Thursday, December 11, 2014

புத்தம் சரணம் கச்சாமி! – 24


 புத்தகயாவில் இருந்து திரும்பி வந்த அக்‌ஷய் திபெத் போக முடிவெடுத்திருப்பதைச் சொன்னதில் இருந்து அந்த வீட்டில் வார்த்தைப்படுத்தாத இறுக்கம் நிலவியது. எல்லோரையும் விட அதிகம் பாதிக்கப்பட்டவன் வருண் தான். இரவில் வீடு வந்து சேர்ந்த அக்‌ஷய் வருணிடம் நிறைய நேரம் பேசினான். அவன் வருணை சமாதானப்படுத்த எடுத்துக் கொண்ட அதிகபட்ச முயற்சிகளைப் பார்க்க சஹானாவுக்கே பாவமாக இருந்தது. ஆனாலும் வருண் சமாதானமாகி விடவில்லை.

மறுநாள் காலையிலும் வருண் உர்ரென்று இருந்தான். அக்‌ஷய் காலை ஓட்டத்திற்குப் போயிருந்த போது சஹானா வருணைக் கடிந்து கொண்டாள். “நீ அவரை நிறையவே இம்சிக்கிறாய். அவரானதால் தான் இத்தனை பொறுத்துக் கொள்கிறார்....

‘உன் அப்பாவாக இருந்திருந்தால் நீ எதிர்த்து முதல் வார்த்தையைக் கூடச் சொல்லியிருக்க முடியாதுஎன்று சொல்ல வந்தவள் சொல்லாமல் நிறுத்திக் கொண்டாள். இது போல சில வருடங்களுக்கு முன் அவனிடம் ஒரு தடவை சொல்லி வருண் தாயிடம் ஆறு மாதம் பேசவில்லை. அவன் அக்‌ஷயின் மகன் அல்ல என்கிற உண்மையை யார் சொன்னாலும் அவனால் தாங்கிக் கொள்ள முடிந்ததில்லை. அதனால் அந்த வீட்டில் யாரும் அதைப் பற்றிப் பேசியதில்லை. அதனால் கௌதம் கூட வருண் அக்‌ஷயின் மகன் அல்ல, தாய் மட்டுமே தங்களுக்குப் பொதுவானவள் என்கிற உண்மையை அறிந்திருக்கவில்லை. அவன் நம்பிக் கொண்டிருப்பது வருணும் தானும் அக்‌ஷய்-சஹானாவின் பிள்ளைகள், மரகதம் அக்‌ஷயின் பெரியம்மா. அவளுக்கு பிள்ளைகள் யாரும் இல்லாததால் தங்கை சாரதாவின் மகனான அக்‌ஷயுடன் இருக்கிறாள் என்பது தான்...

அக்‌ஷயை வருண் இம்சிப்பதாய் சஹானா சொன்னவுடனேயே வருணுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. அவன் தாயையும் பாட்டியையும் பார்த்து கத்தினான். “காரணம் நான் அவரை அவ்வளவு நேசிக்கிறேன்.... நீங்கள் இரண்டு பேரும் என் மாதிரியே வருத்தப்பட்டிருந்தால் அப்பா கண்டிப்பாக திபெத் போக ஒத்துக் கொண்டிருக்க மாட்டார்.     

சஹானா வருத்தத்துடன் சொன்னாள். “என்னால் அவரைப் புரிந்து கொள்ள முடிகிறது. அதனால் தான் அவரைத் தடுக்கவில்லை வருண் 

உண்மையில் சஹானாவால் கூட முந்தைய இரவில் உறங்க முடிந்திருக்கவில்லை. ஒரு மனிதனுக்கு ஒரு விதி தான் இருக்க முடியும். அதனால் எதைப்பற்றியும் கவலைப்பட்டு என்னவாகப் போகிறதுஎன்று அக்‌ஷய் அடிக்கடி சொல்வான். அவன் சொல்வதில் உண்மை இருக்கிறது என்று புரிந்தாலும் அந்த விதி என்ன என்று அறியாமல் ஏற்படும் தடுமாற்றத்தை அவளால் தவிர்க்க முடியவில்லை.

தாயின் வருத்தத்தை பார்வையிலேயே உணர முடிந்த வருண் அடுத்ததாக மரகதத்தைப் பார்த்தான். மரகதம் வெகுளியாகச் சொன்னாள். “நான் என்றைக்கு வாயைத் திறந்திருக்கிறேன்? உங்கப்பன் காலத்தில் இருந்தே மவுனமாய் தான் இருந்திருக்கிறேன்...

சஹானா மாமியாரைப் பரிதாபமாகப் பார்த்தாள். அவள் எதிர்பார்த்தது போல் வருண் எரிமலையாக வெடித்தான். “அந்த ஆளை எங்கப்பா என்று சொல்லாதீர்கள். உங்கள் மகன் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளுங்கள். அக்‌ஷய் தான் என் அப்பா. புரிகிறதா?

மரகதம் பாவமாகத் தலையாட்டினாள்.   அந்த ஆத்மா இப்போது எந்த உலகத்தில் இருக்கிறதோ. இன்னமும் இவன் அவன் மீது வெறுப்பை சுமந்து கொண்டிருக்கிறானேஎன்று அவளுக்குத் தோன்றியது.

வருணுக்கு இனி சிறிது நேரம் அங்கே இருந்தால் அவர்கள் இருவரையும் மேலும் வார்த்தைகளால் காயப்படுத்தி விடுவோம் என்று பயமாக இருந்ததால் வேறெதுவும் சொல்லாமல் உடனே வீட்டை விட்டு வெளியேறினான்.

தூக்கக்கலக்கத்தில் கண்களைத் துடைத்துக் கொண்டே வந்த கௌதம் தாயைக் கேட்டான். “அண்ணன் ஏன் கோபமாய் போகிறான்?

அப்பா திபெத் போகிறது அவனுக்குப் பிடிக்கவில்லை...

“சின்னப் பையன் மாதிரி நடந்து கொள்கிறான் அவன். நானே பரவாயில்லைஎன்று பெருமையாக அவன் தாயைப் பார்த்தான். விளையாட்டைத் தவிர வேறு எதிலுமே கவனம் அதிகம் இல்லாத அவனுக்கு தற்போதைய நிலைமையின் பூதாகரம் தெரியவில்லை. தனக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களைத் தெரிந்து கொள்கிற ஆர்வமும் அவனிடம் இருக்கவில்லை.  அப்பா எதோ வேலையாக திபெத் போகிறார், வேலை முடித்து சில நாள் கழித்து திரும்பி வருவார், அந்த சில நாள் பிரிவைக்கூடத் தாங்க முடியாமல் அண்ணன் அலட்டிக் கொள்கிறான் என்று தான் நினைத்தான்.

மரகதம் அவனை இறுக்கி அணைத்தபடி சொன்னாள். “நீ இது மாதிரி அவனிடம் எதுவும் சொல்லப்போகாதே. கோபித்துக் கொள்வான்....

“சரி பாட்டி.... எல்லாம் அப்பா அவனுக்குக் கொடுக்கிற இடம்... செல்லம் கொடுத்து அவர் அவனைக் கெடுத்து விட்டார் என்று நினைக்கிறேன்என்று எல்லாம் தெரிந்தவனாக அவன் சொன்ன போது சஹானாவும், மரகதமும் ஒருவரை ஒருவர் புன்னகையோடு பார்த்துக் கொண்டார்கள்.

“திபெத்தில் என்ன விளையாட்டு சாமான் கிடைக்கும்? கௌதம் அம்மாவிடம் ஆவலாகக் கேட்டான்.

லீ க்யாங் ஆவணக்காப்பகத்தில் நுழைந்த போது காலை மணி 10.55. அவனைப் பார்த்தவுடனேயே பொறுப்பாளருக்குப் பெருமூச்சு விடாமல் இருக்க முடியவில்லை. ‘என்ன மனிதனிவன். இவனுக்கு வேறெந்த வேலையும் கிடையாதா?

“நான் கேட்டதெல்லாம் தயாராக இருக்கிறதா?என்று வந்தவுடனே முதல் கேள்வியாக லீ க்யாங் கேட்டான்.

பொறுப்பாளர் காலை வந்தவுடன் லீ கியாங் தேவை என்று சொன்னதை எல்லாம் தன் உதவியாளனிடம் சொல்லி இருந்தார். அதனால் அவர் உடனே தன் உதவியாளனை அழைத்து “எல்லாம் தயாரா?என்று கேட்க உதவியாளன் “தயாராகிக் கொண்டே இருக்கிறதுஎன்று சொன்னான்.

லீ க்யாங் பொறுப்பாளரை பார்வையால் எரித்து விட்டு உதவியாளனிடம் சொன்னான். “பத்து நிமிடத்தில் தயாராகா விட்டால் உன்னை திபெத் ஆவணக்காப்பகத்திற்கே மாற்ற நான் சிபாரிசு செய்யப் போகிறேன். அங்கே உன்னைப் போன்ற ஒரு ஆள் தேவையாக இருக்கிறது

உதவியாளன் துணுக்குற்றான். அவன் பிள்ளைக்குட்டிக்காரன். பீஜிங்கில் தான் அவன் குடும்பம் இருக்கிறது. திபெத்திற்குப் போய் சிரமப்பட அவன் தயாராக இல்லை. தலையசைத்து விட்டு வேகமாக அவன் நகர்ந்தான். பொறுப்பாளர் அடுத்ததாக நம்மை ஏதும் சொல்லி விடுவானோ என்று பயந்து போய் சிரமம் பார்க்காமல் எழுந்து வேகமாக உதவியாளனைப் பின் தொடர்ந்தார்.

அவர் அத்தனை வேகமாக நடந்து இது வரை பார்த்திராத உதவியாளன் ‘இந்த உடம்பால் இப்படிக்கூட நகர முடியுமாஎன்று வியந்தான். அவன் கம்ப்யூட்டரில் இருந்து பத்மசாம்பவாவின் ஓலைச்சுவடிகளின் நகல்கள் வேண்டி இது வரை விண்ணப்பித்தவர்களின் விவரங்களை வேக வேகமாக எடுக்க, பொறுப்பாளர் அந்த ஓலைச்சுவடிகளின் மொழிபெயர்ப்புகளை அவசர அவசரமாக பிரதிகள் எடுக்க ஆரம்பித்தார். அடுத்த ஒன்பதாவது நிமிடம் லீ க்யாங்கின் கையில் அவன் கேட்டிருந்தவை இருந்தன. பொறுப்பாளர் வியர்வையில் தொப்பலாக நனைந்திருந்தார். உதவியாளன் பதற்றத்தில் இருந்தான்.

வாங்கிக் கொண்டு ஒரு வார்த்தை கூட அவர்களிடம் பேசாமல் லீ க்யாங் அங்கிருந்து வெளியேறினான். பொறுப்பாளர் உதவியாளனிடம் சொன்னார். “கடவுள் எப்படிப்பட்டவனை எல்லாம் சிருஷ்டி செய்திருக்கிறார் பார்த்தாயா!

உதவியாளன் சொன்னான். “சிருஷ்டி செய்தது தப்பில்லை சார். நம்மிடம் அனுப்பி வைப்பது தான் கஷ்டமாய் இருக்கிறது

தன் இருக்கையில் பொத்தென்று சாய்ந்த பொறுப்பாளர் அந்த சிருஷ்டியை கடவுள் இனி அடிக்கடி இங்கே அனுப்பாமல் இருக்கிற அளவுக்கு கருணை காட்டினால் தேவலை என்று நினைத்தார்....
                                   

லீ க்யாங் தன் அலுவலக அறையில் அமர்ந்து கொண்டு பத்மசாம்பவாவின் ஓலைச்சுவடிகளின் நகல்கள் வேண்டி இது வரை விண்ணப்பித்தவர்களின் விவரங்களைக் கவனமாகப் படித்துக் கொண்டிருந்தான். மொத்தத்தில் 73 பேர் இது வரை விண்ணப்பித்திருந்தார்கள். அவர்களில் பல நாட்டுக்காரர்கள் இருந்தார்கள். விண்ணப்பித்த தேதி, விண்ணப்பித்தவர் பெயர், விலாசம், தொலைபேசி எண், தொழில், விண்ணப்பிப்பதன் நோக்கம், மற்ற விவரங்கள் போன்ற விவரங்கள் அதில் இருந்தன. ஒவ்வொருவரைப் பற்றியும் படித்துக் கொண்டே வந்தான்.

எல்லாரைப் பற்றியும் படித்து முடித்த பின் கண்களை மூடிக்கொண்டு அந்த விவரங்களை மனதில் ஊறப்போட்ட லீ க்யாங் மறுபடியும் கண்களைத் திறந்து அந்த பட்டியலில் இரண்டு பெயர்களை பேனாவால் வட்டமிட்டான். ஒன்று திபெத்தியப் பெயர். டோக்கியோவில் வசிப்பதாக விலாசம் இருந்தது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இன்னொன்று இந்தியப்பெயர். பெயர் டாக்டர் சந்திரகாந்த் முகர்ஜி என்றிருந்தது. கல்கத்தாவில் வசிப்பதாக விலாசம் இருந்தது. சரித்திர எழுத்தாளர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இரண்டையுமே லீ க்யாங் உற்றுப் பார்த்தான். டாக்டர் என்பதும், கல்கத்தா என்பதும் அவனை யோசிக்க வைத்தது.

தலாய் லாமாவை புதுடெல்லி விமான நிலையத்தில் சந்தித்த அந்த வழுக்கைத் தலையனை அங்கு கொண்டு வந்த டாக்சி டிரைவர் அந்த ஆள் டாக்டர் என்றும் கல்கத்தாக்காரன் என்று சொல்லியிருந்ததை லீ க்யாங் யோசித்தான். டாக்டர் என்றால் மருத்துவத்தொழில் பார்ப்பவர் என்று தேடி தான் கிடைக்கவில்லை. ஏன் டாக்டரேட் வாங்கிய ஆசாமியாக இருக்கக்கூடாது....

உடனடியாக கூகுளில் டாக்டர் சந்திரகாந்த் முகர்ஜி, கல்கத்தா என்று தேடினான். கடைசியில் ஒரு முகநூல் முகவரி கிடைத்தது.   

முகநூல் போய் பார்த்தபோது அதில் அந்த வழுக்கைத்தலையர் நான் தான் அந்த ஆசாமி என்பது போல் புன்னகையுடன் தெரிந்தார்.

பதிலுக்கு லீ க்யாங் புன்னகைத்தான். அவனுடைய உள்ளுணர்வு பொய்க்கவில்லை....

(தொடரும்)
என்.கணேசன்

(அமானுஷ்யனின் விறுவிறுப்பான பூர்வீகக் கதையை முழுமையாகப் படிக்க, தற்போது வெளியாகியுள்ள 600க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட “அமானுஷ்யன்” நாவலைப் படித்து மகிழுங்கள். நூலை வாங்க  பதிப்பாளரை 9600123146 எண்ணில் அல்லது மின்னஞ்சல் blackholemedia@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.)



10 comments:

  1. கனகசபேசன்December 11, 2014 at 6:28 PM

    பொறுப்பாளர் மாதிரி சோம்பேறிகள் நம் அரசு வேலைகளில் நிறைய இருக்கிறார்கள். வேலை வாங்க தான் லீக்யாங் மாதிரி ஆள்கள் இல்லை.

    உங்கள் கதை அருமையாக போகிறது. வித்தியாசமான கதைக்களம். பின் நவீனத்துவ எழுத்தாளர்கள் என்ற பெயரில் புரியாத போரடிக்கும் கதைகளை எழுத பலர் வந்து விட்ட வேளையில் எளிய அழகுத்தமிழில் சுவாரசியாமாக எழுதக்கூடிய நீங்கள் வந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. தொடருங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. சுந்தர்December 11, 2014 at 8:45 PM

      நானும் கனகசபேசன் சார் சொன்னதை வழிமொழிகிறேன். சிக்கல் இல்லாத உங்கள் எழுத்து நடை அருமை. (என் நண்பர் ஒருவர் உங்கள் எழுத்தை மயிலிறகால் வருடுவது போல் இருப்பதாகச் சொல்வார்). பின்நவீனத்துவ எழுத்துக்கள் பேசப்படும் அளவு படிக்கப்படுவதில்லை என்பதே உண்மை.

      Delete
  2. Akshay varun part sema super. Nalla unarchi poratam. Manathu kaathu vitathu.

    ReplyDelete
  3. Enjoyed the subtle humor too!

    ReplyDelete
  4. அர்ஜுன்December 11, 2014 at 8:10 PM

    சூப்பர் சார். நுணுக்கமாய் கதாபாத்திரங்களை பிரம்மாண்டமான களத்தில் இறக்கி அழகாய் நகர்த்துகிறீர்கள். அடுத்தது என்ன என்று பரபரப்பாய் இருக்கிறது

    ReplyDelete
  5. சரோஜினிDecember 11, 2014 at 9:02 PM

    குடும்ப உணர்ச்சி போராட்டமும், ஆவணக்காப்பகத்தில் நகைச்சுவையும் ரொம்பவே ரசித்தேன்.

    ReplyDelete
  6. Excellent, we are following...Initially trouble reading Tibet names after few weeks it has become part of us...what I am amased of your story is continuity of past connetivity...

    ReplyDelete
  7. Just a suggestion: In the first para the word "வார்த்தைப்படுத்தாத" is not blending, instead "Sollamudiyatha" might be better. I believe Bruce Wills picture is out of place. A bit younger Dr. Wayne Dyer or a bald Indian might be a better choice.

    ReplyDelete
  8. What happened to this week Bhudhham Saranam Kachami edition Sir?

    ReplyDelete
  9. Sir - today's Bhuddam Saranam Gachami is not yet available :(

    ReplyDelete