விஸ்வத்துக்கு எப்படி அவளுடைய அலைபேசி எண் கிடைத்தது என்று சிந்து திகைத்தபடி அவன் சொன்ன வேலையைக் கேட்டுக் கொண்டாள். என்ன செய்ய வேண்டும் எப்படிச் செய்ய வேண்டும் என்று தெளிவாகச் சொன்ன அவன் முன்பணமாக இரண்டு லட்சம் ரூபாய் அனுப்பி வைத்தான். அந்த வேலையை அவள் செய்யும் போது அவன் உடன் இருந்து பார்த்துக் கொண்டிருப்பது போன்ற பிரமை மட்டும் அவளுக்கு இருந்து கொண்டேயிருந்தது. கூடவே அவனுக்கு அந்த வேலை ஒன்றும் மிக முக்கியமான வேலை அல்லவென்றும் அவள் எப்படி அந்த வேலையைச் செய்கிறாள் என்பதைப் பார்ப்பதற்காகவே அந்த வேலையை ஒப்படைத்து இருக்கிறான் என்றும் உள்ளுணர்வு சொன்னது. அந்த உள்ளுணர்வு உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் மிக புத்திசாலித்தனமும், தைரியமும் கொண்ட அவள் அவன் சொன்ன மாதிரியே அந்த வேலையைச் செய்து முடித்தாள். முடித்த அரை மணி நேரத்தில் மீதித் தொகை மூன்று லட்சம் ரூபாய் அவள் வங்கிக் கணக்கில் வந்து சேர்ந்தது. அவளுக்கு அவன் பண விஷயத்தில் மிகவும் ஒழுங்காக இருப்பது பிடித்திருந்தது.
அவன் ஆபத்தானவன், தவறுகள் நேர்ந்து விட்டாலோ, அவன் ரகசியங்களை வெளியிட்டாலோ சிறிதும் தயங்காமல் அவள் உயிரை எடுத்து விடுவான் என்பதை சிந்து வார்த்தைகளில்லாமலேயே உணர்ந்திருந்தாள். அதையும் மீறிப் பணம் அவளை அவன் தந்த அடுத்த வேலைகளையும் செய்ய வைத்தது. வேலையில் இருக்கிற ஆபத்திற்கேற்ற மாதிரி அவன் பணம் அனுப்பி வைத்தான். முதல் வேலையில் இருந்தது போல் மற்ற வேலைகள் செய்யும் போது அவன் அருகில் இருந்து பார்க்கிற பிரமை அவளுக்கு ஏற்படவில்லை. முக்கியமான கணங்களில் மட்டும் அவள் அவன் இல்லாத போதும் அவனுடைய தீட்சண்யப் பார்வையை உணர்ந்தாள். இது வரை அவளுக்கு அதிகபட்சமாய் பத்து லட்ச ரூபாய் தான் ஊதியமாகக் கிடைத்திருக்கிறது. முதல் முறையாக முன்பணமாகவே முப்பது லட்சம் ரூபாய் கிடைத்திருக்கிறது என்பது ஆபத்தின் அளவையும் சொல்லி அவளை எச்சரித்தது. ஆனால் அவள் ஆபத்துக்கெல்லாம் அசருபவள் அல்ல. ஆபத்தான வேலைகளையும் அசாத்தியத் துணிச்சலுடன் கச்சிதமாகச் செய்யும் போது கிடைக்கும் சுகமே தனி.
ஆனால் வேலை ஒரு குடும்பத்தோடு ஒட்டி உறவாடுவதாக இருந்தது தான் அவளுக்கு கசப்பாக இருந்தது. ’ஒரு இயல்பான குடும்பம் எனக்கு அமைந்து இருந்தால் இந்தக் கசப்பை உணர்ந்திருக்க மாட்டேன்’ என்று நினைத்துக் கொண்டாள். கூடவே ‘ஒரு இயல்பான குடும்பம் அமைந்திருந்தால் நீ இப்படிப்பட்ட ஒருத்தியாக ஆகி இருக்கவும் மாட்டாய்’ என்று உள்மனதில் இருந்து ஒரு குரல் வந்தது...
அவளுக்கு மூன்று வயதாக இருக்கும் போது அவள் தாய் தன் பழைய காதலனுடன் ஓடிப் போனாள். அன்றிலிருந்து அவள் தாயோடு தந்தையையும் மானசீகமாக இழந்து விட்டாள். பார்க்க அவள் தாயின் சாயலில் இருந்ததாலோ என்னவோ தாயின் தவறுக்கு அவளை அவள் தந்தை வெறுக்க ஆரம்பித்தார். அந்த நாளுக்குப் பிறகு அவள் அவர் எதிரில் வரும் போதெல்லாம் அவர் முகத்தில் அந்த வெறுப்பு கொப்பளிக்கும். வாய் விட்டு அவர் எதுவும் சொன்னதில்லை. ஆனால் அந்த வெறுப்பு காலப்போக்கிலும் குறையவில்லை.
அவர் ஒரு வருடத்தில் மறுமணம் செய்து கொண்டார். சிந்து மேல் அவருக்கு இருந்த வெறுப்பு அவருடைய இரண்டாம் மனைவிக்கும் தொற்றிக் கொண்டது. அவர்கள் இருவரும் சிந்துவை அடித்துத் துன்புறுத்தவில்லை. ஆனால் அவளைத் தவிர்க்க முடியாத சுமையாகவே நினைத்தார்கள். அதை அனைத்து விதங்களிலும் வார்த்தைகள் இல்லாமல் தெரிவித்தார்கள். தந்தைக்கு இன்னொரு மகள் பிறந்தாள். அந்தக் குழந்தையைக் கொண்டாடினார்கள்.
தங்கை பிறந்ததில் சிந்துவும் மகிழ்ந்தாள். பெற்றோரிடம் கிடைக்காத அன்பு அந்தத் தங்கையிடமிருந்தாவது கிடைக்கும் என்று அவள் எதிர்பார்த்தாள். ஆனால் அவர்கள் அவளைத் தங்கையிடம் நெருங்க விடவில்லை. நேரா நேரத்திற்கு அவளுக்குச் சாப்பாடு போட்டார்கள். அதைச் சாப்பிட்டு விட்டு அவள் மறைவாக அவளுடைய அறையில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். அந்த வெறுப்பைப் பார்த்தும், ஓரிரு வார்த்தைகளில் வந்த உத்தரவைக் கேட்டும் அவள் அப்படியே இருக்க வேண்டி வந்தது. அவளுடைய தங்கையும் அக்கா மீது வெறுப்பை ஊட்டியே வளர்க்கப்பட்டாள். தோற்றத்திலும், புத்திசாலித்தனத்திலும் அவளுக்கு இணையாக இருக்காத அவள் தங்கைக்கு அவளை வெறுக்க, பிறகு அதுவே காரணமாக அமைந்தது. சிந்துவுக்கு வீடு நரகமாக ஆரம்பித்தது.
வீட்டை விடப் பள்ளிக்கூடம் பரவாயில்லை என்று சிந்து நினைக்க ஆரம்பித்தாள். இயல்பாகவே இருந்த அறிவால் பரிட்சைகளில் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்குவாள். வகுப்பில் என்றுமே முதலாவதாக வருவாள். ஆனால் கையெழுத்துக்கு அந்த மதிப்பெண் அட்டையைத் தந்தையிடம் தரும் போது ஒரு முறை கூட அவர் முகத்தில் பெருமிதமோ, வெறுப்பின் குறைவோ தெரியவில்லை. அவர்களுடைய வெறுப்பை அதிகரிக்கிற மாதிரி அவள் தங்கை படிப்பில் மிகவும் பின்தங்கியே இருந்தாள். சிந்துவின் தந்தைக்கும் சித்திக்கும் அவர்கள் இருவருடைய மதிப்பெண்களையும் சகிக்க முடியவில்லை. தங்கைக்கு டியூஷன் வைத்தார்கள். அவர்களும் மாய்ந்து மாய்ந்து சொல்லிக் கொடுத்தார்கள். ஆனாலும் அதிகபட்சமாக அவளுக்கு வகுப்பில் ஐந்தாமிடத்தைத் தான் கஷ்டப்பட்டுப் பெற முடிந்தது.
அவளுடைய சித்தி ஒரு முறை அவர்களுடைய பள்ளிக்கூடத்திற்கு வந்து போன பிறகு அவளுடைய தோழிகளும், ஆசிரியைகளும் அவளை வித்தியாசமாகப் பார்க்க ஆரம்பித்தார்கள். சிலர் பார்வை இகழ்ச்சியாக இருந்தது. சிலர் பார்வை இரக்கமாக இருந்தது. ஒரு ஓடுகாலியின் மகளாகப் பார்க்கப்படுகிற இரண்டுமே அவளுக்கு தாங்க முடியாததாய் இருந்தது. தோழிகளிடமிருந்தும் சிந்து மெள்ள மெள்ள ஒதுங்க ஆரம்பித்தாள்.
பத்தாவது வகுப்பு முடிந்தவுடன் அவள் தந்தை அவளை ஒரு வெளியூர்ப் பள்ளியில் சேர்த்து ஹாஸ்டலிலும் சேர்த்து விட்டார். அந்த நரக வீட்டுக்கு ஹாஸ்டலே தேவலை என்று சிந்துவுக்கு இருந்தது. சிறிய சிறிய விடுமுறைகளில் ஹாஸ்டலில் இருக்கிற பக்கத்து ஊர்ப் பிள்ளைகள் தங்கள் வீடுகளுக்குப் போய் விடுவார்கள். தூரத்து ஊர்ப் பிள்ளைகள் சிலர் மட்டும் தான் ஹாஸ்டலில் இருப்பார்கள். அவர்களோடு சேர்ந்து சிந்துவும் ஹாஸ்டலில் இருப்பாள். முழுவருடமும் முடிந்து கோடை விடுமுறையில் மற்ற அனைவரும் போய் ஹாஸ்டலையே மூடி விடுவார்கள் என்பதால் அப்போது மட்டும் சிந்துவும் வீட்டுக்குப் போக வேண்டி வரும். அந்த ஒன்றரை மாத காலம் அவளும் அந்த வீட்டை நரகமாய் உணர்வாள். தந்தை, சித்தி, தங்கை மூவரும் கூட நரகமாய் உணர்வார்கள்.
மிக அழகான பெண்ணாய், மிக நல்ல மதிப்பெண்கள் வாங்கியிருக்கும் பெண்ணாய் வளர்ந்த அவளை யாராவது புகழ்ந்தாலோ, பாராட்டுப் பார்வை பார்த்தாலோ கூட அவர்களால் தாங்க முடியவில்லை. அவள் பட்டப்படிப்பின் முதல் ஆண்டு விடுமுறையில் வீட்டுக்கு வந்த போது அவள் தந்தை அவளை விடுமுறைகளில் வேலை பார்க்கச் சொன்னார். அவருக்குப் பணக்கஷ்டம் இருப்பதாகச் சொன்னார். இனி விடுமுறைகளில் கூட வரவேண்டாம் என்று சொல்வதை அவள் புரிந்து கொண்டாள். இந்தத் தகப்பனிடம் இருந்து இனி ஒரு ரூபாய் கூட தன் செலவுக்கு வாங்கக்கூடாது என்று அந்தக் கணமே சிந்து முடிவு செய்து விட்டாள். தன் படிப்பு, ஹாஸ்டல் செலவும் இரண்டையும் தானே பார்த்துக் கொள்வதாய் அவள் சொன்ன போது சம்பிரதாயத்துக்குக் கூட அவள் தந்தை மறுப்புத் தெரிவிக்கவில்லை. சரி என்றார். அந்த விடுமுறையில் அந்த வீட்டில் இருந்து வெளியேறிய அவள் பின் எப்போதும் அங்கே திரும்பவும் போகவில்லை. அவரும் அவளைக் கூப்பிட்டு ஒருமுறையும் விசாரிக்கவில்லை.
சிந்து படித்துக் கொண்டே பகுதி நேர வேலைகளுக்குப் போனாள். அவளுக்குச் சில சமயங்களில் அந்தச் சம்பாத்தியம் படிப்புக்கும், ஹாஸ்டல் செலவுக்கும் போதவில்லை. ஆனால் தந்தையிடம் கேட்பதற்குப் பதில் திருடினால் கூடத் தப்பில்லை என்று தோன்றியது. மிகவும் சாமர்த்தியமாக நகைக் கடை ஒன்றில் திருடினாள். கண்காணிப்புக் கேமிராக்கள் இருந்த போதிலும் அந்தக் கேமிராவில் சிக்காமல் அவளால் திருட முடிந்தது அவளுக்குப் பெருமையாக இருந்தது. ஆரம்பத்தில் அவசியத்துக்காகத் திருடியது பிறகு சௌகரிய வாழ்க்கைக்காகவும், பிறகு ஆடம்பர வாழ்க்கைக்காகவும் நீண்டது. அவள் அதைத் தவறு என்று நினைக்கவில்லை. தன் திறமைக்குக் கிடைத்த ஊதியமாகத் தான் நினைத்தாள். அவள் தன் திருட்டுகளில் ஒரு முறை கூட சிக்கிக் கொள்ளவில்லை. அதில் அவளுக்கு ஒருவித கர்வம் இருந்தது. அவள் கர்வம் குறைந்தது விஸ்வத்திடம் அகப்பட்ட பிறகு தான்...
விஸ்வம் ஐந்து பேர்களைப் பற்றி அனுப்பி இருந்த முழுவிவரங்கள் அவளுக்கு வந்து சேர்ந்தன. கமலக்கண்ணன், பத்மாவதி, உதய், க்ரிஷ், ஹரிணி என்ற பெயர்களில் அனுப்பி இருந்த விவரங்களை சிந்து படிக்க ஆரம்பித்தாள்.
(தொடரும்)
என்.கணேசன்
Even though she is villi, I feel sympathy for her. Nice going.
ReplyDeleteசிந்துவைப் போல தனிமைப் படுத்தப்பட்டவர்கள்... வாழ்க்கை எப்படிபட்டது? அவர்களின் சிந்தனை?? அவர்களின் திறமை வளர்ச்சி??? போன்ற அனைத்தும் நூற்றுக்கு நூறு சதவீதம் சரியாகவே எழுதியுள்ளீர்கள் அற்புதம் ஐயா...👏👏👏👏
ReplyDeleteபத்மாவதியை ஏமாற்றி உள்ளே நுழைய சிந்து பெரிதாக மெனக்கெட தேவையில்லை....
ReplyDeleteகோவிலில் தாவணி பாவாடையுடன் "திருமண தடை நீங்க பரிகாரம் செய்ய வந்ததாக" கூறினாலே போதும்...😂😂😂😂
அனேகமாக உதய்யின் ஜோடி இவள் தான்..
ReplyDeleteI guess the same...
Deleteஉதயின் ஜோடி சிந்துவாக இருந்தால்..? கண்டிப்பாக அதிக மயிர்சிலிப்பு உண்டாக்கக் கூடிய காட்சிகள் இடம்பெறும்...
Deleteகண்டிப்பாக உதய் அவளிடம் மாட்ட மாட்டான். Krish அவளை ஊகித்து விட்டால் விஸ்வத்தை நெருங்கி விடலாம்.
ReplyDeleteமனோகரை கையில் வைத்துக் கொண்டே நெருங்க முடியவில்லை....சிந்து வைத்து மிக கஷ்டம்...
DeleteSeems like Sindu is the pair for udhay. Lets see :)
ReplyDelete