Thursday, December 14, 2017

இருவேறு உலகம் – 61

                           
தயின் கார் நெருங்கிய போது க்ரிஷ் ஜன்னலோரம் தெரிந்தான். அவன் இருட்டில் நின்றிருந்த மர்ம மனிதனைக் கவனிக்கவில்லை. அவன் தன் அண்ணனுடன் ஏதோ சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தான். மர்ம மனிதன் தன் முழு சக்தியையும் திரட்டி க்ரிஷ் மீது செலுத்தினான். பொதுவாக மர்ம மனிதனின் இது போன்ற சக்திப் பிரயோகங்களில் எதிராளிகள் செயலற்றுப் போய் விடுவது வழக்கம். அவர்கள் இரும்புச்சங்கிலியால் இறுக்கமாகக் கட்டப்பட்டவர்கள் போல் உணர்வார்கள். அசையவோ பேசவோ முடியாது. மர்ம மனிதனாகத் தீர்மானித்து அவர்களை விடுவிக்கும் வரை அவர்கள் அப்படியே தான் இருக்க வேண்டி வரும். ஆனால் முதல் விதிவிலக்காக க்ரிஷ் இருந்தான். அவன் அண்ணனைப் பார்த்துக் கொண்டே பேசியது சிறிய அளவிலும் தடைப்படவில்லை. மர்ம மனிதன் அனுப்பிய சக்திகள் க்ரிஷை அடையவே இல்லை. உதயின் கார் சிறிது நேரத்தில் மர்ம மனிதனின் கண்பார்வையிலிருந்து மறைந்தது.

இப்படி ஆகலாம் என்று மனதின் ஒரு மூலையில் முன்பே உள்ளுணர்வு சொல்லி இருந்த போதும் அவனுக்கு அதை முழுமையாக நம்பிவிட முடிந்திருக்கவில்லை.  மாஸ்டரைப் போல் மாஸ்டரை விட ஒருபடி மேலே சக்திகள் சேர்த்து வைத்திருந்த தானும் தோற்றுப் போனது அவனுக்குப் பெரும் அவமானமாக இருந்தது. எத்தனையோ பெருந்தலைகளுடன் மோதி ஜெயித்தவன், மாஸ்டரிடமே அவ்வப்போது கண்ணாமூச்சி விளையாட முடிந்தவன் ஒரு பொடியனிடம் தோற்று நிற்பது சகிக்கக் கூடியதாக இல்லை. உள்ளுக்குள் எழுந்த கோபம் விஸ்வரூபம் எடுத்தது. இனி அவன் ஓயப்போவதில்லை. அந்தக் கோபமே இனி அவனது பெருந்தூண்டுதலாக இருக்கும். அந்தக் கோபம் அவனை மேலும் பலப்படுத்துவதாகவும், முயற்சி செய்ய வைப்பதாகவும் இருக்கும். மாஸ்டரும் க்ரிஷைப் படிக்க முடியாததை அவமானமாகவே நினைத்திருப்பார். அவர் என்ன செய்யப் போகிறார் என்பதும், மாஸ்டருடன் க்ரிஷ் என்ன பேசினான், அங்கு என்ன நடந்தது என்பதும் தெரிந்தால் தான் அடுத்து என்ன செய்வது என்பதை அவன் தீர்மானிக்க முடியும்….


தய்க்கு தம்பி ஒரு சூப்பர் மேனாகத் தெரிந்தான். அவன் ஒருவனிடம் போன் பேசி முடித்து வருவதற்குள் அவனை விட அதிகமாக க்ரிஷ் மாஸ்டரிடம் நெருங்கி விட்டது ஆச்சரியமாக இருந்தது. அவன் அவரிடம் எதையோ கற்றுக் கொள்ளப் போவதாகவும், அதை அவர் அவனுக்குக் கற்றுத்தர சம்மதித்து விட்டதாகவும் தெரிந்த போது கண்கள் விரியத் தம்பியைப் பார்த்தான். அவரைப் பார்க்க அனுமதி கிடைத்ததும் சந்தித்ததும் கூடப் பெரும் பாக்கியமாக நினைப்பதாக மாணிக்கம் போன்றவர்களே சொல்கையில் இவன் சில நிமிடங்களிலேயே எப்படி இதைச் சாதித்தான் என்று பிரமிப்பாக இருந்தது. ஆனால் க்ரிஷின் முகபாவனையில் இருந்து எதையும் அவனால் யூகிக்க முடியவில்லை. இவன் நேர்மை, மனசாட்சி என்பதை எல்லாம் கொண்டாடாதவனாக இருந்திருந்தால் அரசியலில் அவர்களை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டிருப்பான்…. கல்லுளிமங்கன் காணாமல் போன போது நடந்த எதையும் வீட்டாரிடம் கூடச் சொல்லவில்லை. இப்போதும் ஒன்றுமே தெரியாதது போல் தான் முகத்தை வைத்திருக்கிறான்…. அந்த அழுத்தம் கூட உதய்க்கு நினைக்கப் பெருமையாக இருந்தது. மெலிதாகப் புன்னகைத்தான்.

க்ரிஷ் கேட்டான். “என்ன விஷயம்?”

”நீ அரசியலுக்கு வந்தா எப்படி இருக்கும்னு நினைச்சேன்…..”

“ஆமா அது ஒன்னு தான் பாக்கி”

“வாய்கிழிய அரசியல்வாதிகளைப் பத்திப் பேசறியே. அரசியல்ல இறங்கி தான் பாரேன். அப்ப தெரியும் ஒரு அரசியல்வாதிக்கு எத்தனை கட்டாயங்கள் இருக்குன்னு…”

“உதய் நான் ஒன்னு கேட்டா நேர்மையா பதில் சொல்லுவியா?அரசியல்வாதி தப்பு செய்யறதுல எத்தனை கட்டாயத்துல? எத்தனை பேராசையில….”

உதய் பதில் பேசவில்லை. இரண்டுக்கும் இடையே ஒரு மெல்லிய கோடு தான் இருக்கிறது. அதை எப்போது தாண்டுகிறோம் என்பதே தெரியாத அளவுக்கு மெல்லிய கோடு அது. தாண்டியபின் யாரும் திரும்பிப் பார்ப்பதில்லை…..


க்ரிஷ் போன பிறகு சுரேஷால் மாஸ்டரிடம் சொல்லாமல் இருக்க முடியவில்லை. “க்ரிஷ் வசியக்கலை கத்துகிட்ட மாதிரி இருக்கு மாஸ்டர்…”

மாஸ்டர் புன்னகைத்தார். சுரேஷ் முகத்தில் பெரிய குழப்பம் தெரிந்தது. அவரை ஆகாய அளவு உயர்த்தி வைத்துப் பூஜிப்பவன் அவன். அவர் திடீரென்று கீழே இறங்கி வந்து விட்டது போல் அவன் உணர்ந்தது அவன் தவறல்ல. க்ரிஷைச் சந்திப்பதற்கு முன் அவனைச் சீடனாக அவர் ஏற்றுக் கொள்வார் என்று யாராவது சொல்லியிருந்தால் அவரே சொன்ன ஆளை ஏளனமாகத் தான் பார்த்திருப்பார். அவர் க்ரிஷைச் சீடனாக ஏற்றுக் கொண்டதற்கு மிக முக்கிய காரணம் அவனுடைய சமரசமில்லாத நேர்மை தான். அவன் எதிரியின் ஆளாய் இருந்தால் கூட அவனுடைய நேர்மையை அவரால் சந்தேகிக்க முடியவில்லை….

சுரேஷிடம் மென்மையான குரலில் சொன்னார். “பெற்ற ஞானமெல்லாம் ஒரு விதத்தில் கடன் தான் சுரேஷ். தகுதி வாய்ந்த சீடன் வந்து கேட்டால் தந்தே ஆக வேண்டிய கடன்……”  

“கேட்டவன் நம் குருவைக் கொன்ற எதிரியின் ஆளாக இருந்தால் கூடவா..?”

“ஆமாம்…. அவனுக்கு அந்தக் குற்றத்தில் பங்கில்லாத வரையில்…”

“உங்களிடமிருந்து கிடைத்த ஞானத்தை அவன் தவறாகப் பயன்படுத்திக்க வாய்ப்பு இருக்கில்லையா மாஸ்டர்”

“யாருமே ஞானத்தைத் தவறாகப் பயன்படுத்திக்க முடியாது சுரேஷ். தவறாகப் பயன்படுத்த முடிஞ்சா அது ஞானம் அல்ல. அது வெறும் அறிவு மட்டும் தான். அறிவை யாரும் நல்லதுக்கும் பயன்படுத்திக்கலாம் கெட்டதுக்கும் பயன்படுத்திக்கலாம்…. ஆனால் அறிவின் இந்தப் பிரச்னை ஞானத்துக்கு இல்லை…. ஞானம் நல்ல வழியை மட்டும் தான் காட்டும்….”

அவன் பேச்சிழந்து சிறிது நேரம் மௌனமாக நின்றான். ”ஆனாலும் இதுக்குப் பின்னால் எதோ சூழ்ச்சி இருக்கிற மாதிரி எனக்கு இப்பவும் தோணுது மாஸ்டர்…. நம்ம குருவைக் கொன்னவனோட ஆளாகவே மட்டும் பார்க்கறதால அப்படித் தோணுதான்னு தெரியலை. ஆனா தோணுது”

அவர் ஒன்றும் சொல்லாமல் புன்னகைத்தார். அவன் தொடர்ந்து சொன்னான். “நம்ம இயக்கத்துலயும் இதை எப்படி எடுத்துக்குவாங்கன்னு எனக்குத் தெரியல மாஸ்டர். எல்லாருமே க்ரிஷை எதிரி ஸ்தானத்துல வெச்சு தான் பார்க்கறாங்க. நீங்க வாரணாசி போயிருந்த போது இயக்கத்து ஆள்களைக் கூட்டி விஸ்வம் ஐயா குருவோட மரணத்தைச் சொன்ன போது எல்லாருமே கொதிச்சுப் போனதை நான் என் கண்ணால பார்த்தேன். எதிரியின் ஆளை நீங்க சிஷ்யனாய் ஏத்துகிட்டதை அவங்களால ஏத்துக்க முடியுமான்னு பயப்படறேன்…..”

தனிமனித சுதந்திரங்கள் தலைவருக்கு இருப்பதில்லை. இதனாலேயே தலைமைப் பொறுப்பு பல நேரங்களில் முள் கிரீடமாய் மாறிவிடுகிறது…. பிடிக்கிறதோ இல்லையோ தன்னைச் சார்ந்திருக்கும் மக்களை அனுசரிக்கும் அவசியமும், அவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கிற பொறுப்பும் தலைவனுக்குக் கண்டிப்பாக இருக்கிறது…. பெருமூச்சு விட்ட மாஸ்டர் அமைதியாக சுரேஷிடம் சொன்னார். “விஸ்வத்து கிட்ட சொல்லி நம்ம இயக்கத்து ஆள்களை எல்லாம் சந்திக்க ஏற்பாடு செய்யச் சொல் சுரேஷ் நான் அவங்க கிட்டே பேச வேண்டியிருக்கு…..”

சுரேஷ் திகைத்தான். இதற்கு முந்தைய ஹரித்வார் கூட்டத்தில் எதிரி மீதும் க்ரிஷ் மீதும் வெறுப்பை உமிழ்ந்த உறுப்பினர்கள், க்ரிஷை சீடனாக ஏற்றுக் கொண்ட மாஸ்டரிடம் எப்படி நடந்து கொள்வார்கள் என்று பயந்தான்.

அதை மாஸ்டரால் படிக்க முடிந்தது. ஆனால் அவன் பயம் அவரைத் தொற்றிக் கொள்ளவில்லை. ஒருவேளை தலைமைப் பொறுப்பில் இருந்து விலக நேர்ந்தால் சிறு மனச்சுளிப்பு கூட இல்லாமல் அவர் விலகத் தயாராக இருந்தார்….

அது சுரேஷுக்குப் புரிந்தே இருந்தது. ஒரு சந்திப்பிலேயே க்ரிஷ் மாஸ்டரை இப்படி ஒரு நிலைமைக்கு வரவழைத்து விட்டானே என்று மனதுக்குள் பொருமினான்.

(தொடரும்)
என்.கணேசன் 

9 comments:

  1. Amazing and thoughtful writing sir. Hats off to you.

    ReplyDelete
  2. இந்த வார அப்டேட் சூப்பர் சார். கதை சுவாரசியத்தோட பல விஷயங்களை ரொம்ப அழகாக விவரிச்சிருக்கீங்க. அருமை. அருமை.

    ReplyDelete
  3. அருமை...வழக்கம் போல். ஆனால் இந்த எபிசோடு சுருக்கமாக/குறைவாக இருப்பது போல் ஒரு உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.
    வாழ்க வளமுடன்....

    ReplyDelete
  4. முதல் வரி படிக்க ஆரம்பித்த உடனே, பதிவின் கடைசி வரி வந்த உணர்வு.....
    அர்த்தம் நிறைந்த விளக்கங்கள் கொண்ட பதிவு.....
    க்ரிஷ் படிக்க முடியாத மர்ம மனிதனின் கோபம் என்ன விளைவுகளை ஏற்படுத்துமோ...?

    ReplyDelete
  5. இந்த மாதிரியான உரையாடலை எல்லோராலும் உட்கிரகித்தல் கொஞ்சம் கடினம்.இருவேறு உலகம் இனிமேல் முழுநேர உலகம்.

    ReplyDelete
  6. எதிரியா இருந்தாலும் மர்ம மனிதன் தோல்வியை...எடுத்துக் கொண்ட விதம் அருமை.
    அரசியல் பத்தி கிரிஷ் சொன்னது கூட சூப்பர்...
    மாஸ்டரின் நேர்மை அடடா.... இப்படி பட்ட மனிதன சந்திக்கிறதே பெரும் பாக்கியம்....

    சீக்கிரம் நல்ல தேதியா பாத்து class ஆரம்பிங்க மாஸ்டர்... உங்களுக்கு நிறைய அதிர்ச்சி இருக்கும்னு நினைக்கிறேன்..

    ReplyDelete
  7. 'மெல்லிய கோடு' மிக அருமையான விளக்கம் தாண்டியபின் திரும்ப நினைப்பதில்லை அறிவுக்கும் ஞானத்துக்குமான விளக்கம் விளங்கியது உண்மையும் நேர்மையும் என்றும் பொயிக்கமுடியாது என்ற நம்பிக்கைகயை கொடுக்கிறது.

    ReplyDelete