Wednesday, March 28, 2018

இறைவனுக்குப் பிரியமானவர் யார்?


கீதை காட்டும் பாதை 50
    
கவத்கீதையின் முக்கிய நோக்கமும் கருப்பொருளும் மனிதனை மேல்நிலைக்கு உயர்த்துவதும் அந்த நிலையிலிருந்து செயல்பட ஊக்குவிப்பதும் தான். அதைப் பல இடங்களிலும் பல விதங்களிலும் சொல்ல பகவானுக்குச் சலிப்பில்லை. சாங்கிய யோகமாகட்டும், கர்ம யோகமாகட்டும், ஞான யோகமாகட்டும், பக்தி யோகமாகட்டும் அந்த உச்சக்கட்ட உயர்ந்த மனிதனைச் சுட்டிக் காட்ட பகவான் தயங்கவில்லை.

என்ன செய்கிறாய் என்பது நீ என்னவாக இருக்கிறாய் என்பதைப் பொருத்தே உயர்வாகவோ, தாழ்வாகவோ அமைகிறது.  அதனால் நான் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு முன் எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்வியை மனிதன் கேட்டுக் கொள்வது முக்கியம். எப்படி இருக்க வேண்டும் என்று அறிந்த பின் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கே இடமிருக்காது. நீ உயர்ந்திருக்கும் நிலையே உன்னை என்ன செய்ய வேண்டும் என்பதையும் எப்படிச் செய்ய வேண்டும் என்பதையும் உணர்த்தும்.

அதனால் பக்தி யோகத்தில் கடைசியாக பகவான் தனக்குப் பிரியமானவர் எந்த விதமான பக்தன் என்று விவரிக்கும் விதத்திலும் என்னையே வணங்கி வரும் பக்தனாக இரு என்று வெறும் வணக்கத்துக்கு முக்கியத்துவம் தராமல் இப்படிக் கூறுகிறார்.  

எல்லா உயிரினங்களிடமும் விரோதம் கொள்ளாமல் அன்பு கொண்டவனும், நான், என்னுடையது என்ற மமகார அகங்காரமற்றவனும், இன்ப துன்பங்களைச் சமமாகக் கருதுபவனும், பொறுமையுள்ளவனும், எப்போதும் திருப்தியாக இருப்பவனும், யோகியும், மனத்தை அடக்கியவனும், அசையாத உறுதியுடன் மனத்தையும், புத்தியையும் என்னிடமே அர்ப்பித்தவனாய், என்னிடம் பக்தி கொண்டிருப்பவன் எனக்குப் பிரியமானவன்.

எவனால் உலகம் பாதிக்கப்படுவதில்லையோ, எவன் உலகத்தாலும் பாதிக்கப்படுவதில்லையோ, எவன் மகிழ்ச்சி, கோபம், பயம், மனக்கிளர்ச்சி முதலியவற்றிலிருந்து விடுபட்டவனோ, அவன் எனக்குப் பிரியமானவன்.

ஆசையற்றவனும், தூய்மையானவனும்,, பிறவிப்பயனை அறிந்தவனும், நடுநிலையானவனும், வருத்தமில்லாதவனும், செயல்களனைத்திலும்நான் செய்கிறேன்என்னும் கர்வத்தை நீக்கியவனுமாகிய பக்தன் எனக்குப் பிரியமானவன்.

எவன் நண்பன்-பகைவன், மதிப்பு-அவமதிப்பு, குளிர்-வெப்பம், சுகம்-துக்கம் என்ற இரட்டைகளில் சம நோக்கு உடையவனும், புகழ்ச்சி-இகழ்ச்சிகளை ஒன்றாகக் கருதுபவனும், மௌனமானவனும், கிடைத்ததில் திருப்தி அடைபவனும், வசிக்கும் இடத்தில் தனது என்ற பற்றில்லாதவனும், நிலைத்த புத்தியுடையவனுமாக இருக்கிறானோ அவன் எனக்குப் பிரியமானவன்.

நான் சொன்ன அமிர்தத்திற்கு ஒப்பான தர்மத்தை யார் சிரத்தையுடன் அனுஷ்டிக்கிறார்களோ அந்த பக்தர்கள் எனக்கு மிக மிகப் பிரியமானவர்கள்.

கிட்டத்தட்ட எல்லா வர்ணனைகளும் இதற்கு முந்திய யோகங்களில் சொன்ன வர்ணனைகள் தான். ஆசிரியர் முக்கியமான பாடத்தைத் தன் மாணவனின் மனதில் பசுமரத்தாணி போல் பதிய வைக்க பல முறை சொல்வது போல் ஸ்ரீகிருஷ்ணரும் இதைச் சொல்கிறார்.

அன்பு, அகங்காரமின்மை, பொறுமை திருப்தி, மனதை அடக்கிய நிலை, அசையாத மன உறுதி முதலானவை எல்லாம் எந்தவொரு உயர்வுக்கும் தேவையானவை. இவை இல்லாமல் வெற்றி இல்லை. இவை இல்லாமல் நிம்மதியில்லை. இவை இல்லாமல் ஆன்மீகமில்லை. இந்தத் தன்மைகளைக் கொண்டிருக்கும் பக்தன் தனக்குப் பிரியமானவன் என்று சொல்லும் பகவான் தன்னுடைய ஆசிகள் இந்தத் தன்மையுடையவர்களுக்கு இருக்கும் என்பதையும் சொல்லாமல் சொல்கிறார்.

இந்த வர்ணனைகளில் திருப்தி இரண்டு சுலோகங்களில் சொல்லப்படுகிறது. வாழ்க்கையில் குற்றம் கண்டுபிடித்தே அதிருப்தியுடன் இருக்கும் மனிதர்கள் ஏராளம். நல்லது மட்டுமே நடக்க வேண்டும், அதுவும் தொடர்ச்சியாகத் தனக்கு நடந்து கொண்டேயிருக்க வேண்டும், இடைவெளிகளோ, எதிர்மறையோ இதில் இருந்துவிடக்கூடாது என்று ஆசைப்படும் மனிதன் நிரந்தர துக்கத்திற்குத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்பவனாகிறான். எதிர்பார்த்தது ஒன்று நடந்தவுடனேயே அற்ப நேரத்துக்குத் திருப்திப்படும் மனிதனுடைய மனம் அடுத்த எதிர்பார்ப்பை உடனடியாக ஏற்படுத்திக் கொள்கிறது. அதுவும் முடிந்தால் இன்னொன்று தயாராகும். வாழ்க்கை கூட ஒரு நாள் முடிவுக்கு வரும். அந்த முடிவு வரை இந்த எதிர்பார்ப்புகளுக்கு முடிவு வராது.

சொற்ப காலத்திற்கு நாம் வந்து போகும் இடம் இவ்வுலகம். இங்கு என்ன கிடைத்தாலும் போகும் போது எடுத்துக் கொண்டு போக முடியாது. பெற்றது எல்லாம் விட்டுப் போவதற்கே என்ற நிலை இருக்கையில் என்ன கிடைத்தால் என்ன, எத்தனை கிடைத்தால் என்ன? வெறும் கையுடன் வந்த நமக்குக் கிடைத்ததெல்லாம் லாபமே அல்லவா? பெறுவது குறைவாய் இருந்தால் என்ன, கடைசியில் இழப்பதும் குறைவாகவே அல்லவா இருக்கும். அதனால் இருப்பதில் திருப்தியாக இரு. கிடைத்ததில் திருப்தியாக இரு என்கிறது பகவத்கீதை.

என்னுடையது என்று எதையும் நினைக்காதே. செல்வங்கள் மட்டுமல்ல, உறவுகள், திறமைகள், சௌகரியங்கள் எல்லாம் இங்கு பெற்றவையே. இந்த வாழ்க்கைச் சுற்றுலா முடிவடைகையில் எல்லாம் கழற்றி விட்டுப் போக வேண்டியவையே.

புகழ்ச்சி இகழ்ச்சி இரண்டிற்கும் கூட அதிக முக்கியத்துவம் கொடுத்தே நாம் அமைதியிழக்கிறோம். புகழும் இகழும் யாரும் முழுவதுமாகப் புரிந்து கொண்டு அடுத்தவர்களுக்குத் தருவதில்லை. அவரவர் நிலைகளையும், அவரவர் தேவைகளையும் வைத்தே  புகழ்கிறார்கள் அல்லது இகழ்கிறார்கள். அதுவும் ஒருவரிடம் யாரும் தொடர்ந்து எதிர்பார்க்க முடியாது. இன்று புகழ்ந்தவர் நாளை இகழலாம். அதனால் அந்தப் புகழுக்கு இன்று மகிழ்ந்தால் நாளை இகழும் போது வருத்தப்பட நேரிடும். நம் மகிழ்ச்சியையும், நம் துக்கத்தையும் நாம் ஏன் அடுத்தவரிடம் ஒப்படைக்க வேண்டும்?

இதையெல்லாம் சிந்திக்க வேண்டியவையே அல்லவா? இந்த வர்ணனைகளை அமிர்தத்திற்கு ஒப்பான தர்மம் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். உயர்நிலையில் வாழ வைக்கும் அமிர்தமாகிய இந்தத் தர்மத்தை அறிவது பெரிதல்ல. சிரத்தையுடன் அனுஷ்டிக்க வேண்டும், பின்பற்ற வேண்டும் என்று பகவான் சொல்கிறார். அப்போது தான் அறிந்தது பூர்த்தியாகும். அறிந்ததில் பலனும் அடைவோம். அப்படி அறிந்து, பின்பற்றி, உயரும் மனிதர்களே இறைவனுக்குப் பிரியமானவர்கள் என்று சொல்லும் இந்தத் தகவலுடன் கீதையின் பன்னிரண்டாம் அத்தியாயம் நிறைவடைகிறது.

பாதை நீளும்……


என்.கணேசன்

2 comments:

  1. "பெறுவது குறைவாய் இருந்தால் என்ன, கடைசியில் இழப்பதும் குறைவாகவே அல்லவா இருக்கும்."

    இந்தவரி மிகவும் அருமை சார்.....

    தெளிவான விளங்களுக்கு நன்றி...

    ReplyDelete
  2. அன்பிற்குரிய சகோ. என். கணேசன்,
    வணக்கம்!
    தங்கள் அரும்பணி தொடர தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இறைவன் எல்லா நலங்களையும் அருளட்டுமென மனமார வேண்டுகிறோம்.....

    ReplyDelete