Monday, September 8, 2014

பிறக்கும் போதே மயக்கும் மாயை!


கீதை காட்டும் பாதை 33

ந்த நோக்கத்தில் எப்படி வணங்கினாலும் அந்தத் தன்மைக்கேற்ப தன்னை நெருங்குகிறார்கள், பலனடைகிறார்கள் என்று சொல்லிய ஸ்ரீகிருஷ்ணர் அடுத்ததாக தன் உண்மையான சொரூபத்தை மனிதர்களால் உணர முடியாமல் போவது பற்றி விரிவாக விளக்குகிறார்.

அழிவற்றதும், ஈடில்லாததுமான என்னுடைய பரமாத்ம சொரூபத்தை அறியாத அறியாத அறிவிலிகள் பிறப்பில்லாத என்னைப் பிறந்தவன் என்று எண்ணுகிறார்கள்.

யோக மாயையினால் மறைக்கப்பட்ட நான் எல்லோருக்கும் வெளிப்படையாகத் தெரிவதில்லை. ஆகவே அறிவில்லாத இவ்வுலகம் என்னைப் பிறப்பற்றவன் என்றும் அழிவற்றவன் என்றும் அறிவதில்லை.

கழிந்து போனவைகளும், இருப்பவைகளும், வரப்போவைகளுமான சகல உயிர்களையும் நான் அறிவேன். ஆனால் என்னையோ எவனும் அறியான்.

பாரதா! விருப்பு, வெறுப்பு என்பவைகளால் எழும் இரட்டைகளாகிற மோகத்தினால் சகல உயிர்களும் தாம் பிறக்கும் போதே மயங்கி விடுகின்றன.

மனிதனின் பிரச்னைகளுக்கான வித்து பிறவியிலேயே விதைக்கப்பட்டு விடுகின்றது. ஆத்மஞானம் மறக்கப்பட்டு மாயையால் சூழப்பட்டு ஆரம்பிக்கப்படும் வாழ்க்கையில் காண்கின்ற வெளித்தோற்றங்களே நிஜங்களாய் பாவிக்கப்படுகின்றன. தன்னையே, எடுத்திருக்கும் பிறவிக்கான புதுக்கதாபாத்திரமாய் நினைக்க ஆரம்பிக்கும் மனிதன் அதற்கும் மேலான உண்மை இருக்கும் என்று எண்ணக்கூட முடியாத நிலை தான் பெரும்பாலான நேரங்களில் இருக்கின்றது.

தன்னையே உண்மையாக அறிய முடியாதவன், இறைவனை அறிய முடியாமல் போவதில் ஆச்சரியம் என்ன இருக்கின்றது? அறிய முடியாதவைகளை அனுமானங்களில் வடிப்பதல்லவா அறியாமையின் இயல்பு. அப்படித் தான் என்னென்னவோ தவறாக நிர்ணயித்து அதையே உண்மை என்று நம்பி அதனால் வரும் பிரச்னைகளில் மனிதன் உழன்று கொண்டிருக்கிறான். அப்படிப்பட்ட நிர்ணயங்களில் ஒன்று தான் இறைவனையும் தன்னைப் போல் பிறந்து வந்ததாக உருவகப்படுத்திக் கொள்வது. உருவங்களிலும் தன்மைகளிலும் முழுவதுமாக அடக்கி விட முடியாத மகாசக்தியை, ஆரம்பமோ, அழிவோ இல்லாத பரமாத்ம சக்தியை, பிறப்பு இறப்பு என்ற எல்லைக்குள் அடக்கிப் பார்க்கிற முட்டாள்தனத்தை அறியாமையால் மனிதர்கள் செய்கிறார்கள்.

இன்று மதங்களுக்குள் உருவாகும் சண்டைகளே இப்படி இறைவனைத் தங்கள் வட்டங்களுக்குள் குறுக்கிப் பார்ப்பதனால் ஏற்படுவது தானே? எல்லாம் வல்ல மகாசக்தியை உன் இறைவன், என் இறைவன் என இரண்டாகப் பிரித்து ஒரு பாதியைப் பாராட்டி வணங்கி மறு பாதியை இகழ்ந்து வெறுத்து தங்களை ஆன்மிகவாதிகளாக நம்பும் அறியாமை எத்தனை பேரிடம் நாம் பார்க்கிறோம்!.

இதற்கெல்லாம் காரணம் சூரியனை மேகம் மறைப்பது போல யோகமாயை நம் கண்களில் இருந்து இறைவனை மறைப்பது தான் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். அந்த மாயை தான் விருப்பு வெறுப்பு என்ற பின்னல்களால் இறைவன் உட்பட எல்லாவற்றையும் மறைக்கிறது. ஒன்றை வேறொன்றாகக் காட்டுகிறது. எல்லாம் அறிந்த இறைவனையே நாம் அறியாமல் தடுக்கிறது.

இந்த மாயையில் இருந்து விடுபட்டு அது ஏற்படுத்தும் துன்பங்களில் இருந்தும் நீங்கி இருப்பது எப்படி என்ற கேள்விக்கு ஸ்ரீகிருஷ்ணர் இப்படி பதில் அளிக்கிறார்.

ஆனால் புண்ணிய கர்மங்களைச் செய்கிற எந்த ஜனங்களுடைய பாவம் தீர்ந்து போகிறதோ அவர்கள் சுகம்-துக்கம் போன்ற இரட்டை நிலைகளின் மோகத்திலிருந்து விடுபட்டு உறுதியான விரதம் பூண்டு என்னையே உபாசிக்கிறார்கள்.

மூப்பு, மரணம் இவைகளிலிருந்து விடுபடுவதற்காக என்னைச் சரணமடைந்து முயற்சி செய்கிபவர்கள் அந்த பிரம்மத்தையும், ஆத்ம தத்துவத்தையும் சகல கர்மங்களையும் நன்கறிந்தவர்களாவார்கள்.

மாயையில் இருந்து முழுவதுமாக மீள இங்கு பாவங்கள் தீர்ந்து புண்ணிய கர்மங்கள் செய்வது, உறுதியான நிலைப்பாடு, சரணாகதி என்ற மூன்றையும் ஸ்ரீகிருஷ்ணர் வலியுறுத்துகிறார்.

விருப்பு-வெறுப்பு, சுகம்-துக்கம் போன்ற இரட்டை நிலைகளால் பின்னப்படும் யோகமாயையில் இருந்து மீள ஒருவனின் பாவகர்ம வினைகள் தீர்ந்திருக்க வேண்டும், புண்ணிய கர்மங்கள் செய்து கொண்டிருக்க வேண்டும். பாவத்தின் சம்பளம் பெற்றுக் கொண்டிருக்கிற வரையில், புண்ணியக் கணக்கை ஆரம்பிக்காத வரையில் யோகமாயை எல்லாவற்றையும் தவறாகவே காட்டி நம்மை வழிதவறச் செய்யும்.

அதே போல, மன உறுதி. மன உறுதி இல்லாத வரை பழகிப்போன தவறுகளையே திரும்பத் திரும்ப செய்து கொண்டிருப்போம். அந்த சுழியில் இருந்து தப்பிக்க மன உறுதியுடன் கூடிய அபாரப் பிரயத்தனம் வேண்டும். அது மட்டுமே இறைவனை விடாமல் உபாசிக்க வைக்கும். அப்படி உபாசித்து இறையருள் பெறாவிட்டால் நம் சில்லறை அறிவுக்கு எட்டுகிற விஷயங்களைக் கூட நம்மால் பின்பற்ற முடியாது.

அப்படி உபாசித்து மேலான சக்தியிடம் ஒரேயடியாய் சரணாகதி அடையும் போது நம் பலவீனங்கள், குறைகள், அறியாமை எல்லாம் விலகி அந்த மகாசக்தியால் நாம் நிரப்பப்பட்டு  பலமாக, நிறைவாக, அனைத்தும் அறிய முடிந்த அந்த சக்தியின் அங்கமாகி விடுகிறோம். அப்போது மாயையின் திரை விலகி, பிரம்மமும், ஆத்மதத்துவமும், சகல கர்மங்களும் நம்மால் தெளிவாக அறிய  முடிந்தவைகளாக ஆகி விடுகின்றன.

எல்லாம் அறியும் போது தான் அனைத்து துன்பங்களுக்கும் மூலகாரணமாய் இருக்கும் மாயையின் பிடியில் இருந்து முழுவதுமாக விலகி அமைதி அடிகிறோம்.

இன்னும் ஒரு சுலோகத்துடன் பகவத் கீதையின் ஏழாம் அத்தியாயம் நிறைவுபெறுகிறது. அந்த சுலோகத்தில் உபயோகப்படுத்தி இருக்கும் சொற்களுக்கான விளக்கம் அடுத்த அத்தியாயத்தில் ஆரம்பிப்பதால் அதை அடுத்த எட்டாம் அத்தியாயத்தில் அந்த விளக்கத்துடன் பார்ப்போம்.

பாதை நீளும்.....

-          என்.கணேசன்

6 comments:

  1. Your writings are powerful and different. May God bless you son.

    ReplyDelete
  2. அய்யா நான் அறிந்தவரை புண்ய கர்மங்களும் மாயையை உருவாக்கும். கர்மங்களிலிருந்து முழுவதுமாக விடுபடுவது மட்டுமே ஞானத்தை தரும். கர்மா இருக்கும் வரை மறு பிறப்பு இருக்கும். (புண்ய கர்மா அனாலும்)

    ReplyDelete
  3. கீதையின் விளக்கங்கள் உங்களது எழுத்தில் இனிதே தொடரட்டும். தினத்தந்தியில் நீங்கள் ஆரம்பித்திருக்கும் மஹாசக்தி மனிதர் பற்றிய தொடருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
    -ஏகாந்தன்

    ReplyDelete
  4. Geethaiyai padipathu kooda..... Pava kanakku thernthu ponatharkana arikuriya thontrukirathu...

    ReplyDelete
  5. if you are a true atheist you need not bother about all these things. Being a true atheist would be more satisfying... peaceful...

    ReplyDelete
  6. புண்ணிய கர்மம் மற்றும் மன உறுதி பற்றி கூறியது அருமை...

    ReplyDelete