சதானந்தகிரி சுவாமிஜி சொன்னார். “இந்தக் காலத்தில் நிறைய சக்திகள்
பெறும் ஆசை கிட்டத்தட்ட எல்லோருக்குமே இருக்கிறது. ஆனால் அதற்கான கஷ்டமான வழிகளும்,
பயிற்சிகளும் அவர்களுக்குப் பிடிப்பதில்லை. ஒரு தாயத்துக் கட்டியோ, ஒரு யந்திரம் தந்தோ,
ஒரு மந்திரம் சொல்லிக் கொடுத்தோ எல்லாச் சக்திகளும் வருமானால் அவர்கள் அதற்காக எத்தனை
வேண்டுமானாலும் பணமாகக் கொடுப்பார்கள். இது தான் இன்றைய யதார்த்தம். ஆனால் சக்திகள்
சத்தியத்தில் அப்படி கிடைப்பதில்லை. அதனால் பிரமிப்பு தரும் அளவு சக்திகள் என் சீடர்களில்
யாரும் பெற்று விடவில்லை. ஆனால் முறையாகப் படித்து ஓரளவு சக்திகள் பெற்று ஒழுங்காகவும்
இருப்பவர்கள் ஒருசிலர் இருக்கிறார்கள் என்பதில் எனக்கு ஆத்மதிருப்தி”
சொன்ன
விஷயம் யதார்த்தமாகவும், சுவாமிஜியின் கூர்நோக்காகவும் இருந்தது. ஆனால் அவர் கண்ணில்
வெட்டிய மின்னலுக்கும் அவர் சொல்வதற்கும் சம்பந்தமில்லாதது போல அல்லவா இருக்கிறது.
ஏதோ தெரிந்த ஆள் பற்றி கேட்பது போல அல்லவா அவர் போலீஸ் மூளைக்குத் தோன்றியிருந்தது.
“நான்
கேட்ட போது உங்களுக்கு நான் கேட்ட ஆள் தெரிந்திருப்பது போல் எனக்குத் தோன்றியது….”
செந்தில்நாதன் அவரைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே சொன்னார்.
சுவாமிஜி
முகத்தில் சின்ன முறுவல் வந்து போனது. “என் சீடர்களில் அப்படி யாராவது இருக்கிறார்களா
என்று நீங்கள் கேட்டீர்கள். அதற்கான இல்லை என்ற பதிலைச் சொன்னேன். ஆனால் அப்படிப்பட்ட
ஆள் பற்றியே தெரியாது என்று நான் சொல்லவில்லையே”
செந்தில்நாதன்
பரபரப்புடன் கேட்டார். “அந்த ஆள் பற்றி உங்களுக்குத் தெரிந்த விவரங்கள் சொல்லுங்களேன்….”
“ஒரு
ஆள் அல்ல இரண்டு பேர் பற்றி நீங்கள் சொல்லும் வகையில் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
இரண்டு பேரும் என் சிஷ்யர்கள் அல்ல. ஆனாலும் இந்தக் கலையில் உச்ச அளவுக்குப் போனவர்கள்
என்று சொல்லலாம்….”
ஒருவனைத்
தேடி வந்தால் இவர் இரண்டு பேர்களைச் சொல்கிறாரே என்று திகைத்த செந்தில்நாதன் “தயவு
செய்து சொல்லுங்கள்” என்றார்.
“ஒருவன்
ஒரு ஆன்மிக இயக்கத்தைச் சேர்ந்தவன். அவன் குரு ரிஷிகேஷைச் சேர்ந்தவர். அவன் குருவையே
மிஞ்சிய அளவு முன்னேறினான். மகாபுத்திசாலி. அவன் இயக்கத்திலேயே ராஜயோக அமானுஷய சக்திகளில்
ஓரளவாவது தேர்ச்சி பெற்றவர்கள் நிறைய இருக்கிறார்கள். உலக நன்மைக்காகக் தங்களை அர்ப்பணித்துக்
கொண்டு ரகசியமாய் தங்கள் முயற்சிகளை எடுப்பவர்கள்…. அவன் மற்றவர்களை எல்லாம் மிஞ்சி
நிறைய முன்னேறினான். அந்தச் சக்திகளை மிக இயல்பாகப் பயன்படுத்தின அவனை மாஸ்டர் என்று
எல்லோரும் அழைப்பார்கள். அவன் குரு சமீபத்தில் காலமானார். இப்போது அந்த இயக்கத்திற்கு
அவன் தான் தலைவராக இருக்கிறான்…..”
மாஸ்டர்
பற்றி அவர் சொன்னதும் செந்தில்நாதனுக்கு அவர் அவ்வளவு பிரபலமாக இருப்பது ஆச்சரியம்
தந்தது. மாஸ்டர் க்ரிஷ் அறையில் உட்கார்ந்து கொண்டு அவன் இருப்பிடத்தையும் அவன் இருக்கிற
நிலையையும் சொன்னது நினைவுக்கு வந்தது. சந்தேகப்பட்ட அவரிடம் “போலீஸ் புத்தி” என்று அவர் மனைவி சொல்லும் தொனியிலேயே சொன்னதும்
நினைவுக்கு வர செந்தில்நாதன் புன்னகைத்தார்.
சுவாமிஜி
தொடர்ந்தார். “ஆனால் நீங்கள் கேட்டு வந்தது அவனையாக இருக்காது என்று நினைக்கிறேன்.
போலீஸ் விசாரிக்கும் நபராக அவன் நடவடிக்கை இருக்காது….. இன்னொருவனாகத் தான் இருக்க
வேண்டும். அவன் இவனையும் மிஞ்சியவன்…..”
செந்தில்நாதனுக்கு
ஒரு பலத்த சந்தேகம் வந்தது. ஒரு வித்தையில் இரண்டு பேர் நிபுணர்களாக இருக்கிறார்கள்
என்றால் கண்டிப்பாக ஒருவரை இன்னொருவருக்குத் தெரியாமல் போக வாய்ப்பில்லை அல்லவா? அப்படியானால்
கண்டிப்பாக மாஸ்டருக்கும் எதிரியைத் தெரிந்திருக்க வேண்டுமே. ஏன் தெரியாது என்று க்ரிஷிடம்
சொல்லி அலைய வைக்கிறார்? ’அதைப் பிறகு சிந்திப்போம். முதலில் அந்த இன்னொருவனைப் பற்றி
விசாரிப்போம்’ என்று எண்ணியவராக சுவாமிஜியிடம் சொன்னார். “அந்த இன்னொருவனைப் பற்றிச்
சொல்லுங்கள் சுவாமிஜி? அவனை எப்படி உங்களுக்குத் தெரியும்?”
“அவன்
கற்றுக் கொள்ள என்னிடம் ஆரம்பத்தில் ஒருமுறை வந்திருக்கிறான்…..” சுவாமிஜி சொன்ன போது
செந்தில்நாதன் திகைத்தார்.
சுவாமிஜி
பழைய நினைவுகளில் ஆழ்ந்து நேரில் மறுபடியும் அந்தக் காட்சியைப் பார்த்துச் சொல்வது
போலச் சொன்னார். “அவன் ரகசியமானவன்…… ஒருநாள் இருட்டிய பிறகு வந்தான். அரையிருட்டில்
நின்று கொண்டு என்னிடம் பேசினான். தனக்குக் கற்றுக் கொடுக்கச் சொன்னான். அவன் எண்ண
அலைகளில் ஆன்மிகம் இல்லை. நோக்கம் உயர்ந்ததாய் தெரியவில்லை. அதனால் கற்றுக் கொடுக்க
நான் மறுத்து விட்டேன். ஒன்றும் சொல்லாமல் போய் விட்டான் …… சில வருஷங்கள் கழித்து
அசாதாரண சக்திகள் படைத்த ஒருவன் பற்றிச் சில வதந்திகள் உலாவின….. இக்காலத்தில் அவன்
அளவு அமானுஷ்ய சக்திகள் படைத்தவர்கள் யாரும் இருக்க முடியாது என்று கூடச் சிலர் உறுதியாகச்
சொன்னார்கள். அப்போது கூட நான் அது அவனாக இருக்கக்கூடும் என்று சந்தேகப்படவில்லை…..
சொல்லப்போனால் கற்றுக் கொடுக்க மறுத்த அந்தக் கணமே அவனை நான் மறந்து விட்டேன். ஆனால்
அவன் தான் நான் கேள்விப்பட்ட அமானுஷ்ய சக்தி மனிதன் என்பது எனக்கு பிற்பாடு தான் தெரிந்தது….”
“எப்படி?”
“அவன்
மறுபடியும் இங்கே வந்தான்”
செந்தில்நாதன்
சுவாரசியத்துடன் கேட்டார். “வந்தவன் என்ன சொன்னான்”
“ஒன்றும்
சொல்லவில்லை….என் எதிரில் கூட வரவில்லை. ஒருசில நிமிஷங்கள் அவன் அமானுஷ்ய சக்தியால்
என்னைக் கட்டிப் போட்டான்….. இந்தக் கலையின் ஆசிரியன் நான். நானும் ஓரளவு சக்திகள்
வாய்ந்தவன் தான். ஆனால் என்னையே அவன் தன் சக்தியால் கட்டிப் போட்டான். என்னால் நகரக்கூட
முடியவில்லை. எத்தனையோ முயற்சி செய்தேன். எதுவும் பயன் தரவில்லை. எல்லா முயற்சியும்
கைவிட்டு விட்டு என்ன செய்கிறானோ செய்யட்டும் என்று அமைதியாக இருந்தேன்….. பிறகு தான்
கட்டவிழ்த்து விட்டுப் போனான்…..”
“ஒன்றும்
சொல்லவில்லை. எதிரில் கூட வரவில்லை என்று சொல்கிறீர்கள். பின் எப்படி வந்தது அவன் தான்
என்று சொல்கிறீர்கள்…”
“அவன்
முதலில் வந்து நின்ற அதே இடத்தில், அதே நேரத்தில் வந்து நின்றான். யாரோ அங்கு வந்து
நிற்பது போல் உணர்ந்த அடுத்த கணமே என்னைத் தன் சக்தி அலைகளால் கட்டிப் போட்டு விட்டான்.
எனக்குச் சொல்லிக் கொடுக்க மாட்டேன் என்று சொன்னாயே. இப்போது பார் உன்னையே என் சக்தியால்
கட்டிப் போடும் அளவு கற்றுக் கொண்டு வந்திருக்கிறேன். முடிந்தால் விடுவித்துக் கொள்
என்று சொல்கிற மாதிரி உணர்ந்தேன்….. முடியவில்லை என்று என் முயற்சியைக் கை விட்ட பிறகு
தான் அவன் போனான். அவன் வாய்விட்டுச் சிரிக்கவில்லை. ஆனால் அந்தச் சிரிப்பை நான் அன்று
அழுத்தமாக உணர்ந்தேன்…. இப்போதும் உணர்கிறேன்….. அது அவனே தான்……”
செந்தில்நாதன்
ஒரு கணம் அந்த நிகழ்வைக் கற்பனை செய்து பார்த்தார். அவர் அறியாமல் உடல் சிலிர்த்தது.
“அவன்
யாரிடமிருந்து கற்றுக் கொண்டான், அவன் குரு யார் என்று உங்களுக்குத் தெரியுமா?”
“சரியாகத்
தெரியவில்லை. ஆனால் தார்ப்பாலைவனத்தில் வசிக்கிற ஒரு பக்கிரியிடம் அவன் கற்றிருக்கலாம்
என்று நினைக்கிறேன்….. ஏனென்றால் அந்தப் பகுதியில் இருந்து தான் அவன் சக்திகள் பற்றிய
செய்திகள் அதிகம் வந்தன…”
மாஸ்டர்
சொன்ன ஐந்து பேரில் தார்ப்பாலைவனப் பக்கிரியும் ஒருவர் என்பதால் செந்தில்நாதன் எதிரிக்குக்
கற்றுக் கொடுத்த குரு அந்தப் பக்கிரியாகவே இருக்க வேண்டும் என்று நினைத்தார்.
“அவன்
பார்க்க எப்படி இருந்தான் என்று சொல்லுங்களேன்…”
”நான்
சொன்னேனே அவனைச் சரியாகப் பார்க்கவில்லை என்று. முதல் தடவை தான் கொஞ்சமாவது அவனைப்
பார்த்தேன்…. இளம் வயதாக ஒடிசலாக இருந்தான். அரையிருட்டில் வந்து நின்றதால் அதிகமாக
நான் கவனிக்கவில்லை….”
இப்போதைய
விசாரணைக்குச் சம்பந்தமான கேள்வி அல்ல என்றாலும் ஏனோ செந்தில்நாதனுக்குக் கேட்கத்
தோன்றியது.
“அவன்
சக்தி தெரிந்த பிறகு அவனைக் குறைவாக நினைத்து விட்டுத் தவறாக அனுப்பி விட்டோம், அவனுக்கு
நாமே சொல்லிக் கொடுத்திருக்கலாம் என்று உங்களுக்குத் தோன்றியதா?”
சுவாமிஜி
அழுத்தந்திருத்தமாகச் சொன்னார். “இல்லவே இல்லை. நாம் சொல்லிக் கொடுத்த வித்தையால் ஒருவன்
தீமைகள் செய்தால் அந்தப் பாவத்தில் தார்மீகப் பங்கு நமக்கும் இருக்கிறது. அவன் நல்லவன்
அல்ல என்பதால் கற்றது எதையும் நன்மைக்குப் பயன்படுத்த மாட்டான் என்பதில் சந்தேகமே இல்லை.
அவனுக்குக் கற்றுக் கொடுத்து அவன் கர்மாவில் நானும் ஒரு பங்கு வைத்துக் கொள்ள விரும்பவில்லை.
தர்ம வழியில் நிற்கும் குரு அந்தத் தவறைச் செய்யக்கூடாது….… நான் செய்யவில்லை.”
(தொடரும்)
என்.கணேசன்
Moving more and more interesting. Swamiji's stand is excellent. The way you impart us wisdom is really commendable sir.
ReplyDeleteசுவாமிஜி மற்றும் செந்தில்நாதன் உரையாடல் அருமையோ அருமை.... சுவாமிஜி மர்ம மனிதன் பற்றி சில விசங்களை மட்டுமே சொல்லி.... மர்ம மனிதனை மேலும் மர்மமாகவே வைத்துவிட்டார்....
ReplyDeleteசுவாமிஜி அற்புதம்.. கிரேட் சல்யூட்..
ReplyDeleteNachunu sonnaru guru
ReplyDelete