Thursday, September 11, 2014

புத்தம் சரணம் கச்சாமி! – 11



லீ க்யாங்குக்கு காத்திருப்பது கஷ்டமாக இருந்தது. தலாய் லாமாவை இன்னும் யாரும் சந்திக்க வரவில்லை. பிரதமர் அலுவலகத்தில் இருந்தும் பிறகு எந்த விதமான தகவலும் தலாய் லாமாவுக்கு அனுப்பப்படவில்லை.  சோடென் மூலமாக கிடைத்த தகவலின்படி தலாய் லாமாவும் அமைதி இழந்து தான் தவிக்கிறார் என்பது தெரிந்தது. அவருடைய பிரார்த்தனை நேரம் கூடி விட்டதாகவும் சோடென் தெரிவித்திருந்தான்.

லீ க்யாங் இந்திய உளவாளிகளில் வித்தியாசமான பெயரோ, பட்டப் பெயரோ கொண்ட ஆள்கள், அவர்களுடைய முழுவிவரங்கள் எல்லாம் உடனடியாகத் தனக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்று தன் துறை ஆள்களிடம் கட்டளை இட்டிருந்தான். அவர்கள் முழுமூச்சாய் அந்த வேலையில் இப்போது ஈடுபட்டிருந்தார்கள்....

வாங் சாவொ போன் செய்தான். சார் புதுடெல்லி விமானநிலையத்தில் அந்த வழுக்கைத்தலையனைக் கொண்டு போய் விட்ட டாக்ஸி டிரைவரைக் கண்டுபிடித்து விட்டார்கள்...

லீ க்யாங் பரபரப்பானான். “யாராம் அந்த வழுக்கைத்தலையன்?

யாரோ டாக்டர் என்று டாக்ஸி டிரைவர் சொல்கிறான். கல்கத்தாக்காரனாம். அந்த டாக்ஸி டிரைவரிடம் அந்த ஆள் தன் விசிட்டிங் கார்டை தந்திருக்கிறான். ஆனால் அந்த டாக்ஸி டிரைவர் அதைத் தொலைத்து விட்டானாம். விசிட்டிங் கார்டைப் பார்த்ததில் டாக்டர் என்பது மட்டும் தான் நினைவிருக்கிறது அந்த டிரைவருக்கு....

லீ க்யாங் உடனடியாகக் கேட்டான். “புதுடெல்லியில் எங்கே இருந்து அந்த வழுக்கைத்தலை டாக்ஸியில் ஏறினானாம். ஏதாவது ஆபிசில் இருந்தோ, வீட்டில் இருந்தோ ஏறி இருந்தால் அங்கே விசாரிக்கலாமே

“பாரக்கம்பா ரோட்டில் இருந்த ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸின் வாசலில் இருந்து அந்த வழுக்கைத்தலையன் ஏறியிருக்கிறான். அந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் 200 கடைகள் இருக்கின்றன

லீ க்யாங் பெருமூச்சு விட்டான்....


க்‌ஷய் வருணுடன் திரும்பி வந்து தன் முடிவைத் தெரிவித்த போது ஆனந்துக்கும் ஓரளவு ஆறுதலாகத் தான் இருந்தது. ஆனால் தலாய் லாமா சொல்லும் நபர் மைத்ரேய புத்தர் தானா என்பதை அக்‌ஷயால் எப்படி உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்பது அவனுக்கு விளங்கவில்லை. அதை அக்‌ஷயிடம் வாய் விட்டுக் கேட்டான்.

அக்‌ஷய் சொன்னான். “எனக்கு புத்தமதம் புதியதல்ல. அவர்கள் மைத்ரேய புத்தர் என்று நினைக்கும் பையனை நம்புவதற்குச்  சொல்லும் காரணம் ஆதாரபூர்வமானது தானா என்பதை எனக்கு கண்டுபிடிப்பது பெரிய விஷயமல்ல

ஆனந்த் கேட்டான். “அவர்கள் சொல்லும் பையன் மைத்ரேய புத்தர் என்பது உண்மையானால் வருண் சொன்ன மாதிரி உன் உதவி தேவையே இல்லையே. ஒரு தெய்வப்பிறவிக்கு உன் உதவி எதற்கு?

அதையும் தான் நான் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளப் போகிறேன்.  அதன் பிறகு தான் போவதா வேண்டாமா என்று முடிவு செய்யப் போகிறேன். வருணுக்கு நான் அப்படித்தான் வாக்குக் கொடுத்திருக்கிறேன்

ஆனந்த் வருணின் முகத்தைப் பார்த்தான். வருண் முகத்தில் திருப்தி கலந்த பெருமிதம் தெரிந்தது. இது வரை இங்கு நடந்த உணர்ச்சிப் போராட்டத்தைப் பற்றி யோசிக்கையில் நிஜமான ஒரு தந்தையும், மகனும் கூட ஒருவரை ஒருவர் இந்த அளவு நேசிக்க முடியுமா என்ற சந்தேகம் ஆனந்துக்கு வந்தது.

அக்‌ஷய் கேட்டான். “சரி இனி அடுத்தது என்ன? இது சம்பந்தமாக நான் யாரிடம் பேச வேண்டும்? தலாய் லாமாவிடமா?

அப்போது தான் ஆனந்த் புதிய பிரச்னையை உணர்ந்தான். தலாய் லாமா மூலம் வந்த கோரிக்கையில் தேர்ந்தெடுக்க இரண்டே வழிகள் தான் இருந்தன. ஏற்றுக் கொள்வது அல்லது மறுப்பது. அக்‌ஷய் ஏற்றுக் கொண்டால் அவனிடம் தர ஒரு மூடிய உறையை தலாய் லாமா தந்திருந்தார். மறுத்தால் அந்த உறையை தீயிலிட்டு எரித்து விடும்படி சொல்லி இருந்தார். அந்த உறையை ஆனந்த் எடுத்துக் கொண்டு வந்திருந்தான். அக்‌ஷயிடம் தந்து விட்டோ அல்லது அங்கேயே எரித்து விட்டோ வரும்படியாகத் தான் சோம்நாத்தின் உத்தரவு இருந்தது. ஆனால் இந்த இரண்டும் கெட்டான் முடிவுக்கு அக்‌ஷய் வருவான் என்று அவர்கள் யாருமே ஏனோ எதிர்பார்த்திருக்கவில்லை போல் இருக்கிறது.

“என்ன யோசிக்கிறாய்?அக்‌ஷய் கேட்டான்.  

ஆனந்த் சொன்னான். வருணின் கடும் எதிர்ப்பு இருந்திரா விட்டால் அக்‌ஷய் தலாய் லாமாவின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளும் மனநிலையிலேயே இருந்திருப்பான். ஆனால் இப்போதோ தன்னை மிகவும் நேசிக்கும் குடும்பத்தினரின் நியாயமான உணர்வுகளையும் சந்தேகங்களையும் கணக்கிலேயே எடுத்துக் கொள்ளவில்லை என்ற தவறு நேர்ந்து விடக்கூடாது என்கிற மனநிலைக்கு வந்திருந்தான். அதனால் ஆனந்திடம் ஒன்றும் சொல்லாமல் மௌனம் சாதித்தான்.

அக்‌ஷய் தன் நிலையில் இருந்து மாறப்போவதில்லை என்பது உறுதியாய் தெரிந்தவுடன் ஆனந்த் சோம்நாத்திடம் தற்போதைய பிரச்னையைச் சொன்னான். என்ன செய்வது என்று கேட்டான்.

“தலாய் லாமாவைத் தான் கேட்க வேண்டும்என்று சொன்ன சோம்நாத் அரை மணி நேரத்தில் திரும்பவும் போன் செய்வதாய் சொன்னார்.  


லாய் லாமாவின் தனி அலைபேசி ஒலித்த போது அவர் சோடென்னிடம் சில கடிதங்கள் அனுப்ப உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருந்தார். தனி அலைபேசி எண்ணில் அவரைத் தொடர்பு கொள்பவர்கள் மிகவும் அபூர்வம். அதுவும் பகல் நேரங்களில் அந்த அலைபேசி ஒலிப்பது இது இரண்டாம் முறை. ஏழு மாதங்களுக்கு முன்பு ஒலித்த போது அது தவறாக வந்த அழைப்பாக இருந்தது. இதுவும் அப்படித்தான் இருக்கும் என்று நினைத்தாலும் முன்னெச்சரிக்கையாக சோடென்னிடம் ட்சுக்லகாங்க் திருக்கோயில் நூலகத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை எடுத்துவரச் சொன்னார். அவன் போய் வர குறைந்த பட்சம் பத்து நிமிடங்கள் ஆகும்....  அவன் வெளியே சென்ற பிறகு தான் அந்த அலைபேசியைக் கையில் எடுத்தார்.

சோடென்னோ அவர் பேச்சை ஒட்டுக் கேட்காமல் எந்தத் தலை போகிற வேலையிலும் ஈடுபடுவதில்லை என்று முடிவெடுத்திருந்ததால் கதவோரம் நின்று காதைத் தீட்டினான்.

தலாய் லாமா தவறான எண் என்று சொல்லி வைத்து விட வேண்டியிருக்கும் என்று எண்ணி தான் அலைபேசியைத் திறந்தார். எந்த அறிமுகமும் இல்லாமல் நேரடியாகப் பேசியது ஒரு குரல்.

“நீங்கள் பிரதமரிடம் சொன்ன நபர் உங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதற்கு முன் சில சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார். அந்த உறையைக் கொடுப்பதா, வேண்டாமா?

தலாய்லாமாவுக்கு தன்னை சுதாரித்துக் கொள்ள சிறிது நேரம் தேவைப்பட்டது. அமானுஷ்யன்எந்தக் கேள்வியும் கேட்காமல் ஒத்துக் கொள்வான் அல்லது மறுப்பான் என்று எப்படி நினைத்தோம்? என்று எண்ணியவராகச் சொன்னார். “பரவாயில்லை. கொடுத்து விடுங்கள்....அவருக்கு வேறு வழி இல்லை...

சரி...என்று எதிர்முனை சொல்லி போன் இணைப்பைத் துண்டிப்பதற்குள் அவசர அவசரமாக தலாய் லாமா சொன்னார். “ஆனால் எது கேட்பதாக இருந்தாலும் தயவுசெய்து உடனடியாய் போகச் சொல்லுங்கள்.... காலம் நம் வசம் இல்லை....தலாய் லாமா தயவுசெய்து என்ற சொல்லிற்கு அதிக அழுத்தம் தந்தார்.

“சொல்கிறேன்

தலாய் லாமா அலைபேசியை வைத்த பிறகு தான் சோடென் நகர்ந்தான். அவன் அவர் சொன்ன புத்தகத்தை எடுத்துக் கொண்டு அவர் அறைக்குள் நுழைந்த போது அவர் சிந்தனையெல்லாம் வேறெங்கோ இருப்பது தெளிவாகத் தெரிந்தது. அவர் அவனிடம் இருந்து அந்த புத்தகத்தை வாங்கிக் கொண்டு மீதி வேலையை நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லி அனுப்பி விட்டார்.  

சோடென் அவசரமாகத் தனதறைக்குச் சென்று ஒட்டுக் கேட்ட விஷயத்தை வாங் சாவொவிற்கு அனுப்பி வைத்தான்.


னந்துக்கு சோம்நாத்திடமிருந்து உடனடியாகத் தகவல் வந்தது. ஆனந்த் அந்த உறையை அக்‌ஷயிடம் தந்தான். “எது கேட்பதாக இருந்தாலும் உடனடியாகப் போய் கேட்கச் சொல்லி இருக்கிறார் தலாய் லாமா. ஏதோ நடந்து விடும் என்று அவர் பயப்படுகிற மாதிரி இருக்கிறது. பிரதமரிடம் பேசிய போது கூட அப்படித்தான் அவசரப்பாட்டாராம்....

அக்‌ஷய் அந்த உறையைப் பிரித்தான். தலாய் லாமா ஆங்கிலத்தில் சுருக்கமாக எழுதி இருந்தார்.

“போதிசத்துவரின் அருளுக்குப் பாத்திரமான அன்பரே,
இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டதற்கு நாங்கள் என்றும் உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறோம்.  புத்தகயாவில் உள்ள டெர்கார் புத்த மடாலயத்தில் என் குருநாதரான ஆசான் தங்களை எதிர்பார்த்துக் கொண்டு உள்ளார். தயவுகூர்ந்து உடனடியாக அவரைச் சென்று நீங்கள் சந்தித்தீர்களானால் தங்கள் பணிக்குத் தேவையான எல்லா விவரங்களையும் கூறுவார்.
இப்படிக்கு
தலாய் லாமா


லீ க்யாங் வாங் சாவொ அனுப்பிய செய்தியை இரண்டு முறை படித்துப் பார்த்து விட்டு உடனடியாக வாங் சாவொவைப் போனில் தொடர்பு கொண்டான்.

“வாங் சாவொ. ஆசான் இந்தியாவில் இப்போது எங்கிருக்கிறார்?

“தெரியவில்லை. தர்மசாலாவில் கடைசியாக நம் ஆட்கள் பார்த்திருக்கிறார்கள். அப்போது மழையில் ஓடிய ஆள் பிறகு நம் ஆட்கள் பார்வையில் சிக்கவில்லை. ஏன் கேட்கிறீர்கள்?

“அவர்களுக்கு உதவப் போகும் ஆள் ஆசானைத் தான் சந்திக்கப் போகிறான். தலாய் லாமாவை அல்ல

“எப்படிச் சொல்கிறீர்கள்?

தலாய் லாமா பேசியதில் முக்கியமான ஒரு வார்த்தையைக் கவனித்தாயா? ‘எது கேட்பதானாலும் உடனடியாகப் போகச் சொல்லுங்கள்என்று தான் சொல்லி இருக்கிறார். உடனடியாக வரச்சொல்லுங்கள் என்று சொல்லவில்லை. அவரிடமே அவன் போய் பேச வேண்டி இருந்தால் வரச் சொல்லுங்கள் என்று தான் சொல்லி இருப்பார். ஆசானைத் தவிர வேறு யாரிடமும் அந்த ஆளைச் சந்திக்கும் வேலையை ஒப்படைத்திருக்க மாட்டார்...

எவ்வளவு சீக்கிரம் இவன் முடிவுக்கு வருகிறான் என்று வாங் சாவொ வியந்தான்.


லீ க்யாங் சொன்னான். “இந்தியாவில் விமானநிலையத்திற்கு பக்கத்தில் இருக்கும் புத்த மடாலயங்களில் ஆசான் இருக்கிறாரா என்று பார்க்கச் சொல். அவர்கள் படும் அவசரத்தைப் பார்க்கும் போது உடனடியாக அந்த ஆள் வந்து பார்க்கிற இடத்தில் தான் ஆசான் தங்கியிருப்பார் போல் தெரிகிறது. அப்படி அவரைக் கண்டுபிடித்தால் மிக ரகசியமாக அவரைக் கண்காணிக்கச் சொல். முக்கியமாக அவரைப் பார்க்க வருகிற ஆளைப் பற்றிய முழு விவரங்களும் வேண்டும்....

(தொடரும்)

-என்.கணேசன்

  
(அமானுஷ்யனின் விறுவிறுப்பான பூர்வீகக் கதையை முழுமையாகப் படிக்க, தற்போது வெளியாகியுள்ள 600க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட “அமானுஷ்யன்” நாவலைப் படித்து மகிழுங்கள். நூலை வாங்க  பதிப்பாளரை 9600123146 எண்ணில் அல்லது மின்னஞ்சல் blackholemedia@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.)
  

8 comments:

  1. A real thriller. I can't wait to read amanushyan's meeting with aasaan and Li kyang.

    ReplyDelete
  2. சுந்தர்September 11, 2014 at 5:51 PM

    அமானுஷ்யனுக்கு இணையான ஒரு வில்லனை உருவாக்கி இருக்கிறீர்கள். நல்ல விறுவிறுப்பு.

    ReplyDelete
  3. Miga miga arumai sir, intha naavalum puthagamaga varuma??? Aavaludan kathuirukiren sir. ... .

    ReplyDelete
  4. sir-very interesting- any information about buddhist awareness technique please include them in the story.

    ReplyDelete
  5. Amanushyan varuvar enpathu therinthalum..... Eppadi varuvar ...enna karanathirkaka varuvar??? Ithai therinthu kolla arvam athikama ullathu?

    ReplyDelete
  6. leekong evvalavu thiramai mikkan enru ithil irunthae therikirathu
    annanushyanukku entha alavu potti poda poraanu ariyaa aavalaa irukku
    salimai vida leekong aapathu niranjavanu theriyuthu(sorry for comparing with amanushyan oppidulai thaveerkka mudiyavillai)

    ReplyDelete
  7. சார்... காத்துக்கொண்டிருக்கிறேன் அடுத்த தொடருக்காக. very interesting.

    ReplyDelete