தன் முன் வந்து நின்ற மனோகரை மாணிக்கம் கூர்மையாகப் பார்த்தபடி
அமரச் சொன்னார். மனோகர் அமைதியாக அமர்ந்தான். அவன் அவர்களை வில்லங்கத்தில் மாட்டிவிடும்
சூழ்ச்சியாளனா, இல்லை நட்பு பாராட்டி தான் வந்திருக்கிறானா என்பதை அவரால் அவன் தோற்றத்தை
வைத்து ஊகிக்க முடியவில்லை. பேச்சைப் பதிவு செய்யும் அதிநுட்பக் கருவி ஏதாவது அவன்
உடைக்குள் மறைத்து வைத்திருந்தாலும் வைத்திருக்கலாம்.
மிகவும்
கவனமாக மாணிக்கம் அவனிடம் சொன்னார். “நீங்கள் யாரோ எதிரியைப் பத்தி என்னவோ சொன்னதாய்
மாமா சொன்னார். அந்த நபர் எங்க எதிரியே அல்ல. அவருக்கு நாங்க எந்தத் தீமையும் நினைக்கல.
அவர் இப்பவும் நலமாய் தான் இருக்கார். குற்றமே நடக்கலைங்கறப்ப குற்றவாளியா யாரும் ஆகவும்
முடியாது. குற்றம் செய்ய முயற்சி செய்தோம்கிறதுக்கு ஆதாரமும் எதுவுமில்லை. அரசியல்
பகை காரணமாய் எங்களைப் பயமுறுத்த எங்கள் எதிர்க்கட்சிக்காரர்களோ, எதிரியோ அனுப்பின
ஆளாய் நீங்கள் இருந்தா அவங்க கிட்டயே திரும்பிப் போய் “எங்களுக்கு மடியில் கனமுமில்ல,
அதனால வழியில பயமும் இல்லை”ன்னு நீங்க சொல்லணும்…..”
அவர்
புத்திசாலித்தனமாக எந்தப் பெயரையும் சொல்லாமல், குற்றம் பற்றியும் சொல்லாமல், குற்றத்தை
ஒப்புக் கொள்ளாமல் மறுத்தே தைரியமாய் பேசின விதம் சங்கரமணியை மனதில் சபாஷ் போட வைத்தது.
‘என் மருமகனா கொக்கா?’
மனோகர்
அமைதியாகச் சொன்னான். “நான் எதிரி அனுப்பின ஆளும் இல்லை. நம்ம பேச்சை பதிவு பண்ணிக்கவும்
நான் நினைக்கலை. அதனால நீங்க பயப்படவே வேண்டாம். செந்தில் நாதன் புள்ளிகள் இருந்தால்
போதும் சரியா சேர்த்து கோலம் போடத் தெரிஞ்ச ஆள். அவர் க்ரிஷ் காணாமல் போன மலைப்பக்கத்துல
உங்க மாமாவை பார்த்ததாய் ஒரு ஆள் சொன்னவுடனேயே உங்க மாமாவோட செல்போன் கால்ஸை எல்லாம்
செக் பண்ணிருக்கார். அதுலே க்ரிஷ் காணாமல் போன சில நாட்களுக்கு முன்னாலே இருந்து ஒரு
நம்பருக்கு அடிக்கடி போன கால்ஸ் பத்தின விவரங்களைச் சேகரிச்சிருக்கார். அந்த நம்பர்க்காரன்
ஒரு வாடகைக் கொலையாளின்னும் அவன் பாம்பு கடிக்க வச்சு சில பேரைக் கொலை செய்திருக்கான்னும்
கண்டுபிடிச்சிருக்கார். உங்க மாமா பத்தி முதலமைச்சருக்கு முதல்லயே நல்ல அபிப்பிராயம்
கிடையாது…..”
மாணிக்கம்
உள்ளூரப் படபடத்தாலும் வெளிப்பார்வைக்கு அமைதியாக இடைமறித்தார். “முதலமைச்சருக்கு சந்தேகம்
வந்தால் அதை நிவர்த்தி செய்யறது எங்க கடமை. அதை நாங்க பார்த்துக்குறோம். நீங்க கிளம்புங்க….”
மனோகர்
அமைதியாகவே சொன்னான். “இவர் அந்த மலையடிவாரம் வரைக்கும் அந்த வாடகைக் கொலையாளியோட அன்னைக்கு
ராத்திரி போனதுக்கும் அந்தப் பாம்போட அந்த வாடகைக்கொலையாளி மலை மேல போய் க்ரிஷைக் கொன்னுட்டு
வர்ற வரைக்கும் இவர் கார்லயே உட்கார்ந்திருந்ததுக்கும் என் கிட்ட ஆதாரம் இருக்கு. கொலை
முயற்சி பண்ணி ஆள் சாகாட்டியும் கொலை முயற்சியே குற்றம் தான்னு உங்களுக்குத் தெரியாமலிருக்காது….”
மனோகர்
இஸ்ரோ புகைப்படம் ஒன்றை அலட்சியமாய் எடுத்து எதிரிலிருந்த டீப்பாயில் போட்டான். அதில்
பாம்போடு வாடகைக் கொலையாளி காரிலிருந்து இறங்குவதும், அந்தக் காரில் சங்கரமணி அமர்ந்திருப்பதும்
மிகத் தெளிவாகத் தெரிந்தது. மாணிக்கமும், சங்கரமணியும் சிலையாய் சமைந்தார்கள். இருவர்
முகங்களும் வெளுத்தன.
“இது
ஒரு சாம்பிள் ஃபோட்டோ தான். மீதியும் என் கிட்ட இருக்கு. ஒரு செட்டை நான் ராஜதுரைக்கும்,
இன்னொரு செட்டை கமலக்கண்ணனுக்கும் அனுப்பி வைக்கிறேன்…. அவங்க இதைக் கொலை முயற்சியா
இல்லையான்னு தீர்மானிச்சுக்கட்டும்….”
சங்கரமணி
கைகள் நடுங்க அந்தப் புகைப்படத்தை எடுத்துப் பார்த்தார். அது நிஜமான புகைப்படம் தான்.
அதில் இருப்பது அவர் தான் என்று மூன்று வயதுக் குழந்தை கூட அடையாளம் காட்டும்.
மாணிக்கம்
மிகவும் கஷ்டப்பட்டு அமைதியாகச் சொன்னார். “நீங்க ப்ளாக்மெயில் செய்யறது ஒரு அமைச்சரைன்னு
மறந்துடாதீங்க. அரசியல்ல பல களங்கள் பார்த்தவன் நான்…..”
“இந்த
ஃபோட்டோஸ் அவங்க ரெண்டு பேர் கைலயும் கிடைச்சதுக்கப்பறமும் நீங்க அமைச்சரா இருக்க முடியும்னு
நினைக்கிறீங்களா?” மனோகர் அதே அமைதியுடன் கேட்டான். “நீங்க அமைச்சர் பதவியை இழந்துட்டா
அப்பறம் பார்க்கப் போறது களம் அல்ல, ஜெயில்….”
மனோகர்
எழுந்து கிளம்பத் தயாரானான். மாணிக்கம் பலவீனமான குரலில் சொன்னார். “தயவு செஞ்சு உட்காருங்க.
உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க”
மனோகர்
மறுபடி அமர்ந்தான். “என் நோக்கம் உங்களைப் பயமுறுத்தறது அல்ல. நான் வந்தது உங்களுக்கு
உதவத் தான். நம்ம ரெண்டு பேருக்கும் இருக்கிற பொது எதிரியை அழிக்க உங்களை பலப்படுத்த
தான் வந்தேன். நீங்க ரொம்ப புத்திசாலித்தனமா ஜாக்கிரதையா இருக்கிறதா நினைச்சு என்னை
அவமானப்படுத்தினதால தான் இந்த ஃபோட்டோவையே காண்பிக்க வேண்டி வந்துச்சு…..”
போன
உயிர் பாதி திரும்பி வந்தது போல் இருந்தது சங்கரமணிக்கும், மாணிக்கத்துக்கும். மாணிக்கம்
மெல்லக் கேட்டார். “அந்த லாரி….?”
மனோகர்
ஆமாம் என்று தலையசைத்தான்.
மாணிக்கம்
பெருமூச்சு விட்டார். “மன்னிச்சுக்கோங்க. இப்ப எல்லாம் பத்திரிக்கைக்காரனுகளும், டிவிகாரனுகளும்
கூட வந்து தங்களோட யூகங்களை எல்லாம் சொல்லி நம்ம வாயில இருந்து வார்த்தைகளை வரவழைக்கப்
பார்க்கறது அதிகமாய் இருக்கு. அதனால தான் சந்தேகப்பட்டேன்….”
மனோகர்
அலட்டாமல் சொன்னான். “பரவாயில்லை. இனி ஒழுங்கா
பேசிக்கலாமா?”
மனோகர்
தலையசைத்தார். “நான் என்ன செய்யணும் சொல்லுங்க”
“நீங்க
முதலமைச்சராகணும்….”
மாணிக்கம்
தன் காதில் விழுந்த வார்த்தை சரிதானா என்கிற சந்தேகத்தோடு மனோகரைப் பார்த்தார். அவன்
மௌனமாக இருந்தான்.
மாணிக்கம்
சொன்னார். “ராஜதுரை அண்ணன் இப்பவும் மக்கள் மனசுல உயர்ந்து நிற்கிற ஒரு தலைவர். அவர்
இருக்கறப்ப வேற யாரையும் மக்கள் முதலமைச்சரா ஏத்துக்க மாட்டாங்க. எம் எல் ஏக்களும்
அவருக்கு எதிரா நிக்க மாட்டாங்க…”
மனோகர்
சாதாரணமாகச் சொன்னான். “அவருக்கு இதயக்கோளாறு இருக்கு. என்னேரமும் போய்ச் சேர்ந்துடலாம்…..”
அவன்
சொன்ன விதம் மாணிக்கத்தின் ரத்தத்தைச் சில்லிட வைத்தது. எப்போது வேண்டுமானாலும் அவரை
அப்புறப்படுத்தி விடலாம் என்று அவன் சொன்ன மாதிரி இருந்தது. இவன் ஆபத்தானவன் என்று
ஒருபுறம் மனம் எச்சரித்தது. இன்னொரு புறம் மனம் அடுத்த முதலமைச்சராக ஆனால் எப்படி இருக்கும்
என்று கனவு காண ஆரம்பித்தது. இதெல்லாம் நடக்குமா என்பது போல அவனை அவர் பார்த்தார்.
மனோகர்
சொன்னான். “அதிர்ஷ்டம் கதவைத் தட்டறப்ப தயார் நிலையில் இருக்கறவன் தான் புத்திசாலி.
ராஜதுரை இறந்தால் அந்தச் சூழ்நிலையைச் சாதகமா பயன்படுத்திக்க நீங்க தயாரா?”
“என்ன
செய்யணும்?”
மனோகருக்கு
அந்த ஆள் மீது கோபம் தான் வந்தது. இப்போதும் அமுக்கமாய் தான் என்ன செய்வதென்று கேட்கிறான்….
“சேர்த்த
காசைச் செலவு செய்யணும். எம்.எல்.ஏக்களை உங்க பக்கம் இழுத்துக்கணும். முதலமைச்சராகணும்…”
மாணிக்கத்திற்கு
இப்போதும் சின்னதாய் ஒரு நெருடல் இருந்தது. முதலமைச்சர் கனவு கூட இதுநாள் வரை ராஜதுரைக்குப்
பின் என்பதாகத் தான் இருந்ததே ஒழிய, ராஜதுரையைத்
தீர்த்துக்கட்டி முதலமைச்சராவதற்கு அவர் எப்போதுமே நினைத்ததில்லை….. இவன் இன்னமும்
இவனுக்கு ஆக வேண்டியதைச் சொல்லி விடவில்லை. என்ன கேட்பானோ!
அப்போது
அவர் செல்போன் இசைத்தது. யார் என்று பார்த்தார். ராஜதுரை! கை நடுங்க செல்போனை எடுத்துப்
பேசினார். “வணக்கம் அண்ணா சொல்லுங்க”
ராஜதுரையின்
குரல் இறுக்கமாக இருந்தது. “மாணிக்கம் உன் கிட்ட கொஞ்சம் பேச வேண்டி இருக்கு. நாளைக்கு
காலைல பத்து மணிக்கு கட்சி அலுவலகத்துக்கு வந்துடு”. வேறு எதுவும் பேசாமல் ராஜதுரை
இணைப்பைத் துண்டித்து விட்டார்.
அவர்
நாளை பேசப் போவது தனக்கு சாதகமாக இருக்கப் போவதில்லை என்பது மாணிக்கத்துக்குப் புரிந்தது.
“அவர் நாளைக்கு காலைல பேச கட்சி அலுவலகத்துக்கு வரச் சொல்றார்.”
“நீங்க
எனக்கு முழு ஒத்துழைப்பு தர்றதாய் இருந்தால் காலைல அவர் கட்சி அலுவலகத்துக்கு வர மாட்டார்.
ஆஸ்பத்திரில இருப்பார்” மனோகர் அலட்டாமல் சொன்னான்.
மாணிக்கம்
சிறிது நேரம் ஒன்றும் சொல்லாமல் மௌனமாய் இருந்தார். ஆனால் மனமோ கொந்தளித்துக் கொண்டிருந்தது.
கடைசி
ஆயுதமாய் அவருடைய நிலைமையை மனோகர் சொன்னான். “உங்க முன்னாடி ரெண்டு வழி இருக்கு. ஒன்னு
இருக்கற அமைச்சர் பதவியும் இழந்து விசாரணைக்கு உட்படறது. இன்னொன்னு முதலமைச்சராய் ஆகறது.
நான் சொல்றபடி கேட்டா ரெண்டாவது பலிக்கும். இல்லைன்னா முதலாவது பலிக்கும்…..”
எச்சிலை
முழுங்கிக் கொண்டு மாணிக்கம் சொன்னார். “நீங்க சொல்றபடி கேட்கறேன்.”
(தொடரும்)
என்.கணேசன்