Wednesday, April 8, 2020

ஏவல்சக்தி, ரசவாதவித்தை மற்றும் ஆவி மூலம் அற்புதங்கள்!


ப்ளாவட்ஸ்கீ அம்மையாரிடம் இருந்த சிறப்பு என்னவென்றால் அவர் வெளிப்படுத்திய அற்புத சக்திகள் ஒரே மாதிரியாக இருந்ததில்லை. அவை பல ரகங்களாக இருந்ததும், எதிர்பாராத சந்தர்ப்பங்களிலும் உடனடியாக அவர் செய்து காட்ட முடிந்ததுமாக இருந்தது தான் அனைவரையும் வியக்க வைத்தது.

ஒரு முறை ஒரு சீனப் பேராசிரியருடன் அவர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்தச் சீனப் பேராசிரியர் சீன ஓவியங்களின் சிறப்புகள் பற்றி உற்சாகமாகச் சொன்னார். அவருக்கு அம்மையாரின் அற்புதசக்திகளில் எந்த விதமான நாட்டமும் இருக்கவில்லை. ஆனால் அவர் சீன ஓவியங்களைக் குறித்து உணர்ச்சிவசப்பட்டு வர்ணித்ததால் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் தன் மேசை டிராயரைத் திறந்து ஒரு சீன ஓவியத்தை எடுத்து அவரிடம் தந்தார்.  அந்த ஓவியத்தில் ஒரு சீனப் பெண்மணி அரசவை உடைகள் அணிந்து நின்றிருந்தார். அந்தச் சீன ஓவியம் அதற்கு முன்பு அந்த டிராயரில் இருக்கவில்லை என்பதை கர்னல் ஓல்காட் நன்கு அறிவார். பல அற்புதங்களை ப்ளாவட்ஸ்கீ அம்மையார் செய்து காட்டியிருந்ததால் இதில் அவருக்கும் பெரிய வியப்பு இருக்கவில்லை.

அந்தச் சீனப் பேராசிரியர் ஆர்வத்துடன் அந்த ஓவியத்தைப் பார்த்து விட்டுச் சொன்னார். “இந்த ஓவியம் நன்றாக இருக்கிறது. ஆனால் இது சீன ஓவியம் அல்ல. நான் சொன்ன சீன ஓவியங்களில் சீன எழுத்துக்கள் கண்டிப்பாக இருக்கும். இது ஜப்பானிய ஓவியமாக இருக்கலாம்

அவர் சொன்னதைப் புன்னகையுடன் கேட்ட ப்ளாவட்ஸ்கீ அம்மையார், “அப்படியா? அதைக் கொடுங்கள்என்று வாங்கி அந்த ஓவியத்தை அந்த டிராயரில் போட்டு ஒரு முறை மூடி மறுபடியும் திறந்து இன்னொரு ஓவியத்தை எடுத்துக் காட்டினார். அதில் அதே சீனப்பெண்மணி வேறு உடைகளை அணிந்து நின்றிருந்தார். அந்த ஓவியத்தின் இடது பக்க மூலையில் சீன எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன.

அதை வாங்கிப் பார்த்து அந்தச் சீன எழுத்துக்களைப் படித்து அந்தச் சீனப் பேராசிரியர் மகிழ்ச்சியுடன் சொன்னார். “இது எங்கள் நாட்டு ஓவியம் தான்...”

இரண்டு முறை காட்டிய ஓவியங்களும் அந்த அம்மையாரிடம் முன்பே இருந்தது அல்ல என்பதும், அவருக்காக ப்ளாவட்ஸ்கீ அம்மையார் வரவழைத்துக் காட்டியது என்பதும் அந்தச் சீனப் பேராசிரியருக்குத் தெரியாமல் இருந்தது தான் வேடிக்கை. கர்னல் ஓல்காட்டுக்குத் தான் ஒரு கணத்தில் அந்தச் சீன ஓவியத்தில் உடை மாறி சீன எழுத்துக்கள் எப்படிப் பொறிக்கப்பட முடிந்தது என்ற வியப்பு இருந்தது.

சின்னட் என்ற எழுத்தாளர்ப்ளாவட்ஸ்கீ அம்மையார் வாழ்வில் சில சம்பவங்கள்என்ற நூலில் ஓவியம் சம்பந்தமான இன்னொரு சுவாரசியமான சம்பவத்தைக் குறிப்பிட்டிருந்தார். ஒரு ஓவியர் ப்ளாவட்ஸ்கீ அம்மையாருக்காக ஒரு ஓவியத்தை வரைந்து கொண்டிருந்தார். மண்பானை செய்யும் சக்கரத்தில் ஒரு மனிதனை இறைவன் உருவாக்கிக் கொண்டிருப்பது போன்ற வித்தியாசமான ஓவியம் அது. அந்த ஓவியத்தைப் பாதி வரைந்து கொண்டிருக்கையில் பெயிண்ட்கள் தீர்ந்து போய் விட்டன.

அந்த ஓவியர் அந்தப் பெயிண்ட்கள் வாங்கி வந்தால் தான் ஓவியத்தை முடிக்க முடியும் என்று சொல்லி விட்டார். ப்ளாவட்ஸ்கீ அம்மையார் எந்த நிறப் பெயிண்ட்கள் வேண்டும் என்று கேட்க அந்த ஓவியர் பதிமூன்று நிறப் பெயிண்ட்களைச் சொன்னார்.

அந்த ஓவியர் அமர்ந்திருந்த நாற்காலிக்குப் பின் ஒரு பியானோ இருந்தது. ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அந்தப் பியானோ அருகில் சென்று அந்தப் பியானோவுக்கும் சுவருக்கும் இடைப்பட்ட இடத்தில் தன் ஆடையின் நுனியை ஏந்தியபடி நின்றார். பின் வந்து ஆடையில் விழுந்திருந்த பதிமூன்று நிறப் பெயிண்ட் பாட்டில்களை அந்த ஓவியரின் மேசையில் கொட்டினார். அந்த ஓவியர் திகைப்புடன் அந்தப் பாட்டில்களை ஆராய்ந்தார். அவர் கேட்ட அத்தனை நிறங்களும் அதில் இருந்தன. அவர் ஓவியத்தைத் தொடர்ந்து வரைய ஆரம்பித்தார். அவருக்குக் கடைசியில் தங்க நிற பெயிண்ட் போதாமல் போனது. அவர் அந்தப் பெயிண்ட் வேண்டுமென்றார்.

ப்ளாவட்ஸ்கீ அம்மையார் தேனீர் குடிக்கப் பயன்படுத்தும் சாசர் ஒன்றை எடுத்துத் தரச் சொன்னார். அந்த ஓவியர் அதை எடுத்துக் கொடுத்தார். அம்மையார் ஒரு பித்தளைச் சாவியையும் எடுத்துத் தரச் சொன்னார். அந்த ஓவியர் அதையும் எடுத்துக் கொடுத்தார். ப்ளாவட்ஸ்கீ அம்மையார் மேஜையின் அடியில்  அந்த சாசருடன் பித்தளைச் சாவியை உரசிச் சேர்த்துப் பிடித்தபடி சிறிது நேரம் இருந்தார். அவர் மேஜையின் அடியிலிருந்து அந்த சாசரை எடுத்து மேஜை மீது வைத்த போது அந்த சாசரில் தங்க நிறப் பெயிண்ட் நிறைந்திருந்தது. அந்த ஓவியர் அதைப் பயன்படுத்தி அந்த ஓவியத்தை வரைந்து முடித்தார்.

கர்னல் ஓல்காட்டுக்கு இந்தக் கடைசி நிகழ்ச்சி மிகவும் வினோதமாக இருந்தது. பித்தளைச் சாவியைப் பயன்படுத்தியதன் காரணத்தை ப்ளாவட்ஸ்கீ அம்மையாரிடம் ஆச்சரியமாகக் கேட்ட போது அது உலோகங்களை உபயோகித்துச் செய்யும் ஒரு ரசவாத வித்தை என்று மட்டும் அம்மையார் கூறினார். இப்படி ஒரு முறை பயன்படுத்திய முறையையே மறுமுறையும் பயன்படுத்தாமல் வித விதமாக அவர் பயன்படுத்திய முறைகளில் ஏவல் சக்திகள் மட்டும் பயன்படுத்தப்படவில்லை. ரசவாத வித்தைகள் போன்ற ரகசிய வித்தைகளும் பயன்படுத்தப்பட்டன.

அது மட்டுமல்லாமல் எல்லாத் தகவல்களையும் எப்படியாவது பெறும் வித்தையும் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் கைவசம் வைத்திருந்தார் என்பது பாச்கோஃப் சீமாட்டி என்ற பிரெஞ்சுக்காரர் சொல்லி அது நியூயார்க் உலகம் என்ற பத்திரிக்கையில் 21.04.1878 அன்று வெளியாகி இருந்தது. அதை அந்தச் சீமாட்டியின் வார்த்தைகளிலேயே பார்ப்போம்.

லெபனானில் நான் சுற்றுலா மேற்கொண்டிருந்த நேரம் அது. பால்பெக் பகுதியிலிருந்து ஒரெண்டிஸ் நதிப் பகுதிக்கு நான் பயணம் செய்து கொண்டிருந்த போது நடுவே ஒரு பாலைவனம் இருந்தது. அந்தப் பாலைவனத்தில் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் ஒரு கூடாரம் அமைத்துத் தங்கி இருந்தார். அவருடன் நானும் தங்கி இருவரும் வேறு சிலருடன் சேர்ந்து அருகிலிருந்த சில வரலாற்று நினைவுச் சின்னங்களைப் பார்வையிட்டோம். ஒரு வரலாற்றுச் சின்னத்தில் எழுதப்பட்டிருந்த எழுத்துக்கள் நாங்கள் யாரும் அறிந்திராத மொழியில்  இருந்தன. ப்ளாவட்ஸ்கீ அம்மையாரின் விசேஷ சக்திகளைக் கேள்விப்பட்டிருந்த நான் அவரிடம் இதில் என்ன எழுதியிருக்கிறது என்று கண்டுபிடித்துச் சொல்லும்படி சொன்னேன். அவர் இரவு வரை காத்திருக்கச் சொன்னார்.”

இரவு வந்தது. ப்ளாவட்ஸ்கீ அம்மையார் பாலைவன மணலில் பெரிய வட்டம் ஒன்றை வரைந்தார். இருவரும் அந்த வட்டத்துக்குள் நுழைந்து கொண்டோம். அந்த வட்டத்திற்குள் விறகுகள், சருகுகள் வைத்து அவர் தீ மூட்டினார். அதில் ஏதோ விசேஷப் பொருட்களையும் போட்டு புகை மண்டலம் எழுப்பினார். அந்தப் புகை மண்டலம் பெரிதாகப் பெரிதாக அவர் ஏதேதோ மந்திரங்களை முணுமுணுத்தார். தூரத்தில் நரிகள் நின்று கொண்டு ஊளையிட ஆரம்பித்தன. அவற்றைப் பொருட்படுத்தாமல் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அந்த நினைவுச்சின்னம் சம்பந்தப்பட்ட ஆவியை அங்கே வரக் கட்டளையிட்டார். சிறிது நேரத்தில் பெரிதாகப் பரவியிருந்த புகை மண்டலத்தின் நடுவே ஒரு வயோதிகரின் உருவம் மங்கலாகத் தெரிய ஆரம்பித்தது.  நெடுந்தொலைவில் இருந்து கேட்பது போல் அதன் குரல் ஒலித்தது. ”இது ஒரு காலத்தில் மக்களால் வணங்கப்பட்ட புகழ்பெற்ற கோயில்

யார் நீஎன்று ப்ளாவட்ஸ்கீ அம்மையார் கேட்டார்.

நான் இந்தக் கோயிலில் பூசாரியாக இருந்தவன்என்று அந்த உருவம் சொன்னது.

இது அந்தக்காலத்தில் எப்படி இருந்தது என்று எங்களுக்குக் காட்டேன்என்று ப்ளாவட்ஸ்கீ அம்மையார் சொன்னவுடன் அந்த உருவம் தலை தாழ்த்தி சம்மதித்தது. அடுத்த கணம் அவர்கள் முன் ஒரு பழமையான நகரம் கண்ணுக்கு எட்டிய வரை விரிந்து தெரிந்தது. அதன் மத்தியில் அந்தக் கோயில் சிறப்பாகத் தெரிந்தது. சில வினாடிகள் தெள்ளத் தெளிவாகத் தெரிந்த அந்த காட்சி பின் மங்கி மறைந்தது. அந்த உருவமும் அந்தப் புகைமண்டலத்தில் மறைந்து போனது   

(தொடரும்)
என்.கணேசன்
நன்றி தினத்தந்தி: 25.6.2019




3 comments:

  1. அற்புதம்��.‌..
    அம்மையாரின் ஒவ்வொரு அற்புத செயல்களை படிக்கும் போது.... நம் இந்திய யோகிகள் எப்படிபட்டவர்கள் என்பதை நினைக்காமல் இருக்க முடியவில்லை....


    நம் யோகிகள் இது போன்ற அற்புதங்களை ஊக்கப்படுத்த மாட்டார்கள்...ஞானத்தையே பெரிதாக போற்றுவார்கள்...

    ReplyDelete
  2. அருமை சார்... படிக்க தூண்டும் தொடர்... அற்புதமான பல நிகழ்வுகள் உங்கள் மூலம் அறிய முடிந்தது... மிக்க நன்றி..

    ReplyDelete