Thursday, March 19, 2020

இல்லுமினாட்டி 41


க்ஷயின் உள்ளுணர்வு அவனைத் தப்பித்துச் செல்லும்படி சொல்லக் காரணம் இருந்தது. க்ரிஷைத் தவிர அங்கே முன்பும், பின்பும் வந்தமர்ந்த புதியவர்கள் எட்டு பேரும் மிகக் குறுகிய காலத்தில் விரைந்து செயல்படக்கூடியவர்களும், கச்சிதமாகக் கொலை கூடச் செய்து விட்டு அலட்டிக் கொள்ளாமல் அங்கிருந்து மறைந்து விட முடிந்தவர்களுமான மனிதர்கள் என்பதை முதல் பார்வையிலேயே அக்ஷய் அனுமானித்தான். பொதுவான கைதேர்ந்த உளவாளிகள், காவல்துறையினர் வகையையும் மீறிய உயர் ரகப் பாதுகாவலர்கள் அல்லது கொலையாளிகள் வகையில் சேர்க்கக்கூடிய மனிதர்கள் அவர்கள் என்பதை அவனால் கணிக்க முடிந்தது. அவர்கள் அங்கே வர அவன் தான் காரணம் என்பது புரிந்தது.  இது போன்ற ஆபத்தான மனிதர்களுடன் எந்த விதத்திலும் சம்பந்தப்பட அவன்  விரும்பவில்லை. உள்ளுணர்வு எச்சரித்தவுடன் உடனடியாகத் தப்பிச் செல்ல அவன் முயலாததற்குக் காரணமாக அந்த எட்டு பேருடன் வந்திருந்த அந்த இளைஞன் இருந்தான்

அந்த இளைஞனை அவன் எங்கேயே பார்த்திருக்கிறான். அந்த முகம் நன்றாகப் பரிச்சயமான முகம்.... மூளையைக் கசக்கி யோசித்ததில் சில வினாடிகளில் பதில் வந்தது. முதலமைச்சரின் மகன். இளைய மகன். பெயர் க்ரிஷோ கிரிஷோ? அவன் ஜீனியஸ் என்றும், நல்ல பண்பாளன் என்றும் பத்திரிக்கைகளில் படித்திருந்ததாக நினைவு. தந்தையையும், சகோதரனையும் போல மீடியாக்களில் அடிக்கடி இடம் பெறும் ஆள் அல்ல. இவன் எதற்கு இந்த எட்டுப் பேருடன் இங்கே வந்தான் என்று அக்ஷய் யோசித்தான். முதலமைச்சரின் மகன் என்பதால் அவனுடைய பாதுகாவலுக்கு வர வேண்டிய அரசாங்கப் பாதுகாவலர் ஒருவர் கூட அந்த எட்டு பேரில் இல்லை. அது அக்ஷய்க்கு விசித்திரமாகப் பட்டது. யாரவர்கள்? அவனுடன் இங்கே ஏன் வந்திருக்கிறார்கள்?

இத்தனை அவன் யோசித்த போதும் அவனைக் கவனித்துக் கொண்டிருந்த க்ரிஷுக்கு அவன் அவர்களைப் பார்த்தது போல் கூடத் தெரியவில்லை. மாணவர்கள் பயிற்சியில் இருக்கும் குறைபாடுகளை அக்ஷய் அடிக்கடி சுட்டிக் காட்டித் திருத்தி சரியான ஆலோசனைகள் வழங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்த போது அவன் முழுக் கவனமும் மாணவர்கள் மேல் இருப்பது போல் தான் க்ரிஷுக்குத் தோன்றியது. மாணவர்களின் தவறைச் சுட்டிக் காட்டும் போது கூட அக்ஷய் சிறு முகச்சுளிப்பு கூட காட்டாததும், சிறிது கூட அமைதியிழக்காததும், ஏன், சலிப்பின் நிழல் கூட அந்த முகத்தில் படராதது க்ரிஷைப் பிரமிக்க வைத்தது.  அங்கே இருந்த வேறு சில பயிற்சியாளர்கள் கத்திக் கொண்டும், மாணவர்களைத் திட்டிக் கொண்டும் இருந்தார்கள். அக்ஷயின் குரல் கூட உயரவில்லை. எல்லாம் சரியாகத் தான் இருக்கிறது என்பது போலவோ, சம்பந்தம் இல்லாதவன் போலவோ பேரமைதியுடன் அவன் மைதானத்தில் இருந்ததை க்ரிஷ் கவனித்த போது அவனுக்கு அமானுஷ்யன் என்ற பெயர் பொருத்தமானதாகவே தோன்றியது.

க்ரிஷ் வைத்த கண் எடுக்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்ததைக் கவனித்த அக்ஷய் அந்த எட்டு பேரில் ஐந்து ஆட்கள் மைதானத்தைத் தீவிரமாகக் கண்காணித்ததையும், மூன்று பேர் அப்படியே க்ரிஷைச் சுற்றிக் கண்காணித்ததையும் கவனித்தான்.  அவர்களில் இருவர் க்ரிஷை ஒருசில வினாடிகளில் எட்டும் தூரத்தில் தான் இருந்தார்கள்... அவர்கள் அனுமதி இல்லாமல் க்ரிஷை யாரும் நெருங்க முடியாது என்பது தெளிவாகத் தெரிந்தது.

முக்கால் மணி நேரத்தில் பயிற்சிகள் முடிந்தன. மாணவர்கள் தங்கள் பயிற்சியாளர்களிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினார்கள். அக்ஷயின் பொறுப்பில் இருந்த மாணவர்கள் அவனிடம் கை கொடுத்தும், கையாட்டியும் விடைபெற்றார்கள். அத்தனை முகங்களிலும் அன்பு கலந்த மரியாதையை க்ரிஷ் கவனித்தான். அந்த ஆத்மார்த்தம் மற்ற பயிற்சியாளர்களிடம் அவர்களது மாணவர்கள் காட்டவில்லை என்பதையும் க்ரிஷ் கவனித்தான். பயிற்சி மாணவர்களின் குடும்பத்தினரும், நண்பர்களும் அதிகமாக இருந்த பார்வையாளர் கூட்டமும் எழுந்து கலைய ஆரம்பித்தது.

க்ரிஷ் எழுந்து மைதான வாயிலருகே சென்று அக்ஷய்க்காகக் காத்திருந்தான். அக்ஷய் அவசரமில்லாமல், பதற்றமில்லாமல் நிதானமாக நடந்து வந்ததில் கூட ஒரு தாளலயம் இருந்தது போல் க்ரிஷுக்குத் தோன்றியது.   அவன் அருகே வந்த போது அவனை வழிமறித்து நின்று புன்னகையுடன் கைநீட்டி க்ரிஷ் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். “சார் நான் க்ரிஷ். உங்களைப் பார்க்கத் தான் சென்னையிலிருந்து வருகிறேன்...”

முதலமைச்சர் மகன், ஒரு எம் பி யின் தம்பி, அந்தப் பெருமைகளையோ, தன் அறிவு மற்றும் கல்வித் தகுதி பெருமையையோ சொல்லாமல் எளிமையாகத் தன் பெயரையும், ஊரையும் மட்டும் சொன்னது அவன் வித்தியாசமானவன் என்பதை உரக்கச் சொன்னது.

அக்ஷய் அமைதியாக அவன் கையைக் குலுக்கிச் சொன்னான். “நான் அக்ஷய். சொல்லுங்கள், என்ன விஷயம்?”


விஸ்வத்திடம் ஜிப்ஸி பாதாள அறையிலிருந்து மேலே வர ஏன் இவ்வளவு நேரம், இத்தனை நேரம் என்ன செய்து கொண்டிருந்தாய், என்ன பார்த்தாய் என்றெல்லாம் கேட்கவில்லை. விஸ்வமும் தான் கண்ட சுரங்கப்பாதை பற்றிச் சொல்லவில்லை. ஆனாலும் அவன் சுரங்கப்பாதை இருப்பதைக் கண்டுபிடித்திருப்பது ஜிப்ஸிக்குக் கண்டிப்பாகத் தெரியாமல் இருக்காது என்று விஸ்வம் நினைத்தான்.

ஜிப்ஸி அவனிடம் கேட்டான். “இனி என்ன செய்யப் போவதாய் உத்தேசம்?”

விஸ்வம் உடனே பதில் சொல்லவில்லை. அவனுடைய சக்திகளை மீட்டெடுப்பது தான் அவனுடைய முதல் உத்தேசம் என்றாலும் அதை ஜிப்ஸி கேட்கவில்லை என்பதை அறிவான். அது குறித்து அவனுக்கு எந்தச் சந்தேகமும் இருக்க முடியாது. ஒளிந்து கொள்ள ஒரு தோதான இடமும் கிடைத்திருக்கிறது. அங்கே இப்போதைக்கு உடனடியாக எந்த ஆபத்தும் வரும் என்று தோன்றவில்லை. பழைய சக்திகளின் சூட்சுமங்களும், வழிமுறைகளும் இந்த மூளையிலும் அவன் பதித்து அறிந்து வைத்திருந்தாலும் இயல்பாகப் பிரயோகிக்க முடிகிற வரை அவனால் செயலற்று இருந்து விட முடியாது. இல்லுமினாட்டியும், க்ரிஷும் கண்டிப்பாகச் செயலற்றுச் சும்மா இருந்து விட மாட்டார்கள். தற்காப்பில் மட்டுமே விஸ்வம் இருந்து விட முடியாது. அவர்கள் அவனுக்கு எதிராக முழுமூச்சாக இறங்கி விடக்கூடாது. அதை அவன் அனுமதிக்க மாட்டான்.

இல்லுமினாட்டியைப் பொருத்த வரை தலையாய பிரச்சினை எர்னெஸ்டோ தான். ஆனால் அதிகார உச்சத்தில் இருக்கும் அவரை அவனால் இப்போதைக்கு எதுவும் செய்ய முடியாது. சக்திகளைத் திரட்டிக் கொண்ட பின்னரே அவரை அவனால் எதாவது செய்ய முடியும். க்ரிஷ் முதலமைச்சர் மகனாகவும் இல்லுமினாட்டியாகவும் மாறி இருப்பதால் அவனும் பாதுகாப்பாகவே இருக்கிறான். 

விஸ்வம் இப்போதைய சூழ்நிலையில் அவனால் செய்ய முடிந்தது என்னவெல்லாம் என்று  ஆழமாக யோசித்தான். கடைசியில் ஜிப்ஸியிடம் சொன்னான். “இல்லுமினாட்டியில் எர்னெஸ்டோவுக்கு எதிராகச் சிந்திக்க முடிந்தவர்கள், அடுத்த தலைவராக விரும்புபவர்கள் பற்றிய முழு விவரங்கள் நமக்கு வேண்டும் நண்பனே”

ஜிப்ஸி தலையசைத்தான். விஸ்வம் தன் பழைய உறுதியையும், தெளிவையும் ஓரளவு பெற்று விட்டது போலத் தான் அவனுக்குத் தோன்றியது. ”க்ரிஷ் விஷயத்தில் என்ன செய்யப் போகிறாய்?” என்று கேட்டான்.

இல்லுமினாட்டி பற்றியும் க்ரிஷ் பற்றியும் தான் அவன் யோசித்திருக்கிறான் என்பதை ஜிப்ஸி தெரிந்து வைத்திருக்கிறான், அதனால் தான் இல்லுமினாட்டி பற்றிச் சொல்லி முடித்ததும் க்ரிஷ் பற்றிக் கேட்கிறான் என்பதை விஸ்வம் மனதில் குறித்துக் கொண்டபடி  சொன்னான். “க்ரிஷின் மிகப்பெரிய பலம் அவனுடைய அறிவு. அவனுடைய மிகப்பெரிய பலவீனம் அவன் அன்பும், காதலும், குடும்பத்தின் மீது வைத்திருக்கும் பாசமும். அவன் பலத்தைக் குறைக்க வேண்டுமானால் நாம் அவன் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவன் அமைதியாகச் சிந்திக்க முடியாதபடி அவனுடைய பலவீனமான பகுதியில் தாக்க வேண்டும்...”

ஜிப்ஸி கேட்டான். “நீ யாரைச் சொல்கிறாய்? ஹரிணியையா, அவன் குடும்பத்து ஆட்களையா?”

ஹரிணியின் பெயரைக் கேட்டவுடன் விஸ்வம் ஒருவித கசப்புணர்வை உணர்ந்தான். அவளைக் கடத்திய பிறகும் அசராத அவள் அழுத்தத்தையும், அவள் மனோகரிடம் பேசிய திமிர்ப் பேச்சையும் அவனால் மறக்க முடியாது. அவளை க்ரிஷின் பலவீனமான பகுதியாக அவனால் நினைக்க முடியவில்லை. விஸ்வம் சொன்னான். “அவன் குடும்பத்தைச் சொல்கிறேன். முக்கியமாக அவன் நேசிக்கும் அண்ணன், அம்மா ...”

(தொடரும்)
என்.கணேசன்  

4 comments:

  1. Very interesting and thrilling

    ReplyDelete
  2. விஸ்வம் கிரிஷ்யை நெருங்குவதற்கு முன்பு அக்ஷயின் அதிரடி ஆரம்பித்தால் நல்லா இருக்கும். ஹ்ம்ம்ம் காத்துகிட்டு இருக்கிறோம் அடுத்த அடுத்த பதிவுகளுக்கு.......

    ReplyDelete
  3. ஓஹோ கிரிஷ் உடன் உட்கார்ந்து இருந்த எட்டு பேரும் இல்லுமினாட்டியின் ஆட்களா?

    அடுத்த எபிசோட் கண்டிப்பாக அற்புதமாக இருக்கும் ... ஏனெனில் கிரிஷ் மற்றும் அக்ஷயின் உரையாடல் இடம்பெறுகிறது...

    "ஹரிணி கிரிஷின் பலவீனம் அல்ல... பலம்" ஹரிணி உண்மையிலேயே அற்புதமான வரம் தான்...

    ReplyDelete
  4. How are you sir??..stay healthy

    ReplyDelete