Monday, February 4, 2019

சத்ரபதி 58


திடீரென்று சந்திராராவ் மோர் முகத்தில் தெரிந்த மாற்றம் அவன் ஏதோ வஞ்சகமாக யோசிக்கிறான் என்பதை சிவாஜிக்கு உணர்த்தியது. ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சந்திராராவிடம் சிவாஜி சொன்னான்.

“நான் சகோதரனாகவும், நண்பனாகவும் உன்னிடம் பேச வந்திருக்கிறேன். நீயோ என்னை அவமானப்படுத்திப் பேசுகிறாய்”

சந்திராராவ் மோர் சிவாஜியைச் சிறைப்படுத்தி ஒப்படைக்க நல்லதொரு வாய்ப்பு கிடைத்திருப்பதால் அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மனதில் உறுதி செய்தி செய்து கொண்டு விட்டான். சிவாஜியிடம் தேனொழுகப் பேசி அவன் சந்தேகப்படாதபடி நடந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானித்து போலி நட்புணர்வுடன் சொன்னான். “மன்னித்து விடு சிவாஜி. யோசிக்கையில் நீ சொல்வது சரியென்று தோன்றுகிறது. நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். இனி நாம் ஒற்றுமையாகவே இருப்போம். என்னிடம் நீ என்ன எதிர்பார்க்கிறாய் அதைச் சொல்.”

இது வரை அலட்சியமாகவும் அவமானப்படுத்தியும் பேசியவன் திடீரென்று மனம் மாறுவதற்கு வெளிப்படையான காரணங்கள் இல்லை என்பதால் எச்சரிக்கையடைந்தாலும் சிவாஜி தான் சொல்ல வந்ததைச் சொன்னான். “நீ வருடா வருடம் பீஜாப்பூர் அரசுக்குக் கப்பம் கட்டுவதை நிறுத்து. அவர்கள் எந்தக் காலத்திலும் உனக்கு ஆபத்து நேர்ந்தால் உதவ வரப்போகிறவர்கள் அல்ல. தேவைப்படும் போது உனக்கு உதவ நான் இருக்கிறேன்…..”

சந்திராராவ் மோர் முகம் மறுபடி ஒரு சிறுகணம் அலட்சியத்தைக் காட்டி விட்டு மறு கணமே மீண்டும் பிரியத்திற்கு மாறியது. “இதைக் கேட்க எனக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. அப்படி நீ எனக்கு உதவ நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்?” என்று ஆத்மார்த்தமாகக் கேட்பது போல் கேட்டான்.

சிவாஜி சொன்னான். “வருடா வருடம் பீஜாப்பூர் சுல்தானுக்குக் கப்பம் கட்டும் தொகையில் பாதியை எனக்குக் கொடுத்துக் கொண்டிரு. அதற்கு மனமில்லை என்றால் அதுவும் வேண்டாம். நான் கேட்கும் சமயங்களில் 5000 குதிரை வீரர்கள் தந்து உதவு. அது போதும்….”

சந்திராராவ் மோர் சற்று யோசிப்பது போல் பாவனை காட்டிப் பின் சிவாஜியிடம் சொன்னான். “நீ கேட்பது நியாயமானதாகவே படுகிறது. எதற்கும் நான் என் தம்பிகள், மகன்களுடன் ஆலோசித்து விட்டுச் சொல்கிறேன். சிறிது நேரம் இளைப்பாறிக் கொண்டிரு. நாங்கள் சீக்கிரமாக ஒரு முடிவுக்கு வந்து விட்டுத் தெரிவிக்கிறோம்…..”

சந்திராராவ் மோர் எழுந்து நின்று, தன் சகோதரனையும், தன் மகனையும் பார்த்து உடன் வரும்படிக் கண்ணசைத்து விட்டுப் போனான். அவர்களும் பின் தொடர்ந்தார்கள். தனியறைக்கு அவர்களை அழைத்துப் போன சந்திராராவ் மோரிடம் அவன் மகன் கேட்டான். “தந்தையே சிவாஜி சொல்வதை ஒப்புக் கொள்ளப் போகிறீர்களா? பீஜாப்பூர் சுல்தான் நாம் அவனுடன் கூட்டு சேர்ந்தால் கோபப்பட மாட்டாரா? அவருக்கு மிக அருகில் இருப்பது நாம் தான். அவன் நம்மைத் தாண்டி தான் இருக்கிறான்…”

சந்திராராவ் மோர் சொன்னான். “அந்தச் சிறுபயலுடன் சேர்ந்து சுல்தானை எதிர்க்க எனக்கு என்ன பைத்தியமா? எனக்கு ஒரு யோசனை. பாஜி கோர்ப்படே ஷாஹாஜியைக் கைது செய்தது போல் இவனைக் கைது செய்து சுல்தானிடம் ஒப்படைத்தால் என்ன? அப்படிச் செய்தால் காலா காலத்துக்கும் சுல்தான் நம்மிடம் நன்றியுடையவராக இருப்பார். பெரும்பரிசுகளும் தந்து கௌரவிப்பார். ஒன்றுமில்லாமல் இருந்து சில கோட்டைகள் பிடித்துக் கொண்டு நமக்குச் சமமானவனாக நினைத்துக் கொண்டு பேசும் இவனுக்கு ஒரு பாடம் புகட்டியது போலவும் ஆகும்….”

சந்திராராவ் மோரின் தம்பிக்கும், மகனுக்கும் முகங்கள் பிரகாசித்தன. தம்பி சொன்னான். “நல்ல யோசனை தான். ஆனால் அவன் முட்டாள் அல்ல. தந்திரக்காரன். சிறிது சந்தேகம் வந்தாலும் உஷாராகி விடுவான்….”

சந்திராராவ் மோர் சொன்னான். “நான் போய் சிவாஜியிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். தம்பி, நீ போய் நம் வீரர்களை மாளிகை வாசலில் குவி. மகனே நீ போய் உன் அண்ணனையும், மற்ற சித்தப்பாவையும் நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் அறைக்கு அனுப்பி விட்டு வலிமையான வீரர்கள் இருபது பேரை அழைத்துக் கொண்டு வந்து சத்தமில்லாமல் அறைவாசலுக்கு வெளியே காத்திரு. நாங்கள் குரல் கொடுத்தவுடன் உள்ளே நுழையுங்கள்….. சிவாஜியைப் பற்றி எல்லோரும் ஆகா ஓஹோ என்று புகழ்வதற்கேற்ற மாதிரி அவன் உள்ளேயிருந்து  தப்பித்து ஓடினால் கூட மாளிகைக்கு வெளியே நிற்கும் வீரர்களிடமிருந்துக் கண்டிப்பாகத் தப்ப முடியாது. சிவாஜியைச் சங்கிலியால் பிணைத்து விட்டு சுல்தானுக்குத் தெரிவிப்போம். ஆயிரம் படைவீரர்களை அனுப்பியும் முடியாத காரியம் நம்மால் இவ்வளவு எளிமையாக முடிந்ததில் அவரும் மகிழ்ச்சி அடைவார்….”

தலையாட்டி விட்டு இருவரும் பரபரப்புடன் வேகமாக நகர்ந்தார்கள். திருப்தியுடன் சந்திராராவ் மோர் சிவாஜியைத் தங்க வைத்திருந்த அறைக்குத் திரும்பினான். அவன் உள்ளே வந்த போது சிவாஜி அமர்ந்திருந்த இருக்கை காலியாக இருந்தது. திகைப்புடன் அறைக்கு வெளியே வந்து இருபுறமும் நின்று கொண்டிருந்த இரு வீரர்களிடம் சந்திராராவ் மோர் கேட்டான். “உள்ளே இருந்த சிவாஜி எங்கே?”

“ஏதோ அவசர வேலை இருப்பது அவருக்குத் திடீரென்று நினைவுக்கு வந்து விட்டதால் போகிறாராம். பேச இன்னொரு முறை வருவதாக  உங்களிடம் சொல்லச் சொல்லி விட்டுப் போனார்…..” என்று ஒரு வீரன் சொன்னான்.

சந்திராராவ் மோர் வேக வேகமாக வெளியே ஓடிச் சென்று பார்த்தான். சிவாஜி கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணவில்லை. விசாரித்த போது வெளியே நின்றிருந்த வீரர்கள் சிவாஜி இன்னேரம் பல காத தூரம் போயிருப்பான் என்றார்கள். அவன் குதிரை மின்னல் வேகத்தில் போனதைப் பார்த்ததாக வியப்புடன் சொன்னார்கள்.

சந்திராராவ் மோர் விக்கித்து நின்றான்.


சிவாஜி சந்திராராவ் தம்பியையும், மகனையும் அழைத்துப் போகும் போதே அவனுடைய வஞ்சகத் திட்டத்தை யூகித்து விட்டான். சந்திராராவ் மோர் திடீரென்று நட்புக்கு மாறிய போதே சந்தேகம் அடைந்த அவன், அவன் தனியாக அனைவருடனும் ஆலோசித்து விட்டு வர வெளியேறிய போது சந்தேகம் தெளிந்தான். ’இந்த முட்டாள் என்னைச் சிறைப்பிடிக்கத்தான் திட்டமிடச் செல்கிறான்…..” ஆனாலும் அவன் திட்டத்தை அறிந்தது போல் காண்பிக்க விரும்பவில்லை. அவசர வேலை நினைவுக்கு வந்ததாகச் சொல்லி விட்டு வேகமாக ஜாவ்லியிலிருந்து வெளியேறி தன் பகுதிக்கு வந்து சேர்ந்த அவன் தன் நண்பர்கள், ஆலோசகர்கள், படைத்தலைவர்களை உடனே வரவழைத்தான். ”மனிதர்கள் தங்களை எல்லா நேரங்களிலும் தங்கள் பேச்சு மூலமாகவும், செயல்மூலமாகவும் பிரகடனப்படுத்திக் கொள்கிறார்கள். சந்திராராவ் மோரும் அப்படித்தான் தன் குணத்தையும், அறிவையும் வெளிப்படுத்திக் கொண்டான்…..” என்று ஆரம்பித்து சிவாஜி ஜாவ்லியில் நடந்ததைச் சொன்னான்.

சந்திராராவ் மோர் அவமானப்படுத்திப் பேசியதை அவன் சொன்ன போது இடைமறித்து ஒரு நண்பன் கேட்டான். “அவன் சொன்னதைக் கேட்டு உனக்கு இரத்தம் கொதிக்கவில்லையா? எப்படி நீ பொறுமையாக இருந்தாய்?”

சிவாஜி சொன்னான். “கோபப்பட்டு அப்போதே எதையும் சாதிக்க முடியாது என்று புரிகையில் அந்தக் கோபத்தை மனதிற்குள் ஒரு மூலையில் பத்திரப்படுத்திக் கொள்வது தான் புத்திசாலித்தனம் என்று நினைத்து தான் பொறுமை காத்தேன். சரியான நேரத்தில், சரியான முறையில் அவனிடம் கோபத்தைக் காட்டலாம்…. எதற்கும் ஒரு வாய்ப்பு  வராமல் போவதில்லை”

ஒரு படைத்தலைவன் வியப்புடன் சொன்னான். “உங்களைச் சிறைப்படுத்த அவனால் முடியும் என்று நினைத்தானே அதுவே அவன் அறிவுக்கூர்மை எந்த அளவு இருக்கிறது என்பதை வெளிப்படுத்தி விட்டது…..”

சிவாஜி சொன்னான். “நம்மவன் என்பதால் தான் வாளை எடுக்காமல், தந்திரமும் காட்டாமல் நட்புக்கரம் நீட்டினேன். அவன் நம்மவனாக நடக்கவில்லை. எதிரியென்றே நிரூபித்தும் விட்டான். ஒருவிதத்தில் அது மகிழ்ச்சியே. நண்பனாக அந்த முட்டாள் இருந்திருந்தால் தான் நமக்குப் பாதிப்பும் தர்மசங்கடமும். அந்த முட்டாள் எதிரியாக இருப்பது நமக்கு அனுகூலமே. முட்டாளைச் சுலபமாக வீழ்த்தி விடலாம்…..”

பின் ஜாவ்லியில் சந்திராராவ் மோரின் மாளிகையில் இருக்கும் பாதுகாப்பு நிலவரத்தை சிவாஜி விவரிக்க ஆரம்பித்தான். உள்ளேயும், வெளியேயும், எங்கு எவ்வளவு வீரர்கள் நிறுத்தப்படுகிறார்கள், அவர்களிடம் இருக்கும் ஆயுதங்கள் என்ன, அவர்களது ஆயத்தம் எப்படிப்பட்டது என்பதை எல்லாம் அவன் விளக்கிய போது அவர்கள் அனைவரும் பிரமிப்பை உணர்ந்தார்கள். எதிரிலிருக்கும் பழகிய மனிதன் எப்படிப்பட்டவன் என்பதை சந்திராராவ் மோர் உணரத்தவறி விட்ட நிலையில், சந்திராராவ் மோர் எப்படிப்பட்டவன் என்பதை விருப்பு வெறுப்பில்லாமல் துல்லியமாக சிவாஜி அறிந்து வைத்திருந்தது மட்டுமல்லாமல் அந்த இடத்தின் பாதுகாப்பு மற்றும் காவல் நிலவரத்தையும் மிக நுட்பமாக சிவாஜி அறிந்து வந்திருப்பது அவன் தலைமைப் பண்பை மிக அழகாக வெளிப்படுத்தியது.

“நம் திட்டம் என்ன?” இன்னொரு படைத்தலைவன் கேட்டான்.

சிவாஜி ஆரம்பித்தான். “முதலில் இங்கிருந்து இரண்டு பேர் போய் அவனிடம் பேசுகிறீர்கள்……”



(தொடரும்)
என்.கணேசன்

3 comments:

  1. சிவாஜி கணித்த விதமும்... அங்கிருந்து எவ்வித சேதமுமின்றி.. தப்பித்து வந்த விதமும் அருமை..‌

    'இந்த பகுதியும் சிவாஜிக்கு சேரப்போகிறது' என நினைக்கிறேன்...

    ReplyDelete
  2. Super. Eager to know how Sivaji wins Chandrarao more.

    ReplyDelete
  3. வழக்கம் போல் கடைசி பாரா பரபரப்பு

    ReplyDelete