அடுத்ததாக ஒரு செயல் செய்வதற்கு வேண்டியவற்றை ஆராய்ந்து ஸ்ரீகிருஷ்ணர்
கூறுகிறார்:
அகன்ற தோள்களை உடையவனே! எல்லாக்
கர்மங்களும் நிறைவேறுவதற்கு இந்த ஐந்து காரணங்கள் கர்மங்களின் முடிவுக்கான உபாயத்தைக்
கூறும் சாங்கிய சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளன. அவற்றை
நீ என்னிடமிருந்து நீ நன்றாக அறிந்து கொள்.
கர்மம் செய்கின்ற
உடல், செய்கிறவன், தனித்தனியான
இந்திரியங்கள் மற்றும் அவற்றின் உபகரணங்கள், பலவிதமான
தனித்தனியான செயல்கள், மற்றும் தெய்வம் ஆகியவை காரணமாகும்.
மனிதன் தன்னுடைய
உடல், வாக்கு, மனம் இவைகளால் நல்லதோ, கெட்டதோ
எந்தச் செயலைத் தொடங்கினாலும் அதற்கு இவ்வைந்தும் காரணங்களாகும்.
இப்படியிருக்க, எவனொருவன்
தன்னை மட்டும் ஒரு கர்மத்தைச் செய்யும் கர்த்தாவாக நினைக்கிறானோ அவன் பக்குவமடையாத
புத்தியுள்ளவனாகையால் உண்மையைக் காணாத மூர்க்கனாவன்.
ஒரு
காரியம் செய்து முடிக்கப்பட வேண்டுமானால் ஐந்து காரணிகள் வேண்டும். உடல், செய்கிறவன்
(செயல் அறிவு), புலன்கள் மற்றும் அவற்றின் உபகரணங்கள், செயலுக்கான மற்ற உபகரணங்கள்
மற்றும் தெய்வம் என அனைத்தும் இணைந்தால் மட்டுமே செயல் செய்து முடிக்கப்படும். செயல்
நல்லதோ கெட்டதோ இத்தனையும் கூடிச் செய்தால் மட்டுமே செய்து முடிக்க முடியும்.
இந்த
உண்மையை முழுமையாக உணர்ந்தால் “நானே செய்தவன்” என்ற அகங்காரம் ஒருவனுக்கு மனதில் எழாது.
அப்படியும் ஒருவனுக்கு உள்ளத்தில்
“என்னால் தான் இச்செயல் முடிந்தது” என்ற கர்வம் ஏற்படுமானால் அது அறியாமையின் உச்சமாகவே
இருக்கும். அறிந்தவன் அகங்காரம்
கொள்வதில்லை. அகங்காரம் கொண்டவன் அறிந்தவனாக இருப்பதில்லை.
மேலும்
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்:
எந்த மனிதனுடைய
உள்ளத்தில் நான் செய்கிறேன் என்னும் எண்ணம் இல்லையோ, அவ்வாறே
எவனுடைய புத்தி உலகியல் பொருட்களிலும் செயல்களிலும் ஒட்டுவதில்லையோ அவன் இவ்வுலகங்களிலுள்ள
மக்கள் அனைவரையும் கொன்றாலும் உண்மையில் கொல்பவனாக மாட்டான். அவன் பாவத்தினால் பந்தப்படுவதுமில்லை.
அறிவு, அறியப்படும்
பொருள், அறிபவன் என்ற இம்மூன்றும் கர்மத்தைச் செய்யத் தூண்டுபவை. கருவி, செயல், செய்பவன்
என்ற இம்மூன்றும் கர்மத்தை நிறைவேற்றுபவை.
ஒரு செயலைச் செய்கையில்
சுயநல நோக்கு இல்லா விட்டால், அடையப் போகிற உலகியல் இலாபத்தின் கணக்கே பிரதானமாக இல்லா
விட்டால் அவன் உள்ளமும், அவன் செயலும் தூய்மையாகவே இருக்கும். “நான், எனது” என்ற சுயநலம்
உள்ளே நுழையும் போது தான் அத்தனை பிரச்னைகளும் மனித வாழ்வில் கூடவே நுழைகின்றன. செயலின்
நோக்கம் நமக்கு விதிக்கப்பட்ட கடமை என்ற புரிதலின் வெளிப்பாடாக இருந்தால், செய்யும்
செயலில் சுயநலம் சிறிதும் நுழையாமல் இருந்தால் அந்தச் செயல் புனிதமானதாகவே இருக்கும்.
கர்ம யோகமாகச் செய்யப்படும் அந்தச் செயலில் அலட்சியமோ, அகங்காரமோ, தனிப்பட்ட லாப நஷ்டக்
கணக்கோ இல்லாமல் இருப்பதால் அந்தச் செயலால் இந்த உலகமே அழிந்தாலும் அவன் பாவம் புரிந்தவனாக
மாட்டான்.
ஒரு செயலுக்குத்
தேவையான ஐந்து காரணிகளைச் சொன்ன பகவான் அந்தச் செயலைச் செய்யத் தூண்டுபவை, நிறைவேற்றத்
தேவையானவை என்று இரு பிரிவாகவும் பிரிக்கிறார். செயலைச் செய்யத் தூண்டுபவை அறிவு, அறியப்படும்
பொருள், அறிபவன் ஆகிய மூன்றுமாகும். நிறைவேற்றத் தேவையானவை கருவி, செயல், செய்பவன்
ஆகிய மூன்றுமாகும். இந்த வகையில் பிரித்துப் பார்த்தாலும் கூட ’என்னால் தான் முடிந்தது’
என்ற அகங்காரம் ஒரு மனிதனின் மனதில் எழ முடியாது.
அடுத்ததாக ஞானத்தின்
வகைகளையும் பகவான் கூறுகிறார்:
அறிவு, செயல், செய்பவன்
என்பவை குணங்களின் பிரிவையொட்டி மூவகையானவை என்று குணங்களை விளக்கும் போது கூறப்பட்டுள்ளது. அவைகளைப்
பற்றிய உண்மைகளையும் உள்ளபடி கேட்டுக்கொள்.
எல்லா உயிர்களிலும்
அழிவில்லாத ஒரே ஆத்ம வஸ்துவை மனிதன் எந்த ஞானத்தினால் காண்கிறானோ, வெவ்வேறாகப்
பிரிந்துள்ளவைகளில் பிரியாமலிருப்பதைக் காண்பது எதுவோ அதை சாத்வீக ஞானம் என்று நீ அறிவாயாக!
எந்த ஞானமானது எல்லா
ஜீவராசிகளும் வெவேறாக இருப்பதைக் கொண்டு தனித்தனியாக ஆன்மாக்கள் இருப்பதாக அறிகிறதோ
அந்த ஞானம் ராஜஸ ஞானம் என்று அறிவாயாக.
எந்த ஞானமானது பிரகிருதியின்
காரியத்தின் விளைவான உடல் ஒன்றே அனைத்தும் என்று நினைத்து
அதை ஒட்டியே அனைத்தையும் எண்ணுமோ, காரணம்
இல்லாததும், உண்மைப் பொருளற்றதும், அற்பமானதுமான
அந்த ஞானம் தாமஸ ஞானம் எனப்படும்.
எல்லாவற்றிலும்
அந்தர்யாமியாய் இருக்கும் இறைவனைக் காண்பதே உண்மையான ஞானம். அதுவே சாத்வீக ஞானம். நரசிம் மேத்தா
என்ற குஜராத்திய வைஷ்ணக் கவிஞானி கூறுகிறார்: “கருணைக்கடலான தேவா! உங்களை எப்படி நான்
பூஜிப்பேன்? சிருஷ்டியில் உள்ள ஒவ்வொரு அணுவிலும் நீங்கள் வியாபித்து இருக்கையில் உங்களை
எப்படி ஒரு விக்கிரகத்துக்குள் நான் அடைத்து வைப்பேன்? எண்ணெயோ அல்லது திரியோ எதுவுமின்றி
உங்களது நிரந்தரமான ஜோதி சுடர்விட்டு ஒளிவீசுவதை நான் காண்கிறேன். உருவமற்ற அதைக் கண்களின்றியே
பார்க்க வேண்டும். சூட்சும புலன்களைக் கொண்டே அனுபவித்துப் பேரானந்தம் அடைய வேண்டும்”
இந்த உண்மையான ஞானம்
புலன்களால் அறியவோ அடையவோ முடிந்ததல்ல. நரசிம் மேத்தா கூறியது ஐம்புலன்களைக் கடந்த
சூட்சுமப் புலன்களைக் கொண்டே உணரவும், அனுபவிக்கவும் முடியும். சாதாரண அறிவைத் தாண்டி உணர முடிகிற இந்த ஞானம் தான்
சாத்வீக ஞானம். அனைத்திலும் வியாபித்திருக்கும் இந்தப் பரம்பொருளை ஒன்றென உணராது தனித்தனியாக
புறக்கண்ணால் பார்ப்பது போலவே உணர்வது ஞானமல்ல என்றாலும் அந்தப் புரிந்து கொள்ளலை பகவான்
ராஜஸ ஞானம் என்று குறைவான ஞானமாகச் சொல்கிறார்.
எந்தப் புரிதலும் இன்றி இந்த
உடலே அனைத்தும் என்றும் அதன் சுக துக்கங்களே உண்மையானவை என்றும் நம்பி அதை ஒட்டியே
அனைத்தையும் தீர்மானிப்பது அற்ப ஞானம் அல்லது
அஞ்ஞானமே. அதில் எந்தப் புரிதலுக்கும் வலுவான காரணமிருக்காது. புரிதலும்
அற்பத்தனமாகவே இருக்கும். அந்த அற்பத்தனமான புரிதலை தாமஸ ஞானம் என்று பகவான் கூறுகிறார்.
நம் ஞானம் எப்படிப்பட்டது
என்பதைச் சிறிது யோசித்துப் பார்ப்போமே!
செயல்ப பற்றியும்.... ஞானம் பற்றியும் கூறிய கிருஷ்ணரின் கருத்துகளும்.... அதன் விளக்கங்களும் அருமை....
ReplyDelete