Thursday, March 29, 2018

இருவேறு உலகம் – 76

தானந்தகிரி சுவாமிஜி சொன்னார். “இந்தக் காலத்தில் நிறைய சக்திகள் பெறும் ஆசை கிட்டத்தட்ட எல்லோருக்குமே இருக்கிறது. ஆனால் அதற்கான கஷ்டமான வழிகளும், பயிற்சிகளும் அவர்களுக்குப் பிடிப்பதில்லை. ஒரு தாயத்துக் கட்டியோ, ஒரு யந்திரம் தந்தோ, ஒரு மந்திரம் சொல்லிக் கொடுத்தோ எல்லாச் சக்திகளும் வருமானால் அவர்கள் அதற்காக எத்தனை வேண்டுமானாலும் பணமாகக் கொடுப்பார்கள். இது தான் இன்றைய யதார்த்தம். ஆனால் சக்திகள் சத்தியத்தில் அப்படி கிடைப்பதில்லை. அதனால் பிரமிப்பு தரும் அளவு சக்திகள் என் சீடர்களில் யாரும் பெற்று விடவில்லை. ஆனால் முறையாகப் படித்து ஓரளவு சக்திகள் பெற்று ஒழுங்காகவும் இருப்பவர்கள் ஒருசிலர் இருக்கிறார்கள் என்பதில் எனக்கு ஆத்மதிருப்தி”

சொன்ன விஷயம் யதார்த்தமாகவும், சுவாமிஜியின் கூர்நோக்காகவும் இருந்தது. ஆனால் அவர் கண்ணில் வெட்டிய மின்னலுக்கும் அவர் சொல்வதற்கும் சம்பந்தமில்லாதது போல அல்லவா இருக்கிறது. ஏதோ தெரிந்த ஆள் பற்றி கேட்பது போல அல்லவா அவர் போலீஸ் மூளைக்குத் தோன்றியிருந்தது.  

“நான் கேட்ட போது உங்களுக்கு நான் கேட்ட ஆள் தெரிந்திருப்பது போல் எனக்குத் தோன்றியது….” செந்தில்நாதன் அவரைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே சொன்னார்.

சுவாமிஜி முகத்தில் சின்ன முறுவல் வந்து போனது. “என் சீடர்களில் அப்படி யாராவது இருக்கிறார்களா என்று நீங்கள் கேட்டீர்கள். அதற்கான இல்லை என்ற பதிலைச் சொன்னேன். ஆனால் அப்படிப்பட்ட ஆள் பற்றியே தெரியாது என்று நான் சொல்லவில்லையே”

செந்தில்நாதன் பரபரப்புடன் கேட்டார். “அந்த ஆள் பற்றி உங்களுக்குத் தெரிந்த விவரங்கள் சொல்லுங்களேன்….”

“ஒரு ஆள் அல்ல இரண்டு பேர் பற்றி நீங்கள் சொல்லும் வகையில் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இரண்டு பேரும் என் சிஷ்யர்கள் அல்ல. ஆனாலும் இந்தக் கலையில் உச்ச அளவுக்குப் போனவர்கள் என்று சொல்லலாம்….”

ஒருவனைத் தேடி வந்தால் இவர் இரண்டு பேர்களைச் சொல்கிறாரே என்று திகைத்த செந்தில்நாதன் “தயவு செய்து சொல்லுங்கள்” என்றார்.

“ஒருவன் ஒரு ஆன்மிக இயக்கத்தைச் சேர்ந்தவன். அவன் குரு ரிஷிகேஷைச் சேர்ந்தவர். அவன் குருவையே மிஞ்சிய அளவு முன்னேறினான். மகாபுத்திசாலி. அவன் இயக்கத்திலேயே ராஜயோக அமானுஷய சக்திகளில் ஓரளவாவது தேர்ச்சி பெற்றவர்கள் நிறைய இருக்கிறார்கள். உலக நன்மைக்காகக் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு ரகசியமாய் தங்கள் முயற்சிகளை எடுப்பவர்கள்…. அவன் மற்றவர்களை எல்லாம் மிஞ்சி நிறைய முன்னேறினான். அந்தச் சக்திகளை மிக இயல்பாகப் பயன்படுத்தின அவனை மாஸ்டர் என்று எல்லோரும் அழைப்பார்கள். அவன் குரு சமீபத்தில் காலமானார். இப்போது அந்த இயக்கத்திற்கு அவன் தான் தலைவராக இருக்கிறான்…..”

மாஸ்டர் பற்றி அவர் சொன்னதும் செந்தில்நாதனுக்கு அவர் அவ்வளவு பிரபலமாக இருப்பது ஆச்சரியம் தந்தது. மாஸ்டர் க்ரிஷ் அறையில் உட்கார்ந்து கொண்டு அவன் இருப்பிடத்தையும் அவன் இருக்கிற நிலையையும் சொன்னது நினைவுக்கு வந்தது. சந்தேகப்பட்ட அவரிடம் “போலீஸ்  புத்தி” என்று அவர் மனைவி சொல்லும் தொனியிலேயே சொன்னதும் நினைவுக்கு வர செந்தில்நாதன் புன்னகைத்தார்.

சுவாமிஜி தொடர்ந்தார். “ஆனால் நீங்கள் கேட்டு வந்தது அவனையாக இருக்காது என்று நினைக்கிறேன். போலீஸ் விசாரிக்கும் நபராக அவன் நடவடிக்கை இருக்காது….. இன்னொருவனாகத் தான் இருக்க வேண்டும். அவன் இவனையும் மிஞ்சியவன்…..”

செந்தில்நாதனுக்கு ஒரு பலத்த சந்தேகம் வந்தது. ஒரு வித்தையில் இரண்டு பேர் நிபுணர்களாக இருக்கிறார்கள் என்றால் கண்டிப்பாக ஒருவரை இன்னொருவருக்குத் தெரியாமல் போக வாய்ப்பில்லை அல்லவா? அப்படியானால் கண்டிப்பாக மாஸ்டருக்கும் எதிரியைத் தெரிந்திருக்க வேண்டுமே. ஏன் தெரியாது என்று க்ரிஷிடம் சொல்லி அலைய வைக்கிறார்? ’அதைப் பிறகு சிந்திப்போம். முதலில் அந்த இன்னொருவனைப் பற்றி விசாரிப்போம்’ என்று எண்ணியவராக சுவாமிஜியிடம் சொன்னார். “அந்த இன்னொருவனைப் பற்றிச் சொல்லுங்கள் சுவாமிஜி? அவனை எப்படி உங்களுக்குத் தெரியும்?”

“அவன் கற்றுக் கொள்ள என்னிடம் ஆரம்பத்தில் ஒருமுறை வந்திருக்கிறான்…..” சுவாமிஜி சொன்ன போது செந்தில்நாதன் திகைத்தார்.

சுவாமிஜி பழைய நினைவுகளில் ஆழ்ந்து நேரில் மறுபடியும் அந்தக் காட்சியைப் பார்த்துச் சொல்வது போலச் சொன்னார். “அவன் ரகசியமானவன்…… ஒருநாள் இருட்டிய பிறகு வந்தான். அரையிருட்டில் நின்று கொண்டு என்னிடம் பேசினான். தனக்குக் கற்றுக் கொடுக்கச் சொன்னான். அவன் எண்ண அலைகளில் ஆன்மிகம் இல்லை. நோக்கம் உயர்ந்ததாய் தெரியவில்லை. அதனால் கற்றுக் கொடுக்க நான் மறுத்து விட்டேன். ஒன்றும் சொல்லாமல் போய் விட்டான் …… சில வருஷங்கள் கழித்து அசாதாரண சக்திகள் படைத்த ஒருவன் பற்றிச் சில வதந்திகள் உலாவின….. இக்காலத்தில் அவன் அளவு அமானுஷ்ய சக்திகள் படைத்தவர்கள் யாரும் இருக்க முடியாது என்று கூடச் சிலர் உறுதியாகச் சொன்னார்கள். அப்போது கூட நான் அது அவனாக இருக்கக்கூடும் என்று சந்தேகப்படவில்லை….. சொல்லப்போனால் கற்றுக் கொடுக்க மறுத்த அந்தக் கணமே அவனை நான் மறந்து விட்டேன். ஆனால் அவன் தான் நான் கேள்விப்பட்ட அமானுஷ்ய சக்தி மனிதன் என்பது எனக்கு பிற்பாடு தான் தெரிந்தது….”

“எப்படி?”

“அவன் மறுபடியும் இங்கே வந்தான்”

செந்தில்நாதன் சுவாரசியத்துடன் கேட்டார். “வந்தவன் என்ன சொன்னான்”

“ஒன்றும் சொல்லவில்லை….என் எதிரில் கூட வரவில்லை. ஒருசில நிமிஷங்கள் அவன் அமானுஷ்ய சக்தியால் என்னைக் கட்டிப் போட்டான்….. இந்தக் கலையின் ஆசிரியன் நான். நானும் ஓரளவு சக்திகள் வாய்ந்தவன் தான். ஆனால் என்னையே அவன் தன் சக்தியால் கட்டிப் போட்டான். என்னால் நகரக்கூட முடியவில்லை. எத்தனையோ முயற்சி செய்தேன். எதுவும் பயன் தரவில்லை. எல்லா முயற்சியும் கைவிட்டு விட்டு என்ன செய்கிறானோ செய்யட்டும் என்று அமைதியாக இருந்தேன்….. பிறகு தான் கட்டவிழ்த்து விட்டுப் போனான்…..”

“ஒன்றும் சொல்லவில்லை. எதிரில் கூட வரவில்லை என்று சொல்கிறீர்கள். பின் எப்படி வந்தது அவன் தான் என்று சொல்கிறீர்கள்…”

“அவன் முதலில் வந்து நின்ற அதே இடத்தில், அதே நேரத்தில் வந்து நின்றான். யாரோ அங்கு வந்து நிற்பது போல் உணர்ந்த அடுத்த கணமே என்னைத் தன் சக்தி அலைகளால் கட்டிப் போட்டு விட்டான். எனக்குச் சொல்லிக் கொடுக்க மாட்டேன் என்று சொன்னாயே. இப்போது பார் உன்னையே என் சக்தியால் கட்டிப் போடும் அளவு கற்றுக் கொண்டு வந்திருக்கிறேன். முடிந்தால் விடுவித்துக் கொள் என்று சொல்கிற மாதிரி உணர்ந்தேன்….. முடியவில்லை என்று என் முயற்சியைக் கை விட்ட பிறகு தான் அவன் போனான். அவன் வாய்விட்டுச் சிரிக்கவில்லை. ஆனால் அந்தச் சிரிப்பை நான் அன்று அழுத்தமாக உணர்ந்தேன்…. இப்போதும் உணர்கிறேன்….. அது அவனே தான்……”

செந்தில்நாதன் ஒரு கணம் அந்த நிகழ்வைக் கற்பனை செய்து பார்த்தார்.    அவர் அறியாமல் உடல் சிலிர்த்தது.

“அவன் யாரிடமிருந்து கற்றுக் கொண்டான், அவன் குரு யார் என்று உங்களுக்குத் தெரியுமா?”

“சரியாகத் தெரியவில்லை. ஆனால் தார்ப்பாலைவனத்தில் வசிக்கிற ஒரு பக்கிரியிடம் அவன் கற்றிருக்கலாம் என்று நினைக்கிறேன்….. ஏனென்றால் அந்தப் பகுதியில் இருந்து தான் அவன் சக்திகள் பற்றிய செய்திகள் அதிகம் வந்தன…”

மாஸ்டர் சொன்ன ஐந்து பேரில் தார்ப்பாலைவனப் பக்கிரியும் ஒருவர் என்பதால் செந்தில்நாதன் எதிரிக்குக் கற்றுக் கொடுத்த குரு அந்தப் பக்கிரியாகவே இருக்க வேண்டும் என்று நினைத்தார்.

“அவன் பார்க்க எப்படி இருந்தான் என்று சொல்லுங்களேன்…”

”நான் சொன்னேனே அவனைச் சரியாகப் பார்க்கவில்லை என்று. முதல் தடவை தான் கொஞ்சமாவது அவனைப் பார்த்தேன்…. இளம் வயதாக ஒடிசலாக இருந்தான். அரையிருட்டில் வந்து நின்றதால் அதிகமாக நான் கவனிக்கவில்லை….”

இப்போதைய விசாரணைக்குச் சம்பந்தமான கேள்வி அல்ல என்றாலும் ஏனோ செந்தில்நாதனுக்குக் கேட்கத் தோன்றியது.

“அவன் சக்தி தெரிந்த பிறகு அவனைக் குறைவாக நினைத்து விட்டுத் தவறாக அனுப்பி விட்டோம், அவனுக்கு நாமே சொல்லிக் கொடுத்திருக்கலாம் என்று உங்களுக்குத் தோன்றியதா?”

சுவாமிஜி அழுத்தந்திருத்தமாகச் சொன்னார். “இல்லவே இல்லை. நாம் சொல்லிக் கொடுத்த வித்தையால் ஒருவன் தீமைகள் செய்தால் அந்தப் பாவத்தில் தார்மீகப் பங்கு நமக்கும் இருக்கிறது. அவன் நல்லவன் அல்ல என்பதால் கற்றது எதையும் நன்மைக்குப் பயன்படுத்த மாட்டான் என்பதில் சந்தேகமே இல்லை. அவனுக்குக் கற்றுக் கொடுத்து அவன் கர்மாவில் நானும் ஒரு பங்கு வைத்துக் கொள்ள விரும்பவில்லை. தர்ம வழியில் நிற்கும் குரு அந்தத் தவறைச் செய்யக்கூடாது….… நான் செய்யவில்லை.”

(தொடரும்)
என்.கணேசன்                  

Wednesday, March 28, 2018

இறைவனுக்குப் பிரியமானவர் யார்?


கீதை காட்டும் பாதை 50
    
கவத்கீதையின் முக்கிய நோக்கமும் கருப்பொருளும் மனிதனை மேல்நிலைக்கு உயர்த்துவதும் அந்த நிலையிலிருந்து செயல்பட ஊக்குவிப்பதும் தான். அதைப் பல இடங்களிலும் பல விதங்களிலும் சொல்ல பகவானுக்குச் சலிப்பில்லை. சாங்கிய யோகமாகட்டும், கர்ம யோகமாகட்டும், ஞான யோகமாகட்டும், பக்தி யோகமாகட்டும் அந்த உச்சக்கட்ட உயர்ந்த மனிதனைச் சுட்டிக் காட்ட பகவான் தயங்கவில்லை.

என்ன செய்கிறாய் என்பது நீ என்னவாக இருக்கிறாய் என்பதைப் பொருத்தே உயர்வாகவோ, தாழ்வாகவோ அமைகிறது.  அதனால் நான் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு முன் எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்வியை மனிதன் கேட்டுக் கொள்வது முக்கியம். எப்படி இருக்க வேண்டும் என்று அறிந்த பின் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கே இடமிருக்காது. நீ உயர்ந்திருக்கும் நிலையே உன்னை என்ன செய்ய வேண்டும் என்பதையும் எப்படிச் செய்ய வேண்டும் என்பதையும் உணர்த்தும்.

அதனால் பக்தி யோகத்தில் கடைசியாக பகவான் தனக்குப் பிரியமானவர் எந்த விதமான பக்தன் என்று விவரிக்கும் விதத்திலும் என்னையே வணங்கி வரும் பக்தனாக இரு என்று வெறும் வணக்கத்துக்கு முக்கியத்துவம் தராமல் இப்படிக் கூறுகிறார்.  

எல்லா உயிரினங்களிடமும் விரோதம் கொள்ளாமல் அன்பு கொண்டவனும், நான், என்னுடையது என்ற மமகார அகங்காரமற்றவனும், இன்ப துன்பங்களைச் சமமாகக் கருதுபவனும், பொறுமையுள்ளவனும், எப்போதும் திருப்தியாக இருப்பவனும், யோகியும், மனத்தை அடக்கியவனும், அசையாத உறுதியுடன் மனத்தையும், புத்தியையும் என்னிடமே அர்ப்பித்தவனாய், என்னிடம் பக்தி கொண்டிருப்பவன் எனக்குப் பிரியமானவன்.

எவனால் உலகம் பாதிக்கப்படுவதில்லையோ, எவன் உலகத்தாலும் பாதிக்கப்படுவதில்லையோ, எவன் மகிழ்ச்சி, கோபம், பயம், மனக்கிளர்ச்சி முதலியவற்றிலிருந்து விடுபட்டவனோ, அவன் எனக்குப் பிரியமானவன்.

ஆசையற்றவனும், தூய்மையானவனும்,, பிறவிப்பயனை அறிந்தவனும், நடுநிலையானவனும், வருத்தமில்லாதவனும், செயல்களனைத்திலும்நான் செய்கிறேன்என்னும் கர்வத்தை நீக்கியவனுமாகிய பக்தன் எனக்குப் பிரியமானவன்.

எவன் நண்பன்-பகைவன், மதிப்பு-அவமதிப்பு, குளிர்-வெப்பம், சுகம்-துக்கம் என்ற இரட்டைகளில் சம நோக்கு உடையவனும், புகழ்ச்சி-இகழ்ச்சிகளை ஒன்றாகக் கருதுபவனும், மௌனமானவனும், கிடைத்ததில் திருப்தி அடைபவனும், வசிக்கும் இடத்தில் தனது என்ற பற்றில்லாதவனும், நிலைத்த புத்தியுடையவனுமாக இருக்கிறானோ அவன் எனக்குப் பிரியமானவன்.

நான் சொன்ன அமிர்தத்திற்கு ஒப்பான தர்மத்தை யார் சிரத்தையுடன் அனுஷ்டிக்கிறார்களோ அந்த பக்தர்கள் எனக்கு மிக மிகப் பிரியமானவர்கள்.

கிட்டத்தட்ட எல்லா வர்ணனைகளும் இதற்கு முந்திய யோகங்களில் சொன்ன வர்ணனைகள் தான். ஆசிரியர் முக்கியமான பாடத்தைத் தன் மாணவனின் மனதில் பசுமரத்தாணி போல் பதிய வைக்க பல முறை சொல்வது போல் ஸ்ரீகிருஷ்ணரும் இதைச் சொல்கிறார்.

அன்பு, அகங்காரமின்மை, பொறுமை திருப்தி, மனதை அடக்கிய நிலை, அசையாத மன உறுதி முதலானவை எல்லாம் எந்தவொரு உயர்வுக்கும் தேவையானவை. இவை இல்லாமல் வெற்றி இல்லை. இவை இல்லாமல் நிம்மதியில்லை. இவை இல்லாமல் ஆன்மீகமில்லை. இந்தத் தன்மைகளைக் கொண்டிருக்கும் பக்தன் தனக்குப் பிரியமானவன் என்று சொல்லும் பகவான் தன்னுடைய ஆசிகள் இந்தத் தன்மையுடையவர்களுக்கு இருக்கும் என்பதையும் சொல்லாமல் சொல்கிறார்.

இந்த வர்ணனைகளில் திருப்தி இரண்டு சுலோகங்களில் சொல்லப்படுகிறது. வாழ்க்கையில் குற்றம் கண்டுபிடித்தே அதிருப்தியுடன் இருக்கும் மனிதர்கள் ஏராளம். நல்லது மட்டுமே நடக்க வேண்டும், அதுவும் தொடர்ச்சியாகத் தனக்கு நடந்து கொண்டேயிருக்க வேண்டும், இடைவெளிகளோ, எதிர்மறையோ இதில் இருந்துவிடக்கூடாது என்று ஆசைப்படும் மனிதன் நிரந்தர துக்கத்திற்குத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்பவனாகிறான். எதிர்பார்த்தது ஒன்று நடந்தவுடனேயே அற்ப நேரத்துக்குத் திருப்திப்படும் மனிதனுடைய மனம் அடுத்த எதிர்பார்ப்பை உடனடியாக ஏற்படுத்திக் கொள்கிறது. அதுவும் முடிந்தால் இன்னொன்று தயாராகும். வாழ்க்கை கூட ஒரு நாள் முடிவுக்கு வரும். அந்த முடிவு வரை இந்த எதிர்பார்ப்புகளுக்கு முடிவு வராது.

சொற்ப காலத்திற்கு நாம் வந்து போகும் இடம் இவ்வுலகம். இங்கு என்ன கிடைத்தாலும் போகும் போது எடுத்துக் கொண்டு போக முடியாது. பெற்றது எல்லாம் விட்டுப் போவதற்கே என்ற நிலை இருக்கையில் என்ன கிடைத்தால் என்ன, எத்தனை கிடைத்தால் என்ன? வெறும் கையுடன் வந்த நமக்குக் கிடைத்ததெல்லாம் லாபமே அல்லவா? பெறுவது குறைவாய் இருந்தால் என்ன, கடைசியில் இழப்பதும் குறைவாகவே அல்லவா இருக்கும். அதனால் இருப்பதில் திருப்தியாக இரு. கிடைத்ததில் திருப்தியாக இரு என்கிறது பகவத்கீதை.

என்னுடையது என்று எதையும் நினைக்காதே. செல்வங்கள் மட்டுமல்ல, உறவுகள், திறமைகள், சௌகரியங்கள் எல்லாம் இங்கு பெற்றவையே. இந்த வாழ்க்கைச் சுற்றுலா முடிவடைகையில் எல்லாம் கழற்றி விட்டுப் போக வேண்டியவையே.

புகழ்ச்சி இகழ்ச்சி இரண்டிற்கும் கூட அதிக முக்கியத்துவம் கொடுத்தே நாம் அமைதியிழக்கிறோம். புகழும் இகழும் யாரும் முழுவதுமாகப் புரிந்து கொண்டு அடுத்தவர்களுக்குத் தருவதில்லை. அவரவர் நிலைகளையும், அவரவர் தேவைகளையும் வைத்தே  புகழ்கிறார்கள் அல்லது இகழ்கிறார்கள். அதுவும் ஒருவரிடம் யாரும் தொடர்ந்து எதிர்பார்க்க முடியாது. இன்று புகழ்ந்தவர் நாளை இகழலாம். அதனால் அந்தப் புகழுக்கு இன்று மகிழ்ந்தால் நாளை இகழும் போது வருத்தப்பட நேரிடும். நம் மகிழ்ச்சியையும், நம் துக்கத்தையும் நாம் ஏன் அடுத்தவரிடம் ஒப்படைக்க வேண்டும்?

இதையெல்லாம் சிந்திக்க வேண்டியவையே அல்லவா? இந்த வர்ணனைகளை அமிர்தத்திற்கு ஒப்பான தர்மம் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். உயர்நிலையில் வாழ வைக்கும் அமிர்தமாகிய இந்தத் தர்மத்தை அறிவது பெரிதல்ல. சிரத்தையுடன் அனுஷ்டிக்க வேண்டும், பின்பற்ற வேண்டும் என்று பகவான் சொல்கிறார். அப்போது தான் அறிந்தது பூர்த்தியாகும். அறிந்ததில் பலனும் அடைவோம். அப்படி அறிந்து, பின்பற்றி, உயரும் மனிதர்களே இறைவனுக்குப் பிரியமானவர்கள் என்று சொல்லும் இந்தத் தகவலுடன் கீதையின் பன்னிரண்டாம் அத்தியாயம் நிறைவடைகிறது.

பாதை நீளும்……


என்.கணேசன்

Monday, March 26, 2018

சத்ரபதி – 13

ஷாஹாஜியின் தூதுவனுக்கு உடனடியாக முகலாயப் பேரரசரின்  அரசவைக்குள் அனுமதி கிடைக்கவில்லை. இரண்டு நாட்கள் காத்திருந்த பின்னரே அனுமதி கிடைத்தது. முகலாயப் பேரரசரின் அதிருப்தியைச் சம்பாதித்திருப்பவர்களும், அதிகாரத்தில்  குறைந்தவர்களும் காக்க வைக்கப்பட்டு, அவர்கள் நிலை உணர்த்தப்பட்டு, பின்னர் தான் பேரரசரின் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். சிலர் வாரக்கணக்கில் காத்திருக்கப்படுவதும் உண்டு. எனவே சகாயாத்ரி மலைத்தொடரில் தலைமறைவாய் இருக்கும் ஷாஹாஜியின் தூதுவன் உண்மையில் இரண்டு நாட்களில் அனுமதி கிடைத்ததே பெரிது என்று எண்ணியபடி பணிவுடன் அரசவைக்குள் நுழைந்தான்.

ஷாஜஹானின் அரசவை தேவேந்திரன் சபை போல தங்கமும் வெள்ளியுமாய் மின்னியது. தரை வரை தலை தாழ்த்தி மூன்று முறை பேரரசரை வணங்கிய தூதுவன் அவரை இறைவனுக்கிணையாக வாழ்த்தி விட்டு பின் ஷாஹாஜி அனுப்பியிருந்த செய்தியைச் சொன்னான்.

தன் செய்கைகளுக்காக பேரரசரிடம் மன்னிப்பைக் கோரிய ஷாஹாஜி சர்வ வல்லமையுள்ள சக்கரவர்த்தியிடம் தான் சரணடைவதாகச் சொல்லி இரண்டே இரண்டு கோரிக்கைகளை மட்டும் ஏற்றுக் கொண்டு அருள்புரிய வேண்டும் என்று பல அலங்கார வார்த்தைகளைப் பின்னிக் கேட்டுக் கொண்டிருந்தார். முதல் கோரிக்கை தற்போது அகமதுநகர் அரியணையில் அவர் ஏற்றியிருந்த சிறுவனுக்கு உயிர்ப்பிச்சை அளிக்க வேண்டும் என்பதாயிருந்தது. இரண்டாவது கோரிக்கையாக, சக்கரவர்த்திக்கு சேவகம் செய்யத் தன்னை  அனுமதிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். உடனடியாகப் பதில் அளிக்காத ஷாஜஹான் வெளியே காத்திருக்கும்படி தூதனிடம் உத்தரவிட்டு விட்டு சிந்தனையில் ஆழ்ந்தார்.

ஷாஜஹான் ஷாஹாஜியை நெருக்கமாகவே பல காலம் அறிந்தவர். இளவரசனாக இருந்த காலத்தில் தந்தையின் கோபத்துக்கு ஆளாகி அவர் தக்காணப் பீடபூமிக்குத் தப்பிச் சென்ற போது ஷாஹாஜி அவருக்கு ஆதரவாக இருந்து அப்போதைய முகலாயப் படையை எதிர்த்தவர். சில வெற்றிகளையும் வாங்கித் தந்தவர். அதனால் சக்கரவர்த்தியான பின் ஷாஜஹான் ஷாஹாஜியிடம் தாராளமாகவே நடந்து கொண்டிருக்கிறார். தக்காணப்பீடபூமியில் சில பகுதிகள் கோட்டைகள் ஆகியவற்றின் நிர்வாகப் பொறுப்பை ஷாஹாஜிக்குத் தந்திருக்கிறார். இடையில் சிலவற்றை எடுத்து மற்றவர்களுக்குத் தந்து விட்டதால் சிறுமைப்படுத்தப்பட்டு விட்டதாய் உணர்ந்து, ஷாஜஹானுக்கு எதிராக ஷாஹாஜி செயல்பட்டிருக்கிறார். அதன்பின் சில முறை சரண், சில முறை கிளர்ச்சி என்று மாறி மாறி ஷாஹாஜி நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார். அரசியலில் நிரந்தரப்பகையோ, நிரந்தர நட்போ கிடையாது என்றாலும் ஷாஹாஜி அதிலும் ஒரு வரம்பைத் தாண்டிப்போய் விட்டதாகவே ஷாஜஹானுக்குத் தோன்றியது. ஷாஹாஜி ஒரு காலத்தில் உதவியதற்கு எப்போதோ கடன் தீர்த்தாகி விட்டது….. இப்போது ஷாஹாஜி தலைவலி மட்டுமே!....

ஷாஜஹான் தன் அரசவையில் தக்காணப்பீடபூமி அரசியல் சூழல் குறித்து அதிகமாக அறிந்திருந்த இருவரைப் பார்த்துக் கேட்டார். “ஷாஹாஜியின் கோரிக்கைகளை நாம் ஏற்கா விட்டால் அவனைச் சிறைபிடிக்கும் வாய்ப்பு எந்த அளவில் இருக்கிறது?”

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பின் ஒருவர் மெல்லச் சொன்னார். “தாங்கள் அறியாததல்ல சக்கரவர்த்தி. சகாயாத்ரி மலைத்தொடரில் பதுங்கியிருக்கிற வரை ஷாஹாஜியைச் சிறைப்பிடிப்பது எளிதானதல்ல. அதுமட்டுமல்ல அங்கே பதுங்கியிருக்கிற வரை ஷாஹாஜி எந்த நேரத்திலும் வந்து திடீர்த்தாக்குதல் நிகழ்த்தி விட்டுப் போவது நிச்சயம் நடக்கும். மொகபத்கான் போன்ற அனுபவம் மிக்க நம் படைத்தலைவர்களே சமாளிக்க முடியாமல் திண்டாடியிருக்கிறார்கள்…..” மற்றவரும் அதை ஆமோதிக்கும் பாவனையில் தலையசைத்தார்.

ஷாஜஹானும் அவர் சொல்வது உண்மையே என்று உணர்ந்திருந்தார். அவர் அடுத்த கேள்வி அகமதுநகர் அரியணையில் அமர்த்தப்பட்ட சிறுவனைப் பற்றியதாக இருந்தது. “ஷாஹாஜி ஏன் அந்தச் சிறுவனுக்கு உயிர்ப்பிச்சை கேட்கிறான்…..”

”ஷாஹாஜி அந்தச் சிறுவனின் தாயிடம் அந்தச் சிறுவனின் உயிர் காப்பேன் என்று சத்தியம் செய்து கொடுத்த பிறகு தான் அவனை அரியணை ஏற்ற அவள் சம்மதித்திருக்கிறாள் என்று கேள்விப்பட்டோம் சக்கரவர்த்தி. அவளுக்கு எந்தப் பதவியாசையும் இல்லையென்று முன்பே தெளிவுபடுத்தியிருக்கிறாள். கட்டாயப்படுத்தி அரியணை ஏற்றியதால், தந்த சத்தியத்தைக் காக்கவே ஷாஹாஜி இந்தக் கோரிக்கையை முன் வைத்திருக்கிறார்…”

இந்துஸ்தானத்தில் சத்தியத்திற்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஷாஜஹானை வியப்பில் ஆழ்த்தியது. ஷாஹாஜி தன்னைப் பற்றிய கோரிக்கையைக் கூட இரண்டாவதாகவே கேட்டு, அதற்கும் முதலில் அந்தச் சிறுவனின் பாதுகாப்பையே கேட்டிருக்கும் விதத்தை வியந்த ஷாஜஹான் என்ன முடிவெடுப்பது என்று யோசிக்க ஆரம்பித்தார். அகமதுநகர் ராஜ்ஜியம் மீண்டும் எழுவதில் அவருக்கு உடன்பாடில்லை….

“இந்தச் சிறுவனைத் தவிர வேறு எந்தக் குழந்தையாவது அகமதுநகர் ராஜவம்சத்தில் எஞ்சியிருக்கிறார்களா?” யோசனையுடன் அந்த இருவரையும் கேட்டார்.

“இல்லை சக்கரவர்த்தி” ஏகோபித்த பதில் அவர்களிடமிருந்து வந்தது.

சிறிது நேரம் ஆழ்ந்து ஆலோசித்து விட்டு ஷாஜஹான் ஷாஹாஜியின் தூதனை அழைத்து வரப் பணித்தார். உள்ளே வந்து மறுபடி தரையைத் தலைத் தொடும்படியாக வணங்கி எழுந்து பணிவாக நின்ற தூதனிடம் ஷாஜஹான் சொன்னார். “ஷாஹாஜியின் முதலாவது கோரிக்கையை ஏற்கிறோம் - அந்தச் சிறுவனை எம்மிடம் ஒப்படைக்கும் பட்சத்தில். ஆனால் இரண்டாவது கோரிக்கையை நிராகரிக்கிறோம். ஒரு முறை அல்ல பல முறை எமக்குச் சேவகம் செய்தது பசுமையாகவே நினைவிருக்கிறது. அதனால் சேவகத்திற்கு மட்டுமல்ல எங்கள் ராஜ்ஜியத்தின் எல்லையிலும் நாங்கள் ஷாஹாஜியை அனுமதிப்பதாக இல்லை. ஆனால் இது வரை கைப்பற்றிய பகுதிகளையும் செல்வத்தையும் முழுவதுமாக ஒப்படைத்தால் ஷாஹாஜியை மன்னிக்கத் தயாராக இருக்கிறோம். இதுவே எமது இறுதி முடிவு. இதில் எந்த மாற்றமும் இல்லை. இதைச் சென்று தெரிவிப்பாயாக!”

மறுபடி வணங்கி தூதன் விடைபெற்றான்.    .


தூதன் வந்து செய்தி சொன்ன போது உணர்ச்சிகளை வெளிப்படையாகக் காட்டா விட்டாலும் ஷாஹாஜி உள்ளுக்குள் அவமானத்தை உணர்ந்தார். ஷாஜஹானின் பதில் “உன்னுடைய தொடர்பே எங்களுக்கு வேண்டாம்” என்பதை வெளிப்படையாகவே அறிவித்து விட்டது. ஆனால் முகலாயப் பேரரசரைப் பகைத்துக் கொண்டு எதிர்த்து நிற்க முடிந்த நிலைமையில் அவர் இல்லை. அவர் பெற்ற மகன் இதே சகாயாத்ரி மலைத்தொடரில் ஏதோ ஒரு இடத்தில் யார் தயவிலோ இருக்க, அவர் எவர் பிள்ளையையோ காப்பாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார். ஒரு தாயிற்குச் செய்து கொடுத்த சத்தியத்தை அவர் நிறைவேற்றியே ஆக வேண்டும். சென்ற பிறவியில் என்ன பாவம் செய்திருக்கிறாரோ தெரியவில்லை, இத்தனை சோதனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. ஒரு தாயின் கண்ணீரையும், சாபத்தையும் சம்பாதித்து இப்பிறவியிலும் பாவத்தைக் கூட்ட அவர் விரும்பவில்லை…..

யோசித்துப் பார்த்தால் இன்னொரு தாயின் கண்ணீரும் அவரைச் சுட்டுக் கொண்டு தான் இருக்கிறது. ஜீஜாபாய் மூத்த மகனை ஷிவ்னேரிக் கோட்டையில் அவருடன் அனுப்பும் போதே பதறியது அவருக்கு நினைவு வந்தது. இப்போது இரண்டாம் மகனையும் இழந்து அவளும் வாடிக் கொண்டு தான் இருக்கிறாள். சமாதானத்தில் அவரது கௌரவம் பறிபோகலாம். ஆனால் உறவுகள் காப்பாற்றப்படும். அமைதி திரும்புகையில் அவரவர் வாழ்க்கையை அவரவர் ஆபத்தில்லாமல் வாழ முடியும்…..

ஆனால் அவரது மூத்த மாமனார் குடும்பத்திற்கு அவரை நிரூபிக்கும் வாய்ப்பு என்றென்றுக்குமாய் அவர் கைநழுவிப் போய்விடும். ஒரு அரசனுக்கு நிகராய் அவர்கள் முன் உயர்ந்து காட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தது  கனவாகவே தங்கி விடும்.  ஆனால் வேறு வழியில்லை. அவர் குடும்பம் நாலா பக்கமாய் சிதறிக் கிடக்கிறது. அவர் ஒரு பக்கம், ஜீஜாபாய் ஒரு பக்கம், துகாபாயும் சாம்பாஜியும் ஒரு பக்கம், சிவாஜி ஒரு பக்கம். என்ன வாழ்க்கையிது? போதும்….  எல்லாம் போதும்…..


த்யஜித்  சகாயாத்ரி மலைத்தொடரின் ஒரு பாறையிடுக்கிலிருந்து ஷாஹாஜியும், அவரது வீரர்களும் மலையிலிருந்து இறங்குமுகமாய் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஏதோ ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு தன் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளாமல் ஷாஹாஜி மலையிறங்க வாய்ப்பே இல்லை. சத்யஜித் ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டான். ஷாஹாஜி இந்த மலைத்தொடருக்கு வந்த நாளிலிருந்து ஒரு நாள் கூட சத்யஜித் முழு உறக்கம் உறங்கியதில்லை. ஒவ்வொரு இரவிலும் ஷாஹாஜி வந்து சிவாஜியைத் தூக்கிக் கொண்டு போய் விடுவாரோ என்ற அச்சம் அவனை நிம்மதியாய் உறங்க விடவில்லை. சிறு சிறு சத்தங்களும் அவனை எழுப்பின. கண்விழிப்பதற்கு முன் சிவாஜியை இறுக்க அணைத்துக் கொண்ட பின்னரே அவன் கண்விழிப்பான். ஆபத்து இல்லை என்றானவுடன் மூச்சு சீராகும்….. ஆனால் தூக்கம் திரும்பி வராது…..

”போகிறவர்கள் யார் மாமா?” சிவாஜியின் குரல் கேட்டு அதிர்ந்து போய் சத்யஜித் திரும்பினான். சிவாஜி அருகில் நின்று கொண்டிருந்தான். அவனும் சேர்ந்து அந்தப் பாறையிடுக்கில் பார்த்துக் கொண்டிருந்தான்……

சத்யஜித் பதில் சொல்ல சிறிது நேரம் எடுத்துக் கொண்டான். அந்த இடைவெளியில் சிவாஜி கேட்டான். “போய்க் கொண்டிருப்பது என் தந்தையும் அவர் ஆட்களுமா மாமா?”

சத்யஜித் பேச்சிழந்து போய் நின்றான். இவன் எப்படி யூகித்தான்? அந்தத் திகைப்பிலேயே பதிலைப் பெற்றவன் போல சிவாஜி அங்கிருந்து நகர்ந்தான். சிறிது நேரத்தில் அணில்களுடனும், முயல்களுடனும் அவன் விளையாடிக் கொண்டிருந்தான். சத்யஜித் இதயத்துடிப்பு இயல்பு நிலைக்கு வர நேரம் நிறைய தேவைப்பட்டது.

(தொடரும்)
என்.கணேசன்

Thursday, March 22, 2018

இருவேறு உலகம் – 75

 மாஸ்டரிடம் ஹரிணி பேசிவிட்டுப் போன அன்று மாலையிலேயே அவரிடம் மறுபடியும் பேச க்ரிஷ் வந்தான். இவனுக்குக் கேட்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது என்று நினைக்கையில் மாஸ்டருக்கு தன்னுடைய இளமைக்காலம் நினைவுக்கு வந்தது. குருவிடம் சீடனாகச் சேர்ந்த பிறகு அவரும் குருவிடம் விடாமல் கேள்வி கேட்பார். குரு ஒரு முறை கூட சலிப்பைக் காட்டியதில்லை. பொறுமையாக எல்லாவற்றிற்கும் பதில் சொல்வார். குருவின் நினைவு மனதை லேசாக்கியது.....

“ஹரிணி உங்க கிட்ட ஏடாகூடமா கேள்வி எதுவும் கேட்டுடலயே மாஸ்டர்என்று க்ரிஷ் முதலில் கேட்டான்.

“உண்மையாகவே தெரிஞ்சுக்கணும்னு நினைச்சு ஆர்வமா கேட்கற கேள்வி எதுவுமே ஏடாகூடமில்ல க்ரிஷ்.என்று மாஸ்டர் சொன்ன போது க்ரிஷ் அந்தப் பதிலை ரசித்தான்.  எவ்வளவு உண்மை! ஆனால் இதை எத்தனை பேரால் ஒத்துக்கொள்ள முடியும்?

மாஸ்டர் புன்னகையுடன் கேட்டார். “நான் உன்னை புதன்கிழமை காலைல அல்லவா வரச்சொன்னேன்?

“பாடத்தை ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி அது சம்பந்தமா முக்கியமா உங்க கிட்ட ஒன்னு கேட்க வேண்டி இருக்கு. அதை நான் நேத்து கேட்க மறந்துட்டேன்.....என்று க்ரிஷ் தயக்கத்தோடு சொன்னான்.

கேளு

“நீங்க சொல்லிக் கொடுக்கறதை நான் வேகமா கத்துக்க ஏதாவது வழி இருக்கா மாஸ்டர். எவ்வளவு சீக்கிரம் கத்துக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கத்துக்க வேண்டிய நிலைமைல இருக்கேன்....

மாஸ்டர் அமைதியாகச் சொன்னார். “ஒரு அஞ்சு வயசுப் பையன்  எவ்வளவு சீக்கிரம் பதினெட்டு வயசுப் பையனாய் மாற முடியும் க்ரிஷ்? அவனுக்கு வளர்ந்து பெரிசாக அவசரம். என்ன பண்ணலாம்....?

க்ரிஷ் வாய் விட்டுச் சிரித்தான். மாஸ்டர் புன்னகையுடன் சொன்னார். “அவசரம் இந்தக் காலத்தின் கட்டாயமாக மாறி விட்டது. எல்லோருக்கும் எல்லாமும் அவசரம். ஆனால் இயற்கை தன் இயல்பான வேகத்தில் தான் எதையும் செய்கிறது. நீ படிக்க விரும்பும் கலையும் இயற்கை விதிகளின் ஒரு அம்சம் தான்.... இயற்கையை நாம் அவசரப்படுத்த முடியாது

அவர் சொன்ன உவமானம் அவனுக்கு மிகவும் பிடித்திருந்த்து. அருமையான உண்மை. ஆனால் அவனுடைய அவசரம் அறியாமையால் வந்த அவசரம் அல்ல.... இந்தக்கால இளைஞனின் அவசரமும் அல்ல. அவன் எதிரி என்ன செய்கிறான் என்பதைத் தெரிந்து கொள்ளவும், அதற்குப் பதிலாக என்ன செய்ய வேண்டும் என்பது தெரியவும் இந்தக் கலையை வேகமாகக் கற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறான். என்ன செய்வது?

க்ரிஷ் அவரிடம் சொன்னான். “மாஸ்டர். எல்லாருக்கும் காலம் பொதுவானது. அதனால ஒரே கால இடைவெளில தான் வயசு கூடுது. ஆனா படிக்கறதுக்கும், புரிஞ்சுக்கறதுக்கும் அப்படி பொதுவான காலம் இல்லை அல்லவா? அதனால தான் இதுல எதாவது விரைவு வசதி இருக்கான்னு கேட்டேன்…. உதாரணத்துக்கு ஆதிசங்கரர் அஷ்டமகாசித்திகளையும் தன்னோட 32 வயசுக்குள்ளே அடைஞ்சிருந்தார்னு சொல்றாங்க. அந்த மாதிரி சித்திகள்ல ஆர்வம் இருந்து கத்துக்க ஆரம்பிக்கற எத்தனை பேருக்கு 32 வயசுல எட்டுல ஒன்னாவது என்னன்னு சரியா புரியும்….”

மாஸ்டருக்கு அவன் உதாரணத்தோடு கேட்ட விதம் ரசிக்க வைத்தது. அவனிடம் பொறுமையாகச் சொன்னார். “ஆழமா ஆர்வம் இருந்து, அதுவே எல்லாத்தையும் விட முக்கியமா நமக்கு மாறிடறப்ப, கத்துக்கறது வேகமா சாத்தியமாகுது. பொதுவான காலம் கிடையாதுன்னாலும் மனசளவிலயும், அறிவின் அளவிலயும் கடக்க வேண்டிய பொதுவான தூரம் இதுலயும் கண்டிப்பா இருக்கு க்ரிஷ். நீ கேட்டது சரி தான். ஆதிசங்கரர் தன்னோட 32 வயசுக்குள்ள எல்லா சித்திகளையும் அடைஞ்சு கற்பனையால கூட நினைக்க முடியாத சாதனைகளை எல்லாம் அந்தச் சின்ன வயசுல செஞ்சு முடிச்சார். அவர் கூட போன பிறவிகள்ல அந்தப் பொதுவான தூரத்தைக் கடந்திருப்பார். முதல்லயே படிச்சு ஆழமா புரிஞ்ச பாடம் பரிட்சைக்கு முதல் நாள் ஒரு தடவை புரட்டிப் பார்க்கறப்பவே முழுசா ஞாபகம் வருமில்லையா அப்படித் தான் இதுவும், போன பிறவிகள்ல அவர் அடைஞ்ச ஞானம் இந்தப் பிறவில நினைவுபடுத்திகிட்ட மாதிரின்னு வெச்சுக்கோயேன்…..”

க்ரிஷ் கேட்டான். “அப்படின்னா நானும் போன பிறவிகள்ல இது சம்பந்தமா எதாவது கத்துகிட்டிருந்தா இந்தப் பிறவில சீக்கிரமா கத்துக்கலாம்னு சொல்லுங்க”

மாஸ்டர் புன்னகைத்தார். இவனை நேசிக்காமல் இருப்பது கஷ்டம் தான் என்று தோன்றியது. வேகமாகச் சிந்திப்பது, சரியாகப் புரிந்து கொள்வது, எல்லா நேரங்களிலும் ‘பாசிடிவ்’ ஆகவே யோசிப்பது இதெல்லாம் சாதாரண விஷயங்கள் அல்லவே! சிரித்துக் கொண்டே அவனிடம் சொன்னார். “நீயும் போன பிறவில எதாவது இது சம்பந்தமா கத்துகிட்டிருந்தா இந்த பிறவில ரொம்ப சுலபமா ஞாபகப்படுத்திக்கலாம். பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு”

க்ரிஷ் அப்படி எதாவது சென்ற பிறவியில் கற்றிருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆசைப்பட்டான். கிளம்பும் முன் அவர் காலைத் தொட்டு வணங்கி விட்டுக் கேட்டான். ”மாஸ்டர், நீங்க குருதட்சிணை என்ன, எவ்வளவுன்னு சொல்லவேயில்லையே”

மாஸ்டர் சொன்னார். “அதை நான் கடைசியில் சொல்கிறேன்.”


செந்தில்நாதன் அகமதாபாதிலிருந்து மவுண்ட் அபுவுக்கு காரில் போய்க் கொண்டிருக்கையில் அந்தக் கார் டிரைவரிடம் மவுண்ட் அபு பற்றிய தகவல்களை ஹிந்தியில் கேட்டார். அவன் தில்வாரா ஜெயின் கோயில், நாக்கி லேக், ஆரவல்லி மலைத்தொடரின் மிக உயரமான “குரு ஷிகார்” சிகரம், அச்சால்கர் கோட்டை, அச்சாலேஸ்வரர் சிவன் கோயில் என்று சொல்லிக் கொண்டே போனான். அதெல்லாம் அவனுக்கு மனப்பாடமாக இருந்ததால் ஒவ்வொன்றையும் அதன் சிறப்பான அம்சங்களோடு படபடவென்று சொல்லிக் கொண்டே போனான். ஆனால் அவர் தேடி வந்த குருகுலம் பற்றிச் சொல்லவே இல்லை.

பின் அவராக மெல்லக் கேட்டார். “அங்கே ஏதோ ஒரு குருகுலம் இருப்பதாக நான் கேள்விப்பட்டேனே”

“சதானந்தகிரி சுவாமிஜியோட ஆசிரமம் பத்திக் கேக்கறீங்களா…. அது குரு ஷிகார் போகிற வழியில் இருக்கு. அது டூரிஸ்ட்கள் பார்க்கிற இடமில்லை. அங்கே பார்க்க ஒன்னுமில்லை. வேடிக்கை பார்க்கப் போகிறவங்களை அந்த சுவாமிஜி அனுமதிக்கிறதில்லை. பத்தோட பதினோராவது இடமா இந்தப் பக்கம் வராதீங்கன்னு துரத்திடுவார்…..” சொல்லி விட்டு டிரைவர் சிரித்தான்….

“சுவாமிஜி எப்படி?”

“நல்ல ஆள்….” என்று மிக மரியாதையுடன் டிரைவர் சொன்னான்.

“போகிற டூரிஸ்ட்களைத் துரத்தி விடுவார்னு சொன்னாயே”

“அவர் தன்னோட ஆசிரமத்தைக் கட்டுப்பாட்டோட நடத்தறவர். அங்கே விளையாட்டாவோ, வேடிக்கை பார்க்கவோ ஆள்கள் வர்றதை அவர் அனுமதிக்கறதில்லை. அங்கேயே இருந்து படிக்கறவங்க கூட ஒழுங்கீனமா இருந்தா உடனடியா துரத்திடுவார். மத்தபடி ஆள் ஞானி….. அவருக்கு நிறைய சக்திகள் இருக்கறதாவும் சொல்றாங்க…..”

“நான் முக்கியமா அங்கே தான் போகணும்…..”  


தானந்தகிரி சுவாமிஜியின் ஆசிரமம் ஆரவல்லி மலைத்தொடரில் அமைதியான பகுதியில் இருந்தது. ஆசிரமத்திற்குள் நுழைந்தவுடனேயே காவியுடை அணிந்த ஒரு இளைஞன் வந்து செந்தில்நாதன் வந்த நோக்கம் என்ன என்று விசாரித்தான். சுவாமிஜியைப் பார்க்க வேண்டும் என்று சொன்ன போது அப்பாயின்மெண்ட் வாங்கியிருக்கிறீர்களா என்று கேட்டான். இல்லை என்று சொன்ன போது ஏதோ குற்றம் செய்து விட்டு வந்தவர் போல அவரைப் பார்த்தான்.

செந்தில்நாதன் தன் போலீஸ் அடையாள அட்டையை அவனுக்குக் காண்பித்தார். ”நான் ஒரு ஆள் பத்தி அவருக்குத் தெரியுமான்னு கேட்கணும். இது ஒரு ரகசிய விசாரணை. அதனால தான் முதல்லயே பேசிட்டு வரலை…”

அவன் தலையாட்டி விட்டுப் போனான். ஐந்து நிமிடம் கழித்துத் திரும்பி வந்தான். “சுவாமிஜி பாடம் நடத்திகிட்டு இருக்கார். இன்னும் அரை மணி நேரத்துல முடியும். முடிஞ்சவுடன் வந்து பார்க்கிறதா சொன்னார்.”

செந்தில்நாதன் காத்திருந்தார். ஆசிரமம் மிகப் பெரியதாக இருந்தது. அங்கங்கே குடில்கள் நிறைய இருந்தன. சுற்றிலும் இயற்கை செழிப்பாக இருந்தது. வாசலில் நின்றபடி ரம்யமான சூழலை ரசித்தார். நகர நெருக்கடி இல்லாத அமைதியான இது போன்ற இடங்களில் மனம் தானாய் அமைதி அடைவதை அவரால் உணர முடிந்தது.

அரை மணி நேரத்தில் சுவாமிஜி வந்தார். நீண்ட வெண்தாடி வைத்திருந்த வயதான அந்த சுவாமிஜியைப் பார்த்து அவர் கைகூப்ப, சுவாமிஜியும் கைகூப்பினார். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட செந்தில்நாதன் சுற்றி வளைத்துப் பேசாமல் நேரடியாக விஷயத்துக்கு வந்தார்.

“சுவாமிஜி. நான் அமானுஷ்ய சக்திகள் நிறைய இருக்கிற ஒரு ஆளைப் பற்றி விசாரிக்க வந்திருக்கேன். நீங்களும் அதுமாதிரியான விஷயங்களைக் கற்றுக் கொடுக்கிறவர்னு கேள்விப்பட்டேன்…. நீங்கள் அப்படி ராஜயோகப் பயிற்சிகள் கொடுத்தவர்களில் பிரமிக்கற அளவுக்கு கத்துகிட்டவங்க யாராவது இருக்காங்களா?”

சுவாமிஜி கண்ணில் ஒரு மின்னல் வந்து போனது போல் செந்தில்நாதனுக்குத் தோன்றியது.

(தொடரும்)
என்.கணேசன் 


Wednesday, March 21, 2018

முந்தைய சிந்தனைகள் - 30

சில சிந்தனை அட்டைகள் என் நூல்களிலிருந்து....










என்.கணேசன்


Monday, March 19, 2018

சத்ரபதி – 12


த்தனை தான் ஒரு மனிதன் வீரனாக இருந்தாலும், திறமையும் கூடவே பெற்றிருந்தாலும் விதி அனுகூலமாக இல்லா விட்டால் எல்லாமே வியர்த்தமே என்பதை சகாயாத்ரி மலைத்தொடரில் ஒரு மறைவிடம் நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் ஷாஹாஜி பரிபூரணமாக உணர்ந்தார். வெற்றி மேல் வெற்றி அடைந்து வரும் வேளையில் எல்லாம் இப்படித் திடீரென்று தலைகீழாய் மாறும் என்று அவர் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. முகலாயப் பெரும்படை பீஜாப்பூர் சுல்தான் ஆதில்ஷாவை பரிபூரண சரணாகதி அடைய வைத்த செய்தி கிடைத்தவுடனேயே அவர் மிக எச்சரிக்கையுடன் தானிருந்தார். அடுத்த செய்தி ஒன்றரை நாளில் வந்து சேர்ந்தது. பீஜாப்பூர் சுல்தான் ஆதில்ஷா ஒரு பெரும்தொகையை  முகலாயச் சக்கரவர்த்தி ஷாஜஹானிடம் கப்பம் கட்டியதுடன், ஷாஹாஜியைச் சிறைப்பிடிக்க முகலாயப்படையுடன் தன் பீஜாப்பூர் படையையும் சேர்த்து அனுப்பியிருக்கிறாராம்….

நண்பன் பகைவனாவதும், பகைவன் நண்பனாவதும் அரசியலில் சகஜம் என்றாலும், அதற்குக் காரணம் அவரவருக்கு இருக்கும் நிர்ப்பந்தங்களே என்றாலும், ஒருவர் தனிமைப்படுத்தப்படும் காலங்களில் அது அதிகமாகவே பாதிக்கத் தான் செய்கிறது. கூடுதல் படைகள் வரும் முன்பே, பதுங்கியிருக்கும் கோட்டையிலிருந்து வெளியேறி விடுவது தான் புத்திசாலித்தனம் என்பது புரியவே ஷாஹாஜி அவர் அகமதுநகர் அரியணையில் ஏற்றியிருந்த சிறுவனைத் தூக்கிக் கொண்டு சிறு எண்ணிக்கை வீரர்களுடன் சேர்ந்து நேற்று நள்ளிரவு தான் ரகசியமாக வெளியேறினார்.

அந்தச் சிறுவனின் பாதுகாப்பு அவரைப் பொருத்த வரை மிக முக்கியமானது. “சாம்ராஜ்ஜியம் வேண்டாம் படைத்தலைவரே. என் மகன் உயிரோடிருந்தால் போதும்” என்று அந்தச் சிறுவனின் தாய் உறுதியாகச் சொல்லியிருந்தாள். ஷாஜஹான் அந்த ராஜவம்சத்து ஆண்வாரிசுகளையே அழித்து விடக் கங்கணம் கட்டிக் கொண்டிருந்ததால் அவள் மகன் உயிருக்கு ஆசைப்பட்டாளேயொழிய, மகன் அரசனாக வேண்டும் என்பதெல்லாம் அந்தச்சூழலில் அவளுக்குப் பேராசையாகவே அவளுக்குத் தோன்றியிருந்தது.  

’என்ன ஆனாலும் சரி அவன் உயிருக்கு ஆபத்து வராமல் நான் பார்த்துக் கொள்வேன்’ என்று ஷாஹாஜி சத்தியம் செய்து தந்த பிறகு தான் அச்சிறுவனின் தாய் அச்சிறுவனை அவர் அரியணை ஏற்ற சம்மதித்திருந்தாள். செய்த சத்தியத்தைக் காப்பாற்ற வேண்டிய பெரும்பொறுப்பு ஷாஹாஜிக்கு இருக்கிறது….

பயணக்களைப்பில் அவர் மார்பில் சாய்ந்து உறங்கியிருந்த அந்த அரச சிறுவனைப் பார்க்கையில் ஷாஹாஜிக்குத் தன் மகன் சிவாஜியை நினைக்காமல் இருக்க முடியவில்லை. இருவரும் ஒரே வயதினர் தான்…. சிவாஜியும் இந்த சகாயாத்ரி மலைத் தொடரில் தான் எங்கேயோ இருக்கிறான். மகனை நினைக்கையில் அவர் மனம் லேசாகியது. அவன் என்ன செய்து கொண்டிருக்கிறானோ…. !

ஓரிடத்தில் இளைப்பாற அவர்கள் குதிரைகளை நிறுத்திய போது அந்தச் சிறுவன் விழித்துக் கொண்டான். அந்தச் சிறுவனின் கண்களில் பயம் தெரிந்தது. அவனைப் பார்க்க ஷாஹாஜிக்குப் பாவமாக இருந்தது….. ’என் மகனும் இப்படிப் பயந்து கொண்டிருப்பானோ’

அதன் பின் இளைப்பாறிக் கொண்டிருக்கையில் எல்லாம் அவருக்கு சிவாஜி நினைவாகவே இருந்தது. அவன் எத்தனை தூரத்தில் இருக்கிறான். அவருக்குக் காணக் கிடைப்பானா என்றெல்லாம் மனம் யோசிக்க ஆரம்பித்தது. அவர் மகனை அவரிடம் ஒப்படைக்கத் தயங்கும் சத்யஜித்தின் மேல் கோபம் வந்தது. தந்தையை விடத் தாயிற்கு ஒரு குழந்தை மேல் உரிமை அதிகம் என்பதாய் அவன் தீர்மானித்ததில் அவருக்கு ஆத்திரமாய் இருந்தது. என்னவொரு முட்டாள்தனமிது என்று அவர் உள்ளம் கொதித்தது. ஆனால் அத்தனைக்கும் பின்னால் அவன் வீரர்களிடம் சொன்ன காரணத்தில் இருந்த உண்மையையும் அவரால் மறுக்க முடியவில்லை. ஜீஜாபாய்க்கு இப்போது இருப்பது சிவாஜி மட்டுமே!

ஒரு கணம் அவர் ஜீஜாபாய்க்காக மனமிரங்கினார். கட்டாயத்தில் திருமணம் நடந்ததாலோ என்னவோ ஆரம்பத்தில் இருந்தே அவர்கள் திருமண வாழ்க்கையின் அடித்தளத்தில் ஒரு பிசிறு இருந்து கொண்டேயிருந்தது. குடும்பங்கள் இணையவில்லை என்பது கூட இரண்டாம்பட்சக் காரணமே. அவர்கள் மனங்கள் இணையவில்லை என்பதே முதல் உண்மை. அவரது மாமியார் மால்சாபாய் தன் மகள் ஒரு மகாராணியாக வேண்டியவள் என்று அவர் காதுபடவே சொல்லியிருக்கிறார். என்ன தான் ஜீஜாபாய் வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளா விட்டாலும் அவளிடம் ஒரு மகாராணியின் தோரணை அவளறியாமலேயே இருந்தது. இத்தனைக்கும் அவள் ஒரு முறை கூடத் தன் பிறந்தகத்துப் பெருமையைக் காட்டிக் கொண்டதில்லை. அவர் குடும்பத்துக் குறைவைச் சுட்டிக் காட்டவில்லை. மரியாதைக் குறைவாக நடந்து கொண்டதில்லை. தன் பிறந்த வீட்டார் பற்றிப் பேசியது கூட இல்லை. ஆனால் இயல்பான பணிவை அவரால் அவளிடம் பார்க்க முடிந்ததில்லை. பெண்மையின் மென்மையை விட கம்பீரமே அவளிடம் விஞ்சியிருந்தது. அதை ஏனோ அவரால் ரசிக்க முடியவில்லை. அவர் தாய் இருந்த இடம் தெரியாதது போல் ஜீஜாபாய் இருக்கவில்லை. அவர் தாய் அரசியலில் கவனம் செலுத்தியதில்லை. அவர் தந்தையிடம் அதுபற்றிப் பேசியதை அவர் ஒருபோதும் கண்டதும் இல்லை. ஆனால் ஜீஜாபாய் அரசியல் நிகழ்வுகளைக் கூர்ந்து கவனிப்பவளாகவும், அது குறித்துக் கருத்துத் தெரிவிப்பவளாகவும் இருந்தாள். பல நேரங்களில் அவள் கருத்துக்கள் அவருடைய கருத்துக்களை விட புத்திசாலித்தனமாகவும், மேம்பட்டதாகவும் இருந்தன. இப்படி அந்தஸ்து மாத்திரமல்லாமல் மற்ற சில விஷயங்களிலும் அவரை விட ஒருபடி மேலேயே ஜீஜாபாய் இருந்ததாய் அவர் உணர்ந்ததாலோ என்னவோ அவர் ஒரு இடைவெளியை என்றுமே தங்கள் மணவாழ்க்கையில் உணர்ந்தார்.

அவர் இரண்டாவது மனைவி துகாபாயிடம் இந்தப் பிரச்சினைகள் ஏதும் இருக்கவில்லை. அவளுடைய பிறந்த வீட்டு அந்தஸ்து குறைந்ததாகவே இருந்தது. அவளுக்கு அரசியல் புரியவில்லை. குடும்பத்தை மட்டுமே பிரதானமாக நினைக்கும் வீட்டுப் பெண்மணியாகவே இருந்தாள். அவர் சொல்வதே வேதவாக்கு என்று அவள் நினைத்தாள். அவளுடைய தந்தையும், சகோதரனும் ஷாஹாஜியை ஒரு அரசனுக்கு இணையாகப் பார்த்தார்கள். அவள் சாம்பாஜியையும் தன் மகனைப் போலவே எண்ணிப் பாசமாக வளர்த்து வருகிறாள். ஷாஹாஜிக்கு அவையெல்லாம் திருப்தியைத் தருவனவாக இருந்தன.   அதனாலேயே அவர் ஜீஜாபாயை பீஜாப்பூருக்கு வரவழைத்துக் கொள்ளவில்லை. அழைத்தாலும் அவள் இன்முகத்தோடு வந்திருப்பாளா என்ற சந்தேகமும் அவருக்கு இருக்கிறது. தானில்லாமல் தன் இரண்டாம் மகனை அவள் அனுப்பியிருக்கவும் மாட்டாள். இந்தக் காரணங்களால் தன் இரண்டாம்  மகனை அவர் தன்னுடன் இருத்திக் கொள்ள முடியாமல் போனது. அந்தக் குறை அவர் மனதில் இப்போதும் இருக்கிறது…. இப்போது அவன் தந்தை தாய் இருவருமில்லாமல் யாரோ ஒருவனுடன் இந்த மலைத் தொடரில் எங்கேயோ இருக்கிறான்….. இப்போது இந்த அரச சிறுவன் எல்லோரையும் விட்டு அவர் தயவில் இருப்பதைப் போலவே!....





த்யஜித் ஷாஹாஜி சகாயாத்ரிக்கு வந்து சேர்ந்ததை அறிந்தான். ஆரம்பத்தில் அவர் சிவாஜியைத் தேடித் தான் அங்கு வந்திருக்கிறாரோ என்று சந்தேகப்பட்டான். ஆனால் பிற்பாடு தான் அங்கு அவர் மறைவிடம் தேடி வந்திருக்கிறார் என்பது தெரிந்தது. மறைவிடம் தேடி வந்தவர் அங்கு மகனைத் தேடவும் வாய்ப்பிருக்கிறது…. தந்தையைப் பார்த்தவுடன் மகன் அவருடன் போய் விடவும் வாய்ப்பிருக்கிறது….

“எதற்காகக் கவலைப்படுகிறாய் மாமா” என்று ஒரு மரக்கிளையில் அமர்ந்து கொண்டிருந்த  சிவாஜி கேட்டான்.

இந்தச் சிறுவனின் உள்ளுணர்வு மிகவும் சூட்சுமமானது என்று சத்யஜித் நினைத்துக் கொண்டான். சிவாஜி தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களுடைய எந்தச் சிறு வித்தியாசத்தையும் உடனடியாக அறிந்து கொண்டு விடுகிறான்…

“இந்த மலைத் தொடருக்கு வேறு சில வீரர்களும் வந்திருக்கிறார்கள் போலத் தெரிகிறது. அதைப் பற்றி யோசித்தேன்…..” சத்யஜித் சொன்னான்.

“அவர்கள் நம் எதிரிகளா?”

உண்மையைச் சொல்வதில் சத்யஜித் தர்மசங்கடத்தை உணர்ந்தான். பின் மெல்லச் சொன்னான். ”ஆட்களைப் பார்க்காமல் எதையும் சொல்ல முடியாது. ஆனால் நாம் எச்சரிக்கையாக மறைவாகவே இருப்பது நல்லது…..”  



தூரத்தில் ஒற்றைக் குதிரையின் காலடியோசை கேட்டது. ஷாஹாஜியும், வீரர்களும் எச்சரிக்கையானார்கள். அவர் தன் வீரன் ஒருவனைப் பார்த்துத் தலையசைக்க அவன் எழுந்து போய் மேடான இடத்திற்குச் சென்று கூர்ந்து பார்த்து விட்டு வந்தான். “நம் ஆள் தான் தலைவரே. ஏதோ செய்தி கொண்டு வருகிறான் போலிருக்கிறது…..”

சிறிது நேரத்தில் செய்தி கொண்டு வந்த குதிரை வீரன் அரச சிறுவன் முன் அந்த செய்தியைச் சொல்லத் தயங்கவே ஷாஹாஜி தள்ளிப் போய் அவன் கொண்டு வந்த செய்தி என்னவென்று கேட்டார்.

அவன் தாழ்ந்த குரலில் சொன்னான். “முகலாயச் சக்கரவர்த்திக்குத் தாங்கள் தப்பிச் சென்று விட்ட செய்தி எட்டி விட்டது தலைவரே. எப்படியாவது தங்களைப் பிடித்து விடக் கட்டளையிட்டிருக்கிறார். அப்படித் தங்களைப் பிடிக்க முடியாமல் போனாலும் அரசரைக் கண்டுபிடித்து சிறுவன் என்றும் பாராமல் அவரைக் கொன்று விடும்படி கட்டளையிட்டிருக்கிறார்…… அப்படி அவர் பிணத்தை ஒப்படைப்பவர்களுக்குப் பெரிய சன்மானம் ஒன்றை அறிவித்திருக்கிறார்…. தங்களையும் மன்னரையும் சிறைப்படுத்திக் கொண்டு செல்ல ஒரு பெரும்படை தயாராகிக் கொண்டிருக்கிறது….”

ஷாஹாஜி அதிர்ந்து போனார். அரியணையில் அமர்த்திய அந்தச் சிறுவனின் தாயார் பயப்பட்டது போலவே நடந்திருக்கிறது. அவர் தன் உயிரைக் கொடுத்தாவது அந்தச் சிறுவனைக் காப்பாற்றியாக வேண்டும்…..

(தொடரும்)
என்.கணேசன்