மர்ம மனிதன் வேகமாக முடிவுகள் எடுப்பதிலும் அவற்றைச் செயல்படுத்துவதிலும்
என்றுமே முன்னிலை வகிப்பவன். அவனையே க்ரிஷின் வேகமான அணுகுமுறை அசர வைத்தது. திட்டமிட்டு
மாஸ்டரின் எதிரியாக க்ரிஷை இருத்தி வைக்க அவன் நிறையவே மெனக்கெட்டிருக்கிறான். முதல்
சந்திப்பிலேயே மாஸ்டரின் எதிரி என்கிற நிலையிலிருந்து இருந்து சீடன் என்கிற பாதுகாப்பான
நிலைக்கு க்ரிஷ் இடம் மாறுவான் என்று அவன் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஹரித்வார்
கூட்டம் மாஸ்டரின் முடிவை எந்த விதத்திலும் மாற்றாது என்பதை அவன் அறிவான். ஒரு வார்த்தை
கொடுத்து விட்டால் எந்த நிலையிலும் அவர் அதிலிருந்து பின்வாங்குபவரல்ல. அவரது வார்த்தை
ஒவ்வொன்றும் அவரைப் பொருத்த வரை சத்தியப் பிரமாணம் தான். இயக்க உறுப்பினர்கள் தீவிரமாக
எதிர்ப்பு தெரிவித்தால் தலைமைப் பதவியிலிருந்து விலகுவாரே ஒழிய முடிவை மாற்றிக் கொள்ள
மாட்டார். அப்படித் தலைமைப் பதவியிலிருந்து அவர் விலகினால் அது அவனுக்குப் பல விதங்களில்
அனுகூலமாக இருக்கும். என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்….
க்ரிஷ் இனி புதிதாக எதைக் கற்றுக்கொண்டு
என்ன சாதிக்கப் போகிறான் என்று மர்ம மனிதன் யோசித்தான். எவ்வளவு வேகமாகக் கற்றுக் கொண்டாலும்
அதில் தேர்ச்சி பெற க்ரிஷுக்குக் குறைந்த பட்சம் சில வருடங்களாவது கண்டிப்பாகத் தேவைப்படும். அதற்குள்
மர்ம மனிதன் கட்டுப்பாட்டுக்குள் எல்லாமே வந்திருக்கும்…. அப்படியிருக்கையில் கடைசி
கட்டத்தில் இருந்து கொண்டு அவன் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிப்பதன் அர்த்தம் மர்ம
மனிதனுக்கு விளங்கவில்லை. அவனுடைய இந்த முடிவைப் பார்க்கையில் அந்த ஏலியன் அவன் சொன்னது
போலவே போய்விட்டிருக்க வேண்டும் என்று தோன்றியது. அந்த ஏலியன் இருந்திருந்தால் அந்த
ஏலியனிடமே அவன் ஏதாவது கற்றிருக்கலாம். உயிரைக் காப்பாற்றிய அந்த ஏலியன் மற்ற உதவிகள்
எதுவும் செய்யாமல் போனது ஏன் என்று தெரியவில்லை. வாடகைக் கொலையாளியைக் கொன்ற ஏலியன்
ஏன் தன்னுடைய வழியில் குறுக்கிடவில்லை
என்றும் தெரியவில்லை…..
இப்போதைக்கு க்ரிஷ் மாஸ்டரை மாற்றிய வேகம்
தவிர வேறு எதுவும் பயப்படும்படி இல்லை. என்ன தான் சொல்லிக் கொடுக்க மாஸ்டர் ஒப்புக்
கொண்டாலும் குருவைக் கொன்றவனின் ஆள் என்கிற எண்ணம் அவர் மனதின் ஒரு மூலையில் இருந்து
கொண்டே தான் இருக்கும். அது இருக்கிற வரை மாஸ்டர் க்ரிஷுக்கு அபாயமானவர்
தான். அந்த எண்ணம் அவரிடமிருந்து விலகுவதற்குள் அவன் காயை நகர்த்தியாக வேண்டும். நன்றாக
யோசித்ததில் க்ரிஷை நெருங்க மாஸ்டர் தேர்ந்தெடுத்த வழியே சிறந்தது என்று தோன்றியது.
மாணிக்கம்……! சங்கரமணி மூலமாக மாணிக்கத்தை அணுகுவது என்று அவன் முடிவெடுத்தான்….
முன்னறிவிப்பு
இல்லாமல் பார்க்க வரும் ஆட்களை சங்கரமணிக்குப் பிடிக்காது. ஆனால் அதற்கு ஒரு விதிவிலக்கு
இருந்தது. அப்படிப் பார்க்க வரும் ஆட்களால் நல்லதொரு தொகை கிடைக்க வாய்ப்பு இருந்தால்
சங்கரமணி சகித்துக் கொள்வார். அன்றும் மனோகர் அவரைச் சந்திக்க வந்த போது அவர் அந்த
வாய்ப்பை உணர்ந்தார். அவன் வந்திறங்கிய பென்ஸ் கார், அவன் அணிந்திருந்த ஆடைகள், கையில்
கட்டியிருந்த கைக்கடிகாரம், கழுத்தில் போட்டிருந்த கெட்டியான தங்கச்சங்கிலி எல்லாம்
‘பணம் பணம்’ என்றன. அதனால் தான் அவனை அவர் உட்காரவே சொன்னார்.
அவன்
“உங்க நண்பன் நான்” என்று அறிமுகப்படுத்திக் கொண்டான்.
’எனக்குத்
தெரியாமலேயே எனக்கு இப்படி ஒரு நண்பனா? அப்படின்னா கழுத்தில போட்டிருக்கிற அந்த எட்டு
பவுன் சங்கிலியை கழட்டிக் கொடேன்’ என்று மனதில் எகத்தாளம் பேசிய சங்கரமணி “நான் உங்களைப்
பார்த்ததாய் ஞாபகம் இல்லையே” என்றார்.
”நான்
நண்பன்னு சொன்னது எதிரிக்கு எதிரிங்கற அர்த்தத்துல” என்று அவன் விளக்கினான்.
சங்கரமணி
“எனக்கு எதிரிகள் ஏகப்பட்ட ஆட்கள் இருக்காங்க. என்னோட எந்த எதிரியைச் சொல்றீங்க….”
”க்ரிஷ்”
என்று ஒற்றைச் சொல்லில் பதில் அளித்தான் மனோகர்.
சங்கரமணி
எச்சரிக்கை அடைந்தார். செந்தில்நாதன் அனுப்பிய ஆளாய் இந்த ஆள் இருப்பானோ என்கிற சந்தேகம்
அவருக்கு வந்தது. உஷாரானார். “அவன் என் பேரனோட நண்பனாச்சே. அவன் குடும்பமும் என் மருமகன்
குடும்பமும் ஒன்னுக்குள்ள ஒன்னாய் பழகறவங்க….”
மனோகர்
சலிப்புடன் சொன்னான். “எனக்கு சுத்தி வளைச்சு பேச நேரமில்லை. சொல்லப் போனா உங்களுக்கும்
கூட அதிக நேரமில்லை. உங்க தலைக்கு மேல் கத்தி தொங்குது. செந்தில் நாதன் போய் ரிப்போர்ட்
பண்ணினதுல உங்க மேல ராஜதுரைக்குச் சந்தேகம் வந்துடுச்சு. என்னேரமும் உங்களை விசாரிக்க
வேண்டிய முறைப்படி விசாரிக்கலாம்….”
சப்தநாடியும்
ஒடுங்கிப் போய் சங்கரமணி மனோகரையே அதிர்ச்சியுடன் பார்த்தார். கடைசியாகப் பலவீனமாய்
கேட்டார். “உங்களுக்கு இப்ப என்ன வேணும்?”
“இப்போதைக்கு
உங்க மருமகன் கிட்ட நேரடியா பேசணும்….”
சங்கரமணி வந்து சொன்ன போது மாணிக்கமும் இது சூழ்ச்சிவலையோ
என்று தான் எடுத்தவுடன் சந்தேகப்பட்டார். ”நீங்க எதாவது ஏடாகூடமாய் பேசி அவன் அதை ரெக்கார்ட்
பண்ணியிருக்க வாய்ப்பில்லையே?”
சங்கரமணி
மீண்டும் அவன் சொன்னதையும் தான் சொன்னதையும் வார்த்தைக்கு வார்த்தை விடாமல் ஒப்பித்தார்.
மாணிக்கம் யோசித்தார். க்ரிஷுக்கு ஒரு சக்தி வாய்ந்த எதிரி ஒருவன் இருப்பதை முன்பே
அறிந்து இருந்ததால் அந்த எதிரியாக இருக்குமோ என்ற சந்தேகமும் வந்தது. லாரி மூலம் கொல்லப்
பார்த்த எதிரியாக இருந்தால் அவனைச் சந்திக்க மறுப்பது நஷ்டமே என்றும் தோன்றியது. அந்த
ஆளிடம் கவனமாய் பேசிப் பார்த்து முடிவெடுக்க நினைத்த அவர் “சரி அந்த ஆளை வரச் சொல்லுங்க”
என்றார்.
க்ரிஷ்
மாஸ்டரின் வீட்டிலிருந்து வந்த பின் நிறைய யோசித்தான். மாஸ்டர் எதை வைத்து அவனை எதிரியின்
ஆளாய் நம்புகிறார் என்பதற்கு அவனுக்கு விடை கிடைக்கவில்லை. எதையும் புதிதாய் கற்றுக்
கொள்வதில் அவனுக்கு என்றுமே ஆர்வம் இருந்த போதிலும் மாஸ்டரிடம் அவனுக்கு கற்றுக் கொள்வதை
விட அவரது எதிரி என்ற ஸ்தானத்திலிருந்து விலகுவது தான் அதிக முக்கியமாக இருந்தது. அதைச்
சாதித்து விட்ட பிறகும் மனதில் நெருடல் இருந்து கொண்டே இருந்தது. காலம் அதிகமில்லை.
எதிரி யார் என்றும் தெரியாது, எதிரி என்ன செய்து கொண்டிருக்கிறான் என்றும் தெரியாது,
அவன் என்ன, எப்படி செய்யப் போகிறான் என்றும் தெரியாது. இப்படியொரு குழப்பமான நிலையில்
அவன் இருக்கையில் அவன் யார் என்பது எதிரிக்குத் தெரியும். அதனாலேயே அவன் என்ன செய்கிறான்
என்பதையும் எதிரியால் கண்காணிக்க முடியும். “இது நியாயமே இல்லாத களம். இதில் எதிரியை
வெல்லச் சொல்லி விட்டு நீ போய் விட்டாய். எதிரி யார் எங்கிருக்கிறான் என்றே எனக்குத்
தெரியவில்லை. முதலில் அவனை நான் எப்படிக் கண்டுபிடிப்பேன்” என்று மனதில் வேற்றுக்கிரகவாசியை
நினைத்துப் புலம்பினான்.
திடீரென்று
முன்பு தெரிந்த காட்சி நினைவுக்கு வந்தது. இருட்டில் தெரிந்த பாழடைந்த காளி கோயில், உடுக்கை சத்தம், கண்கள் நெருப்பாய் ஜொலிக்க
காளியின் அழகான நடனம், அத்தனையும் நின்று போக வைத்த இருட்டில் தெரிந்த உருவம். அதுவல்லவா
எதிரி என்று வேற்றுக்கிரகவாசி சொன்னான். காரணம் இல்லாமலா அன்று அந்தக் காட்சி வந்தது?
முகம் தெரியா விட்டாலும் அந்தக் காட்சியிலேயே அவனுக்கு அறிமுகமானவன் அல்லவா எதிரி?
இந்தக் காட்சியில் ஏதோ சூட்சுமம் இருக்கிறது……!
என்ன அது? அந்தக் காட்சி என்ன சொல்ல வருகிறது? க்ரிஷ்
யோசிக்க ஆரம்பித்தான்.
இருட்டில்
தெரிவது ரகசியமானவன் என்று அறிவிப்பது போல் இருக்கிறது. அழகாய் நடனமாடிக் கொண்டிருந்த
காளியின் நடனம் அவன் நெருங்க ஆரம்பித்தவுடன் நிற்கும் காட்சி அவன் கடவுள் பக்தி இல்லாதவனாகவும்,
கெட்டவனாகவும் இருப்பதை உணர்த்துகிறது. காளி கோயிலோடு காண்பிக்கப்படுவதால் அவன் இந்தியனாகத்
தான் இருக்க வேண்டும். மகாசக்தி படைத்தவன் என்று வேற்றுக்கிரகவாசியே சொல்லி இருக்கிறான்.
சாதாரண மனிதர்களை யாருக்கும் தெரியாமல் இருக்கலாம். கண்டுபிடிக்க முடியாமல் கூடப் போகலாம்.
ஆனால் மகாசக்தி படைத்தவர்கள் மற்றவர்கள் கவனத்துக்கு வராமல் போக முடியாது…… அவனைப்
பற்றித் தெரிந்து கொள்வது சற்று முன் நினைத்த அளவுக்குக் கஷ்டமல்ல என்று தோன்றியது.
க்ரிஷுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது மெல்லப் புலப்பட ஆரம்பித்தது.
(தொடரும்)
என்.கணேசன்
ஆரம்பத்தில் க்ரிஷ் எதிரி பற்று ஒன்றும் தெரியவில்லை என்று குழம்புவதும் கடைசியில் வரிசையாக யூகிப்பதும் சூப்பர். ஆனால் எதிரியையும் சங்கரமணியையும் சேர்த்து வச்சுடுவீங்க போல இருக்கே. என்ன சார் நியாயம்?
ReplyDeleteKrish and enemy both persons' thinking process is beautifully explained. Goes interesting. What next?
ReplyDeleteSir how ethiri knows about Krish and master meeting... He cannot read Krish and masters mind.... Logic idikuthae sir
ReplyDeleteDear Sir, thanks for the wonderful novel. It is not clear how the Marma manidan got to know about Girish becoming the disciple of Master. I feel this part is missing...
ReplyDeletegood question kana. this shows us how interested we are in this novel
DeleteAnna, story is going geat as usual like all other stories. quick question-how did ragasiya manithan know about masters haridhwar conference? does it mentioned in last week episode
ReplyDeleteமர்ம மனிதனுக்கும் மஸ்டெர்க்கும் ஒரே குரு . மர்ம மனிதனின் சுய ரூபம் அறியாமல் சுரேஷ் மர்ம மனிதனிடம் அவன் யார் என்று தெரியாமல் தகவல் தெரிவித்து விட்டானா ???
ReplyDeleteஅல்லது Suresh-in மனதை ஆட்கொண்டு மர்ம மனிதன் எல்லா விஷயத்தையும் அறிந்து கொண்டானா???
சஸ்பென்ஸ் மெல்ல விடுபடும். ஆர்வமான கேள்விகளுக்கு நன்றி.
ReplyDeleteம.மனிதனுக்கும் பல குழப்பம் அதீத நம்பிக்கை
ReplyDeleteபாம்பின் கால் பாம்பறியும் மாணிக்கமும் மனோகரும் சங்கரமணியும் ஒருவரை ஒருவர் எடை
ம.மனிதனின் குழப்பம் கிரிஷுக்கு இல்லை தெளிவாகிவிட்டான் அருமை உற்சாகத்தை கொடுத்த பதிவு
குழு இணையும் போது அதில் ஒருவனாய் ம.மனிதனும் இருப்பானா ?
பழைய குழப்பத்த தெளிவுபடுத்திட்டு
ReplyDelete...புது குழப்பத்த உண்டாக்கிட்டு...முடிச்சிடுறிங்களே...ஐயா....