சிவாஜி
வருத்தத்துடன் சொன்னான். “ஹீராஜி வேறெதாவது திட்டமிட முடிந்து. அந்தத் திட்டம் இந்தத்
திட்டத்தை விட மேலானதாகவும், உன்னை ஆபத்தில் சிக்க வைக்காததாகவும் இருந்தால் நான் கண்டிப்பாக
அதையே செயல்படுத்த எண்ணியிருப்பேன். வேறுவழி இல்லாததால் மட்டுமே இந்தத் திட்டத்தைச்
சொல்கிறேன்….”
ஹீராஜி
புன்னகையுடன் சொன்னான். “அரசே ஆபத்து எல்லாக் காலத்திலும் எந்த வடிவிலும் வர முடியும்.
உங்கள் திட்டத்தில் நான் இல்லாமல் இருந்தால் கூட எனக்கு ஆபத்து வரும் என்ற விதி இருந்தால்
கண்டிப்பாக அதிலிருந்து நான் தப்ப முடியாதல்லவா? அதனால் என்னைக் குறித்து கவலைப்படுவதை
விடுங்கள். உங்களுடன் இருக்கும் இறைவன் என்னையும் தவிர்த்து விட முடியாது என்று பரிபூரணமாக
நம்புகிறேன்”
சிவாஜிக்குக்
கண்கள் லேசாகக் கலங்கின. தனக்கும், மகனுக்கும்
மட்டுமல்லாமல் ஹீராஜிக்காகவும் சேர்ந்து இறைவனை நீண்ட நேரம் அந்த இரவில் பிரார்த்தித்தான்.
மறுநாள்
காலையில் இனிப்புகளும், பழங்களும் பல மிகப்பெரிய கூடைகளில் சிவாஜி இருந்த மாளிகைக்கு
வந்து சேர்ந்தன. அந்தக் கூடைகளில் ஆயுதங்கள்
ஏதாவது இருக்கின்றனவா என்று நன்றாகச் சோதித்த பின்னரே ஐந்தாவது வெளி அடுக்குக் காவலர்கள்
அடுத்த அடுக்குக் காவலர்களுக்கு கையை ஆட்டி சமிக்ஞை செய்து விட்டு அடுத்த அடுக்குக்
காவலுக்குள் அனுமதித்தார்கள். வரிசையாக மற்ற நான்கு அடுக்குக் காவலையும் கடந்து அவை
மாளிகைக்குள் வந்து சேர்ந்தன.
வழக்கம்
போல் சிவாஜியைப் பார்த்து விட்டுப் போக காலையில் வந்த போலத்கானை சிவாஜி உற்சாகமாக வரவேற்று
அமர வைத்துப் பேசினான். சிவாஜி அவனுக்குப் பழங்களையும், இனிப்புகளையும் வழங்கி அங்கேயே
சாப்பிடச் சொன்னான்.
”இப்போது
பசியில்லை அரசே. வீட்டிற்குக் கொண்டு போய் சாப்பிடுகிறேன்.” என்று சொல்லி அந்தப் பழங்களையும்,
இனிப்புகளையும் போலத்கான் ஒரு பையில் எடுத்து வைத்துக் கொண்டான். சிவாஜி தரும் எதையும்
சாப்பிடக் கூடாது என்று ஔரங்கசீப் ஆரம்பத்திலேயே அவனை எச்சரித்திருந்தான். ‘விஷம் அல்லது
மயக்க மருந்து ஏதாவது அவற்றில் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் அதைத் தந்து மயங்க
வைத்து சிவாஜி தப்பிக்கும் சாத்தியம் இருக்கிறது என்றும் ஔரங்கசீப் சொன்னதை இன்று வரை
போலத்கான் அலட்சியப்படுத்தியதில்லை.
“உங்கள்
விருப்பப்படியே செய்யுங்கள் காவலர் தலைவரே” என்று சிவாஜி அன்பாகச் சொன்னான்.
போலத்கானிடம்
அவன் பழங்கதைகளைப் பேசவும் கேட்கவும் ஆரம்பித்தான். போலத்கானும் ஆர்வத்துடன் அந்தப்
பேச்சில் இணைந்து கொண்டான். அந்த நேரத்தில் ஹீராஜி வந்து பணிவுடன் சிவாஜிக்கு முன்
வந்து நின்றான்.
சிவாஜி
கேட்டான். “என்ன ஹீராஜி”
“அரசே.
நேற்று மதுராவில் கோயிலுக்கு வெளியேயும், ஆக்ராவில் மசூதிக்கு வெளியேயும் நாம் ஏழை
எளியவர்களுக்கு வினியோகித்த பழங்கள், இனிப்புகள் போதவில்லை. அங்கு கூடியவர்களில் பாதி
பேருக்கு மட்டுமே நம்மால் தர முடிந்தது. நம்மால் வழங்க ,முடியாதவர்களிடம் இன்று தருவதாகச் சொல்லி இருக்கிறேன்.”
சிவாஜி
முகத்தில் வருத்தத்தைக் காட்டிச் சொன்னான். “தான தர்மங்கள் வாங்குபவர்கள் போதும் என்று
மனதாரச் சொல்லும்படியாக இருக்க வேண்டும். தங்கமும், செல்வமும் என்றுமே எவரையும் முழுமையாகத்
திருப்திப்படுத்த முடியாது என்பதால் தான் நாம் அவற்றைத் தவிர்த்து உணவுப் பொருட்களை
அளிக்கிறோம். வயிறு நிறைந்தவுடன் மனிதன் மனதாரப் போதும் என்று சொல்லி விடுகிறான். அதையும்
நம்மால் முழுமையாகத் தர முடியவில்லை என்பது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. உடனடியாக
இப்போதே வேண்டிய அளவு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யுங்கள் ஹீராஜி”
ஹீராஜி
வணங்கி விட்டுச் சென்று சத்தமாகப் பணியாட்களுக்குக் கட்டளையிட்டான். “பெரிய கூடைகளில்
உடனடியாகப் பழங்களையும், இனிப்புகளையும் நிரப்புங்கள்…”
சிவாஜி
போலத்கானிடம் மறுபடியும் பேச்சைத் தொடர்ந்தான். மதியம் வரை பேச்சு நீண்டது. கடைசியில்
சிவாஜி சோர்வுடன் சொன்னான். “ஏனோ இப்போது மிகவும் களைப்பாக இருக்கிறது”
போலத்கான்
சொன்னான். “சென்று இளைப்பாறுங்கள் அரசே. இன்று வழக்கத்தை விட அதிகமாகப் பேசிக் கொண்டிருந்து
விட்டோம். இப்போது தான் நீங்கள் நோயிலிருந்து மீண்டிருக்கிறீர்கள். அதனால் இடையிடையே
உங்களுக்கு ஓய்வு கட்டாயம் தேவை”
சொல்லி
விட்டு போலத்கான் எழுந்து நிற்க சிவாஜியும் மெல்ல எழுந்தான். “ஹீராஜி…. இந்த முறை யாருமே
தங்களுக்குப் பழங்களும் இனிப்புகளும் கிடைக்காமல் வெறுங்கையோடு திரும்பக்கூடாது. அதனால்
அதிகமாகவே அனுப்பி வையுங்கள்….” என்று ஹீராஜியை அழைத்துச் சொல்லி விட்டு ஓய்வெடுக்கத்
தனதறைக்குச் சென்ற சிவாஜியின் நடையில் போலத்கானுக்கு களைப்பு நிறையவே தெரிந்தது.
போலத்கான்
வெளியேறும் வரை காத்திருந்து விட்டு சிவாஜியும், சாம்பாஜியும் மின்னல் வேகத்தில் இயங்கினார்கள்.
உள்ளே வைக்கப்பட்டிருந்த ஐந்து மிகப் பெரிய கூடைகளில் முதலிரண்டு கூடைகளையும், ஐந்தாவது
கூடையையும் ஏற்கெனவே சிவாஜியின் ஆட்கள் பழங்களாலும் இனிப்புகளாலும் நிரப்பி இருந்தார்கள். மூன்றாவது கூடைக்குள் சிவாஜி புகுந்து கொள்ள நான்காவது
கூடைக்குள் சாம்பாஜி நுழைந்தான். பணியாட்கள் அவர்களுக்கு மேல் பழங்களும், இனிப்புகளும்
மிக நேர்த்தியாக வைத்தார்கள். உள்ளே இருப்பவர்களுக்கு
மூச்சு முட்டாதபடி சௌகரியமாகவும், மேலே இருந்து எட்டிப் பார்த்தால் உள்ளே ஆட்கள் இருப்பது
தெரியாதபடியும் பார்த்துக் கொண்டார்கள். ஒரு மூங்கிலில் ஒரு கூடையை வைத்து இரண்டு பணியாட்கள்
தூக்கிக் கொண்டு வெளியே வந்தார்கள். அப்படியே ஐந்து கூடைகளும் வெளியே கொண்டு வரப்பட்டன.
ஹீராஜி
கூடவே வெளியே வந்தான். ”யாருமே வெறுங்கையுடன் திரும்பிப் போகக்கூடாது என்பது மன்னரின்
உத்தரவு. அதனால் அத்தனையும் வினியோகித்து விட்டே வாருங்கள். போதவில்லை என்றால் உடனடியாக
எவ்வளவு தேவையிருக்கும் என்பதைத் தெரிவியுங்கள்….” என்று சத்தமாக ஹீராஜி சொல்ல சற்று
குனிந்து தலைதாழ்த்தி அப்படியே செய்கிறோம் என்று பாவனையிலேயே பணியாட்கள் தெரிவித்தார்கள்.
ஐந்து
கூடைகளையும் சுமந்து வந்த பணியாட்கள் காவலர்கள் முன் எந்த அவசரமும், பதட்டமும் இல்லாமல்
வந்து நின்றார்கள். தொடர்ந்து செய்யும் சுவாரசியமில்லாத ஒரு பணியை மீண்டும் செய்ய வேண்டிய
நிலையில் இருக்கும் அலுப்பு அவர்கள் முகத்தில் தெரிந்தது.
அதே
அலுப்பு மாளிகைக் காவல் வீரர்களிடமும் தெரிந்தது.
சிவாஜியின்
பணியாட்கள் நிதானமாகப் பார்த்து விட்டுச் சொல்லுங்கள் பின்பு செல்கிறோம். அது வரை ஓய்வெடுத்துக்
கொள்கிறோம் என்ற பாவனையில் நின்று தங்களுக்குள் பேசிக் கொள்ள ஆரம்பித்தார்கள்.
காவல்
வீரர்களில் ஒருவன் முதல் கூடையின் சில பழங்களையும், இனிப்புகளையும் கையில் எடுத்துக்
கொண்டு உள்ளே எட்டிப் பார்த்தான். பல நாட்களாகப் பார்க்கும் அதே காட்சி தான் இப்போதும்
தெரிந்தது. இனிப்புப் பதார்த்தங்கள், பழங்கள்….. அவனுடன் சேர்ந்து இன்னொரு காவல் வீரனும்
எட்டிப் பார்த்தான். வேறிரண்டு வீரர்கள் மற்ற கூடைகளின் மூடிகளை மட்டும் திறந்து பார்த்து
விட்டுக் கடைசி கூடைக்கு வந்தார்கள். சம்பிரதாயமாக சில பதார்த்தங்களையும் பழங்களையும்
எடுத்து விட்டுக் கூடையை ஆராய்ந்தார்கள். அவர்கள் எதிர்பார்த்தபடியே மற்றவையும் அவையாகவே
இருந்தன.
கடைசியில்
நான்கு வீரர்களும் சேர்ந்து தலையசைக்க வழிமறித்து நின்றிருந்த மற்ற வீரர்கள் வழி விட்டு
விட்டு அடுத்த அடுக்குக் காவலர்களுக்கு சைகை மூலம் பரிசோதித்து விட்டோம் என்று தெரிவித்தார்கள்.
மற்ற அடுக்கு வீரர்கள் சிவாஜிக்காக மட்டுமே நிறுத்தப்பட்டிருப்பவர்கள். அவர்கள் மற்ற
போக்குவரத்தைப் பற்றிக் அக்கறை இல்லாதவர்கள். அவர்களும் அடுத்த அடுக்குக் காவலர்களுக்கு
கை உயர்த்தி சைகை செய்து வழி விட்டு நிற்க இதே முறையில் கூடைகள் ஐந்தடுக்குக் காவலையும்
தாண்டி வெளியே கொண்டு செல்லப்பட்டன.
(தொடரும்)
என்.கணேசன்
After this how Sivaji crosses the big Moghul empire? That I want to know. Eagerly waiting for next Monday.
ReplyDeleteமிகவும் பரபரப்பான உச்ச கட்டம். அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
ReplyDeleteசிவாஜி உண்மையிலேயே தப்பித்து விட்டானா...? ஆச்சரியமாக உள்ளது...அடுத்து என்ன நடக்கும் என்பதை அறிய சுவாரஸ்யமாக காத்திருக்கிறேன்....
ReplyDeleteஇறைவன் ஹீராஜியையும் காப்பாற்றினால் நன்றாக இருக்கும்...
Expecting this novel in Amazon Kindle
ReplyDelete