Monday, December 15, 2014

ரகசிய யோகாஸ்ரமத்தில் ரகசியக் கலைகள்!


மகாசக்தி மனிதர்கள் 5

(ரிஷி சிங் க்ரேவால் விசுத்தானந்தரிடம் கேட்டார். “கரன்சி நோட்டுக்களை நீங்கள் வரவழைப்பீர்களா?”)

“மாட்டேன். ரூபாய் நோட்டுக்களை அரசாங்கம் அச்சடிப்பது. உனக்கு வேண்டுமானால் சொல். நான் இன்னொரு வெள்ளிக்கட்டி வரவழைத்துத் தருகிறேன்என்று விசுத்தானந்தர் மறுத்து விட்டார்.

இந்த அற்புதங்களை எல்லாம் எப்படி நிகழ்த்துகிறீர்கள் என்று ரிஷி சிங் க்ரேவால் கேட்ட போது விசுத்தானந்தர் எல்லாவற்றின் மூலக்கூறு அணுக்களும் வெட்ட வெளியில் நிறைந்துள்ளன. அதில்  எது வேண்டுமோ அதில் கவனத்தைக் குவித்தால் போதும் அதை வரவழைத்து விடலாம்

மிக எளிமையாக அவர் சொல்லி விட்டாலும் அது எல்லாராலும் முடிகிற காரியமா?

சுமார் 36 வருடங்கள் கழித்து மீண்டும் ரிஷி சிங் க்ரேவால் விசுத்தானந்தரை சந்தித்த போது விசுத்தானந்தர் விளையாட்டாக “வெள்ளிக்கட்டி வேண்டுமா?  என்று கேட்டார்.  ஆன்மிகத்தில் முன்னேறி இருந்த ரிஷி சிங் க்ரேவால் “வேண்டாம். சாப்பிட ஏதாவது கிடைத்தால் போதும்என்று சொல்லி விட்டார்.

யோகி விசுத்தானந்தர் குறித்து வேறு பல தகவல்களும் சொல்லப்படுகின்றன என்றாலும் அவை செவி வழி செய்திகளாகவே பெரும்பாலும் இருக்கின்றன. நேரடி அனுபவங்களாக அவை இல்லை. அவருடைய சீடர் நந்தலால் குப்தா என்பவர் யோகி ராஜாதிராஜ விசுத்தானந்தா-வாழ்க்கையும், தத்துவமும்என்ற நூலில் தன் குருவைப் பற்றி நிறைய சுவாரசியமான விஷயங்கள் எழுதி உள்ளார்.

ஒரு காகிதத்தில் கோபிநாத் என்பவரை சில வார்த்தைகள் எழுதச் சொல்லி விட்டு பின் அந்தக் காகிதத்தை நெருப்பில் எரிக்கச் சொல்லி விட்டாராம். அந்த சாம்பலில் இருந்து மீண்டும் அந்தக் காகிதத்தை முன்பு போலவே வரவழைத்துக் காட்டினார் என்று ஒரு தகவல் அந்த நூலில் உள்ளது. அதே போல அவருடைய அண்ணன் தங்கள் இறந்து போன தந்தையை அதே உருவில் திரும்பவும் பார்க்கவும், பேசவும் ஆசைப்பட்டாராம். அதில் நீ என்ன லாபம் அடையப் போகிறாய், அது இயற்கைக்கு எதிரானது, அதனால் தீய விளைவுகளும் கூட ஏற்படலாம் என்றெல்லாம் சொல்லி ஆத்மா உடல்களை ஆடையாக மாற்றிக் கொண்டே போகிறது அதனால் தனிப்பட்ட உடல் மீது அன்பு கொள்வது அர்த்தமற்றது என்றெல்லாம் சொல்லியும் அவர் கேட்கவில்லையாம். கடைசியில் விசுத்தானந்தர் ஒரு குறிப்பிட்ட அறையைத் தேர்ந்தெடுத்து அதில் புத்தம்புதிய கட்டில் படுக்கையை வைத்து தன் யோக சக்தியால் தந்தையை பழைய உருவிலேயே ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வரவழைத்தாராம். அந்தத் தந்தை அந்தக் கட்டிலில் அமர்ந்து அவர்களுடன் 15 நிமிடங்கள் இருந்து மூத்த மகன் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் அளித்து விட்டு மறைந்தாராம். விசுத்தானந்தரின் அண்ணன் அப்போதைக்குத் திருப்தி அடைந்தாலும் பிற்காலத்தில் இதனாலேயே விசுத்தானந்தர் கணித்தபடி ஒரு விசித்திர நோய்வாய்ப் பட்டு இறந்து போனாராம். அதே போல காசி, கல்கத்தா, பர்த்வான் முதலிய இடங்களில் ஆசிரமங்கள் வைத்திருந்த விசுத்தானந்தர் அங்கே இருந்து கொண்டே மற்ற இடங்களுக்கும் தன் யோக சக்தியால் சென்று, செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் செய்து வந்தார் என்றும் அந்த நூலில் அவர் தெரிவிக்கிறார். இது போல இன்னும் பல சுவாரசியமான தகவல்கள் உண்டு. இந்தத் தகவல்கள் எல்லாம் எந்த அளவுக்கு உண்மையானவை என்பது நமக்குத் தெரியாது.

முந்தைய மூன்று நபர்களின் விசுத்தானந்தருடனான அனுபவங்கள் நேரடியானவை. அவர்கள் அவருக்கு நெருங்கிய சம்பந்தம் இல்லாதவர்கள். அதனால் அவர்கள் விசுத்தானந்தர் பற்றி கதைகளைத் திரித்துக் கூற அவசியம் இல்லாதவர்கள். மேலும் அவர்கள் சொன்ன அனுபவங்களில் அடிப்படை ஒற்றுமை இருக்கிறது. ஆனால் தனிப்பட்ட முறையில் விசுத்தானந்தரின் சீடரான நந்தலால் குப்தாவின் அறிவுக்கூர்மை மற்றும் மனப்பக்குவம் குறித்து நாம் அதிகம் அறியோம். பல சமயங்களில் உண்மையின் மீது இருக்கும் நாட்டத்தை விட அதிகமாய் குருட்டுத்தனமான நம்பிக்கையும் பக்தியும் சீடர்களுக்குத் தங்கள் குருவின் மீது வருவதுண்டு. அப்போது அவர்களது கற்பனையும், மற்றவர்கள் கற்பனையும் அவர்கள் சொல்வதில் சேர்ந்து கொள்வதுண்டு. அதை நாம் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.

விசுத்தானந்தர் எந்தவொரு நறுமணத்தையும் ஏற்படுத்த வல்லவர் என்பதும் அந்தரத்தில் இருந்து பொருள்களை தருவித்துக் கொடுப்பதிலும் வல்லவர் என்பதில் மட்டும் எல்லோரும் ஒருமித்துப் போகிறார்கள். பால் ப்ரண்டனிடம் அவர் கூறியது போல சூரிய விஞ்ஞானம்என்ற யோக ரகசியக் கலையின் மூலம் அவர் அதை சாதித்தாரா, இல்லை, ரிஷி சிங் க்ரேவால் சொன்னது போல பிரபஞ்சத்தில் நிறைந்துள்ள அணுக்களை தன் வசப்படுத்திக் கொண்டு அதை சாதித்தாரா, இல்லை இரண்டும் பெயர்கள் வேறென்றாலும் ஒரே கலை தானா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

பொதுவாக மேல்நிலை யோகிகள் தங்கள் யோக சக்திகளை அவசியமான சமயங்களில் மட்டுமே பயன்படுத்தினார்கள் என்பதை ஆரம்பத்திலேயே சொன்னோம். இவரைப் பொருத்த வரை இவருடைய யோக சக்திகள் உண்மையானது இவர் எந்த வகை ஏமாற்று வேலைகளிலும் ஈடுபட்டு அவற்றை வெளிப்படுத்தவில்லை என்றாலும் கூட அவசியமானதற்கு மட்டுமே இவர் அவற்றை உபயோகப்படுத்தினார் என்று சொல்ல முடியாது. யோகானந்தர் கூறியது போல அந்த நறுமணங்களை ஏற்படுத்தி ஒரு யோகி என்ன சாதிக்கிறார் என்ற கேள்வி நம்மிடையே தங்கித் தான் போகிறது. அதே போல பால் ப்ரண்டனிடம் காட்டிய அற்புதமான ஒரு குருவியைக் கொன்று பின் உயிர்ப்பித்துக் காட்டியதிலும், ரிஷி சிங் க்ரேவாலுக்கு வெள்ளிக்கட்டி வரவழைத்துத் தந்ததிலும் சக்தி நிரூபிக்கப்பட்டிருக்கிறதே ஒழிய யோகத்தின் மேல்நிலை நிரூபிக்கப்படவில்லை என்றே நாம் நடுநிலைமையோடு சொல்ல வேண்டும். ஒரு வேளை அவர் தந்தையை 15 நிமிடங்களுக்கு உயிர்ப்பித்திருந்தால் அதுவும் இந்தக் கருத்தில் சேர்க்கப்பட வேண்டியதே!

விசுத்தானந்தர் குறித்து வடமொழியில் “ஸ்ரீ ஸ்ரீ விசுத்தானந்த ப்ரசங்காஎன்ற நூலை எழுதியிருக்கும் கோபிநாத் கவிராஜும் அந்த நூலில் தன் குருநாதரான விசுத்தானந்தர் குறித்து நிறைய தகவல்கள் எழுதி இருக்கிறார். இந்த கோபிநாத் கவிராஜ் தான் பால் ப்ரண்டனை விசுத்தானந்தரிடம் அழைத்துச் சென்றவர். இவர் சாகித்ய அகாடமி மற்றும் பத்ம விபூஷன் ஆகிய உயர்ந்த பட்டங்களைப் பெற்றவர்.  

திபெத்தில் இருக்கும் க்யான்கஞ்ச் யோகாஸ்ரமம்என்ற ரகசிய இடத்தில் தான் விசுத்தானந்தர் 12 ஆண்டுகள் கடுமையான தவப்பயிற்சிகள் மேற்கொண்டதாக கவிராஜ் கூறுகிறார். அவரது பெரும்பாலான சக்திகள் சூரிய விஞ்ஞானம் என்ற ரகசியக்கலை மூலமாகவே செயல்படுகின்றன என்று சொல்லும் கோபிநாத் கவிராஜ் விசுத்தானந்தர் சூரிய விஞ்ஞானம் மட்டுமல்லாமல் சந்திர விஞ்ஞானம், வாயு விஞ்ஞானம், சப்த விஞ்ஞானம் போன்ற விஞ்ஞானக் கலைகளையும் கற்று தேர்ச்சி பெற்றிருந்ததாகச் சொல்கிறார்.  அந்த விஞ்ஞானக் கலைகள் எப்படி, எந்த மகாசக்திகளை எல்லாம் ஏற்படுத்துகின்றன, அவற்றைப் பயில்வது எப்படி என்கிற விவரங்கள் நம்மால் அறிய முடியவில்லை. அக்கால யோகிகள் இயற்கை சக்திகளின் மீது மிக உயர்ந்த ஆளுமையைப் பெற்றிருந்த போதிலும் கூட அதை எல்லோருக்கும் கற்றுத்தரும் வழக்கத்தைப் பின்பற்றவில்லை. முறையாகப் பயன்படுத்தப்படா விட்டால் இந்த மகாசக்திகள் அழிவுக்குக் காரணமாகி விடும் என்ற எச்சரிக்கை உணர்வு அவர்களிடம் இருந்து வந்தது நமக்குத் தெளிவாகத் தெரிகிறது.

அதே போல் க்யான்கஞ்ச் யோகாஸ்ரமம் கைலாஷ், மானசரோவர் அருகில் இருப்பதாகச் சொல்லப்படுகிறதே ஒழிய அது யாரும் எளிதாகக் கண்டுபிடிக்க முடியாத மறைவான இடத்தில் இருப்பதாகத் தெரிகிறது. அதே பகுதியில் பயணித்தாலும் அது போன்ற ரகசிய யோகாஸ்ரமங்கள் இருப்பது பயணிகளின் கவனத்தை ஈர்க்காது என்று சொல்கிறார்கள்.

சரி. இனி அடுத்த ஒரு சுவாரசியமான யோகியைப் பற்றி அறிந்து கொள்ளலாமா?

(தொடரும்)

-என்.கணேசன்


நன்றி: தினத்தந்தி – 03-10-2014

6 comments:

  1. hello mr.ganeshan, Can you please translate Nisargadatta Maharaj's "I AM THAT' in tamil. You are the right person to translate that golden book.

    ReplyDelete
  2. Hi Boss,
    I am not missing any of your post......When ever we comes to your site really feel happy........
    No wards to praise you.....
    how many times to write / to praise....I know that you are writing for a person's peace....each and every writing we feel to write some words.......
    when a person writing very rare that means we have to write something, but your alll writings always have something touching/ some feel/ that we can not express.......
    waiting/expecting more from you.

    Thalaiva-nin- work continuous......

    Thalai- poola - varuma...
    Irai-vanai- vendum.
    G.Ganesh.
    K.S.A.

    ReplyDelete
  3. I would be like to yoga traning class. if u have any yoga training centre plz let me know

    ReplyDelete
    Replies
    1. Sky meditation centre Aliyar... the best centre till now

      Delete
  4. I belive SKY yoga is good & simple to follow. even it is not money based.
    நான் SKY யோகா செய்கிறேன், சில நாட்களாக என் மனதில் எண்ணியதை இந்த பதிவில் படித்தேன்.. நன்றி.

    ReplyDelete