Wednesday, March 18, 2020

தவமும், தானமும் மூன்று வகை!



டல், வாக்கு, மனம் மூன்றிலும் தவத்தின் அம்சங்களைச் சொன்ன பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தவத்திலும் நோக்கத்திலும், முறையிலும் சாத்வீகம், ராஜஸம், தாமஸம் என்று தவம் மூன்று வகையாக வேறுபடுவதைச் சுட்டிக் காட்டுகிறார்.

பயன் கருதாத யோகிகளால் உடல், வாக்கு, மனம் மூன்றாலும் அதிக சிரத்தையுடன் செய்யப்படுகின்ற தவம் சாத்வீகமானது.

பாராட்டுக்காகவும், பெருமைக்காகவும், போற்றப்பட வேண்டும் என்பதற்காகவும், ஆடம்பரத்திற்காகவும் செய்யப்படுகின்ற தவம் ராஜஸமானது.

முரட்டுப் பிடிவாதத்தினால் தன்னை வருத்திக் கொண்டு செய்யும் தவமும், பிறரை அழிப்பதற்காகவும் செய்யப்படும் தவமும் தாமஸமானது.

தவத்தைப் போலவே தானமும் மூன்று வகைப்படுதலை அடுத்ததாக ஸ்ரீகிருஷ்ணர் விளக்குகிறார்.

பலனை எதிர்பாராமல், தனக்கு எந்தவிதமான உபகாரம் செய்யாதவருக்கும், அவர் தகுதியானவராக இருந்தால் தகுந்த இடத்தில், தகுந்த காலத்தில் தருவது சாத்வீக தானமாகும்.

வேறு ஒரு உபகாரத்தை எதிர்பார்த்தும், பலனை உத்தேசித்தும், மனவருத்தத்துடனும் தருவது ராஜஸ தானமாகும்.

மரியாதையின்றி இகழ்ச்சியோடு, தகாத இடத்திலும், தகாத காலத்திலும், தகுதியற்றவர்களுக்குத் தருவது தாமஸ தானமாகும்.

தகுதியானவர்களுக்கு வேண்டியதைத் தக்க சமயத்தில், தக்க இடத்தில் பிரதிபலன் எதையும் எதிர்பார்க்காமல் செய்வது தான் உண்மையான தானம். இதில் ஒன்று குறைந்தாலும் தானம் சரியான தானமாக, சாத்வீக தானமாக இருக்க முடியாது.

தருகின்ற தானம் தரப்படும் நபருக்கு உண்மையில் பெரிய உதவியாக இருக்க வேண்டும். அது தகுந்த காலத்தில் தரப்பட வேண்டும். தகுந்த இடத்தில் தரப்பட வேண்டும். இடம், பொருள், காலம் அறிந்து தருவதும் முன் வாங்கியதற்குத் திரும்பித் தருவதுமாக இருந்து விடக்கூடாது. முன்னொரு காலத்தில் ஒருவரிடம் நாம் உதவி பெற்றிருந்தால் பின்னொரு காலத்தில் அவருக்குத் தேவையான போது உதவி செய்தால் அது கடமை என்றும் கணக்கை நேர் செய்ததாகவும் எடுத்துக் கொள்ளலாமே ஒழிய அதைத் தானம் என்று எடுத்துக் கொள்ள முடியாது.

தானம் செய்வதிலும் பல முறை நடக்க விட்டு, மன்றாட விட்டு ஒன்றைச் செய்வோமானால் அதுவும் சாத்வீக தானமாக இருக்க முடியாது. மரியாதையுடன் சந்தோஷமாகத் தானம் செய்தால் மட்டுமே அது சாத்வீகத் தானமாகும்.

கன்னடத்தில் ஒரு பழமொழி உண்டு. “கொடுத்தது தனக்கு. சேர்த்து வைத்தது அடுத்தவனுக்கு”. உன்னிடம் இருப்பதை அடுத்தவனுக்குத் தந்தால் அது உன் தானக்கணக்கில் சேர்ந்து விடுவதால் கொடுத்தது உன்னுடையதாகி விடுகிறது. கொடுக்காமல் சேர்த்து வைத்ததை நீ இறக்கும் போது எடுத்துச் செல்ல முடியாததால் உனக்குப் பின் யார் அதை அனுபவிக்கிறார்களோ அது அவர்களுடையதாகி விடுகிறது. அதனால் கொடுத்து உன் கணக்கில் சேர்த்துக் கொள்வது தர்மசிந்தனை மட்டுமல்ல, அறிவுடைமையும் கூட அல்லவா?

இதைச் செய்தால் இது கிடைக்கும் என்று எதிர்பார்ப்போடு செய்யும் தானம் ராஜஸமாகிறது. தர வேண்டியிருக்கிறதே என்று வருத்தத்துடன் செய்தாலும் அது ராஜஸமே!

எல்லா விதங்களிலும் தானமாகாதபடி ஒரு பொருள் ஒருவருக்குத் தரப்படுமானால் அது தாமஸமாகிறது. பெறத் தகுதியில்லாதவனுக்குத் தரப்படுவது, காலம் கடந்து தரப்படுவது, தரக்கூடாத இடத்தில் தரப்படுவது, இகழ்ச்சியாகத் தரப்படுவது எல்லாம் தானம் என்று கொடுப்பவன் நினைக்கலாமே ஒழிய அது உண்மையான தானமாகாது. அப்படி தானம் என்ற பெயர் கொடுத்தாலும் அது தாமஸ தானமாகவே கருதப்படும்.

அதே போல கொடுத்த தானத்தைச் சொல்லிக் காட்டினாலும், பலருக்குத் தெரிவித்தாலும் அது சாத்வீக தானமாகாது. அதனால் அடுத்த முறை தானம் செய்யும் போது அது சரியான, முறையான, சாத்வீகமான தானமாக இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள்!

பாதை நீளும்...

என்.கணேசன்

      

2 comments:

  1. அருமையான விளக்கம்

    ReplyDelete
  2. இப்போது கொடுக்கப்படும் பெரும்பாலான தானங்கள் தாமஸ வகையை சேர்ந்ததாக தான் உள்ளது....

    சாத்வீக தானம் என்ன? என்பதை இப்போது தெரிந்து கொண்டோம்... இனி சாத்வீக தானத்தை செய்து புத்திசாலித்தனமாக செயல்படுவோமாக...

    ReplyDelete