Monday, November 3, 2014

உண்மையான ஆன்மிகம்!


அறிவார்ந்த ஆன்மிகம்-52

ன்றைய காலத்தில் கோயில்களில் கூட்டம் அதிகரித்துள்ளது. ஆன்மிக புத்தகங்களைப் படிப்பவர்களும், ஆன்மிகப் பிரசங்கங்களைக் கேட்பவர்களும் கூட கணிசமாக அதிகரித்தே இருக்கிறார்கள். ஆன்மிகப் பெரியோர், குருமார்கள் பின்னாலேயோ வேறெந்த காலத்திலும் இல்லாத அளவு கூட்டம் பெருகி உள்ளது. எண்ணிக்கையையும், கூட்டத்தையும் வைத்துப் பார்த்தால் ஆன்மிகம் இன்று அமோகமாக வளர்ந்திருப்பதாகத் தோன்றலாம். ஆனால் தரத்தையும், புரிதலையும் வைத்து  அவர்கள் பின்பற்றும் ஆன்மிகத்தை அளந்தால் ஏமாற்றமே மிஞ்சும். ஏனென்றால் ஆன்மிகம் உண்மையாக வளர்ந்திருக்கும் சமூகத்தில் அன்பும் அமைதியும் நிறைந்திருக்கும். இன்று சமூகத்தில் அவை நிறைந்து இருக்கின்றனவா? இல்லையே!

அப்படியானால் உண்மையான ஆன்மிகம் எது? அதன் தன்மைகள் என்ன? மூடநம்பிக்கையும், எந்திரத்தனமும் நிறைந்த பொய்யான ஆன்மிகத்தில் இருந்து அது எப்படி வேறுபடுகிறது?

உண்மையான ஆன்மிகம் மனதை அமைதிப்படுத்தும், தூய்மைப்படுத்தும். மனிதர்களை ஒருமைப்படுத்தி நேசிக்க வைக்கும். அதனால் உண்மையான ஆன்மிகம் மனிதனை தெய்வ நிலைக்கு அழைத்துச் செல்லும். பொய்யான ஆன்மிகமோ மனதில் வெறுப்பையும், கர்வத்தையும் விதைத்து மனிதர்களுக்குள் பிரிவினைகளை வளர்க்கும். அதனால் மனிதனை மிருக நிலைக்கு அழைத்துச் செல்லும். உண்மையான ஆன்மிகம் அன்புமயமானது, அறிவுபூர்வமானது, ஆத்மார்த்தமானது. உண்மையான ஆன்மிகத்தில் பாசாங்குகளும் நடிப்புகளும் இல்லை. அறிவுக்கோ, நியாயத்திற்கோ எதிரான எதுவும் இல்லவே இல்லை. உண்மையான ஆன்மிகத்தில் குறுகிய எண்ணங்களும், சித்தாந்தங்களும் இல்லை. 

அதனாலேயே உண்மையான ஆன்மிகம் இறைவனைச் சந்திக்க, இறை சக்தியை உணர மனிதனைத் தயார்நிலையில் வைத்திருக்கும். பொய்யான  ஆன்மிகமோ இறைவனை நாடுவது போல தோற்றத்தை ஏற்படுத்தினாலும் அப்படித் தயார்நிலையில் வைத்திருப்பதில்லை. இதை இரவீந்திரநாத் தாகூரின் ஒரு கதையின் மூலம் விளக்கலாம்.

பல பிறவிகளாக ஒருவன் இறைவனைத் தேடிக் கொண்டிருக்கிறான். பார்க்கும் சாதுக்களையும், ஞானிகளையும் பார்த்தவுடன் அவர்களிடம் நான் இறைவனை ஒரு முறையாவது பார்க்க வேண்டும், இறைவன் எங்கிருக்கிறார் என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறான். ஒரு பிறவியில் இறைவன் வசிக்கும் இடம் அவனுக்குத் தெரியவும் வருகிறது.

உடனே அங்கு ஓடுகிறான். உயரமான இடத்தில் இறைவன் வசிக்கிற வீட்டைப் பார்த்தவுடன் தாளாத மகிழ்ச்சி அவனுக்கு. படிகளில் வேகமாக முன்னேறிச் செல்கிறான். கதவருகே வந்து விட்டான். வாசற்கதவின் கைப்பிடியில் கையை வைக்கிறான். அதைத் திருகி கதவைத் திறக்க வேண்டியது தான் பாக்கி. உள்ளே இருக்கும் இறைவனைத் தரிசித்து விடலாம். அவன் பல பிறவிகளாகத் தேடிய இலக்கை அடைந்து விடலாம்.

ஆனால் அவன் கதவைத் திறக்கவில்லை. காரணம் அவன் மனதில் ஒரு பெரிய போராட்டம். இறைவனைப் பார்த்த பிறகு வாழ்க்கையில் பிறகு வேறென்ன அர்த்தம் இருக்கிறது என்று தோன்றியது. இனி அவன் எதைத் தேடுவான்? ....  கதவின் கைப்பிடியில் வைத்த கையை அவன் கவனமாக விலக்கிக் கொண்டான். மெல்ல செருப்பைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டான். செருப்புச் சத்தம் கேட்டு கடவுள் வெளியில் வந்து கூப்பிட்டு விட்டால் என்ன செய்வது? சத்தமில்லாமல் வேகமாகப் பின்வாங்கினான். பின் ஓட்டமெடுத்தான்.

அவன் அதன் பின்னும் கடவுளைத் தேடிக் கொண்டிருந்தான். ஆனால் மறந்து கூட கடவுள் இருக்கும் தெருப்பக்கம் வந்து விடவில்லை  என்று தாகூர் கதையை முடிக்கிறார்.

கதையில் பிறவி தோறும் தேடிக் கடைசியில் காண முடிந்தாலும் மனிதன் தன் தேடலை முடித்துக் கொள்ளத் தயாராக இல்லை என்று காட்டுகிறார். அதற்குக் காரணம் தேடல் முடியும் போது வாழ்வின் அர்த்தமும், உயிரோட்டமும் முடிந்து விடுகிறது என்று தாகூர் காட்டி இருப்பது போலத் தோன்றினாலும் இறைவனை மனிதன் காண மறுப்பதற்கு அது மட்டுமே காரணமாக இருக்க வாய்ப்பில்லை. எல்லாம் வல்ல இறைவனை, நியாயத் தீர்ப்பு வழங்கும் இறைவனை, மனிதனின் செய்கைகள் ஒவ்வொன்றின் பின்னும் உள்ள நோக்கத்தைப் பார்க்க முடிந்த இறைவனைச் சந்திக்கும் அளவு தான் தூய்மையுடையவனாக இல்லை என்று மனிதன் உள்ளூர உணர்ந்திருப்பதும் ஒரு காரணமாக இருந்திருக்க வேண்டும்.  அவனது பாவ புண்ணியக் கணக்கை இறைவன் கையில் எடுத்து சரிபார்க்க ஆரம்பித்து விடுவாரோ என்ற பயம் அவனைத் தடுத்திருக்கக் கூடும்.

எனவே ஆன்மிகப் பாதையில் பயணிப்போர் தங்கள் பாதை சரியானது தானா, பாதையின் முடிவில் இறைவனிடம் சென்று சேர்க்குமா, அந்த இறைசக்தியைச் சந்திக்கத் தயாராக இருக்கிறோமோ  என்று சோதித்துப் பார்த்துக் கொள்வது நல்லது. உண்மையான ஆன்மிகத்தில் ஈடுபட பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்:

·         அன்பு செலுத்துங்கள்!: ஆன்மிகம் அன்பை வளர்த்தால் மட்டுமே அது உண்மையான ஆன்மிகம். ஆன்மிக நாட்டம் ஆழப்பட, ஆழப்பட சகல ஜீவராசிகளிடத்தும் காரணம் சொல்லத் தெரியாத அன்பு பிறக்கும்.  அனைத்து உயிர்களும் இறைவனின் படைப்புகள் என்ற அடிப்படை நினைவு இருந்து கொண்டே இருக்கும் என்பதால் இறைவனின் மேல் வைக்கும் அன்பு கண்டிப்பாக அவரது படைப்புகள் மேலும் பரவும். அன்பு மயமான இறைவனை அந்த வழியாகத் தானே வழிபட வேண்டும்.

·         எதையும் புரிந்து செய்யுங்கள்: எதையும் புரிந்து செய்யும் போது மட்டுமே அதில் ஈடுபாடு வரும். கண்மூடித் தனமாகவும், எந்திரத்தனமாகவும் செய்யும் செயல்களில் நம் மனமும் படியாது. அறிவார்ந்த ஆன்மிகம் பகுதியில் பல ஆன்மிகச் சடங்குகளுக்கும், வழக்கங்களுக்கும் பின்னால் உள்ள அர்த்தத்தை முன்னமே பார்த்தோம் அல்லவா? அப்படிப் புரிந்து செய்யும் போது மட்டுமே அந்தச் செயல்கள் பவித்திரமாகின்றன.

·         ஆத்மார்த்தமாய் செய்யுங்கள்: ஆன்மிகப் பாதையில் நிர்ப்பந்தங்களும், கட்டாயங்களும் திணிக்கப்பட்டால் அது அடிமைத்தனம் ஆகலாமே ஒழிய ஆன்மிகமாகாது. தானாக, மனதார ஈடுபடும் போது மட்டுமே ஆன்மிகச் செயல்கள் நல்ல அனுபவங்களையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்த முடியும். கட்டாயத்தின் பேரில் மேற்கொள்கிற செயல்களில் மனம் எங்கோ அலைந்து கொண்டிருக்கும். செயல்கள் எந்திரத்தனமாய் நடந்து கொண்டிருக்கும். இந்த வகையில் செயல்கள் நடக்கும் போது எத்தனை காலம் அந்தச் செயல்கள் தொடர்ந்து செய்யப்பட்டாலும் அது வெறும் கால விரயமாகத் தான் இருக்கும்.

·         ஆன்மிகச் சூழலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்: எவ்வளவு தூரம் ஆன்மிக நாட்டம் ஒருவருக்கு இயல்பாகவே இருந்த போதும் அது எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரியாக அவரைச் செயல்படச் செய்யாது. சில நாட்களில் மனம் நல்ல வழிகளில் இசைய மறுக்கும். அது போன்ற நேரங்கள் ஒவ்வொரு ஆன்மிகவாதியின் வாழ்விலும் வரத்தான் செய்யும். அது மனதின் இயல்பே. அது போன்ற நேரங்களில் நல்ல புனித நூல்களையும், ஆன்மிக நூல்களையும் படிப்பது, ஆன்மிகப் பெரியோருடன் பழகுவது, நல்ல ஆன்மிகச் சொற்பொழிவுகள் கேட்பது போன்ற செயல்கள் திரும்பவும் ஒருவரை ஆன்மிக அலைகளுக்குக் கொண்டு வரும். நம்மை வழிதவறிச் சென்று விடாமல் பாதுகாக்கும்.

·         வேறுபாடுகளை வெறுக்காதீர்கள்: மதம், இனம், மொழி, பழக்க வழக்கங்கள் என பல வகை வேறுபாடுகளைக் கொண்டதே உலகம். அப்படிப் படைத்தவரே இறைவன் தான். அதனால் அப்படி நம் வகையிலிருந்து வேறுபடுபவர்களை வெறுப்பது என்பது அந்த வேறுபாடுகளை உடைய உலகத்தைப் படைத்த இறைவனையே வெறுப்பது போலத் தான். வேறுபாடுகள் இயல்பு என்பதைப் புரிந்திருங்கள். வேறுபடுபவர்களையும் சினேகியுங்கள். அதுவே உண்மையான ஆன்மிகம்.

·         நல்லதே செய்யுங்கள்: நல்ல செயல்களைச் செய்யத் தூண்டாத ஆன்மிகம் உண்மையானது இல்லை. ஆன்மிகம் கருணை உள்ளத்தில் நிறைவது. முடிந்த வரை முடிந்த விதத்தில் மற்றவர்களுக்கு நல்லதே செய்யுங்கள். இறைவனுக்கு நெருக்கமாக இதைவிட துரிதமான வழி வேறில்லை.

இந்த வழிகளில் வாழ்ந்து நம் ஆன்மிகம் உண்மையானதாகவும், அறிவார்ந்ததாகவும் இருக்கும்படி பார்த்துக் கொண்டால் நம் வாழ்க்கையில் இறையருள் பரிபூரணமாய் கிடைத்து, அமைதியும் நிறைவும் நிரந்தரமாய் நம்மிடம் தங்கி விடும். அதற்கு எல்லாம் வல்ல இறைவன் நம்மை வழிநடத்துவாராக!

முற்றும்

-என்.கணேசன்


நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் – 11.03.2014

6 comments:

  1. தற்போதைய ஆன்மீக பற்றிய கருத்து மறுக்க முடியா உண்மை.
    ஆன்மீக பற்றிய விளக்கம் அருமை.

    ReplyDelete
  2. சிறந்த வழிகாட்டல்
    தொடருங்கள்

    ReplyDelete
  3. nehru said YOU CANNOT TALK OF GOD TO A STARVING PERSON GIVE HIM FOOD FIRST.any person whohas genuine concern for the sufferings of others and who does something about that is truly a god sent man.

    ReplyDelete
  4. மிகவும் அருமையான பகிர்வு சார்...

    ReplyDelete
  5. நல்ல ஒரு வழிகாட்டுதல் அருமை

    ReplyDelete