Monday, April 6, 2020

சத்ரபதி 119



சிவாஜியைப் பிடித்துத் தருபவர்களுக்கு அதிகபட்ச சன்மானங்களை அறிவித்து விட்டு உடனடியாக எதாவது நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த ஔரங்கசீப் ஏமாந்து போனான். உடனடியாக சிவாஜி பிடிபடவில்லை. ஒற்றர்கள் மூலைமுடுக்கெல்லாம் முடுக்கி விடப்பட்டார்கள். சிவாஜியைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை.

ஔரங்கசீப் வாழ்க்கையில் இப்படி ஒருவனிடம் ஏமாந்தது இல்லை. மனித சுபாவங்கள் அவனுக்கு அத்துப்படியானவை. முகலாய அரியாசனத்தில் அமர்த்தியதில் அவனுடைய வீரத்தை விட அதிகம் உதவியது சூழ்நிலைகளையும், மனிதர்களையும் அவன் பயன்படுத்திய விதம் தான். ஆனால் யாரும் அவனை பயன்படுத்தவோ ஏமாற்றவோ அவன் இதுவரை அனுமதித்தது கிடையாது.

அவனது தலைநகருக்கு வந்து அவனுடைய தர்பாரில் அவனை அவமதித்து முதுகைக் காட்டியபடி சிவாஜி வெளியேறிய காட்சியை எண்ணுகையில் அவனுக்கு இப்போதும் இரத்தம் கொதித்தது. சிவாஜியின் உயிரைக் காப்பாற்றுவதில் ராஜா ஜெய்சிங்கும், அவர் மகன் ராம்சிங்கும் முனைப்பு காட்டாமல் இருந்திருந்தால் சிவாஜி என்ற அத்தியாயத்தை அலட்டாமல் ஔரங்கசீப் முடித்திருப்பான். சிவாஜியைக் கைது செய்து மாளிகையில் அடைத்து அவனைத் தீர்த்துக்கட்ட ஔரங்கசீப் சரியான சந்தர்ப்பத்துக்காகக் காத்திருக்கையில் சிவாஜியும் தப்பித்துச் செல்லச் சரியான சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்து, அதைக் கண்டுபிடித்து, பயன்படுத்திக் கொண்டு தப்பித்துப் போயும் விட்டது ஔரங்கசீப்பை எள்ளி நகையாடுவது போல் இருந்தது.

அந்த அவமான உணர்வை அதிகப்படுத்துவதாக இருந்தது அவனது ஒற்றர் தலைவனின் நேரடி அறிக்கை. கசப்பான உண்மைகளையும், நிலவரங்களையும் உள்ளதை உள்ளபடி கேட்டுக் கொள்ள என்றுமே தயங்காத ஔரங்கசீப் ஒற்றர் தலைவனிடம் சிவாஜி தப்பித்தது பற்றி மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று  கேட்ட போது ஒற்றர் தலைவன் தயக்கத்துடன் தெரிவித்தான். “எல்லோரும் அவனை எண்ணி அதிசயிக்கிறார்கள் சக்கரவர்த்தி. பலரும் அவன் அறிவையும், சாமர்த்தியத்தையும், பராக்கிரமத்தையும் கண்டு வியந்து பாராட்டுவதைப் பார்க்க முடிகிறது”

ஔரங்கசீப் கடுமை தோய்ந்த குரலில் கேட்டான். “போர்க்களத்தில் நின்று வென்றிருந்தால் அதைப் பராக்கிரமம் என்று சொல்லலாம். ரகசியமாய் தப்பித்து ஓடுவதில் என்ன பராக்கிரமம் இருக்கிறது?”

ஒற்றர் தலைவன் மெல்லச் சொன்னான். “மக்களின் அபிப்பிராயங்கள் பல நேரங்களில் அறிவை அனுசரித்து இருப்பதில்லை சக்கரவர்த்தி. உணர்வுகளின் போக்கிலேயே அவர்கள் எதையும் எடுத்துக் கொள்கிறார்கள். அதன்படியே எதையும் தீர்மானிக்கிறார்கள்”

ஔரங்கசீப் அதை அறிவான். படிப்பறிவில்லாத குடிமக்களைச் சொல்வானேன். கல்வியிலும் அறிவிலும் மேம்பட்டிருக்கும் மனிதர்கள் கூடப் பல சமயங்களில் அறிவின் வழியில் செல்வதற்குப் பதிலாக உணர்வுகளின் போக்கிலேயே போகிறார்கள். உதாரணத்திற்கு அவன் தூர எங்கும் செல்ல வேண்டியதில்லை. அவன் மகள் ஜெப் உன்னிஸாவே அப்படித்தான் இருக்கிறாள். சிவாஜி தப்பித்ததைக் கேள்விப்பட்ட அவள் அவன் எப்படித் தப்பித்தான் என்று விசாரித்துத் தெரிந்து கொண்டபின் குதூகலித்த விதம் ஔரங்கசீப்புக்கு எரிச்சலைத் தந்தது. அவன் முறைத்ததை அவன் மகள் கண்டு கொள்ளவில்லை.

“தந்தையே. அவனைச் சிறைப்படுத்திய சக்கரவர்த்தியாகப் பார்க்காதீர்கள். சம்பந்தப்படாத சாதாரண மனிதனாகப் பாருங்கள். அந்த அறிவு, அந்த சமயோசிதம், அதை அவன் நிறைவேற்றிய விதம், துணிச்சல் இதெல்லாம் உங்களை வியக்க வைக்காமல் இருக்காது” என்று ஜெப் உன்னிசா சொன்னாள்.

ஔரங்கசீப் சக்கரவர்த்தியாக மட்டுமே பார்க்க முடிந்தவனாக இருந்ததால் அவனுக்கு சிவாஜியின் பராக்கிரமத்தை ஜெப் உன்னிஸாவைப் போல் பார்த்து ரசிக்க முடியவில்லை. கவிதைகள் அழகாக எழுதும் அவன் மகள் சிவாஜியைக் காவிய நாயகனாகவே பார்த்தது போல் இருந்தது. கவிதைகளையும், கலைகளையும் ஔரங்கசீப்பால் சிறிதும் ரசிக்க முடிந்ததில்லை. அவன் தந்தை, பாட்டனார், கொள்ளுப்பாட்டனார் காலங்களில் முகலாய தர்பார் நிறைய புலவர்களால் நிரம்பி வழியும். ஆனால் ஔரங்கசீப் தன் தர்பாரில் அவர்களை ஒதுக்கியே வைத்தான். கற்பனைகளால் உலகத்தைக் காணப் பிடிக்காத அவனுக்கு கவிதைகளும், கவிஞர்களும் கசந்தார்கள். அவன் மகள் கவிதைகளைக் கூடப் பலர் புகழ்ந்திருக்கிறார்கள். ஆனால் அவன் அவள் கவிதை எதுவும் வாசித்ததில்லை….

ஒற்றர் தலைவன்  சொன்னான். “போலத்கான் வீட்டை விட்டு வெளியே வரத் தயங்குகிறார் சக்கரவர்த்தி. வெளியே வந்தால் மக்கள் ஆர்வத்துடன் சிவாஜியைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். என்ன நடந்தது எப்படி நடந்தது என்பதைக் கூடுதலாக அறிய மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். போலத்கான் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பதால் மக்கள் சிவாஜியிருந்த மாளிகைக்குக் காவல் இருந்த வீரர்கள் பார்க்கக் கிடைத்தால் ஆர்வத்துடன் விசாரிக்கிறார்கள்…”

மக்களின் முட்டாள்தனமான ஆர்வங்களை அதற்குமேல் கேட்கப் பிரியப்படாத ஔரங்கசீப் ஒற்றர் தலைவனிடம் சொன்னான். “நம் ஒற்றர்கள் சிவாஜியைக் கண்டுபிடிக்கும் பணியில் முடுக்கி விடப்படட்டும். மக்களின் ஆர்வத்தையும் சிவாஜியைக் கண்டுபிடித்து ஒப்படைப்பதில் நாம் திசைதிருப்ப வேண்டும். அவனைக் கண்டுபிடித்து ஒப்படைத்தால் அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய சன்மானங்களைத் தொடர்ந்து அறிவித்துக் கொண்டே இருக்க ஆணையிட்டிருக்கிறேன். அது எந்த அளவு மக்களைச் சென்றடைகிறது, அவர்கள் அவனைக் கண்டுபிடித்துக் கொடுக்க எந்த அளவு ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதையெல்லாம் அறிந்து சொல்லுங்கள். இப்போது தாங்கள் செல்லலாம்”

“தங்கள் உத்தரவு சக்கரவர்த்தி” என்று ஒற்றர் தலைவன் வணங்கி விடைபெற்றான்.

ஔரங்கசீப் அடுத்ததாக ராம்சிங்கை வரவழைத்தான். சக்கரவர்த்தியைத் தரையளவு தாழ்ந்து மூன்று முறை வணங்கி நின்ற ராம்சிங்கின் முகத்தை ஔரங்கசீப் கூர்மையாகக் கவனித்தான். ‘சிவாஜி தப்பித்ததில் இவன் பங்கு ஏதாவது இருக்குமோ’? ஆனால் ராம்சிங்கின் முகம் உணர்ச்சிகள் தெரியாதபடி இறுகி இருந்தது.

“சிவாஜி தப்பித்த தகவலைக் கேள்விப்பட்டாயா ராம்சிங்?” ஔரங்கசீப் கேட்டான்.

“கேள்விப்பட்டேன் சக்கரவர்த்தி”

“சிவாஜியைப் பற்றி உன் தந்தை மிக உயர்வான கருத்துகளை அனுப்பி இருந்தார். நீயும் அவனைப் பற்றி நல்ல விதமாகவே சொன்னாய். இப்போது அவன் செய்திருக்கும் வேலையைப் பார்த்தாயா? அவன் நன்னடத்தைக்கு உத்திரவாதம் கொடுத்த நீ இப்போது என்ன சொல்கிறாய்?””

ராம்சிங் பணிவு காட்டிச் சொன்னான். “சக்கரவர்த்தி. நட்புடன் இருக்கும் சமயங்களில் காட்டும் நன்னடத்தையை யாரும் பகைமையில் காட்டுவதில்லை. சிறைப்படுத்தப்பட்ட பின் சிவாஜி என் கட்டுப்பாட்டில் இல்லை. சிவாஜியின் போக்கை நிர்ணயிக்கும் நிலைமையிலும் நான் இருக்கவில்லை. அழைத்து வந்து சிறைப்படுத்த உதவியவனாகவே சிவாஜி என்னை எண்ணி ஒதுக்கி வைத்திருந்தார். நான் சென்று அவரைச் சந்திப்பதையும் அவர் அதிகம் விரும்பவில்லை என்பது புரிந்த பின் நானும் அவரைச் சந்திப்பதைத் தவிர்த்தேன். அதனால் அங்கு என்ன நடக்கிறது என்று அறியும் நிலையில் நான் இருக்கவில்லை. என்னையும், என் தந்தையையும் மீறி நடந்த இந்த எதிர்பாராத நிகழ்வுகள் குறித்து எதையும் சொல்ல முடியாமல் நான் வாயடைத்து நிற்கிறேன்”

ஔரங்கசீப் ராம்சிங்கைக் கூர்ந்து பார்த்துச் சொன்னான். “சிவாஜியின் நடத்தை நன்னடத்தையாக இருந்திருந்தால் அவனைச் சிறைப்படுத்த வேண்டிய அவசியம் எனக்கு இருந்திருக்காது…”

‘சிவாஜியை வரவேற்ற கணத்திலிருந்து தர்பாரில் அவரை நடத்திய விதம் வரை நீங்கள் உரிய மரியாதை காட்டியிருந்தால் சிவாஜியின் நடத்தையும் அதற்குத் தகுந்தபடியே இருந்திருக்கும்’ என்று மனதினுள் நினைத்துக் கொண்டாலும் வெளியே சொல்ல முடியாமல் ராம்சிங் மௌனமாக இருந்தான்.

‘இவன் மனதளவில் சிவாஜி பக்கமாகவே இருக்கிறது போலத் தான் தெரிகிறது. எதிர்காலத்தில் இவனை வைக்க வேண்டிய இடத்தில் வைத்து எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்’ என்று நினைத்த ஔரங்கசீப் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சொன்னான். “சரி ராம்சிங். சிவாஜியைக் குறித்த எந்தத் தகவல் கிடைத்தாலும் உடனடியாக அதை எனக்குத் தெரிவிக்க வேண்டும்.”

“அப்படியே செய்கிறேன் சக்கரவர்த்தி” என்ற ராம்சிங் அங்கிருந்து விடைபெற்றான்.

ஔரங்கசீப் இப்போது சிவாஜி எங்கேயிருப்பான் என்பதை யூகிக்க முயன்றான். அவன் சிவாஜியின் நிலைமையில் இருந்தால் என்ன செய்திருப்பான் என்று யோசித்தான். கண்டிப்பாக குதிரையில் நேர்வழியில் தன் இருப்பிடம் நோக்கிச் சென்றிருக்க மாட்டான். மாறுவேடத்தில் வணிகனாகவோ இல்லை யாத்திரிகனாகவோ தான் பயணம் செய்து கொண்டிருப்பான்....

இது வரை சரியாக யூகிக்க முடிந்த ஔரங்கசீப்புக்கு சிவாஜி இப்போதிருக்கும் இடத்தையோ, அவன் செல்லும் வழியையோ யூகிக்க முடியவில்லை. யாருமே யூகிக்க முடியாத வழியைத் தான் சிவாஜி பயன்படுத்துவான் என்பது மட்டும் புரிந்தது.

இந்தப் பயணத்தில் சிவாஜிக்குப் பாதகமாக இருக்கும் அம்சம் என்னவென்று ஔரங்கசீப் யோசித்தான். சிவாஜியின் மகன் சாம்பாஜி. சிவாஜி மாறுவேடத்தில் எளிதாக மாற முடியும். ஆனால் அவன் மகன் சாம்பாஜி சிறுவன். அவனை சிவாஜியால் எந்த மாறுவேடத்திலும் அதிகம் மறைக்க முடியாது…..

சிவாஜியைக் கண்டுபிடிக்க சாம்பாஜி உதவுவான் என்று ஔரங்கசீப் எதிர்பார்த்தான்.

(தொடரும்)
என்.கணேசன்

2 comments:

  1. ஔரங்கசீபின் சாம்ராஜ்யம் எப்படி பட்டது...?
    அங்கு நடந்த அவமானம்... மக்களின் சிந்தனை.... ஔரங்கசீபின் நடவடிக்கைகள் அனைத்தையும்.... அங்கிருந்து பார்ப்பது போல்...

    பதற்றம்,பயம்,ஆச்சரியம் போன்ற உணர்வுகள் படிக்கும் போது தோன்றுகிறது...தங்களின் எழுத்து அற்புதம் ஐயா...

    ReplyDelete