ஷாஹாஜியின் தூதுவனுக்கு உடனடியாக முகலாயப் பேரரசரின் அரசவைக்குள் அனுமதி கிடைக்கவில்லை. இரண்டு நாட்கள்
காத்திருந்த பின்னரே அனுமதி கிடைத்தது. முகலாயப் பேரரசரின் அதிருப்தியைச் சம்பாதித்திருப்பவர்களும்,
அதிகாரத்தில் குறைந்தவர்களும் காக்க வைக்கப்பட்டு,
அவர்கள் நிலை உணர்த்தப்பட்டு, பின்னர் தான் பேரரசரின் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.
சிலர் வாரக்கணக்கில் காத்திருக்கப்படுவதும் உண்டு. எனவே சகாயாத்ரி மலைத்தொடரில் தலைமறைவாய்
இருக்கும் ஷாஹாஜியின் தூதுவன் உண்மையில் இரண்டு நாட்களில் அனுமதி கிடைத்ததே பெரிது
என்று எண்ணியபடி பணிவுடன் அரசவைக்குள் நுழைந்தான்.
ஷாஜஹானின்
அரசவை தேவேந்திரன் சபை போல தங்கமும் வெள்ளியுமாய் மின்னியது. தரை வரை தலை தாழ்த்தி
மூன்று முறை பேரரசரை வணங்கிய தூதுவன் அவரை இறைவனுக்கிணையாக வாழ்த்தி விட்டு பின் ஷாஹாஜி
அனுப்பியிருந்த செய்தியைச் சொன்னான்.
தன்
செய்கைகளுக்காக பேரரசரிடம் மன்னிப்பைக் கோரிய ஷாஹாஜி சர்வ வல்லமையுள்ள சக்கரவர்த்தியிடம்
தான் சரணடைவதாகச் சொல்லி இரண்டே இரண்டு கோரிக்கைகளை மட்டும் ஏற்றுக் கொண்டு அருள்புரிய
வேண்டும் என்று பல அலங்கார வார்த்தைகளைப் பின்னிக் கேட்டுக் கொண்டிருந்தார். முதல்
கோரிக்கை தற்போது அகமதுநகர் அரியணையில் அவர் ஏற்றியிருந்த சிறுவனுக்கு உயிர்ப்பிச்சை
அளிக்க வேண்டும் என்பதாயிருந்தது. இரண்டாவது கோரிக்கையாக, சக்கரவர்த்திக்கு சேவகம்
செய்யத் தன்னை அனுமதிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்.
உடனடியாகப் பதில் அளிக்காத ஷாஜஹான் வெளியே காத்திருக்கும்படி தூதனிடம் உத்தரவிட்டு
விட்டு சிந்தனையில் ஆழ்ந்தார்.
ஷாஜஹான்
ஷாஹாஜியை நெருக்கமாகவே பல காலம் அறிந்தவர். இளவரசனாக இருந்த காலத்தில் தந்தையின் கோபத்துக்கு
ஆளாகி அவர் தக்காணப் பீடபூமிக்குத் தப்பிச் சென்ற போது ஷாஹாஜி அவருக்கு ஆதரவாக இருந்து
அப்போதைய முகலாயப் படையை எதிர்த்தவர். சில வெற்றிகளையும் வாங்கித் தந்தவர். அதனால்
சக்கரவர்த்தியான பின் ஷாஜஹான் ஷாஹாஜியிடம் தாராளமாகவே நடந்து கொண்டிருக்கிறார். தக்காணப்பீடபூமியில்
சில பகுதிகள் கோட்டைகள் ஆகியவற்றின் நிர்வாகப் பொறுப்பை ஷாஹாஜிக்குத் தந்திருக்கிறார்.
இடையில் சிலவற்றை எடுத்து மற்றவர்களுக்குத் தந்து விட்டதால் சிறுமைப்படுத்தப்பட்டு
விட்டதாய் உணர்ந்து, ஷாஜஹானுக்கு எதிராக ஷாஹாஜி செயல்பட்டிருக்கிறார். அதன்பின் சில
முறை சரண், சில முறை கிளர்ச்சி என்று மாறி மாறி ஷாஹாஜி நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்.
அரசியலில் நிரந்தரப்பகையோ, நிரந்தர நட்போ கிடையாது என்றாலும் ஷாஹாஜி அதிலும் ஒரு வரம்பைத்
தாண்டிப்போய் விட்டதாகவே ஷாஜஹானுக்குத் தோன்றியது. ஷாஹாஜி ஒரு காலத்தில் உதவியதற்கு
எப்போதோ கடன் தீர்த்தாகி விட்டது….. இப்போது ஷாஹாஜி தலைவலி மட்டுமே!....
ஷாஜஹான்
தன் அரசவையில் தக்காணப்பீடபூமி அரசியல் சூழல் குறித்து அதிகமாக அறிந்திருந்த இருவரைப்
பார்த்துக் கேட்டார். “ஷாஹாஜியின் கோரிக்கைகளை நாம் ஏற்கா விட்டால் அவனைச் சிறைபிடிக்கும்
வாய்ப்பு எந்த அளவில் இருக்கிறது?”
இருவரும்
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பின் ஒருவர் மெல்லச் சொன்னார். “தாங்கள் அறியாததல்ல
சக்கரவர்த்தி. சகாயாத்ரி மலைத்தொடரில் பதுங்கியிருக்கிற வரை ஷாஹாஜியைச் சிறைப்பிடிப்பது
எளிதானதல்ல. அதுமட்டுமல்ல அங்கே பதுங்கியிருக்கிற வரை ஷாஹாஜி எந்த நேரத்திலும் வந்து
திடீர்த்தாக்குதல் நிகழ்த்தி விட்டுப் போவது நிச்சயம் நடக்கும். மொகபத்கான் போன்ற அனுபவம்
மிக்க நம் படைத்தலைவர்களே சமாளிக்க முடியாமல் திண்டாடியிருக்கிறார்கள்…..” மற்றவரும்
அதை ஆமோதிக்கும் பாவனையில் தலையசைத்தார்.
ஷாஜஹானும்
அவர் சொல்வது உண்மையே என்று உணர்ந்திருந்தார். அவர் அடுத்த கேள்வி அகமதுநகர் அரியணையில்
அமர்த்தப்பட்ட சிறுவனைப் பற்றியதாக இருந்தது. “ஷாஹாஜி ஏன் அந்தச் சிறுவனுக்கு உயிர்ப்பிச்சை
கேட்கிறான்…..”
”ஷாஹாஜி
அந்தச் சிறுவனின் தாயிடம் அந்தச் சிறுவனின் உயிர் காப்பேன் என்று சத்தியம் செய்து கொடுத்த
பிறகு தான் அவனை அரியணை ஏற்ற அவள் சம்மதித்திருக்கிறாள் என்று கேள்விப்பட்டோம் சக்கரவர்த்தி.
அவளுக்கு எந்தப் பதவியாசையும் இல்லையென்று முன்பே தெளிவுபடுத்தியிருக்கிறாள். கட்டாயப்படுத்தி
அரியணை ஏற்றியதால், தந்த சத்தியத்தைக் காக்கவே ஷாஹாஜி இந்தக் கோரிக்கையை முன் வைத்திருக்கிறார்…”
இந்துஸ்தானத்தில்
சத்தியத்திற்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஷாஜஹானை வியப்பில் ஆழ்த்தியது. ஷாஹாஜி
தன்னைப் பற்றிய கோரிக்கையைக் கூட இரண்டாவதாகவே கேட்டு, அதற்கும் முதலில் அந்தச் சிறுவனின்
பாதுகாப்பையே கேட்டிருக்கும் விதத்தை வியந்த ஷாஜஹான் என்ன முடிவெடுப்பது என்று யோசிக்க
ஆரம்பித்தார். அகமதுநகர் ராஜ்ஜியம் மீண்டும் எழுவதில் அவருக்கு உடன்பாடில்லை….
“இந்தச்
சிறுவனைத் தவிர வேறு எந்தக் குழந்தையாவது அகமதுநகர் ராஜவம்சத்தில் எஞ்சியிருக்கிறார்களா?”
யோசனையுடன் அந்த இருவரையும் கேட்டார்.
“இல்லை
சக்கரவர்த்தி” ஏகோபித்த பதில் அவர்களிடமிருந்து வந்தது.
சிறிது
நேரம் ஆழ்ந்து ஆலோசித்து விட்டு ஷாஜஹான் ஷாஹாஜியின் தூதனை அழைத்து வரப் பணித்தார்.
உள்ளே வந்து மறுபடி தரையைத் தலைத் தொடும்படியாக வணங்கி எழுந்து பணிவாக நின்ற தூதனிடம்
ஷாஜஹான் சொன்னார். “ஷாஹாஜியின் முதலாவது கோரிக்கையை ஏற்கிறோம் - அந்தச் சிறுவனை எம்மிடம்
ஒப்படைக்கும் பட்சத்தில். ஆனால் இரண்டாவது கோரிக்கையை நிராகரிக்கிறோம். ஒரு முறை அல்ல
பல முறை எமக்குச் சேவகம் செய்தது பசுமையாகவே நினைவிருக்கிறது. அதனால் சேவகத்திற்கு
மட்டுமல்ல எங்கள் ராஜ்ஜியத்தின் எல்லையிலும் நாங்கள் ஷாஹாஜியை அனுமதிப்பதாக இல்லை.
ஆனால் இது வரை கைப்பற்றிய பகுதிகளையும் செல்வத்தையும் முழுவதுமாக ஒப்படைத்தால் ஷாஹாஜியை
மன்னிக்கத் தயாராக இருக்கிறோம். இதுவே எமது இறுதி முடிவு. இதில் எந்த மாற்றமும் இல்லை.
இதைச் சென்று தெரிவிப்பாயாக!”
மறுபடி வணங்கி தூதன் விடைபெற்றான். .
தூதன்
வந்து செய்தி சொன்ன போது உணர்ச்சிகளை வெளிப்படையாகக் காட்டா விட்டாலும் ஷாஹாஜி உள்ளுக்குள்
அவமானத்தை உணர்ந்தார். ஷாஜஹானின் பதில் “உன்னுடைய தொடர்பே எங்களுக்கு வேண்டாம்” என்பதை
வெளிப்படையாகவே அறிவித்து விட்டது. ஆனால் முகலாயப் பேரரசரைப் பகைத்துக் கொண்டு எதிர்த்து
நிற்க முடிந்த நிலைமையில் அவர் இல்லை. அவர் பெற்ற மகன் இதே சகாயாத்ரி மலைத்தொடரில்
ஏதோ ஒரு இடத்தில் யார் தயவிலோ இருக்க, அவர் எவர் பிள்ளையையோ காப்பாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்தில்
இருக்கிறார். ஒரு தாயிற்குச் செய்து கொடுத்த சத்தியத்தை அவர் நிறைவேற்றியே ஆக வேண்டும்.
சென்ற பிறவியில் என்ன பாவம் செய்திருக்கிறாரோ தெரியவில்லை, இத்தனை சோதனைகளைச் சந்திக்க
வேண்டியிருக்கிறது. ஒரு தாயின் கண்ணீரையும், சாபத்தையும் சம்பாதித்து இப்பிறவியிலும்
பாவத்தைக் கூட்ட அவர் விரும்பவில்லை…..
யோசித்துப் பார்த்தால் இன்னொரு தாயின் கண்ணீரும் அவரைச் சுட்டுக்
கொண்டு தான் இருக்கிறது. ஜீஜாபாய் மூத்த மகனை ஷிவ்னேரிக் கோட்டையில் அவருடன் அனுப்பும்
போதே பதறியது அவருக்கு நினைவு வந்தது. இப்போது இரண்டாம் மகனையும் இழந்து அவளும் வாடிக்
கொண்டு தான் இருக்கிறாள். சமாதானத்தில் அவரது கௌரவம் பறிபோகலாம். ஆனால் உறவுகள் காப்பாற்றப்படும்.
அமைதி திரும்புகையில் அவரவர் வாழ்க்கையை அவரவர் ஆபத்தில்லாமல் வாழ முடியும்…..
ஆனால் அவரது மூத்த மாமனார் குடும்பத்திற்கு அவரை நிரூபிக்கும்
வாய்ப்பு என்றென்றுக்குமாய் அவர் கைநழுவிப் போய்விடும். ஒரு அரசனுக்கு நிகராய் அவர்கள்
முன் உயர்ந்து காட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தது கனவாகவே தங்கி விடும். ஆனால் வேறு வழியில்லை. அவர் குடும்பம் நாலா பக்கமாய்
சிதறிக் கிடக்கிறது. அவர் ஒரு பக்கம், ஜீஜாபாய் ஒரு பக்கம், துகாபாயும் சாம்பாஜியும்
ஒரு பக்கம், சிவாஜி ஒரு பக்கம். என்ன வாழ்க்கையிது? போதும்…. எல்லாம் போதும்…..
சத்யஜித்
சகாயாத்ரி மலைத்தொடரின் ஒரு பாறையிடுக்கிலிருந்து
ஷாஹாஜியும், அவரது வீரர்களும் மலையிலிருந்து இறங்குமுகமாய் போய்க் கொண்டிருப்பதைப்
பார்த்துக் கொண்டிருந்தான். ஏதோ ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு தன் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்
கொள்ளாமல் ஷாஹாஜி மலையிறங்க வாய்ப்பே இல்லை. சத்யஜித் ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.
ஷாஹாஜி இந்த மலைத்தொடருக்கு வந்த நாளிலிருந்து ஒரு நாள் கூட சத்யஜித் முழு உறக்கம்
உறங்கியதில்லை. ஒவ்வொரு இரவிலும் ஷாஹாஜி வந்து சிவாஜியைத் தூக்கிக் கொண்டு போய் விடுவாரோ
என்ற அச்சம் அவனை நிம்மதியாய் உறங்க விடவில்லை. சிறு சிறு சத்தங்களும் அவனை எழுப்பின.
கண்விழிப்பதற்கு முன் சிவாஜியை இறுக்க அணைத்துக் கொண்ட பின்னரே அவன் கண்விழிப்பான்.
ஆபத்து இல்லை என்றானவுடன் மூச்சு சீராகும்….. ஆனால் தூக்கம் திரும்பி வராது…..
”போகிறவர்கள் யார் மாமா?” சிவாஜியின் குரல் கேட்டு அதிர்ந்து
போய் சத்யஜித் திரும்பினான். சிவாஜி அருகில் நின்று கொண்டிருந்தான். அவனும் சேர்ந்து
அந்தப் பாறையிடுக்கில் பார்த்துக் கொண்டிருந்தான்……
சத்யஜித்
பதில் சொல்ல சிறிது நேரம் எடுத்துக் கொண்டான். அந்த இடைவெளியில் சிவாஜி கேட்டான்.
“போய்க் கொண்டிருப்பது என் தந்தையும் அவர் ஆட்களுமா மாமா?”
சத்யஜித்
பேச்சிழந்து போய் நின்றான். இவன் எப்படி யூகித்தான்? அந்தத் திகைப்பிலேயே பதிலைப் பெற்றவன்
போல சிவாஜி அங்கிருந்து நகர்ந்தான். சிறிது நேரத்தில் அணில்களுடனும், முயல்களுடனும்
அவன் விளையாடிக் கொண்டிருந்தான். சத்யஜித் இதயத்துடிப்பு இயல்பு நிலைக்கு வர நேரம்
நிறைய தேவைப்பட்டது.
(தொடரும்)
என்.கணேசன்
Shahaji's situation is really pathetic and Shivaji's sharp intelligence is shown even in his childhood. Nice episode sir.
ReplyDeleteவரலாற்று நாயகர்களின் மன ஓட்டத்தையும் நிகழ்வுகளையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறீர்கள் சார். என் மனம் ஷாஹாஜிக்காகவும், சிவாஜிக்காகவும் இரங்குகிறது.
ReplyDeleteஅக்காலகட்டத்திற்கு அழைத்துச்செல்லும் பாணி அருமை.
ReplyDeleteஷாஹாஜியின் மனஓட்டத்தையும்... அவர் எடுக்கும் முடிவுகளையும்... அருமையாக கண்முன் கொண்டு வந்தீர்கள்... அருமை சார்...
ReplyDelete