Thursday, May 23, 2019

இருவேறு உலகம் – 137


விஸ்வம் லேசாகத் தலைவணங்கி விட்டு மேடையை விட்டு இறங்கினான். அந்த இல்லுமினாட்டிச் சின்னத்தை அவன் பேச்சு மேடையில் இருந்து எடுத்துக் கொள்ளாமல் வேண்டுமென்றே அதை அங்கேயே விட்டு வந்தான். உறுப்பினர்கள் கண் பார்வை க்ரிஷ் பேசி முடித்து கூட்டம் முடிவடையும் வரை அந்தச் சின்னத்தில் விழுந்தபடியே இருப்பது தனக்கு அனுகூலம் என்று விஸ்வம் நினைத்தான். க்ரிஷ் பேசப் பேச அந்தச் சின்னம் அவனுக்கு முன்னால் இருந்து கொண்டு விஸ்வத்திற்கு விளம்பரம் செய்து கொண்டிருக்கும்…. கைதட்டல் விஸ்வம் திரும்பவும் வந்து தன் இருக்கையில் அமரும் வரை தொடர்ந்தது. இருவர் வந்து க்ரிஷை மேடைக்கு அழைத்துச் சென்றார்கள். பேச்சு மேடை முன் அவனை நிறுத்தி அவன் கையைப் பிடித்து மைக்கை உணரவைத்து விட்டு ஒரு நிமிடம்  வேறெதாவது உதவி அவனுக்குத் தேவைப்படுமா என்று கவனித்துப் பார்த்து விட்டு மேடையிலிருந்து இறங்கினார்கள்.

க்ரிஷ் மனம் வெறுமையாக இருந்தது. என்ன பேசுவது என்ன சொல்வது என்று பலதை முன்பே நினைத்து வைத்திருந்தாலும் மேடையேறிய கணமே அந்த நினைவுகள் விடைபெற்றது போல வெறுமையே மிஞ்சியது. ஒரு நிமிடம் அவன் மௌனமாக நின்றான். விஸ்வத்துக்கு அவனைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது. கண்களைக் கட்டி காந்தாரி போல பரிதாபமாய் நிற்கிற அவனுக்கு விஸ்வத்துக்கெதிராய் பேச எதுவுமே இருக்க வாய்ப்பில்லை என்று விஸ்வம் முன்பே கணித்திருந்தான். அதை மெய்ப்பிப்பது போலத் தான் க்ரிஷ் மௌனமாய் நின்று கொண்டிருக்கிறான். இந்தக் கேவலம் உனக்குத் தேவையா க்ரிஷ்? என்று மனதுக்குள் கேட்டுக் கொண்டான்.

க்ரிஷ் கை பேச்சு மேடையில் இருந்த நெற்றிக்கண் கல்லில் பட்டது. அது என்ன என்று தொட்டுப் பார்த்த போது அந்தச் சின்னத்தை சபைக்குக் காட்டிய விஸ்வம் அதை விட்டுப் போயிருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டான். க்ரிஷ் கை பட்டவுடனே அந்தச் சின்னம் ஒரு முறை ஒளிர்ந்து மறைந்தது. விஸ்வம் திகைத்தான். என்ன இது? அவன் தொட்டாலும் ஒளிர்கிறதே! க்ரிஷின்  கை அந்த நெற்றிக்கண் கல்லில் பட்டவுடனேயே க்ரிஷின் மூடிய கண்கள் முன் ஒரு காட்சி தெரிய ஆரம்பித்தது. பனிமலைக் குகையில் மாஸ்டர் தெரிந்தார். அவருக்குப் பின் சிவனுடைய முகச் சிற்பம் தெரிந்தது. சிவன் யோக நிலையில் இருந்தான். சிவனின் கண்களும், நெற்றிக்கண்ணும் பாதி மூடிய நிலையில் இருந்தன. மாஸ்டரைப் பார்த்ததும் க்ரிஷ் முகம் மலர்ந்தது. தலைதாழ்த்தி அவன் அவரை வணங்கினான். அவர் சாந்தமாய் அவனைப் பார்த்துப் புன்னகைத்தார். கை உயர்த்தி அவனை ஆசிர்வதித்தார்

அந்தக் காட்சி க்ரிஷுக்கு அருகில் ஒரு திரையில் தெரிவது போல் தெரிய விஸ்வம் அதிர்ச்சி அடைந்தான். பக்கத்தில் இருப்பவர்களைப் பார்த்தான். நல்ல வேளையாக யாருக்கும் அந்தக் காட்சி தெரியவில்லை என்பதை உணர முடிந்தது. சற்று நிம்மதி அடைந்தாலும் அவனைப் பார்த்து மாஸ்டர் புன்னகைத்தது போலத் தோன்றியது எரிச்சலை ஏற்படுத்தியது. இந்த ஆள் யோகசக்திகளை அதிகரித்துக் கொண்டு விட்டான் போல் இருக்கிறது. அதனால் தான் அதை எனக்குக் காட்டுகிறான். ’முட்டாளே இந்தக் காட்சிகள் எல்லாம் எனக்குக் காட்டி ஒரு பிரயோஜனமும் இல்லை. எல்லாமே உன் கையை விட்டுப் போய் விட்டது…. ’ மனதிற்குள் சொல்லச் சொல்லத் தான் மாஸ்டருக்குப் பின்னால் தெரிந்த சிவன் சிலையில் நெற்றியில் முக்கோணத் துளை இல்லாமல் நெற்றிக்கண் பாதி மூடிய நிலையில் தெரிந்ததைக் கண்டு திகைத்தான். இந்த ஆள் அதற்குள் சரியாகப் பொருந்துகிற ஒரு நெற்றிக்கண்ணைப் பொருத்தி விட்டானோ? ’எல்லாம் சரி ஐயா உன் சிஷ்யன் இங்கே பேச வாய் வராமல் திண்டாடிக் கொண்டிருக்கிறானே உதவக்கூடாதா? இங்கே பார்த்துக் கொண்டிருப்பவர்கள் சிரிக்கப் போகிறார்கள்’ என்று ஏளனமாக மனதிற்குள் அவரிடம் கேட்டான்.

க்ரிஷ் மெல்ல அந்தச் சின்னத்தைக் கையில் எடுத்து  பேச ஆரம்பித்தான். “இது தான் எனக்கும் முன்னால் பேசிய நம் நண்பருக்குக் கிடைத்த எங்கள் சிவனின் நெற்றிக்கண்  உங்கள் புனிதச் சின்னம் பிரமிடுக்குள் கண் என்று நினைக்கிறேன். மதங்கள் நாடுகளைக் கடந்த ஞானம் ஒன்றாகவே இருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு அருமையான உதாரணமாய் இருக்கிறது. இந்த ஞானம் நம்மைக் காக்கட்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டு இதையே சாட்சியாக வைத்து உங்களிடம் பேச விரும்புகிறேன்” என்று தலைதாழ்த்தி அந்தச் சின்னத்தை பேச்சு மேடையிலேயே வைத்தான். அவன் கையில் வைத்திருந்த வரை தொடர்ந்து அந்தச் சின்னத்தில் அந்தக் கண் ஒளிர்ந்து கொண்டிருந்தது. அவன் கீழே வைத்தபின் தான் மங்கியது. விஸ்வம் அந்தச் சின்னத்தை அங்கு வைத்து விட்டு வந்ததன் முட்டாள்தனத்தை உணர்ந்தான். ’என்னிடம் இருக்கும் போது எப்போதாவது ஒரு முறை கண்சிமிட்டும் நேரம் மட்டுமே ஒளிர்ந்த இந்தச் சின்னம் இவன் தொடும் போதெல்லாம் மிளிர்கிறதே. இதை இந்த முட்டாள்கள் அவனையே இந்தச் சின்னம் அடையாளம் காட்டுவதாகக்கூட எடுத்துக் கொள்வார்களே…… ஆனால் இவன் ஏதோ மாயா ஜாலம் செய்கிறான். இல்லுமினாட்டி தவசி அகஸ்டின் கையால் வாங்கியது நான் தான் என்கிற வகையில் சமாளிக்க வேண்டும்…….’

க்ரிஷ் அமைதியாகத் தொடர்ந்தான். “இந்தியக்கடவுள் சிவனின் நெற்றிக்கண்ணாகவும், உங்கள் இல்லுமினாட்டியின் புனிதச் சின்னமாகவும் இருக்கும் இந்தச் சின்னம் இன்னொரு வகையில் இந்திய ஆன்மீக இயக்கத்தையும், உங்கள் இல்லுமினாட்டியையும் இணைக்கிறது. இணைப்பவர் உங்கள் தவசி அகஸ்டின்…. அந்த வரலாறை எனக்கும் முன்னால் பேசிய நம் நண்பர் அறிவார். அதைச் சொல்ல அவர் மறந்து விட்டிருக்கலாம். ஆனால் பாதி உண்மை நூறு பொய்களை விடப் பயங்கரமானது என்பதால் முழுவதுமாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.”

விஸ்வம் ஆர்வமானான். ஆனால் அதே ஆர்வம் அருகில் இருந்த சிலருக்கும் ஏற்பட்டிருந்ததை இருட்டிலும் கவனிக்க முடிந்தது  சிறிது எரிச்சலைத் தந்தது. உண்மையில் அவன் பேச்சில் இவர்களுக்கு இவ்வளவு ஆர்வம் ஏற்படக் காரணம் அவன் தொடும் வரை அந்தச் சின்னம் எரிவது தான்….. ஏன் முட்டாள்களா நீங்கள் என்ன பள்ளிக் குழந்தைகளா? கல் ஒளிர்ந்தால் பரவசமாகி விடுகிறீர்கள். அது என்ன பெரிய விஷயமா? அப்படி எரிவதால் துரும்பளவாவது பிரயோஜனம் இருக்குமா? இல்லுமினாட்டி இந்த அளவு மலிவான ஆள்களை எல்லாமா வைத்திருக்கிறது என்று மனதுக்குள் பொரிந்து தள்ளினான். இன்று தன் இயல்பான அமைதியையும் பொறுமையையும் இழந்து விட்டிருப்பது புரிந்தது…… சரி இவன் என்ன சொல்லப் போகிறான் என்று பார்ப்போம் என்று கவனத்தை க்ரிஷ் பேச்சில் திருப்பினான்.

“கிட்டத்தட்ட நூறாண்டுகளுக்கு முன் உங்கள் இல்லுமினாட்டியின் அகஸ்டின் இந்தியா வந்து யோகக்கலை கற்றது சோம்பேறி இயக்கம் என்று நம் நண்பரால் வர்ணிக்கப்பட்ட அந்த ஆன்மிக மையத்திலாகத் தான் இருக்க வேண்டும்.....”

விஸ்வம் மனதுக்குள் அலறினான். “டேய் டேய் இது என்னடா புதுக்கதையாய் இருக்கு?” இவன் பேசி முடித்தவுடன் மறுப்பு தெரிவிக்கலாமா, இல்லை இப்போதே தெரிவிக்கலாமா? என்று யோசித்துக் கொண்டிருக்கையில் க்ரிஷ் தொடர்ந்தான்.

”……. பின் அவர் உங்கள் இல்லுமினாட்டிக்காகத் தவமிருந்ததும் அதே சோம்பேறி வழியில் தான்….. அதன் பின்னால் உள்ள விஞ்ஞானத்தை பிறகு விளக்குகிறேன். முதலில் சம்பவங்களைச் சொல்கிறேன். அந்த இயக்கத்தில் உலகிற்கு ஒரு அழிவுகாலம் குறிப்பிட்ட சமயத்தில் வரும் என்றும் காப்பாற்ற ஒரு வழியையும் வழிவழியாக தலைவர் அடுத்த தலைவருக்குச் சொல்லிச் சென்றார்கள். அந்த வகையில் மாஸ்டரின் குரு மாஸ்டருக்கு ஒரு வரைபடத்தை விட்டுச் சென்றார். சற்றுமுன் பேசிய நம் நண்பர் அந்த வரைபடத்தை அறிந்து மாஸ்டருக்கு முன் நண்பர் அதை எடுத்துக் கொண்டு விட்டார். அவர் அந்த இயக்கத்திலிருந்து திருடிச் சென்றது பணம் மட்டுமல்ல அதற்குமுன்பே திருடியது இந்த வரைபடத்தை……”

விஸ்வம் எழுந்து நின்று விட்டான். பக்கத்து சீட்டில் இருந்த உறுப்பினர் அவன் கையைப் பிடித்து உட்கார வைத்தார். “கடைசியில் ஒட்டு மொத்தமாக மறுப்பு சொல்ல வாய்ப்பு கொடுப்பார்கள். அப்போது பேசுங்கள். இடைமறித்தால் உங்களுக்குத் தான் கெட்ட பெயர். அவன் சொல்வதாலேயே எதையும் நம்ப மாட்டார்கள். கவலைப்படாதீர்கள்”. விஸ்வம் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு உட்கார்ந்தான். கூடவே இப்படி எவனோ ஒருவன் நம்மைக் கட்டுப்படுத்தும்படி ஆகி விட்டதே என்ற எண்ணமே அவனைக் கேவலப்படுத்தியது.

“அந்த வரைபடத்தில் ஒரு பனிமலை, மேலே திரிசூலம், அதற்கும் மேலே ஒரு பறவை இருந்தது. வேறு எந்தத் தகவலும் இல்லை. நம் நண்பர் அதைப் பார்த்து எதுவும் புரியாமல் விட்டு விட்டார். இது போன்ற ஒரு நிகழ்வு நடக்கலாம் என்று முன்பே யூகித்திருந்த குரு மாஸ்டருக்கு அந்த வரைபடத்தின் நகல் கிடைக்க வேறு வழியும் செய்திருந்தார். அந்த வழியில் அது அவருக்கும் கிடைத்தது. அவருக்கும் வரைபடம் சொல்வது புரியவில்லை. அந்த வரைபடம் காட்டிய பனிமலையில் குகை ஒன்றில் தான் அகஸ்டின் தவம் செய்து கொண்டிருந்தார். அந்தக் குகை மேல் ஒரு திரிசூலம் இருந்தது. அழிவுக்காலம் வரும் போது காப்பாற்றும் வழியாக உங்கள் அகஸ்டின் தவமிருந்த இடத்தை அந்த ஆன்மிக இயக்கம் காட்டியது. அகஸ்டின் தவமிருந்ததோ இல்லுமினாட்டியின் அழிவைக் காப்பாற்ற என்று நீங்கள் நினைப்பது நம் நண்பர் பேச்சில் இருந்து தெரிந்தது. இப்படி அந்த இயக்கம் உலக அழிவின் காலமாகச் சொன்னதும், ஆரகிள் உங்கள் இயக்க அழிவாகச் சொன்னதும் ஒரே காலமாக இருக்கிறது. அதே போல உங்கள் இயக்கத்தை அழிவில் இருந்து காக்க அகஸ்டின் எந்தக் குகைக்கு வந்து தவமிருந்தாரோ அந்தக் குகையை உலக அழிவில் இருந்து காப்பாற்ற உதவும் என்று அந்த இந்திய ஆன்மிக இயக்கம் சொல்லியிருக்கிறது…. இப்படி இரண்டு அழிவுகளுக்கான காலம் ஒன்றாகவும், தீர்வும் ஒன்றாகவும் இருப்பது தெளிவாகத் தெரிகிறது… .”

எர்னெஸ்டோ நிமிர்ந்து உட்கார்ந்தார். தன் அருகில் இருப்பவர்கள் க்ரிஷ் பேசுவதை மேலும் கூர்மையாகக் கவனிக்க ஆரம்பிப்பதை மட்டும் உணர்ந்த விஸ்வம்  எரிச்சலடைந்தான். க்ரிஷ் தொடர்ந்தான்.

“நம் நண்பருக்கு அந்த இடம் எப்படியோ தெரிந்து அங்கே என்ன இருக்கிறது என்று பார்க்கப் போன போது இல்லுமினாட்டி தவசி அகஸ்டின் தன் கையால் அந்தச் சின்னத்தைக் கொடுத்து விட்டு இறந்ததாகச் சொல்கிறார். அந்தச் சின்னத்தை வாங்கிக் கொண்ட நம் நண்பர் உங்கள் இல்லுமினாட்டி தவசியின் பிணத்தை மரியாதையுடன் புதைக்கக்கூடச் செய்யவில்லை. தனக்குக் கிடைத்த அந்தச் சின்னத்தோடு வந்து விட்டார். மறுநாள் மாஸ்டரும் அந்த இடம் அறிந்து போன போது தவசியின் பிணத்தைப் பார்த்து இருக்கிறார். அதை வணங்கி, குகைக்குப் பக்கத்திலேயே பனியில் கையால் குழி தோண்டிப் புதைத்திருக்கிறார். அப்படிச் செய்ததில் அவர் கைகளில் ஏற்பட்டிருந்த காயத்தை நானே பார்த்தேன். அப்படிப்பட்டவர் நம் நண்பரால் சோம்பேறி என்று வர்ணிக்கப்பட்ட மாஸ்டர்….”

விஸ்வம் க்ரிஷ் பேச்சு ஆபத்தாகப் போய்க் கொண்டிருப்பதை உணர்ந்தான். உடனே எழுந்து “பொய்” என்று கத்தினான்.

(தொடரும்)

என்.கணேசன்


5 comments:

  1. இப்படிபட்ட கிரிஷின் பேச்சை நான் எதிர்பார்க்கவே இல்லை... எல்லா சஸ்பென்ஸ்களும் கிரிஷின் பேச்சில் விடுபடுவது அருமை...

    இந்திய கடவுள் சிவனின் நெற்றிக் கண்.... இல்லுமினாட்டி யின் சின்னம்.... அற்புதமான தகவல்...

    எதற்கும் அசையாத விஸ்வம் இன்று ஆட்டம் கண்டு விட்டானே...!!!

    ReplyDelete
  2. அருமையான பதிலுரை - மிகவும் நேர்த்தியாக நடையில். காத்திருக்கின்றேன். நன்றிகள் - ர-ராஜன்

    ReplyDelete
  3. Very interesting, the way Krish talks is brilliant, waiting for next week

    ReplyDelete