விஸ்வம் திகைத்தான். இல்லுமினாட்டியின் சின்னம் மறுபடி அவன் வாழ்க்கையில் விளையாட ஆரம்பித்து விட்டதா என்ன? அது இப்படி அடிக்கடி ஒரு காலத்தில் எரிந்து ஒளிவீசி அவனுக்கு நம்பிக்கை ஊட்டி உச்சத்திற்குக் கொண்டு போய்க் கடைசியில் அதல பாதாளத்தில் இறக்கி, சாகடித்தும் அல்லவா மங்கியிருக்கிறது. அதனால் இந்த முறை அவன் அதனிடம் ஏமாறத் தயாராக இல்லை. அவன் பிரமிடு நெற்றிக்கண்ணை அலட்சியம் செய்தவனாகத் திரும்பினான். கும்மிருட்டில் இப்போது பார்க்க முடியா விட்டாலும் கதேயின் கவிதையின் கடைசி வார்த்தைகள் அவன் மனதில் பிரகாசித்தன. "Work, and despair
not."
அவனுடைய இப்போதைய சூழ்நிலைக்கு அந்த வார்த்தைகளே தாரக மந்திரமாகத் தோன்றின. பழைய தவறுகளுக்கு வருந்தியும், இப்போதைய சூழ்நிலைக்குப் பச்சாதாபப்பட்டும் செயலற்றுத் தேங்கி விடாமல் அவன் செயல்பட வேண்டும். வலிமையான எதிரிகளை வென்று அவன் எல்லா வலிமைகளுக்கும் மேலானவன் என்று நிரூபிக்க வேண்டும்....
கண்களை மூடிக் கொண்டு அமைதியாக யோசித்தபடி அவன் சிறிது நேரம் நின்றான். இந்தப் பாதாள அறை ஒளிந்து கொள்ளப் பாதுகாப்பானது என்றாலும் இங்கே அவர்கள் இருப்பதை எதிரிகள் கண்டுபிடித்து விட்டால் இங்கே இருப்பது எலி வலையில் சிக்கிக் கொள்வது போல ஆபத்தானது, உயிருடன் தப்ப முடியாது என்ற யதார்த்த உண்மை அவனை வதைத்தது. அப்படி ஒரு நிலைமை வந்தால் அப்போது தப்பிக்க எதாவது வழியை இப்போதே ஏற்படுத்திக் கொள்ளாமல் இங்கே பதுங்கி இருப்பதில் அர்த்தமில்லை என்று தோன்றியது.
ரகசியமாகச் சில வேலைகளைச் செய்ய இந்தக் கோயிலைக் கட்டிய ஃப்ரீமேசன்கள் ரகசியமாகவே இங்கிருந்து போகவும் ஏதாவது வழியை ஏன் உருவாக்கியிருக்கக்கூடாது என்று விஸ்வம் தன்னையே கேட்டுக் கொண்டான். அந்தக் கேள்வி அவனுக்கு அபத்தமாகத் தோன்றவில்லை. அப்படி ரகசியமாகப் போக வழி செய்து கொண்டிருக்க வாய்ப்பு இருப்பதாகவே அவனுக்குத் தோன்றியது. அவன் டார்ச் லைட்டைப் போட்டு அந்தப் பாதாள அறையை மேலும் ஆராய்ந்தான். ஆராய்ந்ததில் ரகசிய வழி எதுவும் சிக்கவில்லை.
மறுபடியும் ஆராய உள்ளுணர்வு சொன்னது. எதுவும் முதல் பார்வைக்கே தெரிந்து விட வேண்டும் என்பது அவசியமில்லையே....
மீண்டும் கவனமாக நான்கு சுவர்களையும் ஆராய்ந்தான். புதிதாக எதுவும் தெரியவில்லை. ஆராய அங்குமிங்கும் நடந்த போது ஓரிடத்தில் நுட்பமான மாறுதலை அவன் கால்கள் உணர்ந்தன. அவன் தரையில் அந்த இடத்தை ஆராய்ந்தான். தரையில் தூசியைக் கையால் துடைத்து விட்டு ஆராய்ந்த போது மெலிதாய் ஒரு கோடு தெரிந்தது. மெல்ல அந்தப் பகுதியைத் தட்டினான். அந்தப் பகுதியைத் தாண்டிப் பள்ளம் இருப்பதாய் அந்தச் சத்தம் அறிவித்தது. உற்சாகமான அவன் அந்த மெலிதான கோட்டை மேலும் ஆராய்ந்ததில் பெரிய சதுர வடிவுக்கு அது நீண்டது. சதுர வடிவில் ஒரு சிமெண்ட் பலகையைப் பொருத்தி இருக்கிறார்கள். சிறிது நேர முயற்சிக்குப் பின் அவன் மெல்ல சிமெண்ட் பலகையைப் பெயர்த்து எடுத்தான். கீழே சுரங்கப் பாதை தெரிந்தது. ஊர்ந்து மட்டுமே செல்லக்கூடிய அளவில் தான் அந்த அகலம் இருந்தது.
விஸ்வம் ஊர்ந்தபடி இறங்கிச் சென்றான். சிறிது தூரம் சென்ற பின் சுரங்கப் பாதை முடிந்தது. அங்கும் அடைத்தபடி இருந்தது ஒரு சிமெண்ட் பலகை. கஷ்டப்பட்டு அதைத் தள்ளி மேலே பார்த்த போது அதன் மேலே ஒரு சிமெண்ட் பெஞ்சு தெரிந்தது. தலையை வெளியே நீட்டி சுற்றிப் பார்த்தான். சர்ச் அருகே இருந்த பார்க் பெஞ்சின் கீழே தான் அந்த பாதை முடிந்திருப்பது புரிந்தது. சிறிது தொலைவில் சர்ச் தெரிந்தது.
மெல்ல வந்த வழியே விஸ்வம் திரும்பினான். இங்கிருந்து தப்பிக்கவும் ஒரு வழி இருக்கிறது என்ற புரிதலில் மனம் சின்னதாய் நிம்மதியை உணர்ந்தது. பாதாள அறைக்கு வந்து அங்கிருந்தும் மேலே சர்ச்சுக்குள் வந்து திரும்பவும் அந்த மரப் பலகையால் அந்தத் துவாரத்தை அடைத்துச் சாவியைத் திருகிப் பூட்டி விட்டு தரை விரிப்பால் பலகையை விஸ்வம் மூடினான். பின் அதன் மீது பலமாகக் காலை வைத்து வரும் சத்தத்தை கவனமாகக் கேட்டான். சந்தேகப்பட்ட அளவு மரப்பலகை காட்டிக் கொடுக்கவில்லை. யோசனையுடன் அந்தத் தரை விரிப்பை எடுத்து ஆராய்ந்தான். அந்த மரப்பலகைக்கு மேலே மட்டும் அந்தத் தரை விரிப்பு கூடுதல் தடிமனாக இருந்தது. அந்தக்காலத்திலேயே கவனமாகத் தான் இருந்திருக்கிறார்கள்...
திருப்தி அடைந்தவனாய் விஸ்வம் சாவியை எடுத்த இடத்திலேயே வைத்து விட்டு வந்த போது ஜிப்ஸி ஜன்னலோரம் இருந்த மரப்பெஞ்சில் அமர்ந்து வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
விஸ்வம் தன் புதிய கண்டுபிடிப்பை ஜிப்ஸியிடம் சொல்லாமல் தன் சந்தேகத்தைக் கேட்டான். “இல்லுமினாட்டி ஆட்கள் இங்கே வந்து பார்க்க வாய்ப்பிருக்கிறதல்லவா?”
ஜிப்ஸி சொன்னான். “இருக்கிறது. ஆனால் அவர்களைப் பொறுத்த வரை இந்த இடம் அவர்கள் தேடக்கூடிய நூற்றுக் கணக்கான இடங்களில் இதுவும் ஒன்று. கண்டிப்பாக நாம் இங்கே இருப்போம் என்று சந்தேகம் அவர்களுக்கு வராத வரை அவர்கள் தேடல் சாதாரணமாகத் தான் இருக்கும். ஒன்றிரண்டு ஆட்கள் வந்து பார்த்து விட்டுப்
போகலாம்... அவர்கள் வரும் போது நாம் இரண்டு பேரும் பாதாள அறைக்குப் போனால் போதும். இல்லுமினாட்டி ஆட்கள் இங்கிருக்கும் பாதாள அறையைக் கண்டுபிடிக்கும் வாய்ப்பு குறைவு.”
விஸ்வம் கேட்டான். “எதை வைத்து அப்படிச் சொல்கிறாய்?”
“இந்த
சர்ச் பற்றி முழு விவரங்கள் தெரிந்திருந்தால் கண்டிப்பாக இந்த சர்ச்சைத் தங்கள் கட்டுப்பாட்டிற்கு எப்போதோ அவர்கள் கொண்டு வந்திருப்பார்கள். நான் முன்பே சொன்ன மாதிரி முக்கியத்துவம் வாய்ந்த, கூடுதல் ரகசியங்கள் இருக்கிற மேசன் கோயில்கள் எல்லாவற்றையும் அவர்கள் எப்போதோ தங்கள் கட்டுப்பட்டிற்குக் கொண்டு வந்து விட்டார்கள். அவர்கள் இப்படி அலட்சியப்படுத்தி விட்டிருக்கிறார்கள் என்றால் அவர்கள் அறியவில்லை அல்லது முக்கியமானதாக நினைக்கவில்லை என்று தான் அர்த்தம்.”
விஸ்வத்திற்கு ஜிப்ஸியின் அனுமானம் சரியென்றே தோன்றினாலும் மனதில் ஏதோ ஒன்று நெருடியது. அந்த நெருடலைச் சத்தமாகச் சொன்னான். ”ஆனால் இப்போதும் இந்த ரகசியப் பாதாள அறையைப் பற்றித் தெரிந்து வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக இருப்பார்கள். ரகசிய வழிபாடுகள் நடத்திக் கொண்டிருந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்காவது தெரிந்திருக்கும் அல்லவா?”
ஜிப்ஸி புன்னகைத்தான். “நீ சொல்வது உண்மை. இங்கே ரகசிய வழிபாட்டை நடத்திக் கொண்டிருந்த குடும்பத்தினர்கள் அறிவார்கள். அவர்கள் இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருக்கும் போதே ஜெர்மனியிலிருந்து போய் விட்டார்கள். அவர்கள் யாருமே இப்போது இங்கே இல்லை...”
இல்லுமினாட்டியில் இணையும் வரை எப்போதுமே இரட்டை வாழ்க்கை வாழ்ந்திருக்காத க்ரிஷ் இப்போது அப்படி வாழ்வதில் உள்ள சிரமங்களைத் துல்லியமாகவே உணர்ந்தான். வீட்டு ஆட்களிடமே சதா எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டியிருந்தது அவனுக்குள் பலத்த குற்ற உணர்வை ஏற்படுத்தியது. காதலியிடமும், குடும்பத்தினரிடமும் கூட சில விஷயங்களில் உண்மையாகவும், வெளிப்படையாகவும் இருக்க முடியாததற்கு அவன் உள்ளூர வருந்தினான்.
இப்போது அவன் அமானுஷ்யனைச் சந்திக்கப் போய்க் கொண்டிருப்பதைக் கூட அவனால் வெளிப்படையாக அவர்களிடம் தெரிவித்து விட்டு வர அவனுக்கு முடியவில்லை. அவன் அமானுஷ்யனைச் சந்திக்கும் தகவல்கள் வெளியே கசிவது இருவர் பாதுகாப்புக்கும் நல்லதல்ல என்று எர்னெஸ்டோ எச்சரித்திருந்தார். அதனால் முதலமைச்சர் மகனான க்ரிஷுக்கு வழக்கமாக அரசாங்கம் அனுப்பும் பாதுகாப்பைக் கூட அவன் மறுக்க வேண்டி இருந்தது. ரகசியமாகப் போக வேண்டி இருப்பதற்கு உதயிடம் ஏதேதோ பொய் சொல்லி விட்டுக் கிளம்ப வேண்டி இருந்தது...
எர்னெஸ்டோ அமானுஷ்யன் என்றழைக்கப்படும் அக்ஷயின் தற்போதைய இருப்பிடம் மற்றும் வேலை குறித்த தகவல்களை க்ரிஷுக்கு
முன்கூட்டியே அனுப்பி இருந்தார். ஒரு சிறிய நகரத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் உடற்பயிற்சி ஆசிரியனாக வேலை செய்யும் அக்ஷயை, எந்தத் தேதியில், எந்த நேரத்தில் சந்திப்பது நல்லது என்பதையும் தெரிவித்திருந்தார். அந்தத் தேதியில் அந்த நேரத்திலேயே க்ரிஷ் அங்கே போய்ச் சேர்ந்தான்.
பல பள்ளி மாணவர்கள் ஒரு போட்டிக்காகப் பயிற்சிகள் செய்து கொண்டிருக்கும் ஒரு மைதானத்தில் பார்வையாளர்கள் அமரும் பகுதியில் க்ரிஷ் வந்து அமர்ந்த முதல் கணமே அக்ஷய் அவனைக் கவனித்தான். பார்வையாளர்கள் சுமார் இருநூறுக்கும் மேலே இருந்த போதும் அவன் அங்கே இது வரை பார்த்திராத புதியவர்கள் க்ரிஷைச் சேர்த்து எட்டு பேர் இருந்தார்கள். புதியவர்களில் ஐந்து பேர் க்ரிஷ் வருவதற்கு முன்பே அங்கு வந்து விட்டிருந்தார்கள். அவர்கள்
சாதாரண பார்வையாளர்கள் அல்ல என்பதும், விளையாட்டில் உள்ள ஆர்வத்தால் வந்தமர்ந்தவர்கள் அல்ல என்பதும் அக்ஷய்க்கு ஆரம்பத்திலேயே தெரிந்து விட்டது. க்ரிஷ் வந்தமர்ந்து இரண்டு நிமிடங்களில் கூடுதலாக மூன்று புதியவர்கள் சில வினாடிகள் இடைவெளிகளில் வந்து க்ரிஷ் அருகே விரைந்து செல்லக்கூடிய தூரங்களிலேயே அமர்ந்தார்கள்.
அக்ஷயின் உள்ளுணர்வு அவனை உடனடியாக அங்கிருந்து தப்பித்துச் செல்லும்படி எச்சரித்தது.
(தொடரும்)
என்.கணேசன்
அக்ஷய் வரும் ஆரம்ப காட்சியே பரபரப்பு தானா😯😯...?
ReplyDeleteஅந்த சர்ச்சில் விஸ்வத்திற்கு எதோ ஒரு ஆபத்து உள்ளது போல் தோன்றுகிறது....ஏனெனில் அது எவ்வளவு பாதுகாப்பான இடமாக இருந்தாலும்... சில புரியாத விசயங்களும் உள்ளன...
Amanushyan and Krish are going to meet. I am eagerly waiting for next episode.
ReplyDeleteக்ரிஷுக்கு என்ன ஆபத்து வர கூடும்??
ReplyDeleteIts moving to the top gear... Welcoming Akshay ��
ReplyDeleteவந்துட்டான்யா ... வந்துட்டான்..
ReplyDeleteநம்ம ஆல் டைம் ஹீரோ அக்ஷய் வந்துட்டான்யா ...
ஆஹா நீங்கள் காந்தம் ( magnet) தான் sir ..when I read comments that I feel....
ReplyDelete