Monday, September 19, 2022

யாரோ ஒருவன்? 103



ஜீம் அகமது ரிஷிகேசத்துக்கு இரண்டு பாதுகாப்பாளர்களோடு இரவு பத்தரை மணிக்கு காரில் வந்து சேர்ந்தான். காளிங்க சுவாமி வழக்கமாக வரும் கங்கைக்கரைப் பகுதியை அவர்கள் மூன்று பேரும் அடைந்த போது ஏற்கெனவே சுவாமியின் பக்தர்கள் சுமார் நூறு பேர் அங்கே காத்திருந்தார்கள். இன்னும் காளிங்க சுவாமி வந்திருக்கவில்லை. குளிர் மிகவும் கடுமையாக இருந்தது. அங்கே யாருக்கும் உட்கார நாற்காலியோ, மற்ற வசதிகளோ இல்லை. ஜனார்தன் த்ரிவேதி கூட ஒரு துண்டைக் கீழே விரித்து அதன் மேல் அமர்ந்திருந்தார். அவரை அந்த இருட்டில் கண்டுபிடிக்க அஜீம் அகமதுக்குச் சிறிது நேரம் தேவைப்பட்டது. அவர் அருகே அவர் ஆட்கள் இருவர் உட்கார்ந்திருந்தார்கள். பக்தர்கள் யாரும் மிக நெருக்கமாகவோ, வரிசையாகவோ அமர்ந்திருக்கவில்லை.

அஜீம் அகமது நேற்றே இரண்டு ஆட்களை இந்த இடத்தைக் கண்காணிக்க அனுப்பி வைத்திருந்தான். இன்று ஜனார்தன் த்ரிவேதியைப் பின் தொடர்ந்து வர வேறு இரண்டு ஆட்களை அனுப்பி வைத்திருந்தான். இரு தரப்பும் அவன் அங்கே வந்து சேர்ந்தவுடனே போன் செய்து சொன்னார்கள். ”ரகசியக் கண்காணிப்பு இங்கேயோ, ஜனார்தன் த்ரிவேதியைத் தொடர்ந்தோ இல்லை”.

கண்காணிப்புக்கு இனி அவசியமில்லை என்று மகேந்திரன் மகன்  நினைத்து விட்டான் போலிருக்கிறது என்று அஜீம் அகமது திருப்தி அடைந்து.  ஜனார்தன் த்ரிவேதிக்குப் போன் செய்தான். அவருடைய போன் மூன்று முறை அடித்த பின் இணைப்பைத் துண்டித்தான். ஜனார்தன் த்ரிவேதியின் அருகே அமர்ந்திருந்த அவரது ஆட்கள் மெல்ல எழுந்து போனார்கள். ஜனார்தன் த்ரிவேதியின் அருகே இடம் காலியானவுடன் அஜீம் அகமது இங்கே இடம் காலியானதைப் பார்த்துப் போய் அமரும் ஆள் போல அங்கே போய் அமர்ந்தான். அவனுடைய ஆறு ஆட்களும், ஜனார்தன் த்ரிவேதியின் இரண்டு ஆட்களும் அவர்களைப் பார்க்க முடிந்த தூரங்களில் உட்கார்ந்து கொண்டார்கள். உதவி தேவைப்பட்டால் அவர்கள் மின்னல் வேகத்தில் இருவரையும் நெருங்கி விடுவார்கள்.

ஜனார்தன் த்ரிவேதி அவனைப் பார்த்தவுடன் ஆனந்தப்பட்டாலும் அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ள முடியாமல் தவித்தார்.  அஜீம் அகமது மிக மிக எச்சரிக்கையாக இருப்பவன். அவனுடன் இருப்பவர்கள் அந்த எச்சரிக்கையைக் கடைப்பிடிக்காதவர்களாக இருந்தால் அவன் அங்கிருந்து போய் விடுவான். அவனுக்கு முட்டாள்களுடன் பழகப் பொறுமை கிடையாது. அதனால் ஜனார்தன் த்ரிவேதி இருவரும் தனித்தனி காரியங்களுக்கு வந்திருக்கும் தனி மனிதர்கள் என்றே அந்தப் பொது இடத்தில் காட்டிக் கொள்ளும் கட்டாயத்தில் இருந்தார். அப்படி காளிங்க சுவாமியைச் சந்திப்பதற்காகக் காத்திருக்கும் போது இரு தனி பக்தர்கள் பொழுது போவதற்காகப் பேசிக் கொள்வது போன்ற தோற்றத்தை காட்டிக் கொண்டவாறு பேசிக் கொண்டார்கள்.

சிறிது நேரத்தில் காளிங்க சுவாமியும் அவருடைய இரு சீடர்களும் ஒரு ஜீப்பில் வந்து சேர்ந்தார்கள். இருட்டில் நிழலாகத் தான் மூவரும் தெரிந்தார்கள். காளிங்க சுவாமி மிக ஒல்லியாகத் தான் இருந்தார். ஜீப்பிலிருந்து இறங்கியவர்  கங்கைக் கரையை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தார். அது அவருடைய வயதுக்கு மீறிய வேகமாக இருப்பதாக அஜீம் அகமது நினைத்தான். அவருடைய வேகத்துக்கு ஈடுகட்ட இளைஞர்களாக இருந்தாலும் அவருடைய சீடர்கள் சிரமப்பட்டார்கள்.    

காளிங்க சுவாமி விறுவிறுவென்று கங்கையில் இறங்கினார். இன்று அவர் வாழ்க்கையின் மிக முக்கியமான நாள். ஒவ்வொரு அமாவாசையிலும் அவருடைய பக்தர்கள் தான் அவரைத் தரிசித்துப் பேசும் பரபரப்பில் இருப்பார்கள். முதல் முறையாக அவர் ஒருவனைப் பார்த்துப் பேசும் பரபரப்பில் இருந்தார். அவரிடம் விசேஷ நாகரத்தினத்தை ஒப்படைக்க முடிந்த மனிதனை மாகாளி இன்று இங்கு வரவழைத்திருக்கிறாள். அவன் தன் வேலைக்காகத் தான் இங்கே வந்திருப்பதாக நினைத்திருக்கிறான். அவனுக்கு உதவப் போகும் முயற்சியில் அவனும் அவருக்கு உதவப்போகிறான். வந்திருப்பவன் அதை அறிய மாட்டான். அது அவன் அறியவும் தேவையில்லை. இந்தப் பரஸ்பர உதவி ஒரு பக்கத்து உதவியாகவே அவனும், அவனை அழைத்து வந்திருக்கும் அந்த அரசியல்வாதியும் நினைப்பது தான் நல்லது. தாங்களும் உதவுகிறோம் என்று தெரிந்தால், அந்த உதவி என்ன என்று தெரிந்தால், அவர்கள் தங்களுக்குத் தாங்களே உதவிக் கொள்வார்கள். அதன் பிறகு அவர்களுக்கு எந்த உதவியும் எங்கிருந்தும் எப்போதும் தேவைப்படாது…

காளிங்க சுவாமி மனதை எண்ணங்களிலிருந்து திருப்பினார். “கங்கையே. உனக்கு நமஸ்காரம்….”

அஜீம் அகமது அவரையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். கங்கையில் தலைமுழுகி தலை மேல் கைகளை உயர்த்தி சிறிது நேரம் சிலை போல் அவர் நின்றிருந்தார். ஜனார்தன் த்ரிவேதி அவனிடம் முணுமுணுத்தார். “அவர் ஒத்தைக்கால்ல நிக்கறார்… கால்கள் தண்ணிக்குள்ளே இருக்கறதால நமக்குத் தெரியறதில்லை…”

அஜீம் அகமது ஆச்சரியப்பட்டான். இந்த வயதில், இந்தக் குளிரில், இந்த நதியில் இப்படி நிற்க வேண்டும் என்றால் உடல் மீது அவருக்கு எத்தனை கட்டுப்பாடு இருக்க வேண்டும்!

காளிங்க சுவாமி கரைக்கு வந்தார். அடுத்த அரை மணி நேரம் அவர் சீடர்கள் இருவரும் ஒரு பெரிய கருப்புத் துணியை எடுத்து அவர் செய்யும் சடங்குகள் மற்றவர்கள் யாரும் பார்க்காதபடி மறைத்துப் பிடித்துக் கொண்டார்கள்.

அஜீம் அகமது கேட்டான். “இந்த இருட்டில் பெரிதாக என்ன தெரிந்து விடப் போகிறதென்று இப்படி மறைக்கிறார்கள்?”

ஜனார்தன் த்ரிவேதி சொன்னார். “அவர் செய்யும் சடங்கு ரகசியமானது. பார்க்கறவங்க பார்வை கூட சூட்சுமமான இடைஞ்சல்கள் செய்யும்னு தான் இப்படிச் செய்யறதா ஒருதடவை சுவாமிஜி சொன்னார். அது எப்படின்னு எனக்குப் புரியலை. ஆனா ஒவ்வொரு தடவையும் இப்படித்தான் பண்றாங்க”

“சரி இது முடிஞ்சு எப்படி எல்லாரும் அவரைப் போய் பார்ப்பாங்க?”

“அவர் சடங்குகள் எல்லாம் முடிஞ்சு ஒவ்வொருத்தர் பேராய் சொல்ல சீடன் அந்தப் பேரைச் சத்தம் போட்டு சொல்வான். கூப்பிட்டவங்க போகணும்”

“எப்படி வந்திருக்கறவங்க பேர் எல்லாம் அவருக்குத் தெரியும்?”

“அது தான் அவரோட சக்தி”

“நாம் என்ன கேட்கப் போகிறோம்கிறதை அவங்க கிட்ட சொல்லிருக்கீங்களா?”

“இல்லை.”

இரவு ஒரு மணிக்கு அவருடைய சீடர்கள் கருப்புப் போர்வையை விலக்கிக் கொண்டார்கள். அடுத்ததாக பக்தர்கள் அழைக்கப்பட்டார்கள். ”பாரஸ்மல், காயத்ரி பாய், பரசுராம ரெட்டி, குல்விந்தர் சிங், அகல்யா, ஜாய் தாமஸ்….” என்று ஒவ்வொரு பெயராக அழைக்கப்பட ஒவ்வொருவரும் தனியாகவோ, இன்னொருவருடன் சேர்ந்தோ எழுந்து போனார்கள். ஒவ்வொருவருக்கும் ஓரிரண்டு நிமிடங்களில் சொல்வதைச் சொல்லி விட்டு வேகமாக அனுப்பி வைத்த காளிங்க சுவாமி கடைசியாகத் தான் ஜனார்தன் த்ரிவேதியை அழைத்தார். அப்போது மணி மூன்று. அவர்களுடைய ஆட்களைத் தவிர வேறு யாரும் அங்கு இல்லை.

ஜனார்தன் த்ரிவேதியும் அஜீம் அகமதும் எழுந்து போனார்கள். ஜனார்தன் த்ரிவேதி காளிங்க சுவாமியை சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்க அஜீம் அகமது அவரைப் பார்த்து கைகூப்பினான். காளிங்க சுவாமி அவர்களை எதிரில் உள்ள மரப்பலகைகளில் உட்காரச் சொன்னார்.

இருவரும் அந்த மரப்பலகைகளில் அமர்ந்தார்கள். காளிங்க சுவாமி கண்களை மூடிக் கொண்டு எதையோ பார்த்துச் சொல்வது போலச் சொன்னார். ”உங்க ஆட்கள் பாம்புகள் கடிச்சு விஷமேறி ஆஸ்பத்திரியில் பைத்தியமாய் இருக்கிறார்கள்”

ஜனார்தன் த்ரிவேதி கைகூப்பியபடியிருந்து சொன்னார். “உண்மை தான் சுவாமி”

“கடத்தின ரா அதிகாரி தெற்கில் தூரத்தில் இருக்கிறான்.”

அஜீம் அகமது திகைப்புடன் காளிங்க சுவாமியைப் பார்த்தான். ஜனார்தன் த்ரிவேதி சொன்னார். “ஆமாம் சுவாமி”

காளிங்க சுவாமி கண்களைத் திறந்து ஜனார்தன் த்ரிவேதியைப் பார்த்துச் சொன்னார். “நீ உன் ஆட்களின் பைத்தியம் தெளிய வேண்டும் என்று வந்திருக்கிறாய்”

“ஆமாம் சுவாமி”

காளிங்க சுவாமி அஜீம் அகமதைப் பார்த்துச் சொன்னார். “காட்டிலே மட்டுமே இருக்கும் பாம்புகள் நகரப்பகுதியில் இருக்கும் அந்த ஃபேக்டரிக்குள் எப்படி வந்தது? யார் கொண்டு வந்து கடிக்க வைத்தார்கள்? ரா அதிகாரி எங்கேயோ இருந்து கொண்டு எப்படி இதைச் சாதித்தான்? இதற்கெல்லாம் பதில் தேடி நீ வந்திருக்கிறாய்?”

அஜீம் அகமது ஆச்சரியத்தின் உச்சத்திற்கே போனான். அவன் வந்த நோக்கத்தை அவர் தோராயமாய் சொல்லாமல் அவன் தனக்குள் பல முறை எப்படி கேட்டுக் கொண்டானோ அப்படியே அந்த கேள்விகளை வார்த்தைக்கு வார்த்தை சொன்னது அவனைத் திகைக்க வைத்தது

(தொடரும்)
என்.கணேசன்

3 comments:

  1. Continuously thrilling and interesting.

    ReplyDelete
  2. ஹரி ஓம் சார்.
    இது கற்பனையாக கதையாக எனக்கு தெரியவில்லை. எங்கோ நடந்ததை, கூட இருந்து பார்க்கும் ஒருவர் விவரிப்பது போலுள்ளது. என்ன ஒரு திறமையான எழுத்து .கடவுளின் முழு ஆசீர்வாதத்தில் தான் இந்த திறமை, வரமாக உங்களு க்கு கிடைத்துள்ளது. கடவுளுக்கு நன்றி

    ReplyDelete
  3. முக்கியமான இடத்துல வந்து தொடரும்னு போட்டுடீங்களே!

    ReplyDelete