Thursday, October 30, 2014

புத்தம் சரணம் கச்சாமி! – 18



நிஜம் இன்னும் உயிரோடு இருப்பது தெரியாமல் நிழலை நிஜமாக்க லீ க்யாங் முற்பட்டது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தான். புத்தர் சிலையை விடாமல் பிடித்துக் கொண்டிருந்த ஒரு குழந்தை மைத்ரேய புத்தராக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் அப்புறப்படுத்தப்பட்ட பிறகு மைத்ரேயர் பற்றிய பேச்சே திபெத்தில் முடிந்து போயிருந்தது. உண்மையான மைத்ரேயர் இறந்து போய் விட்டதால் நிலவும் சோகமாக அந்த மௌனத்தை லீ க்யாங் தவறாக எடுத்துக் கொண்டான். மைத்ரேயர் உயிருக்கு இருக்கும் ஆபத்தை அறிந்து கொண்டு மேற்கொண்ட உஷார் நிலை தான் அந்த அமைதி என்பதை அவன் அறியவில்லை. (அவன் தன் வாழ்க்கையில் போட்ட மிகக்குறைவான தப்புக் கணக்குகளில் அதுவும் ஒன்று.)

சீனத் தலைவர்களிடம் மறைமுக அனுமதி வாங்கிய பின் மைத்ரேய புத்தா திட்டத்தை அவன் மிகுந்த கவனத்துடன் வடிவமைத்தான். முதலில் திபெத்தில் அவன் நன்றாக அறிந்திருந்த புத்த பிக்கு ஒருவரை வரவழைத்தான். அவர் முன்பே சீனர்களிடம் விலை போனவர். திபெத்திய புத்தமத நூல்களை கரைத்துக் குடித்தவர். ஐம்பத்திரண்டு வயதான அந்த பிக்குவின் பெயர் அவன் நினைவில் இல்லை. அவருக்கு ஒரு கண் பார்வை இல்லாததால் ஒற்றைக்கண் பிக்கு என்ற பெயரில் தான் அவரை மனதில் பதிவு செய்திருந்தான்.  

அவரிடம் சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு திபெத்தில் பிறந்த குழந்தைகளில் இலட்சணமாய், புத்திசாலித்தனமும், சூட்டிப்பும் நிறைந்த குழந்தைகளாக தேர்ந்தெடுத்து தெரிவிக்கச் சொன்னான். அவர் மூன்று நாட்களில் அப்படிப்பட்ட ஏழு குழந்தைகள் பட்டியலைக் கொண்டு வந்து தந்தார்.  அந்த ஏழு குழந்தைகளையும் வரவழைத்து இரண்டு நாட்கள் மறைவில் இருந்து ஆராய்ந்தான்.

மிக வசீகரமான தோற்றம், மலர்ந்த முகம், எதையும் சீக்கிரம் புரிந்து கொள்ளும் அறிவு எல்லாம் சேர்ந்த ஒரு குழந்தை அந்த ஏழில் ஒன்றாக இருந்தது. பார்த்தவுடனேயே மனதில் பதிந்து போகிற தோற்றம் கொண்ட டோர்ஜே என்ற பெயருடைய அந்தக் குழந்தையை மைத்ரேயனாக லீ க்யாங் தேர்ந்தெடுத்தான்.

டோர்ஜேயின் ஏழைக்குடும்பத்துக்கு நல்லதொரு தொகை தரப்பட்டது. ஒரு தனி ரகசிய இடத்திற்கு சிறுவனும், ஒற்றைக்கண் பிக்குவும் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அவனுக்கு மைத்ரேயன் என்ற பெயர் சூட்டப்பட்டு அப்படியே அங்கு அழைக்கப்பட்டான். அவனுக்கு அடிப்படைக் கல்வியும் அதைத் தொடர்ந்து புத்தமத புனித நூல்களையும் கற்றுத் தரும் வேலை ஒற்றைக்கண் பிக்குவுக்குத் தரப்பட்டது. கடந்த ஒரு ஆண்டாக எப்படிப் பேச வேண்டும், எப்படி நடக்க வேண்டும், எப்படி உட்கார வேண்டும், எப்படி ஆசிர்வதிக்க வேண்டும், எப்படி கம்பீரமாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் சொல்லித்தர வேறு ஒரு நபரை லீ க்யாங் ஏற்பாடு செய்தான். மாதம் ஒரு முறை நேரில் சென்று மைத்ரேயன் என்ற கதாபாத்திரத்தின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும் செய்தான். உண்மையிலேயே அந்தச் சிறுவனின் முன்னேற்றம் பிரமாதமாக இருந்தது. உண்மையாக மைத்ரேயன் இருந்திருந்தால் கூட இவனளவு கச்சிதமாக மனதில் பதிவானா என்கிற சந்தேகம் லீ க்யாங்குக்கு சென்ற மாதம் தான் வந்திருந்தது.

இப்போதோ உண்மையான மைத்ரேயன் இருக்கிறான் என்பது உறுதியாகி விட்டதால் அந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளும் சந்தர்ப்பமும் தனக்கு வாய்த்திருக்கிறது என்று வேடிக்கையாக லீ க்யாங் நினைத்துக் கொண்டான்.

வாங் சாவொவிற்குப் போன் செய்து புத்தகயா நிலவரத்தைக் கேட்டான். டெர்கார், கர்மா தார்ஜே இரண்டு மடாலயங்களுக்கு முன்புறத்திலும் ஆட்கள் நிற்பதாகவும், வெளியாட்களுக்கு இனி மாலை வரை மடாலயங்கள் மூடப்பட்டிருக்கும் என்றாலும் ஆட்கள் கண்காணிப்பைத் தளர்த்தவில்லை என்றும் வாங் சாவொ தெரிவித்தான்.

நல்லதுஎன்று சுருக்கமாக பேச்சை முடித்துக் கொண்ட லீ க்யாங் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினான். யோசிக்கையில், அவனுடைய கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் தலாய் லாமா அசல் மைத்ரேயனை பத்தாண்டுகளாக ஒளித்து வைத்திருப்பது அவனுள் லேசாக கோபத்தை எழுப்பியது. மைத்ரேயனைப் பற்றிய எல்லாத் தகவல்களையும் அறிந்து கொள்வது உத்தமம் என்று தோன்றியது. ஒரு முடிவுக்கு வந்தவனாய் எழுந்தான்.


பீஜிங்கில் இருக்கும் சீனத் தொல்பொருள் ஆவணக் காப்பகம் மிகப் பெரிய நிலப்பரப்பில் அமைந்திருந்தது. மிகப்பழமையான நாகரிகத்தை உடைய சீனாவில் பழங்கால சுவடிகள் உட்பட பாதுகாக்கப்பட வேண்டிய தொல்பொருள்கள் ஏராளமாக இருந்தன.  திபெத்தில் இருக்கும் ஆவணக் காப்பகம் பீஜிங்கின் ஆவணக்காப்பகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதனால் சீனத் தொல்பொருள் ஆவணக்காப்பகத்திற்கு லீ க்யாங் திடீரென விஜயம் செய்தான்.

அந்த ஆவணக்காப்பகத்தின் முதன்மை பொறுப்பாளர் சீனப் பிரதமரின் சகோதரியின் கணவர். அதனால் அவர் லீ க்யாங்கின் வரவால் பரபரப்படையவில்லை.  ஐம்பத்தெட்டு வயதான அவர் தோற்றத்தில் எழுபது வயதைக் காட்டினார். அவர் நகர்வதிலும் நடப்பதிலும் மேலும் ஐந்தாறு வயது கூடுதல் நிதானம் இருக்கும். அவர் அறிவு கூர்மை மிக்கவர் என்றாலும் மகா சோம்பேறியான அவரை லீ க்யாங்குக்கு ஆரம்பத்திலிருந்தே பிடிக்காது. மகா முட்டாள்களைக் கூட அவனால் மன்னிக்க முடியும். ஆனால் சோம்பேறிகளை அவனால் சகிக்க முடிந்ததில்லை. சோம்பேறிகளை அரசு வேலைகளில் இருந்து விடுவித்து விட்டால் மட்டுமே ஒரு நிர்வாகம் உருப்பட முடியும் என்கிற திடமான நம்பிக்கை கொண்ட லீ க்யாங் அவருடைய அலுவலக அறைக்குள் நுழைந்த போது அவர் சிலை போல் உட்கார்ந்து ஏதோ யோசித்துக் கொண்டிருந்தார்.

லீ க்யாங்கைப் பார்த்தவுடன் விழிகள் மட்டும் அவன் பக்கம் நகர்ந்தனவே தவிர முகமும் உடலும் இம்மியும் நகரவில்லை. மெல்ல சொன்னார். “வாருங்கள்

இந்த ஆளை அதிக நேரம் பார்த்துக் கொண்டிருந்தால் கழுத்தை நெறித்து விடத்தோன்றும் என்று எண்ணியவனாக லீ க்யாங் நேராக விஷயத்திற்கு வந்தான். “மைத்ரேய புத்தர் பற்றி குறிப்பிடும் பழங்கால ஆவணங்கள் நம்மிடம் சுமார் எத்தனை இருக்கும்

அவனையே யோசனையுடன் சிறிது நேரம் அவர் பார்த்தார். பின் மெல்ல சொன்னார். “சுமார் நூறு இருக்கும்.

“திபெத்தில்?

“திபெத்தையும் சேர்த்து தான் சொல்கிறேன். அதுவும் நம் நாட்டின் ஒரு பகுதி தானே?

அதைச் சொல்லும் போது கூட அவருடைய உதடுகள் அதிக அகலத்திற்கு அசையவில்லை. லீ க்யாங் கேட்டான். “அதில் எத்தனை மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன

“கிட்டத்தட்ட எல்லாமே.என்று சொன்னவர் இவன் இன்னும் இதுபற்றி அதிகம் கேட்பான் என்று புரிந்து கொண்டவராக “என் உதவியாளனை அழைக்கிறேன். அவன் உங்களுக்கு உதவுவான்என்று சொல்லி லீ க்யாங்கிடம் பேசி சலிப்பதைத் தவிர்க்கப் பார்த்தார்.

“எனக்கு உங்களிடம் தான் கேட்க வேண்டும்என்று அழுத்தம் திருத்தமாக சொல்லி அவரையே லீ க்யாங் ஊடுருவி பனிப்பார்வை பார்த்தான். அவருக்கு ஒரு கணம் வயிற்றை ஏதோ செய்தது.

திடீரென்று லீ க்யாங் புன்னகைக்கு மாறி மிகுந்த மரியாதையுடன் சொன்னான். ஏனென்றால் உங்கள் அறிவார்ந்த கருத்தைக் கேட்கத் தான் நான் வந்திருக்கிறேன். உங்கள் உதவியாளனுக்கு நிறைய தெரிந்திருக்கலாம். ஆனால் உங்கள் அளவு ஆழமாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை

லீ க்யாங்கைப் போன்ற ஒரு பேரறிவாளன் தன்னுடைய அறிவார்ந்த கருத்தைக் கேட்க வந்திருப்பதாகச் சொன்னது உள்ளூர ஒரு பெருமிதத்தை ஏற்படுத்தியது. அதோடு கேட்க வந்ததைக் கேட்டுத் தெரிந்து கொள்ளாமல் அவன் நகர மாட்டான் என்பதும் தெரிந்தது. வேறு வழியில்லாமல் அவர் சிறிதாய் முறுவலித்து விட்டு  “கேளுங்கள். தெரிந்ததைச் சொல்கிறேன்

அந்த நூறு ஆவணங்களில் எத்தனை மைத்ரேய புத்தர் பிறப்பைப் பற்றியும் அவர் தோற்றத்தைப் பற்றியும், அவருடைய செயல்களைப் பற்றியும் தெளிவாகச் சொல்வதாக நீங்கள் நினைக்கிறீர்கள்?

“சுமார் ஏழு இருக்கும்

“இப்போதைய காலகட்டத்தையும் மைத்ரேயரையும் சம்பந்தப்படும் ஆவணம் ஏதாவது இருக்கிறதா?

பதிலைத் தெரிந்து கொண்டே அவன் கேட்கிறான் என்பது அவருக்குப் புரிந்தது.  ஆனாலும் அவர் சொன்னார். திபெத்தில் ஒரு குகையில் கிடைத்த பத்மசாம்பவாவின் ஒரு ஓலைச்சுவடி பத்து வருடங்களுக்கு முன் மைத்ரேயர் பிறப்பார் என்று சொன்னது. அந்த ஓலைச்சுவடி விசித்திரமானது. அது இரண்டு பகுதிகளாக இது வரை கிடைத்திருக்கிறது. 15 வருடங்களுக்கு முன்பு ஒரு பகுதியும், பத்து வருடங்களுக்கு முன் ஒரு பகுதியும்.... .  

அந்த ஓலைச்சுவடியின் மொழி பெயர்ப்பு எனக்கு வேண்டுமே

“அதற்கு நம்மிடம் இது வரை 18 மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன. யாருடைய மொழிபெயர்ப்பை நீங்கள் கேட்கிறீர்கள்?

அத்தனை மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன என்பதை லீ க்யாங் அறிந்திருக்கவில்லை. “யாருடைய மொழிபெயர்ப்பு சிறந்தது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?என்று அவரிடமே கேட்டான்.

“அதைத் தீர்மானிக்க வழியில்லை

“ஏன்?

“பத்மசாம்பவா மந்திரசித்தியில் பிரசித்தி பெற்றவர். இது ஒன்றைத் தவிர அவருடைய மற்ற எல்லா ஓலைச்சுவடிகளும் மந்திரத்தையும், தந்த்ராவையும் பற்றித் தான். முடிச்சுப் போட்டு எழுதுவதில் வல்லவர். அதனால் மொழிபெயர்ப்பது அவ்வளவு சுலபமல்ல. எல்லா மொழி பெயர்ப்புகளும் ஒத்துப் போகும் ஒரே விஷயம் பத்து வருடங்களுக்கு முந்தைய மார்கழி மாத சுக்லபக்‌ஷத்தில் திபெத்தில் மைத்ரேயர் அவதரிப்பார் என்பது வரைக்கும் தான். மற்ற விஷயங்களில் எல்லாம் ஒருவருக்கொருவர் மாறுபடுகிறார்கள். எது சரி எது தவறு என்பதை மைத்ரேயரைப் பார்த்த பிறகு தான் ஒருவரால் தீர்மானிக்க முடியுமே ஒழிய அதற்கு முன்பு முடியாது

(தொடரும்)

என்.கணேசன்


6 comments:

  1. சிறந்த பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
  2. Very interesting and thrilling. Your way of story telling and characterization is amazing. We feel as if the incidents are happening in front of us.

    ReplyDelete
  3. Wonderful story telling! Thanks for giving us such different and inspiring stories for free. I believe many of your fans like the spiritual aspects of your story. Spirituality is the key differentiator. I would request weekly posts from you on "Arivarntha Anmigam" or similar series. I have read your Q&A with Sahaptham and penmai.com. The answers were simple and easy to understand. It will be great if you can start at least a monthly series receiving Qs from your fans on spirituality related subjects and answer them. It will be a wonderful collection and useful for the society.

    ReplyDelete
  4. சமமான வில்லன் லீ க்யாங்...அருமை

    ReplyDelete