Thursday, September 22, 2022

சாணக்கியன் 23

 

சின்ஹரன் தட்சசீல நகருக்கு வெளியே இருக்கும் அந்தப் பாதுகாப்பான இடத்திற்கு வந்து ஒரு வாரமாகிறதுஅந்த இடம் தட்சசீல கல்விக் கூடத்திற்குச் சொந்தமானது. மாணவர்கள் குதிரையேற்றம் முதலான பயிற்சிகளை அங்கே தான் மேற்கொள்கிறார்கள். அங்கே குதிரைகளைப் பராமரிப்பவனாகவும், மாணவர்களுக்கு வீரப்பயிற்சிகளைக் கற்றுத் தருபவனாகவும் மாறுவேடத்தில் அவனை விஷ்ணுகுப்தர் தங்க வைத்திருந்தார். தட்சசீல கல்விக்கூடத்திற்குச் சொந்தமான இடம் அது என்பதாலும், ஆண்டாண்டு காலமாக கல்விக்கூட மாணவர்கள் போய் வந்து கொண்டிருக்கும் இடம் என்பதாலும் காந்தார ஒற்றர்களுக்கும் கூட அந்த இடத்தில் மாறுவேடத்தில் சேனாதிபதி சின்ஹரன் தங்கியிருக்கக்கூடும் என்ற சந்தேகம் வரவில்லை. எல்லோரும் சின்ஹரனை மைனிகாவுடன் தட்சசீலத்தை விட்டு ஓடிப்போனவனாகவே நினைத்திருந்ததால் சின்ஹரன் அங்கே பாதுகாப்பாகவே இருந்தான். ஒருவேளை ஆபத்து ஏற்பட்டால் அருகிலிருக்கும் காட்டுப் பகுதிக்கு அவன் வேகமாகத் தப்பிக்கவும் முடியும் என்பது கூடுதல் பாதுகாப்பு அம்சமாக அவனுக்கு இருந்தது.

 

ஆனால் நள்ளிரவில் வானத்து நட்சத்திரங்களைப் பார்த்தபடி வெட்டவெளியில் படுத்திருந்த சின்ஹரன் மனம் மட்டும் இப்போதும் ரணமாக இருந்தது. மைனிகாவால் ஏமாற்றப்பட்டிருப்பதை அவனால் இன்னமும் தாங்கிக் கொள்வது மிகவும் கஷ்டமாகத் தானிருந்தது. எவ்வளவு எளிதாக ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்று யோசிக்கும் போதெல்லாம் அவனுக்கு அவனுடைய முட்டாள்தனத்தின் மீதே கோபம் அதிகமாக வந்தது. அவளைச் சந்தேகிக்கவே அவனால் முடியவில்லையே. எல்லாமே நடிப்பு என்று இத்தனை ஆன பின்பு கூட அவனால் இப்போதும் முழுவதுமாகச் சந்தேகிக்க முடியவில்லை என்பது அவன் வேதனையைக் கூட்டியது.  இந்த வேதனையிலிருந்து சிறிதாவது ஆசுவாசம் கிடைத்தது என்றால் அது அந்த மாணவர்கள் மூலமாகத் தான். அவர்கள் யாருமே அவனை ஒரு குற்றவாளியாகப் பார்க்காதது அவனுக்கு ஆறுதலாக இருந்தது. அவர்களிடம் அவன் தன் இளமைப் பருவத்தை நினைவுகூர்ந்தான். துடிப்பும், உற்சாகமும் நிறைந்த அந்த மாணவர்கள் அவன் மனக்காயத்தை ஆற்ற உதவினார்கள். குறிப்பாக சந்திரகுப்தனிடமும், சாரங்கராவிடமும்  இந்த ஒரு வார காலத்தில் ஒரு அன்பான நெருக்கத்தை அவனால் உணர முடிந்தது

 

விஷ்ணுகுப்தர் அவன் கடமையும் பிராயச்சித்தமும் பாரதத்தைப் பாதுகாப்பதில் தான் இருக்கிறது என்றும் காந்தாரம் என்ற சிறுபகுதிக்குள் அது டங்கி விடக்கூடாது என்றும் வலியுறுத்திச் சொல்லியிருந்தார். அதனால் தான் விதி அவனை மைனிகாவிடம் மயங்க வைத்து ஆம்பி குமாரன் பிடியில் இருந்து அவனைத் தப்ப வைத்திருக்கிறது என்று சொல்லியிருந்தார். காந்தார அரசரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என்றும் எந்த நேரமும் அவர் மரணமடைந்து விடலாம் என்றும் கேள்விப்படுவதாக விஷ்ணுகுப்தர் அவனிடம் சொன்ன போது அவனுக்கும் ஆம்பி குமாரன் அரசனாகி அவனுக்கு சேனாதிபதியாக பல கோமாளித்தனங்களில் ஈடுபட வேண்டியிருக்காமல் தப்பித்ததும் ஒரு விதத்தில் நிம்மதியாகத் தான் தோன்றியது.

 

விஷ்ணுகுப்தரின் பாரதம் குறித்த அக்கறையும், பக்தியும் சின்ஹரனுக்கு வியப்பூட்டுவதாக இருந்தது. பரதக்கண்டம் என்ற சொல்லே புராதனமாக மாறி விட்டிருக்கும் காலத்தில் ஒன்றுபட்ட பாரதம் என்கிற சிந்தனையை இன்றும் தக்க வைத்துக் கொண்டிருக்கும் ஆச்சாரியர் அவனுக்கு வினோதமாகத் தோன்றினார். அவனே காந்தாரம் தான் தன் தாய் பூமி என்று நினைத்து வந்திருக்கிறான்.  அவன் மன ஓட்டத்தைப் படித்ததனாலோ என்னவோ வேதங்களையும் உபநிஷத்துகளையும் தந்த இந்த புண்ணிய பூமியில், சிந்து கங்கை, யமுனை முதலான புண்ணிய நதிகள் ஓடும் தெய்வாம்சம் பொருந்திய இந்த பாரதத்தில் பிறந்திருப்பதே பெரிய பாக்கியம் என்று அவர் அவனுக்கும் ஒரு பெரிய பாடம் நடத்தினார். அவர் மன ஆழத்தில் இருந்து வந்த வார்த்தைகளும், அதைச் சொல்கையில் அவர் கண்களில் தெரிந்த ஜொலிப்பும் அவன் மனதிலும் அந்த சிந்தனைகளை வேரூன்றின.   

 

நள்ளிரவில் நட்சத்திரங்களைப் பார்த்தபடியே படுத்திருந்த சின்ஹரன் தன் தவறுக்குப் பிராயச்சித்தம் செய்ய ஒரு வாய்ப்பை எதிர்நோக்கி இருந்தான். அந்த வாய்ப்பு கிடைத்து ஒரு போர்க்களத்தில் இந்த பாரத மண்ணிற்காக உயிர் விடும் வாய்ப்பு கிடைத்தால் அதுவே பெரிய நிம்மதியாகவும், வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் தந்த மாதிரியும் இருக்கும்… அவன் வாழ்வில் இத்தனை விளையாடிய விதி இனி வேறென்ன யோசித்து வைத்திருக்கிறதோ?... அதை எண்ணுகையில் அவனுக்கு உறக்கம் வரவில்லை.

 

வனைப் போலவே அந்த நள்ளிரவில் உறங்காமல் விஷ்ணுகுப்தர் ஒருவனுக்காகக் காத்திருந்தார். வேறு சிலர் மூலமாக வதந்திகளாக அவர் கேள்விப்பட்ட செய்திகள் எந்த அளவு உண்மை, முழு உண்மை என்ன என்று அவருக்குத் தெரிய வேண்டியிருந்தது. ஊர் உறங்கிய பின் தான் அவன் வர முடியும். அதுவும் ஒற்றர்கள் யாரும் அறியாதபடி அவன் வர வேண்டும்….

 

கதவு மெல்லத் திறந்தது. “வணக்கம் ஆச்சாரியரே” என்று மெல்லிய குரலில் சொல்லி தலை தாழ்த்தி வணங்கியபடி ஆம்பி குமாரனின் காவல் வீரன் வந்து நின்றான்.

 

கை உயர்த்தி ஆசி வழங்கிய விஷ்ணுகுப்தர் தாழ்ந்த குரலில் கேட்டார். “மன்னர் எப்படி இருக்கிறார் வீரனே?”

 

வீரனும் தாழ்ந்த குரலிலேயே பதில் சொன்னான். “நவமி திதியை அவர் தாண்ட மாட்டார் என்று ராஜவைத்தியர் கூறி விட்டார் ஆச்சாரியரே”

   

“வேறு என்ன செய்தி வீரனே?”

 

“அலெக்ஸாண்டர் பற்றி ஒற்றன் வந்து கூறியதைக் கேட்டதிலிருந்து இளவரசர் அலெக்ஸாண்டர் பற்றியே அனைவரிடமும் உயர்வாகப் பேசிக் கொண்டிருக்கிறார் ஆச்சாரியரே. நேற்று அமைச்சரை அழைத்துப் பேசிவிட்டு, ஒரு தூதனை அலெக்ஸாண்டரிடம் அவர் அனுப்பி இருக்கிறார்.  அதில் உள்ள தகவல் என்ன என்று தெரியவில்லை…”

 

விஷ்ணுகுப்தருக்கு அதில் என்ன தகவல் இருக்கும் என்பதை யூகிப்பது எளிதாகவே இருந்தது. ’மூடன்…. மூர்க்கன்….’ என்று மனதில் ஆம்பி குமாரனை விமர்சித்தாலும் தன் எண்ண ஓட்டத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவர் கேட்டார். “வேறு என்ன செய்தி வீரனே?”

 

“சேனாதிபதி சின்ஹரனைக் கொல்ல இன்று காலை கேகயத்திற்கு சிலரை இளவரசர் அனுப்பி இருக்கிறார் ஆச்சாரியரே. சின்ஹரனின் பிணத்தைக் கொண்டு வந்தால் கூடுதல் பரிசளிப்பதாக வாக்களித்திருக்கிறார்…. இந்த ஒரு வார காலமாக அவரிடம் நிறைய மாற்றங்கள் தெரிகிறது ஆச்சாரியரே. அவர் மதுவிலும் அந்தப்புரத்திலும் கழிக்கும் காலத்தை மிகவும் குறைத்திருக்கிறார்”

 

அவன் தொடர்ந்து சொன்ன தகவல்கள் முக்கியத் தகவல்களாக இருக்கவில்லை. ஆனாலும் முழு கவனத்துடனேயே அவன் சொல்வதைக் கவனமாகக் கேட்டறிந்து விட்டு நன்றி கூறி அவனை அனுப்பி வைத்த விஷ்ணுகுப்தர் கண்களை மூடியபடி சிந்தனையில் ஆழ்ந்தார்.


மறுபடியும் அறைக்கதவு மெல்லத் திறக்கும் ஓசை கேட்டது. கண்களைத் திறக்காமலேயே விஷ்ணுகுப்தர் சொன்னார். “வா. சந்திரகுப்தா?”

 

அவன் புன்னகைத்தான். அவன் எப்போதும் அவருக்குத் தன் வருகையை அறிவிக்க வேண்டியிருப்பதில்லை. “என்ன செய்தி ஆச்சாரியரே?”

 

வருத்தத்துடன் விஷ்ணுகுப்தர் கண்களைத் திறந்தார். “நல்ல செய்தி இல்லை சந்திரகுப்தா. ஆம்பி குமாரன் தன் தாய்நாட்டுக்குத் துரோகம் இழைத்துக் கொண்டிருக்கிறான். அலெக்ஸாண்டருக்கு நட்புக்கரம் நீட்ட முடிவெடுத்து இருக்கிறான்…”

 

சந்திரகுப்தன் திடுக்கிட்டான். ”அவனுக்கு புத்தி கெட்டு விட்டதா ஆச்சாரியரே. சகோதர நாடான கேகயத்தை எதிரியாகப் பார்க்கிறான்.  எதிரியான யவன அரசன் அலெக்ஸாண்டருக்கு நட்புக்கரம் நீட்டுகிறான்….”

 

விஷ்ணுகுப்தர் அமைதியாகச் சொன்னார். “அகங்காரமும், அறியாமையும் குடியேறியிருக்கும் புத்தி கெட்டுத் தான் போகும் சந்திரகுப்தா. ஆம்பி குமாரனின் புத்தி என்றோ கெட்டுப் போய் விட்டது. அரியணை ஏறப் போகும் இந்த வேளையில் அழிவுக்கும் அவன் விதை விதைத்து விட்டான்…”

 

திகைத்து நின்ற சந்திரகுப்தனிடம் ஆம்பி குமாரனின் காவல் வீரன் சொன்ன தகவல்களை எல்லாம் விஷ்ணுகுப்தர் தெரிவித்தார்.

 

“ஆம்பி குமாரன் அலெக்ஸாண்டருக்கு என்ன தகவல் அனுப்பியிருப்பான் என்று தெரியாமலேயே எப்படி அவன் நட்புக்கரம் நீட்டித் தான் தகவல் அனுப்பி இருப்பான் என்று நினைக்கிறீர்கள் ஆச்சாரியரே?”  

 

“ஆம்பி குமாரனின் அறிவு எப்படி வேலை செய்யும் என்பதை நான் அறிவேன் சந்திரகுப்தா. அலெக்ஸாண்டர் வரப் போகிறான் என்று தெரிந்தவுடன் படைகளைத் திரட்டித் தயார் நிலையில் நிற்க வைக்கும் முயற்சிகளை எடுப்பதற்குப் பதிலாக அவனைப் புகழ்பவன் வேறு என்ன தகவல் அனுப்பியிருக்க முடியும்?..”

 

சந்திரகுப்தன் கவலையுடன் கேட்டான். “இனி என்ன நடக்கும் ஆச்சாரியரே?”

 

விஷ்ணுகுப்தர் மிகுந்த வருத்தத்துடன் சொன்னார். “நல்லது நடக்க வழியில்லை சந்திரகுப்தா”

 

(தொடரும்)

என்.கணேசன்  

இந்த நாவலையும், அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -

(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை  nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும். 

    

2 comments:

  1. Wow. Today you've posted early. Even 2400 years ago the situation is same. There were people ready to join hands with enemies just for petty gains and reasons. Nice to travel along with you in the historical times.

    ReplyDelete
  2. விஷ்ணு குப்தர் இதற்கு என்ன திட்டம் வைத்திருக்கிறார்‌..?

    ReplyDelete