Thursday, September 15, 2022

சாணக்கியன் 22

 

விஷ்ணுகுப்தரின் பேச்சு சின்ஹரனின் துக்கத்தைக் குறைத்து விடவில்லை. அவன் மிகுந்த விரக்தியுடன் சொன்னான். “இனி பிராயச்சித்தம் செய்ய என்ன இருக்கிறது ஆச்சாரியரே. என்னால் என் தாய்நாட்டுக்குத் தீராத களங்கம் ஏற்பட்டு விட்டது. இனி நான் என்ன செய்தாலும் அந்தக் களங்கம் மாறாதே. மேலும் நான் உயிரோடிருந்து என் தாய்நாட்டுக்காக எந்தச் சேவையும் செய்ய ஆம்பிகுமாரன் அனுமதிக்க மாட்டான். அவனை நான் நன்றாக அறிவேன். முதலாவதாக நான் உயிரோடு தட்சசீலத்திலேயே இருப்பதை அவன் அறிந்தால் என்னைக் கொன்று விட்டு தான் மறுவேலை பார்ப்பான்.  அவன் கையால் சாவதை விட என் கையாலேயே நான் இறப்பது கௌரவமானது என்று நான் கருதுகிறேன் ஆச்சாரியரே. தயவு செய்து இங்கிருந்து சென்று விடுங்கள். இந்தக் குற்றவாளியைச் சாக அனுமதியுங்கள்”

 

விஷ்ணுகுப்தர் உறுதியாகச் சொன்னார். “உன் தாய்நாட்டுக்கு நீ சேவை செய்வதற்கு ஆம்பிகுமாரனின் அனுமதி தேவையில்லை சின்ஹரன். சொல்லப் போனால் யாரும் தங்கள் தாய்நாட்டுக்குச் சேவை செய்ய யாருடைய அனுமதியும், உதவியும் தேவையில்லை. ஒவ்வொருவரும் தாங்கள் இருக்கும் நிலைகளில், முடிந்த விதங்களில் தாய்நாட்டுக்கு எத்தனையோ செய்ய முடியும். நீ உயிரோடு இருப்பது ஆம்பிகுமாரனுக்குத் தெரிய வேண்டியதில்லை. உன் கையால் சாவது கௌரவமாக இருக்கும் என்று நீ சொன்னாய். ஒரு வீரனுக்குப் போர்க்களத்தில் இறப்பது தான் கௌரவமாக இருக்குமே ஒழிய தற்கொலை கௌரவமாக இருக்காது. அது எந்தக் களங்கத்தையும் போக்கி விடாது. உன் தாய்நாட்டுக்கு உன்னால் செய்ய முடிந்ததும், நீ செய்ய வேண்டியதும் நிறைய இருக்கின்றது சின்ஹரன். நீ அதைச் செய்யத் தயாரா?”

 

அவர் குரலில் இருந்த உறுதியும் தெளிவும் சின்ஹரனை யோசிக்க வைத்தது.

 

ம்பிகுமாரன் இரண்டு நாட்களாக யாரிடமும் பேசவில்லை. அவன் அந்தப்புரத்திற்குப் போகவில்லை. அவன் தனிமையில் ஆழ்ந்த ஆலோசனையில் இருந்தான். கேகயப் படையின் ஆக்கிரமிப்பால் அவன் உணர்ந்த அவமான உணர்வு இப்போதும் குறைய மறுத்தது. அவர்கள் போட்ட பிச்சையால் அவன் வாழ்ந்து கொண்டிருப்பது போன்ற உணர்வை கேகய அமைச்சன் இந்திரதத் ஏற்படுத்தி விட்டுப் போனது தாங்க முடியாத பாரமாக அவன் இதயத்தை அழுத்தியது.

 

அவன் தந்தையின் வார்த்தைகள் இப்போதும் அவன் செவிகளை அறைகின்றன. “எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று எனக்கு வாக்களித்த நீ என்ன பார்த்துக் கொண்டாய் ஆம்பி குமாரா.” தந்தைக்கு அவன் பதில் அளிக்கவில்லை என்றாலும் அவன் மனசாட்சிக்கும், வீரத்திற்கும், தன்மானத்திற்கும் அவன் பதில் அளிக்க முடியாமல் தவித்தான். அவன் ஒற்றர்களை கேகய நாட்டின் எப்பகுதிகளை எப்படித் தாக்கலாம் என்று அறியத் தான் முழுவதுமாகப் பயன்படுத்தியிருந்தான். தந்தை வழியின்படியே அவர்கள் பணிபுரிய அவன் அனுமதித்திருந்தால் கண்டிப்பாக நிலைமை இந்த அளவு மோசமாகியிருக்காது. யாராவது ஒரு ஒற்றனாவது இந்தத் தாக்குதலை மோப்பம் பிடித்து வந்து சொல்லியிருப்பான். தயார்நிலையில் இருந்து எளிதாக கேகயப்படையை சமாளித்திருக்கலாம். ஆனால் காலம் கடந்து யோசித்துப் பயனில்லை….

 

அவன் தட்சசீல கல்விக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் அவனுக்கு ஆச்சாரியர் விஷ்ணுகுப்தரின் போதனைகள் வேம்பாகக் கசக்கும் என்றாலும் அவருடைய சொற்கள் என்றும் வலிமையானவை, அர்த்தமுள்ளவை என்பதில் அவனுக்கு எந்தச் சந்தேகமும் கிடையாது. அவர் அவனைப் பார்க்கும் பார்வை, தோரணை எல்லாம் கோபமூட்டுவதாக இருக்கும் என்பதால் அவனும் அரைகுறையாய் தான் கவனம் செலுத்துவான் என்றாலும் அவனுக்கு அவர் ஒரு முறை சொல்லியிருந்தது மனதின் ஒரு மூலையில் இப்போதும் நினைவு இருக்கிறது.அடுத்தவர் அனுபவங்களில் இருந்து முன்கூட்டியே பாடம் கற்றுக் கொள்பவன் அறிவாளி. தன்னுடைய அனுபவங்களில் கஷ்டப்பட்டுப் பாடம் கற்றுக் கொள்பவன் சாதாரண மனிதன். தன்னுடைய அனுபவங்களில் இருந்தும் பாடம் கற்றுக் கொள்ள முடியாதவன் முட்டாள். அவன் எதிரிகளுக்கு என்றும் எளிதானவன். அவன் அழிவது நிச்சயம்…”

 

அறிவாளியாக இருக்கும் வாய்ப்பை ஆம்பி குமாரன் நழுவ விட்டு விட்டான். சாதாரண மனிதனாகவாவது அவன் இருக்க வேண்டும். ஏனென்றால் முட்டாளாக அழிவதற்கு அவனுக்கு விருப்பமில்லை. ஆம்பி குமாரன் ஆழமாக யோசித்துத் தன் தவறு சிற்றின்பங்களில் அதிகம் கழித்தது தான் என்று நினைத்தான். அது தான் அவனது கவனத்தை உரிய இடங்களில் செலுத்தத் தவற வைத்து விட்டது. அவனை மட்டுமல்ல அவனுடைய சேனாதிபதி சின்ஹரனையும் கூடத் தவற வைத்து விட்டது. அந்த ஒரு தவறு இல்லாமலிருந்தால் சின்ஹரனாவது உடனடியாக எதாவது பராக்கிரமம் காட்டி இருந்திருப்பான். சின்ஹரனை நினைக்கையில் அவனுக்கு ஆத்திரம் வந்தாலும் கூட அவனைப் போலவே தானும் தவறிழைத்திருக்கிறோம் என்ற உண்மையை அவனுக்கு மறுக்க முடியவில்லை. நேற்று தான் அவனுக்கு சின்ஹரனை மைனிகா கொன்று விட்டோ, மயக்க மருந்து கொடுத்து மயக்கத்தில் ஆழ்த்தி விட்டோ சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் மனதில் எழுந்தது. ஆம்பி குமாரன் உடனடியாக தன் வீரர்களை அனுப்பி மைனிகாவின் வீட்டைச் சோதனையிடச் சொன்னான். போய் வந்த வீரர்கள் ஒரு கட்டிலைத் தவிர மைனிகாவின் வீட்டில் வேறு எதுவும் இருக்கவில்லை என்றும் சின்ஹரனோ அவன் பிணமோ வீட்டுக்குள் இல்லை என்றும் சொன்னார்கள். காமாந்தகன் மைனிகாவுடனேயே தட்சசீலத்தை விட்டு வெளியேறியிருக்க வேண்டும்….


ஆம்பி குமாரன் பெருமூச்சு விட்டான். நடந்தது எதையும் அவன் மாற்ற முடியாது. ஆனால் இனியொரு முறை இது போல் நடக்க அவன் கண்டிப்பாக அனுமதிக்க மாட்டான். இனியொரு முறை அலட்சியத்திற்கு அவன் இடம் தர மாட்டான். அவன் தந்தை எந்த நேரத்திலும் உயிர்விட வாய்ப்பிருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்குப் பின் மனிதர் மிகவும் நொந்து போய் விட்டார். தளர்ச்சி மிக அதிகமாக அவரிடம் தெரிகிறது. அரசர் தன் வாழ்நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார் என்று அரண்மனை வைத்தியர் அவனிடம் ரகசியமாகச் சொல்லி விட்டுச் சென்றிருக்கிறார்.  மிக விரைவில் அரியணை ஏறப்போகும் அவன் தன்னை வலிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். கேகய நாட்டுக்குக் கடுமையாகப் பதிலடி தர வேண்டும்….

 

அவன் எண்ணங்களை அவனுடைய காவல் வீரன் கலைத்தான். “தாங்கள் பாரசீகத்திற்கு அனுப்பியிருந்த ஒற்றன் வந்திருக்கிறான் இளவரசே”

 

ஆம்பி குமாரன் சொன்னான். “அவனை உள்ளே அனுப்பு வீரனே”

 

காவல் வீரன் போய் ஒற்றன் உள்ளே நுழைந்தான்.  

 

ஆம்பி குமாரன் கேட்டான் “என்ன செய்தி ஒற்றனே”

 

ஒற்றன் சொல்ல ஆரம்பித்தான். “பாரசீகத்தைத் தற்சமயம் வென்றிருக்கும் அலெசாண்டர் கிரேக்கத்தில் உள்ள மாசிடோனியா என்ற நாட்டைச் சேர்ந்தவன் என்று சொல்கிறார்கள் இளவரசே. அவன் பார்க்க தேவலோகத்தைச் சேர்ந்த மாவீரனைப் போல் தெரிகிறான்.  அவன் படை மிகப் பெரியது. ஆனால் அவன் மாசிடோனியாவை விட்டுக் கிளம்புகையில் படை இந்த அளவில் இருக்கவில்லை என்றும் வழியில் வென்ற நாட்டின் வீரர்களைச் சேர்த்துக் கொண்டு தான் படையை அந்த அளவில் பெரிதாக்கி இருக்கிறான் என்றும் சொல்கிறார்கள். அவன் படையை விடவும் அவன் பராக்கிரமம் மேலும் பெரிதாக இருக்கிறது. பயம் என்பதையே அவன் அறியாதவன் என்று அனைவரும் சொல்கிறார்கள். எல்லாச் சந்தர்ப்பங்களிலும் தன்னுடைய நிதானத்தை இழக்காதவன் அவன் என்றும் சொல்கிறார்கள். எதிரியின் வலிமை பல மடங்கு இருந்தாலும் அதைப் பலவீனப்படுத்த விரைவில் அவன் வழி கண்டுபிடிப்பவன் என்றும் அந்த வழியில் வேகமாகவும், கச்சிதமாகவும் சென்று வென்று முடிப்பவன் என்றும் சொல்கிறார்கள். அதனாலேயே அவன் இது வரை தோல்வி காணவில்லை என்று கூறுகிறார்கள். அப்படிப்பட்ட அலெக்சாண்டர் இங்குள்ள நிலவரத்தை பலர் மூலம் கேட்டு அறிந்து கொண்டதுடன் இங்கே வருவதற்குக் கிளம்பி விட்டான் இளவரசே.…”


ஆம்பி குமாரனுக்கு அலெக்சாண்டரைப் பற்றிக் கேள்விப்பட்டதெல்லாம் பிரமிப்பாக இருந்தது. அவனைப் போன்றவனை நட்பாக்கிக் கொண்டால் அவனுடன் சேர்ந்து கொண்டு கேகயத்தை அல்ல மட்டும் அல்லாமல் மற்ற நாடுகளையும் கூட வென்று ஒரு புதிய சரித்திரம் படைக்கலாம் என்று அவனுக்குத் தோன்ற ஆரம்பித்தது. யோசிக்க யோசிக்க அந்த எண்ணம் வலுப்பெற ஆரம்பித்தது.

 

ஒற்றனை அனுப்பி வைத்த ஆம்பி குமாரனுக்கு சிறிது நேரத்தில் அரசரின் உடல்நிலை கவலைக்கிடமாக ஆரம்பித்து விட்டது என்ற செய்தி வந்து சேர்ந்தது. இந்தச் செய்தி அவன் முந்தைய எண்ணத்திற்கு நல்ல சகுனமாக இருப்பதாக எண்ணிய ஆம்பி குமாரன் புன்னகைத்தான்.

 

(தொடரும்)

என்.கணேசன் 


இந்த நாவலையும், அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -

(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை  nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும். 

    


2 comments:

  1. A good glimpse of olden times and people. Thanks for the novel.

    ReplyDelete
  2. ஆம்பி குமாரனின் இந்த விபரீத எண்ணம் நிறைவேறுமா?

    ReplyDelete