Monday, May 27, 2019

சத்ரபதி 74


ழுத்து நெறிக்கப்பட்டு மயங்கி விழப் போகும் தருணத்தில், கண் பார்வைக்கு எல்லாக் காட்சிகளும் மறைந்து கருத்துப் போன நேரத்தில், அன்னை பவானி சகல தேஜஸுடன் சிவாஜியின் கண்களுக்குத் தெரிந்தாள். அப்சல்கான் திருகிய கழுத்துடன் இறக்கப் போகும் சிவாஜியின் உயிர் மிச்சமிருந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். இடது கையால் கழுத்தை நெறித்தவன் வலது கையால் தன் வாளை எடுத்து சிவாஜியின் வயிற்றில் மின்னல் வேகத்தில் குத்தினான்.

அது வரை அருகிலேயே இருந்த போதும், சிவாஜியின் முகம் தெரியாததால் ஜீவ மஹல்லா நடப்பது என்ன என்பதை உணரவில்லை. ஏதோ வித்தியாசமாக இருப்பதை உள்ளுணர்வு எச்சரித்த போதும் சிவாஜி தான் எதோ விளையாடுகிறான் என்று நினைத்தான். ஆனால் அப்சல்கான் தன் வாளை எடுத்து சிவாஜியின் வயிற்றில் வேகமாகக் குத்தியவுடன் தான் அபாயத்தை உணர்ந்தான். சிவாஜி சையத் பாண்டா மீது மட்டுமே கவனம் செலுத்தச் சொல்லியிருந்ததால் என்ன செய்வது என்று தீர்மானிக்க முடியாமல் ஒரு கணம் தடுமாறினான்.

ஆனால் அப்சல்கானின் வாள் சிவாஜியின் ஆடையைக் கிழித்ததேயொழிய அவன் உடலை நெருங்கவில்லை. சிவாஜி இரும்புக் கவசம் அணிந்திருந்ததால் சத்தமாக முனை மழுங்கியது. அன்னை பவானியைக் கண்ட பின் சிவாஜி அவளிடமிருந்து எல்லையற்ற பலத்தைப் பெற்றவனாக உணர்ந்தான். அசுர பலத்துடன் அவன் திமிறியபடியே தன் கையில் அணிந்திருந்த ரம்பப் புலி நகத்தால்  அப்சல்கானின் வயிற்றைக் கீறியவன், இன்னொரு கையில் மறைத்திருந்த பிச்சுவாக் கத்தியால் அப்சல்கானை சரமாரியாகக் குத்தினான்.
       
அப்சல்கான் ஒன்றன் பின் ஒன்றாக எதிர்பாராத பேரதிர்ச்சிகளை உணர்ந்தான்.  முதலாவதாக அவன் கழுத்தை நெறிக்க ஆரம்பித்த பிறகு இது வரை யாரும் தப்பியதில்லை. அந்த அளவு பலமுள்ள ஆளை அவன் சந்தித்ததில்லை. ஆரம்பத்தில் தளர்ந்த சிவாஜி திடீரென்று அசுர பலம் பெற்றதெப்படி என்பது அவனுக்குப் புரியாததால் அதிர்ச்சி அடைந்தான். அடுத்தபடியாக அவன் சிவாஜி இப்படி ரகசிய ஆயுதங்களுடன் வருவான் என்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. அப்படி வந்தவன் அவனைக் காயப்படுத்தும் அளவு சக்தியை வைத்திருப்பான் என்பது இன்னொரு அதிர்ச்சியாக இருந்தது. அடுத்த அதிர்ச்சி சிவாஜி இரும்புக் கவசம் அணிந்திருந்ததும், குத்திய வாளின் முனை மழுங்கியதும் ஏற்பட்டது. ஆனாலும் அவன் தளர்ந்து விடவில்லை. வலியால் துடித்த போதும் அவன் தன் வாளால் ஓங்கி சிவாஜியின் உச்சந்தலையை வெட்டினான்.  அந்த வாள் சிவாஜியின் தலைப்பாகையை வெட்டி தலையில் அணிந்திருந்த இரும்புக் குல்லாயைத் தாக்கிய வேகத்தில் சிவாஜியின் தலையில் சிறு காயம் ஏற்பட்டதே ஒழிய அப்சல்கான் எதிர்பார்த்தபடி சிவாஜியின் தலை பிளந்து விடவில்லை.

ஒவ்வொரு உறுப்புக்கும் இப்படி பாதுகாவலை ஏற்படுத்திக் கொண்டு அவன் வந்திருப்பான் என்று எதிர்பாராத அப்சல்கானின் பிடி சிவாஜியின் தாக்குதல்களால் தானாகத் தளர்ந்தது. ஆனால் தளர்வதற்கு முன் சிவாஜியின் பிச்சுவா கத்தியைப் பிடுங்கி வீசினான். உடனே சிவாஜி அருகில் இருந்த ஜீவ மஹல்லாவின் இரண்டு வாள்களில் ஒன்றை உருவி அப்சல்கானைத் தோள்பட்டையில் தாக்கினான். படுகாயம் அடைந்த அப்சல்கான் அலறியபடி உதவிக்கு சையத் பாண்டாவை அழைத்தான்.

மிக வேகமாக ஓடி வந்த சையத் பாண்டா தீவிரமாக சிவாஜியைத் தன் நீண்ட வாளால் தாக்க ஆரம்பித்தான். அவன் வாள் தன்னைத் தீண்டி விடாமல் சிவாஜி வாளால் தடுத்து தற்காத்துக் கொள்ள ஆரம்பித்தான். ஜீவ மஹல்லா அந்த நேரத்தில் தன் வாளால் சையத் பாண்டாவின் வலது கையை வெட்டி வீழ்த்தினான். ஜீவ மஹல்லாவின் அடுத்தபடியான வாள் பிரயோகத்தில் சையத் பாண்டா இறந்து வீழ்ந்தான்.

அதிர்ந்து போன அப்சல்கான் தப்பி ஓட முயற்சிக்கையில் பின்தொடரப் போன சிவாஜியை கிருஷ்ணாஜி பாஸ்கர் தன் வாளை எடுத்துக் கொண்டு இடைமறித்தார். சூழ்ச்சி வலையிலிருந்து சிவாஜி தப்பித்தால் அப்சல்கானைத் தாக்கக்கூடும் அல்லது கொல்லவும் கூடும் என்று முன்கூட்டியே அறிந்திருந்தாலும் அது நிகழும் சூழல் ஏற்பட்ட போது அந்த மனிதரால் செயலற்று இருக்க முடியவில்லை. அப்சல்கானிடம் பல வருடங்களாக ஊழியம் புரிந்தவர் அவர்…

அப்சல்கான் தப்பித்து வெளியே ஓடினான். ஏந்திய வாளுடன் இடைமறித்த கிருஷ்ணாஜி பாஸ்கரிடம் சிவாஜி மரியாதை கலந்த புன்னகையுடன் சொன்னான். “என் வாளில் நல்லவர்களின் இரத்தம் படிவதை நான் விரும்பவில்லை பெரியவரே. தயவு செய்து என்னைத் தடுக்காதீர்கள்”. சொன்னபடியே சிவாஜி பலம் பிரயோகித்து அவர் வாளைத் தன் வாளால் தட்டி விட கிருஷ்ணாஜி பாஸ்கர் கையிலிருந்த வாள் பறந்து போய் ஓரத்தில் விழுந்தது. இனி செய்ய முடிந்தது எதுவுமில்லை என்று எண்ணியவராக கிருஷ்ணாஜி பாஸ்கர் ஒதுங்கினார்.

அப்சல்கான் காயங்களுடன் ரத்தம் வழிய வெளியே ஓடி வந்ததைப் பார்த்த அவனுடைய பல்லக்குத் தூக்கி வீரர்கள் அவனைத் தூக்கிச் செல்லப் பல்லக்குடன் வேகமாக ஓடி வந்தார்கள். அதே சமயம் சம்பாஜி காவ்ஜியும் அவனைத் துரத்திக் கொண்டு ஓடினான். அப்சல்கானின் அந்த பல்லக்குத் தூக்கி வீரர்களும், அந்த இடத்தில் இருந்த சிவாஜியின் வீரர்களும் சேர்ந்து சிறிது நேரம் போரிட்டார்கள். அப்சல்கானின் சில வீரர்கள் போராட, மீதமுள்ளவர்கள் அப்சல்கானைப் பல்லக்கில் ஏற்றிக் கொண்டு பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்ல விரைந்தார்கள். ஆனால் சம்பாஜி காவ்ஜி அவர்களை நூறடிகள் கூடத் தாண்ட விடவில்லை. பல்லக்குத் தூக்கி வீரர்களை அவன் காயப்படுத்தியதால் அவர்கள் வேறு வழியில்லாமல் பல்லக்கை இறக்கி வைக்க வேண்டியதாயிற்று. சம்பாஜி காவ்ஜி பல்லக்கிலிருந்தும் தப்பி ஓட யத்தனித்த அப்சல்கானின் தலையை வெட்டிக் கொன்றான்.

சம்பாஜி காவ்ஜி அப்சல்கானின் தலையை எடுத்துக் கொண்டு சிவாஜியை நோக்கி வந்தான். அவனையே பார்த்தபடி நின்ற சிவாஜி மானசீகமாக அன்னை பவானியை வணங்கினான். சொந்த சக்தி மட்டுமே வைத்துக் கொண்டு அவன் அப்சல் கானை வென்றிருக்க முடியாது. அன்னை பவானி மட்டும் அருள் புரிந்திருக்கவில்லை என்றால் துண்டிக்கப்பட்டிருக்கும் தலை அப்சல்கானுடையதாய் இல்லாமல் அவனுடையதாக இருந்திருக்கும். அவன் கிட்டத்தட்ட மூர்ச்சையாகி விட்ட நிலையில் அவள் அல்லவா காப்பாற்றினாள்….

சம்பாஜி காவ்ஜி அப்சல்கானின் தலையை நீட்டியபடி சொன்னான். “மன்னரே. உங்களுக்கு இந்த அடியவனின் அன்புப் பரிசு….”

சிவாஜி சொன்னான். “வாழ்த்துக்கள் சம்பாஜி. இந்த உலகம் உன்னை இனி என்றென்றும் நினைவு வைத்திருக்கும். ஏனென்றால் சூழ்ச்சிகள் செய்வதையே தொழிலாகக் கொண்டிருந்தவனின் சூழ்ச்சிகளுக்கு நீ முற்றுப்புள்ளி வைத்திருக்கிறாய். இந்தத் தலையை ராஜ்கட்டில் இருக்கும் என் தாயிற்கு அனுப்ப ஏற்பாடுகளைச் செய்……”

சம்பாஜி காவ்ஜி கேட்டான். “அப்சல்கானின் உடலை என்ன செய்வது அரசே”

“தகுந்த மரியாதையுடன் அவன் மத வழக்கப்படியே அந்திமக்கிரியைகள் செய்து புதைக்க ஏற்பாடு செய் சம்பாஜி. இதற்கு நம் இஸ்லாமிய நண்பர்களின் உதவியைப் பெற்றுக் கொள். அப்சல்கான் சூழ்ச்சிக்காரன் ஆனாலும் மாவீரனும் கூட… அதனால் அவனது அந்த உரிமையை நாம் மறுத்து விடக் கூடாது....”

சம்பாஜி காவ்ஜியால் சிவாஜியை வியக்காமல் இருக்க முடியவில்லை. வெற்றியின் தருணங்களில் எதிரியிடம் பெருந்தன்மையாக இருக்க எத்தனை பேருக்கு முடியும்? அதுவும் அவனைச் சூழ்ச்சியால் கொல்ல முயன்றவனுக்கு, முன்னமே அவன் அண்ணனைக் கொன்ற சூழ்ச்சியிலும் பங்கிருந்தவனுக்கு, பெருந்தன்மை காட்டுவது யாருக்காவது சாத்தியமா?

சிவாஜி பிரதாப்கட் கோட்டைக்கு விரைந்தான். நுழைந்தவுடன் அங்கு தயாராக இருந்த வீரர்களிடம் அவன் சைகை செய்ய, மேளங்கள் மிகச் சத்தமாகக் கொட்டப்பட்டன. இது முன்பே அவர்கள் திட்டமிட்டுத் தீர்மானித்திருந்த சமிக்ஞை. இந்தச் சத்தம் கேட்டவுடன் நேதாஜி பால்கர் தலைமையில் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் தயாராக விரிந்து காத்திருந்த சிவாஜியின் படை பீஜாப்பூர் படையை ஆக்கிரமிக்க ஆரம்பித்தன.

பீஜாப்பூர் படை இந்தத் திடீர்த் தாக்குதலுக்குத் தயாராக இருக்கவில்லை. மேளச்சத்தம் கேட்டவுடன் சிவாஜி- அப்சல்கான் சந்திப்பு வெற்றிகரமாக முடிந்ததைக் கொண்டாடுகிறார்கள் என்று தான் நினைத்திருந்தார்கள். பல பக்கங்களிலிருந்தும் சிவாஜியின் படை தாக்குதல் ஆரம்பித்த போது அவர்களால் உடனடியாகச் சுதாரிக்க முடியவில்லை. ஒருவழியாக அவர்கள் சுதாரித்துப் போராட ஆரம்பித்த போது அப்சல்கானின் தலை வெட்டப்பட்ட செய்தி அவர்களை வந்து சேர்ந்தது.

கிட்டத்தட்ட எல்லாப் போர்களுமே வீரர்களின் மனங்களின் தீவிரத்தைப் பொறுத்தே வெற்றி தோல்விகளில் முடிகின்றன. பீஜாப்பூர் படைவீரர்கள் முன்பே பல அபசகுனங்களைக் கண்டவர்கள். அப்சல்கானைத் தலையில்லாத முண்டமாக ஒரு பரதேசி சொல்லியிருந்ததும், அப்சல்கானின் யானை முன்பே முன்னோக்கி நகர மறுத்ததும் தோல்விக்கான சகுனமாக அவர்களில் பலரைப் பாதித்திருந்தது. இப்போது பரதேசி சொன்னது போல அப்சல்கானின் தலையும் துண்டிக்கப்பட்டு விட்டது. அப்சல்கானுக்கு அடுத்தபடியாக அவர்களைத் தலைமை தாங்கிப் போரிட ஆளில்லை. அப்சல்கானின் மூன்று மகன்கள் அங்கு இருந்தார்கள் என்றாலும் அவர்கள் அப்சல்கானுக்கு இணையானவர்கள் இல்லை. மேலும் இருட்ட ஆரம்பித்திருக்கும் இந்த வேளையில் இந்த காட்டு மலைப்பகுதியில் போரிட அவர்களில் மாவல் வீரர்களைத் தவிர மற்றவர்கள் பழக்கப்படாதவர்கள்…. வெற்றிக்கான முகாந்திரம் எதுவுமே இல்லாத போது போரிட்டுச் சாக வீரர்கள் தயாராக இல்லை. சரணடைவதே மேல் என்று வீரர்கள் பலரும் முடிவு செய்ய போர் பல இடங்களில் விரைவிலேயே முடிவுக்கு வந்தது.


ஆனால் தோல்வியை ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து போராடியவர்களும் இருக்கத் தான் செய்தார்கள். அவர்களில் ஒருவர் ஷாஹாஜியின் நெருங்கிய நண்பராகவும் இருந்தார்…..

(தொடரும்)
என்.கணேசன்

5 comments:

  1. Super! excited for next part

    ReplyDelete
  2. Excellent narration ji.

    ReplyDelete
  3. ராட்சச உருவம் மற்றும் பலத்துடன் நின்ற அப்ஸல், தன் முன் கால்கள் உதற கோழை போல நடுங்கி நின்ற உருவத்தில் சிறிய சிவாஜி, தன் சூழ்ச்சிகளையும் எதிர்பார்த்து அதை முறியடித்து தன்னை கொல்லவும் திட்டமிட்டு விட்டான் என்று அறிந்த நேரத்தில் அப்ஸல் மனதில் ஓடியிருக்கக்கூடிய அவனுடைய நினைவுகளையும், குறைந்த பட்சம், அவனுடைய திகைப்பு மற்றும் பயத்தையும் விரிவாக பிரஸ்தாபித்திருக்கலாம்.. உணர்ந்து எழுதும் தங்கள் நடையில் சிறப்பாக இருந்திருக்கும்..

    ReplyDelete
  4. இறையருள் வெற்றிக்கு எவ்வளவு முக்கியம் என்பது இதை பார்க்கும் போது புரிகிறது....

    சிவாஜி மற்றும் அப்சல்கான் இடையே நடைபெறும் சண்டையை அருமையாக கண்முன் கொண்டுவந்து விட்டீர்கள்...ஐயா

    ReplyDelete
  5. பயங்கரமான சண்டைக் காட்சி

    ReplyDelete