Thursday, December 18, 2014

புத்தம் சரணம் கச்சாமி! – 25


க்‌ஷய் மருதமலை போய் மொட்டை அடித்துக் கொண்டு வந்தது வேண்டுதலுக்காகவோ, பக்தியாலோ அல்ல என்பது வீட்டில் கௌதமைத் தவிர மற்ற மூன்று பேருமே உணர்ந்திருந்தார்கள். அவன் திபெத் போகப் போவதன் ஆயத்தத்தில் முதல் கட்டம் தான் என்பதை அவர்கள் யூகித்தார்கள். ஆனாலும் அவர்கள் அதைப் பற்றி அவர்கள் வெளிப்படையாக எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. கருத்து தெரிவித்தவன் கௌதம் தான்.

“அப்பாவுக்கு மொட்டை நன்றாகவே இல்லை. பார்க்கவே சகிக்கவில்லைஎன்று கௌதம் முகத்தைச் சுளித்துக் கொண்டே சொன்னான்.

அக்‌ஷய் புன்னகைத்தான். கௌதம் கேட்டான். “உங்களுக்கு முடி எப்போது வளரும்?

அக்‌ஷய் மகனை அணைத்துக் கொண்டே சொன்னான். “திபெத் போய் திரும்பி வரும் போது முடி வளர்ந்திருக்கும்

கௌதம் திருப்தி அடைந்து விளையாட வெளியே போய் விட்டான்.

திபெத் போவது என்று தீர்மானத்தை வீட்டில் சொல்லி ஓரளவு வருணையும் சமாதானப்படுத்திய பிறகு அக்‌ஷய் முழுமூச்சுடன் தன் பயணத்துக்குத் தயாராக ஆரம்பித்திருந்தான். அதிகமாக திபெத்தின் வரைபடத்தை இணையத்தில் மணிக்கணக்கில் ஆராய்ந்தான். ஒன்றில் கவனத்தைக் குவிக்கும் போது மற்றெல்லா விஷயங்களிலுருந்தும் தொடர்பைத் துண்டித்துக் கொள்ளும் அபூர்வ சக்தி அவனிடம் இயல்பாகவே இருந்தது.

இப்போதும் கௌதம் விளையாடப் போன பின் திபெத்தைப் பற்றிய விவரங்களையே இணையத்திலிருந்து உள்வாங்கிக் கொண்டிருந்த அவன்  கவனத்தை சுற்றிலும் கேட்ட சத்தங்கள் எட்டவில்லை. அவனுடைய அறைக்கு வீட்டவர்கள் அவ்வப்போது வந்து போனதை அவன் கவனிக்கவில்லை.  

அவனையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்த வருணுக்கு வியக்காமல் இருக்க முடியவில்லை. “எப்படி இவரால் மனதை இந்த அளவுக்கு ஒருமுகப்படுத்த முடிகிறது? இவர் கற்றுக் கொண்டதெல்லாம் இப்படித்தான் போலிருக்கிறது. இவர் அமானுஷ்யன் ஆன ரகசியம் இது தானா? 

சின்ன வயதிலிருந்தே அவனுடைய கதாநாயகனாக இருந்த அக்‌ஷய் மீது இன்னமும் வருணுக்கு பிரமிப்பு குறையவில்லை. இப்படி ஒரு நல்ல மனிதனை, அவனையும், அவன் அம்மாவையும், பாட்டியையும் ஏற்றுக் கொண்டு இவ்வளவு தூரம் நேசிக்க முடிந்தவனை, இழந்து விடுவோமோ என்கிற பயம் தான் பாடாய் படுத்துகிறது. அந்த பயத்தை சஹானாவிடமும், மரகதத்திடமும் கூட, அவர்கள் வார்த்தைப்படுத்தா விட்டாலும், அவனால் இப்போது காண முடிகிறது.   வழக்கமான கலகலப்பு அவர்களிடமும் இல்லை.

சஹானா மரகதத்தைக் கேட்பது காதில் விழுந்தது. “உங்களுக்காக எடுத்து வைத்திருந்த சாப்பாடு அப்படியே இருக்கிறது அத்தை. சாப்பிடவில்லையா?

“இன்றைக்கு சங்கடஹர சதுர்த்தி. விரதம் ஆரம்பித்திருக்கிறேன்....மரகதம் சொன்னாள்.

விரதம் யாருக்காக என்று வருணுக்குப் புரிந்தது. இந்தப் பாட்டியிடம் போய் நேற்று அநியாயத்திற்குக் கோபித்துக் கொண்டோமே என்று தோன்றியது. அக்‌ஷயின் தாய் சாரதா ஒரு காலத்தில் மகனுக்காக அடிக்கடி விரதம் இருந்ததைக் கேள்விப்பட்டிருந்த மரகதம் அந்த ஸ்தானத்தில் இப்போது ஆரம்பித்திருக்கிறாளோ என்று நினைக்கையில் மனம் இலேசாகியது.....


ந்தப் பூங்காவில் அக்‌ஷய் நுழைந்த போது ஆட்கள் அதிகமில்லை. உச்சி வெயில் வேளையானதால் அங்கங்கே ஒருசில காதல் ஜோடிகள் மட்டும் தான் இருந்தார்கள். தொப்பி ஒன்றைப் போட்டுக் கொண்டு தனியாகப் பூங்காவில் நுழையும் அக்‌ஷயை ஆச்சரியத்துடன் காவலாளி பார்த்தான்.

ஆள்நடமாட்டமே இல்லாத ஒரு பகுதியில் இருந்த புதர் அருகே மறைவில் அமர்ந்த அக்‌ஷய் தன் ஜோல்னா பையில் இருந்த காவி உடையையும், சில சாதனங்களையும் வெளியே எடுத்தான். அடுத்த அரை மணி நேரத்தில் ஒரு புத்த பிக்கு பூங்காவை விட்டு வெளியேறுவதைப் பார்த்த காவலாளி ‘இந்த ஆள் எப்போது உள்ளே நுழைந்தார்?என்று ஆச்சரியப்பட்டான்.

புத்தபிக்கு வேடத்தில் இருந்த அக்‌ஷய் பூங்கா இருந்த தெருக்கோடியில் இருந்த ஒரு புகைப்படமெடுக்கும் ஸ்டுடியோவுக்குள் நுழைந்தான். அந்த கடைக்காரரை அவனுக்கு நன்றாகத் தெரியும். புத்த பிக்கு கோலத்தில் அமைதியே வடிவாக உள்ளே நுழைந்த அவனை கடைக்காரர் அடையாளம் கண்டு கொள்ளவில்லை. மிகுந்த மரியாதையுடன் அவனிடம் கடைக்காரர் கேட்டார். “என்ன வேண்டும்?

கரகரத்த குரலில் அக்‌ஷய் சொன்னான். “பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ....  உடனே கிடைக்குமா?” . பேசியதில் தமிழல்லாத அன்னிய வாடை அந்தக் கடைக்காரருக்குத் தெரிந்தது.

“பத்தே நிமிடத்தில் கிடைத்து விடும்என்று சொன்ன கடைக்காரர் உள்ளே அழைத்துச் சென்றார்.

படம் எடுக்கையில் எங்கிருந்து வருகிறீர்கள் என கடைக்காரர் கேட்டார். நேபாள் என்று அக்‌ஷய் சொன்னான். அங்கு அவன் இருந்த பத்து நிமிட காலத்தில் கடைக்காரருக்கு சிறிது கூட சந்தேகம்  வரவில்லை.

திரும்பவும் பூங்காவிற்குள் புத்தபிக்கு நுழைவதைப் பார்த்த காவலாளி இந்த ஆள் ஏன் பழையபடி வருகிறார் என்று யோசித்தான். மறைவிடத்தில் வேடத்தைக் கலைத்துக் கொண்டு அவன் பழைய தோற்றத்தில் வெளியே போவதைப் பார்த்துக் கொண்டிருந்த காவலாளிக்கு திடீரென்று அந்த சாமியார் உள்ளே என்ன செய்கிறார் என்று தெரிந்து கொள்ள ஆவலாய் இருந்தது. உள்ளே சாமியாரை வலைவீசித் தேடியும் கிடைக்காததன் மர்மம் அந்தக் காவலாளிக்குக் கடைசி வரை பிடிபடவில்லை. என்ன மாயா ஜாலமாக இருக்கிறதுஎன்று நினைத்துக் கொண்டான். கடைசியில் சாமியாரைப் பார்த்ததே பிரமையாக இருக்குமோ என்ற சந்தேகம் அவனுக்குள் எழுந்தது. முடிவில் இராத்திரி அவ்வளவு குடித்திருக்கக்கூடாதுஎன்று தனக்கே சொல்லிக் கொண்டான். 

        
வீட்டுக்கு வந்த அக்‌ஷய் மின்னஞ்சலில் பிக்கு தோற்றத்தில் இருந்த புகைப்படத்தையும், மைத்ரேயர் புகைப்படத்தையும் புதுடெல்லி ஆளுக்கு அனுப்பி விட்டு பேசினான். நேபாள நாட்டைச் சேர்ந்த புத்த பிக்குவாக தனக்கு ஒரு பாஸ்போர்ட் அவசரமாக வேண்டும் என்று சொல்லி விட்டு மைத்ரேயர் தோற்றத்திற்கு ஓரளவாவது பொருந்துகிற அதே வயதுள்ள ஒரு பையன் தனக்கு வேண்டும் என்று சொன்னான். “முகவெட்டும், உடல்கட்டும் அச்சாக அப்படியே இருக்க வேண்டும் என்பதில்லை. ஓரளவாவது பொருந்துகிற மாதிரி ஒரு பையனை ஏற்பாடு செய்யுங்கள்....

அந்தப் பையன் எப்படியிருந்தால் தேவலை என்றெல்லாம் அவன் தொடர்ந்து சொல்லிக் கொண்டே போனான்...

எல்லாம் கேட்டுக் கொண்டே இருந்த புதுடெல்லி மனிதன் மூன்று நாட்களுக்குள் எல்லா ஏற்பாடுகளையும் செய்து தருவதாகச் சொன்னான்.


தே நேரத்தில் சந்திரகாந்த் முகர்ஜியின் அழைப்பு மணி அழைத்தது. பேசியது ஒரு பெண் குரல். அமெரிக்க ஆங்கிலத்தில் சாயல் அவள் பேச்சில் இருந்தது.

“டிஸ்கவரி சேனலின் வரலாற்று பிரிவில் இருந்து டொமினிக் பேசுகிறேன். நான் பேசுவது டாக்டர் சந்திரகாந்த் முகர்ஜி அவர்களிடம் தானா?

ஒரு கணம் சந்திரகாந்த் முகர்ஜி பேச்சிழந்து போனார். என்றோ ஒரு நாள் வரும் என்று காத்திருந்த பெரும்புகழ் இன்றே வந்து விட்டதோ? டிஸ்கவரி சேனலில் இருந்து அழைக்கிறார்களே! நம் பெயர் அங்கு வரை சென்று விட்டதா?

அவர் பரபரப்புடன் சொன்னார். “ஆமாம் டாக்டர் சந்திரகாந்த் முகர்ஜி தான் பேசுகிறேன். என்ன விஷயம் சொல்லுங்கள்

“நாங்கள் ஆசிய வரலாற்றுத் தொடர் ஒன்றை விரைவில் ஆரம்பிக்க உள்ளோம். அதற்காக ஆசிய சரித்திர எழுத்தாளர்களை பேட்டி எடுத்து அவர்கள் கருத்தையும் பதிவு செய்ய நினைத்திருக்கிறோம்.  இந்திய சரித்திர எழுத்தாளராக தங்களை எங்கள் குழு தேர்ந்தெடுத்திருக்கிறது....

சந்திரகாந்த் முகர்ஜிக்கு இது கனவா என்ற சந்தேகம் வந்தது. தன் வழுக்கைத் தலையைக் கொட்டிக் கொண்டார். தலை வலித்தது. கனவல்ல நிஜம் தான்.

“மகிழ்ச்சி.... நன்றி....அதற்கு மேல் என்ன சொல்வது என்று அவருக்குத் தெரியவில்லை.

அவள் தொடர்ந்தாள். எங்கள் பிரதிநிதி இப்போது கல்கத்தாவில் தான் உள்ளார். உங்களை சந்திக்க எப்போது எங்கு வர வேண்டும் என்று நீங்கள் சொன்னால் உடனே அனுப்பி வைக்கிறோம்...

சந்திரகாந்த் முகர்ஜி பரபரப்புடன் சொன்னார். “நான் தற்போது மூர்ஷிதாபாத் பக்கத்தில் இருக்கும் என் பூர்வீக கிராமத்தில் இருக்கிறேன். நான்கு நாட்கள் இங்கு குடும்ப பூஜை இருக்கிறது. என் சகோதரர்கள், சகோதரிகள் அவர்கள் குடும்பம் எல்லாம் அதற்காக வந்திருக்கிறோம். நான் கல்கத்தாவிற்கு ஐந்து நாள் கழித்து தான் வருவேன்.....

அவள் தன் குரலில் ஏமாற்றத்தைக் காட்டினாள். சீக்கிரமே தொடர் ஒளிபரப்பை ஆரம்பிக்க இருப்பதால் உங்கள் பேட்டி எவ்வளவு சீக்கிரம் கிடைக்கிறதோ அவ்வளவு எங்களுக்கு வசதியாக இருக்கும்

உங்கள் பிரதிநிதி இங்கேயே வர முடிந்தால்...அவர் இழுத்தார்.

அவள் சிறிது யோசித்து விட்டுச் சொன்னாள். “பரவாயில்லை சார்....  கல்கத்தாவிற்கு வந்தவுடனேயே பேட்டி கொடுக்க முடியுமா?

இத்தனை கௌரவம் வழுக்கைத் தலையருக்கு இது வரை கிடைத்ததில்லை. அதனால் அவருக்கு ஆனந்தக்கண்ணீர் வந்து விட்டது. பேட்டி கொடுக்க முடியுமா என்று கேட்கிறாளே! “தாராளமாக.... நான் கல்கத்தாவுக்கு ஏழாம் தேதி காலை எட்டு மணிக்கு வந்து சேர்வேன். காலை ஒன்பது மணிக்கு மேல் எந்த நேரம் அவர் வந்தாலும் சரி....   

“மிக்க நன்றி. அவர் சரியாக பத்து மணிக்கு உங்கள் வீட்டுக்கு வருவார். உங்களுக்கு வசதியான நேரம் தானே அது

“வசதியான நேரம் தான்.....

“அந்த நேரத்தில் வீட்டில் கூட்டமாக ஆள்கள் சேராமல் இருந்தால் பேட்டி எடுக்க சௌகரியமாய் இருக்கும்.... பல இடங்களில் டிவி சேனலில் இருந்து வருகிறார்கள் என்றாலே கூட்டம் சேர்த்து விடுகிறார்கள். பேட்டிக்கு அது இடைஞ்சலாகி விடுகிறது.... அதனால் தயவு செய்து இந்த பேட்டியைப் பற்றி முடிகிற வரை யாரிடமும் சொல்லாமல் இருந்தால் உதவியாக இருக்கும்....

யாரிடமும் சொல்ல மாட்டேன். டிவியில் வரும்போது அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும்.... வீட்டில் நான் தனியாகத் தான் இருப்பேன்....

அவள் குரலில் நிம்மதி தொனித்தது. “நன்றி சார். எங்கள் சேனலில் உங்கள் பேட்டி  சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்....

அவள் கடைசி வரை அவர் முகவரியைக் கேட்கவில்லை. அது அவருக்கு பெரிய விஷயமாய் தெரியவில்லை. அவரைப் போன்ற பிரபல சரித்திர எழுத்தாளரின் தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்த அவளுக்கு அவர் விலாசம் கண்டுபிடிப்பது கஷ்டமா என்ன?

(தொடரும்)
-          என்.கணேசன்


     

9 comments:

  1. வழக்கம் போல் சுவாரசியமாக போகிறது. வியாழன் சாயங்காலம் எப்போது மணி ஆறாகும் என்று காத்திருந்து படித்த பிறகு மறுபடியும் அடுத்த வியாழனுக்காக மனம் வெய்ட் பண்ண ஆரம்பிக்கிறது.

    ReplyDelete
  2. Great going. very eagerly following.

    ReplyDelete
  3. சுவராஸ்யமாகப் போகிறது... தொடருங்கள் தொடர்கிறோம்...

    ReplyDelete
  4. முகம் சுளித்தல் என்பதுதான் சரி. சுழித்தல் என்பது தவறு.

    ReplyDelete
  5. சுட்டிக்காட்டியதற்கு நன்றி. சரி செய்து விட்டேன்.

    ReplyDelete
  6. சார் மிகவும் நன்றாக உள்ளது.சாரதா இடத்தில் மரகதம் என்பது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது.ஒவ்வொரு வியாழன் அன்றுமஃ எதிர் பார்ப்பு அதிகமாக உள்ளது.

    ReplyDelete
  7. சார் அமானுஷ்யனஃ பரமரகசியம் போல எப்போது புத்தர் வருவார்
    புத்தகமாக என்று ஒரே ஏக்கமாக உள்ளது. ஒவ்வொரு வியாழன் அன்றும் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. முனைவர் புவனாகண்ணன்

    ReplyDelete