிதர்களைச் சந்தித்துப் பழகும் வாய்ப்பு கிடைத்தும், இப்படிப்பட்ட இன்னொரு மனிதனை அருணாச்சலத்தால் சந்திக்க முடிந்ததில்லை. அதனாலேயே தான் அறுவை சிகிச்சை முடிந்து தனிமையில் ஓய்வில் இருந்த காலத்தில் சேதுமாதவனின் நினைவு பல முறை அருணாச்சலத்துக்கு வந்திருக்கிறது. இனி எத்தனை காலம் வாழமுடியும் என்பது நிச்சயமில்லை என்பதால், அவர் சென்னைக்குத் திரும்பியவுடன் சேதுவைச் சந்திக்க வேண்டும் என்று அமெரிக்காவிலேயே முடிவு செய்து வைத்திருந்தார். ஆனால் சூழல் அவர் எதிர்பார்த்ததை விட வேகமாய், எதிர்பாராத விதமாய் சேதுவையே அவரிடம் வரவழைத்து விட்டது...

 

அருணாச்சலம் தங்கள் பள்ளி, கல்லூரி கால நண்பர்கள் சிலரைப் பற்றி சேதுமாதவனிடம் விசாரிக்க ஆரம்பித்தார். பழைய நினைவுகள், புதிய விசாரிப்புகளில் சிறிது நேரம் போனது. மணி பதினொன்றை எட்டிய போது தான் நேரமாகி விட்டதை நண்பர்கள் உணர்ந்தார்கள்.                                                                                                                                                                    சேதுமாதவன் எழுந்து நின்று நன்றியுடன் நண்பனின் கைகளைப் பற்றியபடி சில வினாடிகள் இருந்து விட்டுத் தலையசைத்து விடைபெற்றார். வெளியே வந்த போது அவர் மனம் மிக லேசாக இருந்தது.


(தொடரும்)

என்.கணேசன்



5 comments:

  1. உண்மையாகவே இப்படிப்பட்ட நண்பர்கள் ஆச்சரியம் தான் இக்காலத்தில். இனியாவது நியாயம் கிடைக்க வேண்டும் இப்படிப்பட்ட மனிதருக்கு.

    ReplyDelete
  2. இனிமேல் தான் கதாநாயகன் வருவார் னு நினைக்கிறேன்.... இனிமேல் தான் ஐயாவின் வழக்கமான பாணியில் நகரும்...

    ReplyDelete
  3. கதாநாயகன் நரேந்திரன் ஆக இருக்கலாம் என்று யூகிக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. முதலமைச்சர் மறைமுகமாக விசாரணை செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார்.... ஆனால்,நரேந்திரன் பலருக்கும் தெரிந்த ரா அதிகாரி...

      Delete