Wednesday, May 29, 2019

விடாது துரத்தி விதியை வென்றவர்!


சிகரம் தொட்ட அகரம் - 8

விதி சிலரது வாழ்வில் குரூரமாக விளையாடி விடுவதுண்டு. திறமையும், உழைப்பும் இருந்தால் முன்னேறி விடலாம் என்ற நியாயமான எதிர்பார்ப்பைப் பார்த்து அது எள்ளி நகையாடுவதுண்டு. எதிர்மாறான சூழல்களை உருவாக்குவதுண்டு. விபத்துகளை ஏற்படுத்துவது உண்டு. திறமைக்கு ஏற்ப வரும் வாய்ப்புகளை விதி தட்டிப் பறித்துக் கொள்வதும் உண்டு.

இப்படி விதியால் பாதிக்கப்படும் போது பலர் ஓரளவு போராடிப் பார்த்து கடைசியில் விதி வலிது என்று புரிந்து வேதனையுடன் பின் வாங்கி விடுவதுண்டு. எத்தனை வலிமையாக விதி விளையாடினாலும் விதிக்குத் தலைவணங்காமல் கடைசி வரை எதிர்த்துப் போராடி முடிவில் வெற்றி பெற்றே ஓயும் அபூர்வ மனிதர்களும் உண்டு. அப்படிப்பட்ட மனிதர் தான் கரோலி டாகாக்ஸ் என்ற ஹங்கேரி நாட்டுக்காரர்.

1910ஆம் ஆண்டு புடாபெஸ்ட் நகரில் பிறந்த கரோலி டாகாக்ஸ் இளம் வயதிலேயே இராணுவத்தில் சேர்ந்தார். துப்பாக்கி சுடுவதில் அபாரமான திறமை உள்ள அவர் ஒலிம்பிக் விளையாட்டுகளில் போட்டியிட்டால் கண்டிப்பாக தங்கப் பதக்கம் பெறுவார் என்று விளையாட்டு வல்லுனர்கள் கணித்தார்கள். அவரும் 1936 ஆம் ஆண்டு பெர்லினில் நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள தன்னைக் கடுமையாகத் தயார்ப்படுத்திக் கொள்ள ஆரம்பித்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஹங்கேரி நாட்டு சட்டப்படி இராணுவ சார்ஜெண்டுகள் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளத் தடை இருப்பது பின்னர் தான் சார்ஜெண்டான அவருக்குத் தெரிய வந்தது. அதனால் 1936 பெர்லின் ஒலிம்பிக் விளையாட்டில் அவரால் பங்கு கொள்ள முடியவில்லை.

ஒலிம்பிக் விளையாட்டுகள் முடிந்த பின் ஹங்கேரி அரசாங்கம் அந்தத் தடை ஷரத்தை ரத்து செய்தது.  மறுபடியும்  கரோலி டாகாக்ஸ் உற்சாகமடைந்து அடுத்த ஒலிம்பிக் விளையாட்டுகளில் கலந்து கொள்ள வேண்டும் என்று பயிற்சிகள் மேற்கொண்டார். 1939 ஆம் ஆண்டு ஒரு இராணுவப் பயிற்சியின் போது கை எறிகுண்டு ஒன்றைக் கையாளும் போது அது அவர் வலது கையிலேயே வெடித்து விட்டது.

வேறொருவராக இருந்தால் விதியின் இந்தக் குரூரச் செயலில் உடைந்து உருக்குலைந்து போயிருப்பார்கள். ஆனால் கரோலி டாகாக்ஸ் அவர்களில் ஒருவரல்ல. சில நாட்கள் வேதனைப்பட்ட அவர் வலது கை போனால் என்ன இடது கை இருக்கிறதல்லவா என்று அதில் பயிற்சிகளை ஆரம்பித்தார். ஆனால் வலது கைக்கு கைகூடிய அந்த அசாத்தியத் திறமை இடது கைக்குக் கைகூடவில்லை. ஆனாலும் கரோலி டாகாக்ஸ் விடாமல் பயிற்சி எடுத்தார்.

சில மாதங்களில் ஹங்கேரியில் தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்ற போது கரோலி டாகாக்ஸ் அங்கே சென்றார். போட்டியாளர்கள் அவரிடம் வந்து தங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டார்கள். இந்த நிலைமையிலும் வருத்தப்பட்டு ஒதுங்கி விடாமல் துப்பாக்கி  சுடுதல் போட்டியில் உள்ள ஆர்வம் காரணமாகப் பார்வையாளராக வர முடிந்த அவர் தைரியத்தையும், மனப்பக்குவத்தையும் பாராட்டினார்கள்.

கரோலி டாகாக்ஸ் சொன்னார். “நான் பார்வையாளனாக வரவில்லை. போட்டியாளனாகத் தான் வந்திருக்கிறேன்”

அவர்கள் ஆரம்பத்தில் திகைத்துப் பின் இரக்கத்துடன் அவரைப் பார்த்தார்கள். ஆனால் அவர் அந்தப் போட்டியில் இடது கையால் துப்பாக்கியை எடுத்துக் குறி பார்த்து சுடுவதில் முதலிடம் பெற்று அவர்களைப் பிரமிக்க வைத்தார்.


தேசிய அளவில் சாதித்ததை உலக அளவில் ஒலிம்பிக்ஸிலும் சாதித்து விட வேண்டும் என்று ஆவலோடு 1940 ஆண்டின் ஒலிம்பிக்ஸை எதிர்பார்த்து இருந்தவருக்கு மறுபடி ஏமாற்றம் 1940 மற்றும் 1944 ஆம் ஆண்டின் ஒலிம்பிக் விளையாட்டுகள் இரண்டாம் உலகப்போரின் காரணமாக நடைபெறவில்லை. ஒலிம்பிக் விளையாட்டுகளில் இளம் வயதில் வெல்வது எளிது. வயதாக வயதாக வெற்றி வாய்ப்புகள் குறைவு என்பதே யதார்த்த நிலையாக இருந்தது.

ஆனால் கரோலி டாகாக்ஸ் யதார்த்தவாதி அல்ல. மூன்று ஒலிம்பிக் விளையாட்டுகளையும், 12 ஆண்டுகளையும், வலது கையையும் இழந்தும் அவர் ஊக்கத்தையும், தன் லட்சிய தாகத்தையும் இழந்து விடவில்லை. 1948 ஆம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக்ஸில் உற்சாகம் குறையாமல் கலந்து கொண்டார். அதில் தங்கம் பெற்று வெற்றி வாகை சூடினார். அதோடு அவர் விட்டுவிடவில்லை. அடுத்ததாக 1952 ஆம் ஆண்டு ஹெல்சிங்கியில் நடந்த ஒலிம்பிக்ஸிலும் துப்பாக்கி சுடுதலில் தங்கம் பெற்று வரலாறு படைத்தார். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி “ஒலிம்பிக் கதாநாயகர்கள்” என்ற பட்டியலில் அவர் பெயரையும் சேர்த்துக் கொண்டது.

சின்னத் தடங்கல் வந்து விட்டாலே விதியை நொந்துப் பின்வாங்கி வாழ்நாள் பூராவும் புலம்பி நிற்கும் மனிதர்கள் ஒருகணம் கரோலி டாகாக்ஸை நினைத்துப் பார்க்க வேண்டும். எத்தனை தடைகள் அவருக்கு வந்தன!. ஆரம்பத்தில் சட்டம் சதி செய்தது. பிறகு அவர் திறமைக்கு அடிப்படையான வலது கையே பறி போனது. பின் உலகப் போர் காரணமாக அவர் பங்கேற்க ஆசைப்பட்ட விளையாட்டுப் போட்டிகளே நடைபெறாமல் போயின. பன்னிரண்டாண்டுகள் என்பது மிக நீண்ட காலம். அந்த மிக நீண்ட காலத்தில் தாக்குப் பிடித்து நின்று, முழு முயற்சியுடன் பயிற்சிகள் எடுத்து வென்று காட்டிய அந்த மன உறுதியும், உழைப்பும் நாம் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டியவை அல்லவா?

என்.கணேசன்


6 comments:

  1. Super Sir. There is some instinct between you and Me. I don't know when ever i am low down you are giving appropriate post and breaking that depression . Thanks a lot sir wonderful information.

    ReplyDelete
  2. Most enthusiastic person.A roll model for today's youngsters.Dacacsus reminds me Madam.Helen Keller.

    ReplyDelete
  3. Thought provoking energy booster,vidhiyai madhiyal venra-erandu murai venra andha mamanitharuuku red salute - therya vaithavarrin ponnana kaigalukku valthukkal

    ReplyDelete
  4. right time for me I was kind of low for some reason, this helps me to regain my strong willpower thanks a lot to universe

    ReplyDelete
  5. Its like written for me. Thanks ji.

    ReplyDelete