Thursday, May 21, 2020

இல்லுமினாட்டி 50


சிறையிலிருந்து தப்பித்துப் போக வேண்டுமா?” என்று இரக்கத்துடன் கேட்ட ராஜேஷை மனோகர்இது என்ன கேள்வி?’ என்பது போலப் பார்த்து விட்டுச் சொன்னான். ”சிறையிலிருந்து தப்பித்துப் போகும் ஆசை யாருக்குத் தான் இருக்காது? ஆனால் அப்படித் தப்பிக்க முடிய வேண்டுமே!”

ராஜேஷ் சொன்னான். “நான் முன்பே சொன்னது போல நீ பணம் செலவு செய்யத் தயாராக இருந்தால் தாராளமாக அவர்களே நீ தப்பிக்க வழி சொல்லிக் கொடுப்பார்கள்

மனோகர் எச்சரிக்கையுடன் கேட்டான். “பொதுவாக இங்கிருந்து தப்பிக்க ஒருவன் எத்தனை பணம் தர வேண்டியிருக்கும்?”

ராஜேஷ் சொன்னான். “அது நாம் எந்தக் குற்றத்திற்காக எவ்வளவு கால தண்டனையில் இருக்கிறோம் என்பதைப் பொருத்தது. சின்னக் குற்றங்கள், குறைந்த தண்டனையில் இருந்தால் சுமார் ஐம்பதாயிரம் தந்தால் கூடப் போதும் பெரிய குற்றம் பெரிய தண்டனையாக இருந்தால் ஐந்து லட்சம், பத்து லட்சம் கூட செலவழிக்க வேண்டி வரும்...”

மனோகருக்குக் கடத்தல் குற்றம் எந்த அளவுகோலில் இருக்கிறது என்ற சந்தேகம் எழுந்தது. சிறு தயக்கத்துக்குப் பின் கேட்டான். “நான் எவ்வளவு தர வேண்டியிருக்கும்?”

ராஜேஷ் சொன்னான். “நான் கேட்டுச் சொல்கிறேன்

மனோகருக்குப் பயமாகவும் இருந்தது. ’இவன் கேட்டுச் சொல்கிறேன் என்று நான் தப்பிக்க முயல்கிறேன் என்ற செய்தியைப் பரப்பி விட்டால் அது சிக்கலை அதிகப்படுத்தி விடுமேஎன்று யோசித்தான்.

அவன் முகபாவனையிலிருந்தே அவன் மனப்போக்கைப் படிக்க முடிந்த ராஜேஷ் அவன் தோளில் தட்டிக் கொடுத்தபடிச் சொன்னான். “கவலைப்படாதே. என் ஆட்கள் ரகசியம் காக்க முடிந்தவர்கள். உதவ முடியா விட்டாலும் மாட்டிவிட மாட்டார்கள். தாராளமாக நம்பலாம்

அவன் அப்படிச் சொன்னாலும் மனோகருக்கு மனதில் நெருடலாகத் தான் இருந்தது. இவன் யாரிடம் கேட்பான், எப்படிக் கேட்பான் என்று தெரியவில்லை. அதைக் கேட்டாலும் அவன் சொல்வான் என்று தோன்றவும் இல்லை. இவனிடம் சொல்லித் தேவையில்லாமல் பிரச்னை செய்து கொள்கிறோமோ என்று தோன்றியது. ஆனாலும் முயற்சி எதுவும் செய்யாமல் இப்படியே அடைந்து கிடப்பது ஆகாது, ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று உறுதியுடன் நினைத்துக் கொண்டான். 

அன்று மதிய உணவின் போது ராஜேஷ் திடீரென்று காணாமல் போனான். கைதிகளுக்கு மத்தியில் மனோகர் எத்தனை தேடியும் அவனைக் காண முடியவில்லை. இருவரும் ஒன்றாகத் தான் சாப்பிடுமிடத்திற்கு வந்தார்கள். மனோகர்  பின்னால் தான் அவன் உணவுக்காக  வரிசையில் நின்றிருந்தான். மனோகர் தட்டில் சாப்பாட்டை வாங்கிக் கொண்டு திரும்பிப் பார்த்த போது ராஜேஷைக் காணவில்லை. சாப்பிடும் ஹாலில் கதவருகே இரண்டு காவலர்கள் துப்பாக்கியோடு நின்றிருந்தார்கள். அவர்கள் இருவருடைய பார்வையும் அங்கிருந்த கைதிகள் மீதே நிலைத்திருந்தன. அவர்களை ஏமாற்றி அவன் வெளியே போயிருக்க வழியேயில்லை என்பதால் அவர்கள் அனுமதியோடு தான் போயிருக்க வேண்டும். போய் மனோகர் தப்பிக்க முயற்சி செய்கிறான் என்று காட்டிக் கொடுத்து விடுவானோ என்று மெல்ல திகில் வந்தது. பல வித யோசனைகள், பயங்களுடன் அவன் சாப்பிட்டு முடித்துக் கைகழுவித் திரும்பிய போது ராஜேஷ் சாப்பாட்டுக்காக வரிசையில் நின்றிருந்தான். எப்போது வந்தான், எப்படி வந்தான் என்பது தெரியவில்லை.

சிறையறைக்குத் திரும்பவும் இருவரும் வந்து சேர்ந்த பிறகு சிறையறைகள் பூட்டப்பட்டு வராந்தாவில் காவலர்களின் காலடியோசை குறைந்து கொண்டே போய் வராந்தாவில் முழுஅமைதி திரும்பிய பிறகு ராஜேஷ் மனோகரிடம் சொன்னான். “பத்து லட்சம் கேட்கிறார்கள்?”

அப்படியானால் அவன் சார்பாகப் பேசுவதற்காகத் தான் ராஜேஷ் இடையே காணாமல் போயிருக்கிறான் என்பது மனோகருக்குப் புரிந்தது. காட்டிக் கொடுக்கிறவனாக இருந்தால் இப்படி பேரம் பேசிவிட்டு வந்திருக்க மாட்டான் என்று அவன் மனம் சிறிது நிம்மதி அடைந்தது.  கோடிக்கணக்கில் அவன் வங்கிக் கணக்கில் இருப்பதால் எத்தனையும் செலவழிக்க மனோகர் தயார் தான் என்றாலும் அத்தனை பணமா என்பது போல முகத்தில் திகைப்பைக் காட்டினான். பணம் அவனிடம் நிறைய இருக்கிறது என்கிற உண்மை யாருக்கும் தெரிவது அவசியமில்லை என்று அவன் நினைத்தான்.

மனோகர் திகைப்பைப் பார்த்து ராஜேஷ் வருத்தத்துடன் சொன்னான். “எனக்கும் அவர்கள் தொகையைச் சொன்னவுடன் திகைப்பாய் இருந்தது. ‘என்னைய்யா இவன் காஷ்மீர் தீவிரவாதியா, ஒரு பெண்ணைக் கடத்தியவனைத் தப்பிக்க வைக்க இவ்வளவு பணம் கேட்கிறீர்கள்என்று கேட்டேன்.  அவர்கள் முதலமைச்சர் குடும்பம் சம்பந்தப்பட்ட வழக்கில் இருக்கும் ஆளைத் தப்பிக்க வைத்தால் இரண்டு மூன்று பேருக்காவது சஸ்பென்ஷன், விசாரணை எல்லாம் உறுதி. அதெல்லாம் பரவாயில்லை என்று துணிந்து செய்ய வேண்டுமானால் குறைந்தபட்சம் பத்து லட்சமாவது வேண்டும். இல்லா விட்டால் பேசவே பேசாதே என்கிறார்கள்....”

மனோகர்  ஆழ்ந்து யோசிக்கும் பாவனை காட்ட, ராஜேஷ் அவனை இரக்கத்துடன் பார்த்தான். மனோகர் சிறிது யோசித்து விட்டுக் கேட்டான். “பணத்திற்கு நான் எப்படியாவது ஏற்பாடு செய்கிறேன் என்று வைத்துக் கொள். அவர்களுக்கு எப்படிப் பணம் தருவது?”

அவன் பணம் ஏற்பாடு செய்கிறேன் என்று சொன்னது ராஜேஷைச் சிறிது ஆச்சரியப்படுத்தியது போல் இருந்தது. இத்தனை பெரிய தொகையை அவனால் தர முடியாது என்று நினைத்திருக்கிறான் என்பது மனோகருக்கு அந்த ஆச்சரியத்தைப் பார்த்துப் புரிந்தது. 

ராஜேஷ் உற்சாகமாகச் சொன்னான். “அது பணமாகவும் தரலாம். அவர்கள் சொல்லும் அக்கவுண்டுக்கு நீ அனுப்பியும் வைக்கலாம். பணம் கிடைத்து அதிகபட்சமாய் மூன்றே நாளில் தப்பிக்க அவர்கள் ஏற்பாடு செய்து விடுவார்கள். அதற்கு நான் உத்திரவாதம் தருகிறேன்.  நீ பணத்தை எப்படி தரப்போகிறாய்?”


ந்தப் பிரபல பத்திரிக்கையில் வேலைக்குச் சேர்வது சிந்துவுக்குச் சிரமமாக இருக்கவில்லை. அவளிடம் இயல்பாகவே இருந்த அழகு, புத்திசாலித்தனம், துணிச்சலான அணுகுமுறை எல்லாம் ஒரு பத்திரிக்கை நிருபர் வேலைக்குக் கச்சிதமாகவே பொருந்தி இருந்ததாலும், சம்பளம் எவ்வளவானாலும் பரவாயில்லை என்று சொல்லியதாலும் உடனே வந்து சேர்ந்து கொள்ளச் சொல்லி விட்டார்கள். அவளுக்குப் பத்திரிக்கைத் துறையில் முன் அனுபவம் இல்லாததால் முதல் மூன்று மாதங்களைப் பயிற்சி மாதங்களாகத் தான் எடுத்துக் கொள்வோம், அந்த மூன்று மாதங்களில் சம்பளம் பாதியாகத் தான் தருவோம் என்று சொன்னதற்கும் சிந்து ஒத்துக் கொண்டாள். அவளுக்கு அந்தப் பத்திரிக்கையில் நிறைய நாட்கள் இருக்கும் எண்ணம் சுத்தமாக இல்லை. உதயை அணுக அந்தப் பத்திரிக்கை நிருபர் பதவி உதவியாக இருக்கும் என்பதைத் தவிர அந்த வேலையில் அவளுக்கு வேறெந்த அக்கறையும் இருக்கவில்லை.

முதலிரண்டு நாட்களில் அவள் ஒரு மூத்த நிருபருக்கு உதவியாளராக இருந்து அந்த வேலையின் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டாள். மூன்றாவது நாள் இன்னொரு நிருபர் கொண்டு வந்த செய்தியைப் பிழை திருத்தும் வேலை அவளுக்குத் தரப்பட்டது. நான்காவது நாள் எந்த வேலையையும் அவர்கள் ஒதுக்குவதற்கு முன் அவள் பத்திரிக்கை ஆசிரியரைச் சந்தித்துச் சொன்னாள். “சார் நானாகவே ஒரு வேலையை முழுமையாகச் செய்ய ஆசைப்படுகிறேன்

அந்தப் பெண்ணிடம் இருந்த உற்சாகமும், தன்னம்பிக்கையும் அந்தப் பத்திரிக்கை ஆசிரியர் முகத்தில் சிறு புன்னகையை வர வைத்தது. “என்ன செய்யலாம் என்றிருக்கிறாய்என்று கேட்டார். 

ஒரு இளம் அரசியல்வாதியைப் பேட்டி எடுக்க ஆசைப்படுகிறேன்...”

யாரையாவது குறிப்பாக மனதில் நினைத்து வைத்திருக்கிறாயா?”

ஆமாம் சார். முதலமைச்சர் மகனும், எம்.பியுமான உதய் கமலக்கண்ணனைப் பேட்டி எடுக்க ஆசைப்படுகிறேன்

ஏன் அவரை?”

சிந்து சிறிதும் யோசித்து நிற்காமல் ஒரு ரகசியத்தைப் பகிர்ந்து கொள்பவள் போலச் சொன்னாள். “மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும் சூழல் உருவானால் உதய் கமலக்கண்ணனுக்குக் கண்டிப்பாக மத்திய மந்திரி பதவி கிடைக்கும் என்று டெல்லியிலிருக்கும் என் பத்திரிக்கை நண்பர் மூலம் கேள்விப்பட்டேன். அப்படி ஒருவேளை நடந்தால் அவரை முன்கூட்டியே பேட்டி எடுத்து வெளியிட்டிருப்பது நம் பத்திரிக்கைக்குச் சிறப்பாக இருக்கும் அல்லவா?”

அந்தப் பத்திரிக்கை ஆசிரியர் முகத்தில் புன்னகை விரிந்தது. இளமைக்கே உரிய உற்சாகம், வித்தியாசமான யோசனைகள், நடைமுறைப்படுத்த நினைக்கும் துடிப்பு இருக்கிற இந்த பெண்ணைத் தடுக்கத் தோன்றவில்லை. ”சரி முயற்சி செய். பேட்டி எப்படி வருகிறது என்று முதலில் பார்ப்போம். அப்புறமாய் வெளியிடுவது பற்றி யோசிக்கலாம்என்று சொல்லி அனுப்பினார்.

சிந்துவுக்குப் பேட்டி வந்தாலும் வராவிட்டாலும் ஒன்று தான். பேட்டி எடுக்கும் சாக்கில் உதயைச் சந்திக்கும் வாய்ப்பு தான் அவளுக்கு வேண்டியது. அதனால் முகமலர்ந்து இரண்டு முறை நன்றி சொல்லி விட்டு அவர் அறையை விட்டு வெளியே வந்தாள். உதயைச் சந்திக்க ஒரு சாக்கு கிடைத்து விட்டது.

அவள் உதயை அவனுடைய பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்திலேயே முதலில் சந்திக்க முடிவு செய்தாள். எந்தக் காரணத்தைக் கொண்டும் தன் திட்டத்தில் முதல் பாகத்தைக் கடக்கும் வரை க்ரிஷ் கண்ணில் பட அவள் விரும்பாததால் உதயை வீட்டில் சந்திப்பதைத் தவிர்த்தாள்.

(தொடரும்)
என்.கணேசன்


   

6 comments:

  1. villi has entered. Tension is building up.

    ReplyDelete
  2. மனோகர் தப்பிக்க பணம் தயார் செய்யும்போது....'அது ரகசிய ஆன்மீக இயக்கத்தின் பணம்' என்று....பிடித்து செந்தில்நாதன் மீட்டு விடுவாரோ...????

    சிந்துவின் முதல் பாகம் என்ன? எப்படி செய்யபோகிறாள்?

    ReplyDelete
  3. சார், இந்த புத்தகத்தை kindle லில் வாங்க முடியுமா?

    ReplyDelete
  4. சரி, நன்றி.

    ReplyDelete