Thursday, April 16, 2020

இல்லுமினாட்டி 45


க்ரிஷ் அக்ஷயிடம் சொன்னான். “நான் சொல்லப் போகும் விஷயம் கொஞ்சம் நீளமானது. நாம் இங்கே எங்கேயாவது உட்கார்ந்து கொண்டு பேசலாமா?”

அக்ஷய் க்ரிஷைக் கூர்ந்து பார்த்து விட்டுச் சம்மதித்து அந்த மைதானத்தில் இப்போது காலியாகி இருந்த பார்வையாளர்கள் அமரும் இடத்தை நோக்கிக் கையைக் காண்பித்தான். வெட்ட வெளியில் பேசுவது தான் பாதுகாப்பு என்று அவனுக்குத் தோன்றியது. க்ரிஷை நம்பின அளவுக்கு அவனுடன் வந்திருந்த எட்டு பேரை அவன் நம்பவில்லை. பார்வையாளர்கள் அமரும் இடம் நோக்கி அவர்கள் இருவரும் நடந்தார்கள். அவர்கள் ஓரிடத்தில் உட்கார்ந்த பிறகு அந்த எட்டு பேரில் இருவர் ஏதோ சுவாரசியமாகப் பேசிக் கொண்டே தாங்களும் உட்கார்ந்து பேசத் தீர்மானித்தது  போல் காண்பித்துக் கொண்டு சுமார் நாற்பது அடி தள்ளி அமர்ந்து கொண்டார்கள். மற்ற அறுவரும் அக்ஷய் கண்ணுக்குத் தென்படவில்லை என்றாலும் அந்த மைதானத்தைச் சுற்றிலும் தான் இருப்பார்கள் என்பதை யூகித்தான். க்ரிஷ் என்ன சொல்லப் போகிறான் என்பதைக் கேட்க அவன் ஆர்வமாய் இருந்தான்.

க்ரிஷ் தன்னை வேற்றுக்கிரகவாசி தொடர்பு கொண்டதிலிருந்து அக்ஷயிடம் சொல்ல ஆரம்பித்தான். வேற்றுக்கிரகவாசி அவனைக் காப்பாற்றியது, அவனுக்குத் தெரிவித்த உலக அழிவு குறித்த செய்தி, மாஸ்டர், அவரது ரகசிய ஆன்மிக இயக்கம், விஸ்வம், அவன் செயல்பாடுகள் எல்லாம் சொல்லிக் கொண்டே வந்தான். அக்ஷய் மிக உன்னிப்பாகவும், பிரமிப்புடனும் அதைக் கேட்டுக் கொண்டே வந்தான். வேற்றுக்கிரகவாசி க்ரிஷைத் தொடர்பு கொண்ட முறை அவனை மெய்சிலிர்க்க வைத்தது. வேற்றுக்கிரகவாசி சொன்ன விஷயங்கள் சத்தியமானவை என்று உள்மனம் சொன்னது.  விஸ்வமும், மாஸ்டரும் ஒருங்கே அவனைப் பிரமிக்க வைத்தார்கள். க்ரிஷ் வாயிலிருந்து அந்தத் தகவல்கள் வராமல் வேறு யாராவது இதையெல்லாம் சொல்லி இருந்தால் அவன் முழுவதுமாக நம்ப மறுத்திருப்பான். ஆனால் க்ரிஷின் வெளிப்படையான, ஆத்மார்த்தமான பேச்சு அவன் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையைத் தவிர வேறில்லை என்பதை அவனுக்கு உணர்த்தியது. மாஸ்டரிடம் க்ரிஷ் கற்றுக் கொள்ளப் போனதையும் அவர் சொல்லிக் கொடுத்த பாடங்களை அவன் கற்றுக் கொண்ட போது உணர்ந்ததையும் சொன்ன போது ஒரு கணம் அவனிடம் அக்ஷய் தன்னையே பார்த்தான். இருவர் மனநிலைகளிலும் நிறைய ஒற்றுமை இருந்தது



க்ரிஷிடம் இல்லுமினாட்டி என்ற ஒரு வார்த்தையை மட்டும் அக்ஷயிடம் பேசும் போது எந்தக் கட்டத்திலும் பயன்படுத்த வேண்டாம் என்றும், வேறு பெயர் பயன்படுத்தினாலும் இப்போது அவன் அதன் உறுப்பினர் என்பதைத் தெரிவிக்க வேண்டாம் என்றும் எர்னெஸ்டோ சொல்லி இருந்தார். அவன் அவர்களுக்கு உதவ ஒப்புக் கொண்டு அங்கே சென்ற பிறகு அவனுக்குத் தெரிவித்தால் போதும் என்றும், ஒருவேளை மறுத்தால் அவனுக்கு முன்பே தெரிவித்திருப்பது தேவையில்லாத தகவல் பரிமாற்றமாகி விடும் என்றும் அவர் நினைத்தார். அதனால் விஸ்வம் இல்லுமினாட்டியில் சேர்ந்ததைச் சொல்ல வந்த போது  அதை க்ரிஷ் விஸ்வம் ஏதோ ஒரு சக்தி வாய்ந்த இயக்கத்தில் சேர்ந்ததாகத் தெரிய வந்ததாகப் பொதுவாகச் சொன்னான்.  

அது வரை இயல்பாகச் சொல்லி வந்தவன் சற்று யோசித்துச் சொல்ல ஆரம்பித்ததைக் கண்ட அக்ஷய் மனதுக்குள் புன்னகைத்தான். அதிகம் பொய் பேசி அறியாதவர்களுக்கு உண்மைகளை மறைப்பது சிரமமான செயல் தான்...

இல்லுமினாட்டி தவசி அகஸ்டின் பற்றியும், இல்லுமினாட்டி சின்னம் பற்றியும் கூடச் சொல்வதைத் தவிர்த்த க்ரிஷ் விஸ்வம் அந்த இயக்கத்தில் சேர்ந்த பின் அவனைப் பற்றி அறிய அந்த இயக்கத்தின் உறுப்பினர் க்ரிஷைத் தொடர்பு கொண்டதாகவும் அவரிடம் அனைத்து உண்மைகளையும் க்ரிஷ் சொன்னதாகவும், பின் அதுபற்றி அந்த இயக்கத்தினர் விஸ்வத்தைக் கேட்ட போது விஸ்வம் மறுத்ததாகவும், ஆனாலும் அவனை இயக்கத்தில் இருந்து நீக்க அதன் தலைவர் தீர்மானித்ததாகவும்,  அந்த நேரத்தில் மர்மமான முறையில் அவன் இறந்ததாகத் தெரிய வந்ததாகவும் சொன்னான். அதன் பிறகு அவன் கூடு விட்டு கூடு பாய்ந்ததாக அவர்கள் நினைக்கும் சம்பவங்கள் நடந்ததை விவரித்துச் சொன்னான்.

பொதுவாக அக்ஷய் எதற்கும் அசருபவன் அல்ல. ஆனால் விஸ்வத்தின் சக்திகளும், அதிலும் கடைசியாக அவன் பிரயோகித்த இந்தக் கூடு விட்டுக் கூடு பாயும் சக்தியும் அக்ஷயை அசர வைத்தது. என்ன மனிதனவன் என்று அவனால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.

க்ரிஷ் கவனமாகத் தொடந்தான். “அந்த சக்தி வாய்ந்த இயக்கத்திலிருந்து என்னை முதலில் தொடர்பு கொண்ட உறுப்பினர் தான் இதை எல்லாம் எனக்குத் தெரிவித்து விட்டு என்னை ஜாக்கிரதையாக இருக்கச் சொன்னார். அவர்கள் விஸ்வம் கண்டிப்பாக ஆறே மாதத்தில் பலம் பெற்று விடுவான் என்று நம்புகிறார்கள். அப்படி அவன் பலம் பெற்று விட்டால் அவனைக் காட்டிக் கொடுத்த என்னையும், அவனை அந்த இயக்கத்திலிருந்து நீக்க நினைத்த அதன் தலைவரையும் கொல்ல முயற்சி செய்வான் என்று நினைக்கிறார்கள்...  இந்த நிலைமையில் இந்த அமானுஷ்ய சக்திகளைக் கையாள முடிந்த ஒரு திறமைசாலியின் உதவி கிடைத்தால் நல்லது என்று நினைக்கிறார்கள்...”

அக்ஷய்க்கு அந்த இயக்கம் இல்லுமினாட்டி என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெரிந்து விட்டது. இல்லுமினாட்டி இருப்பது உண்மை என்பதை ஏற்கெனவே அறிந்திருந்த அக்ஷய் விஸ்வத்தைப் போன்ற ஒருவன் சென்று சேர ஆசைப்படும் இடம் அதை விடக்குறைவாக இருக்க வழியில்லை என்பதையும் சுலபமாக யூகித்தான். தங்கள் உறுப்பினர் அல்லாத ஒருவனை இல்லுமினாட்டி தூதாக அனுப்பியிருக்க வழியில்லை என்பதை உணர்ந்த அவன் க்ரிஷ் அந்த இயக்கத்தின் உறுப்பினராக இருக்கிறவன் என்பதையும் சுலபமாகக் கணித்தான். க்ரிஷ் கவனமாக யோசித்துப் பேச ஆரம்பித்ததிலிருந்து கூட்டிக் கழித்துப் பார்த்தவனுக்கு உண்மையாக நடந்திருக்கக்கூடியது ஓரளவு நிச்சயமாகவே புரிந்தது. ஆனால் அதை வெளியே காண்பித்துக் கொள்ளாத அக்ஷய் சொன்னான். “அதற்கு உங்கள் மாஸ்டரை விடப் பொருத்தமான ஆள் அவர்களுக்குக் கிடைக்காது என்று நான் நினைக்கிறேன்

சில நாட்களுக்கு முன்பிருந்தே ஞான வைராக்கிய எண்ணங்களால் ஆட்கொள்ளப்பட்டிருந்த மாஸ்டர் சமீபத்தில் இமயமலைக்குத் தவம் செய்யப் போய் விட்டதாக க்ரிஷ் தெரிவித்து விட்டுச் சொன்னான். “உங்களால் உதவ முடியுமா என்று கேட்கத் தான் என்னை அனுப்பியிருக்கிறார்கள்

அக்ஷயின் பார்வை தூர இருந்த மலை முகட்டுக்கு நகர்ந்தது. பல சமயங்களில் சொல்ல வேண்டியது முடியாதுஎன்ற பதிலைத் தான் என்றாலும் அதை எல்லோரிடமும் சுலபமாகச் சொல்லி விட முடிவதில்லை. இவனைப் போன்ற நல்ல இளைஞனிடம் அதை மனம் நோகடிக்காமல் நாசுக்காகச் சொல்வதெப்படி என்று அக்ஷய் யோசித்தான். அவன் சொல்லாமலேயே பதிலை க்ரிஷ் உணர்ந்து ஏமாற்றமடைந்தாலும் அவன் சொல்லட்டும் என்று அமைதியாகக் காத்திருந்தான்.

அக்ஷய் அவனைப் பார்த்து அன்புடன் வருத்தம் கலந்து புன்னகைத்து விட்டுச் சொன்னான். ”க்ரிஷ். மிக ரகசியமாக நான் இங்கே வாழ்ந்து வந்தாலும் என்னைப் பற்றி முழுவதும் தெரிந்து வைத்து, நான் இங்கே இருப்பதைக் கண்டு பிடித்து, என்னிடம் பேச உன்னை அனுப்பி இருப்பதிலேயே எத்தனை சக்தி வாய்ந்த இடத்தில் அந்த இயக்கம் இருக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அப்படிப்பட்ட இயக்கம் என்னை ஒரு பொருட்டாக நினைத்து என்னிடம் உதவி கேட்டது எனக்கு பெருமையாக இருந்தாலும் அதை ஏற்க முடியாத நிலைமையில் நான் இருக்கிறேன் என்று நீ அவர்களிடம் சொல்.  ஏற்கெனவே தலிபான் என் தலைக்குப் பெரிய விலை வைத்திருக்கிறது. என் குழந்தைகள் கூட என்னைப் பயமுறுத்துவதற்காக முன்பு கடத்தப்பட்டிருக்கிறார்கள். கடவுள் அருளால் எப்படியோ காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள் என்றாலும் இனியும் நான் வெளியே வந்து ஆபத்துகளில் இறங்க விரும்பவில்லை. ஒவ்வொரு தடவை நான் கிளம்பும் போதும் பயத்துடன் தான் என் குடும்பம் என்னை அனுப்பி இருக்கிறது. நான் திரும்பி வரும் வரை அவர்கள் ஒரு நிமிஷமும் நிம்மதியாக இருந்ததில்லை. இனியும் அவர்களை அந்த நிலைமையில் விட்டுப் போவது நியாயம் என்று தோன்றவில்லை.  நான் சாகசம் செய்த காலம் முன்பு நிறைய இருந்திருக்கிறது. ஆனால் இப்போது எனக்கு அந்த வயதுமில்லை. அதற்கான மனமும் இல்லை. மீதி இருக்கும் காலத்தில் அன்பான குடும்பத்துடன் அமைதியாக வாழ ஆசைப்படுகிறேன். நான் மறுப்பதற்குக் காரணம்  அது மட்டுமல்ல. ஒரு மாநில முதலமைச்சர் மகனான உனக்கும், ஒரு சக்தி வாய்ந்த இயக்கத்தின் தலைவருக்கும் ஒரு பெரிய பட்டாளமே பாதுகாப்பு தர முடியும். அதை விட அதிகமாகத் தனிமனிதனான நான் தந்து விட முடியாது. நீ சொல்கிற விஸ்வத்தின் சக்திகளை எல்லாம் பார்த்தால் அவனுக்கு நான் எந்த விதத்திலும் சமமானவனும் கிடையாது....”

(தொடரும்)
என்.கணேசன்   
  


5 comments:

  1. Interesting. How Krish will convince him?

    ReplyDelete
  2. "நல்லவர்களிடம் உண்மையைச் சொன்னால் மட்டுமே வேலை வாங்க முடியும்" என்பதை கிரிஷ் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறான்....

    சில இடங்களில் உண்மையை மறைத்தாலும் அக்ஷய் அதை கண்டுபிடித்த விதம் அற்புதம்👏👏👏...

    அக்ஷய் குடும்பத்தை நினைத்தால் பாவமாக தான் உள்ளது...

    ReplyDelete
  3. What a brilliant moov by illuminati

    ReplyDelete
  4. இப்படி மறுத்து கொண்டு இருக்கும் அக்ஷையை எப்படி உள்ளே இழுக்க போகிறான் இந்த கிரிஷ்??

    ReplyDelete
  5. no way.. hero had to jump in ...may be with a different reason or different time!!

    ReplyDelete