Thursday, September 4, 2014

புத்தம் சரணம் கச்சாமி! – 10


க்‌ஷயின் வாழ்க்கையில் கடந்த பதிமூன்று ஆண்டுகள் மிக இனிமையானவை. அன்பும், அமைதியும் மட்டுமே நிறைந்திருந்த அழகான காலகட்டம் அது. மிக எச்சரிக்கையாகவே இருந்த போதிலும் கூட ஒவ்வொரு கணமும் எந்த எதிரி எப்போது எப்படித் தாக்குவான் என்றெல்லாம் அவன் யோசிக்க வேண்டி இருந்ததில்லை. அவன் இருப்பிடத்தை எதிரிகள் யாரும் கண்டு பிடிக்கவில்லை. இப்படியே வாழ்க்கை ஓட்டத்தை நீட்டினால் கடைசி வரை ஆனந்தமயமான வாழ்க்கை தான். தலாய் லாமாவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டால் இந்த அமைதியான வாழ்க்கைக்கு ஒரு முடிவு ஏற்பட்டு விடும். முடியாது, மன்னிக்கவும்என்ற இரண்டு வார்த்தைகளில் மறுப்புத் தெரிவித்து விட்டால் அவன் வாழ்க்கையின் அமைதி கலையப்போவதில்லை. ஆனால்....

உலகத்திலேயே தான் மிக அதிகமாக நேசிக்கும் மனிதனின் மௌனம் வருணுக்கு அபாயத்திற்கான அறிகுறியாகவே தோன்றியது. அவன் முகம் வாடினால் கூட சகித்துக் கொள்ள முடியாத அக்‌ஷய், அவன் போக வேண்டாம் என்று அழாத குறையாகச் சொல்லியும் கூட உடனடியாக எதுவும் சொல்லாமல் யோசிப்பது அவன் மனதை வதைத்தது. இத்தனைக்கும் ஆனந்த் கூட ஆபத்தின் தன்மையைத் தெளிவாகவே தெரிவித்து விட்டான்.

வருண் எழுந்து வந்து அக்‌ஷய் அருகில் அமர்ந்தான். அக்‌ஷயின் கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு கேட்டான். “என்னப்பா இன்னும் யோசிக்கிறீர்கள்?

அக்‌ஷய் வருணை மிகுந்த பாசத்தோடு பார்த்தான். சொந்த மகனாக இல்லா விட்டாலும் கூட மூத்த மகனாகத் தான் அவன் என்றுமே வருணை எண்ணி இருக்கிறான். பெற்ற மகன் கௌதமை விட அதிக பாசத்தை வருணிடம் தான் வைத்திருக்கிறான். பூர்வ ஜென்மத்து தொடர்பு இவனிடம் எனக்கு இருந்திருக்க வேண்டும் என்று எத்தனையோ முறை வியந்திருக்கிறான். வருணின் மனம் கோணினால் அவனால் என்றுமே சகிக்க முடிந்ததில்லை. தன் மனப்போராட்டத்தை இவனுக்கு எப்படி விளக்குவது என்று யோசித்தவன் பிறகு வருணின் கைகளை மென்மையாகத் தடவியபடி “வருண் என் வாழ்க்கையில் நான் நிறைய கடன்பட்டிருக்கிறேன்...”  என்று மெல்ல ஆரம்பித்தான். திபெத்தில் தனக்கு குருவாக இருந்து பலவற்றைக் கற்றுத் தந்தும் குருதட்சிணை எதுவும் வாங்காமல் கடைசியில் என்றாவது ஒரு நாள் இந்த புனித மண் உன்னிடமிருந்து குருதட்சிணை கேட்டு வாங்கிக் கொள்ளும்என்று சொல்லி அனுப்பியதைச் சொன்னான்.

“...முக்காலத்தையும் அறிந்த மகா யோகி அவர். எதிர்காலத்தில் இப்படி ஒரு சூழ்நிலை வரும் என்று அவருக்கு முன்பே தெரிந்திருக்க வேண்டும் வருண்

வருணுக்குக் கோபம் தான் வந்தது. குருதட்சிணையாக உயிருக்கே ஆபத்து வருகிறதையா கேட்பார்கள். என்ன நியாயம்ப்பா இது?

அங்கே போனால் தான் உயிருக்கு ஆபத்து என்று இல்லை. போகிற உயிர் எப்படியும் போகும். ஒரு சின்ன விபத்து, ஒரு வியாதி என்று இந்த உலகத்தில் நாம் இருக்க வேண்டிய காலம் முடிந்து போகையில்  எத்தனையோ விதங்களில் மரணம் வரலாம்....

“என் கிட்டே இந்த தத்துவம் எல்லாம் வேண்டாம்...அக்‌ஷயின் கையை கோபத்துடன் உதறினான் வருண். மூத்த மகனின் கையை விடாமல் இறுகப் பிடித்துக் கொண்டு புன்னகையுடன் அக்‌ஷய் தொடர்ந்தான்.

“இது தத்துவம் அல்ல வருண். விதி. எதை நாம் பெற்றாலும் அதைத் திருப்பித் தந்தே ஆகவேண்டும். அந்தக் கணக்கு தீராமல் வாழ்க்கைச் சுழற்சி முடியாது. நான் அவரிடம் வாங்கிய வித்தையை மட்டும் சொல்லவில்லை. ஒரு காலத்தில் நான் குண்டடி பட்டு உயிருக்கு போராடி ஒரு புத்த விஹார வாசலில் விழுந்த போது அந்த புத்த பிக்குகள் அவர்கள் உயிரைப் பணயம் வைத்து தான் என்னைக் காப்பாற்றினார்கள். அவர்கள் என்னிடம் பதிலுக்கு எதையுமே எதிர்பார்த்ததில்லை. அவர்களும் இந்த மைத்ரேய புத்தரை நம்பும் பிரிவு தான்....

அக்‌ஷய் இப்போதும் அந்த புத்த விஹாரத்தின் இளைய பிக்கு தந்த சால்வையை பேரன்பின் அடையாளமாக வைத்திருப்பது வருணுக்குத் தெரியும். ஆனாலும் முகம் சுளித்தபடி தந்தையைப் பார்த்துச் சொன்னான். “எதற்குமே கூலியாய் உயிரைத் தருவதும் தப்பு. அப்படி யாராவது எதிர்பார்ப்பதும் தப்பு

இப்போது நான் உயிரோடு இருப்பதற்குக் காரணமே அவர்கள் என்பதை மறந்து விட்டு நீ பேசுகிறாய் வருண். எனக்கு என் பெயர் உட்பட என்னைப் பற்றிய விவரம் எல்லாமே மறந்து போன போது கூட அந்த திபெத்திய யோகி கற்றுத் தந்த வித்தைகள் மட்டும் மறக்கவில்லை. அது என் உயிரின் தற்காப்பின் ஒரு பகுதியாகவே மாறி விட்டிருந்தது. அதை வைத்து தான் எத்தனையோ முறை நான் என் உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன். அந்த புத்த பிக்குகளும் என் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார்கள். அந்தக் கடன் இன்னும் பாக்கி இருக்கிறது வருண். இப்போதும் அவர்கள் பிரதிநிதியான தலாய் லாமா என்னைக் கட்டாயப்படுத்தவில்லை. என் உதவியைக் கேட்டிருக்கிறார் அவ்வளவு தான். ஆனால் நான் இப்போது மறுத்தால் தர வேண்டிய கடனை மறுப்பது போல் ஆகி விடும் வருண். உன் அப்பா கடன்காரனாகவே இருந்து விட வேண்டும் என்று நீ நினைக்கிறாயா?

வருண் தர்மசங்கடத்துடன் தந்தையைப் பார்த்தான். அவன் கண்கள் ஈரமாயின. அந்த ஈரத்தை சகிக்க முடியாமல் அக்‌ஷய் சொன்னான்.

நீ ஏன் பயப்படுகிறாய் என்று எனக்கு புரியவில்லை வருண். ஒரு காலத்தில் அரசாங்கம், போலீஸ், சிபிஐ – இந்த மூன்றிலுமே அதிகாரத்தில் இருந்த சிலர் எனக்கு எதிரிகளாக இருந்தார்கள். எல்லா பக்கத்திலும் ஆபத்து சூழ்ந்திருந்த போது எனக்கு நான் யார் என்ற நினைவு கூட இருக்கவில்லை. அப்போது  கூட நான் ஜெயிக்கவில்லையா என்ன? இப்போது எத்தனையோ அனுகூலமான நிலைமையில் நான் இருக்கிறேன். அரசாங்கம் எல்லாவகையிலும் எனக்கு உதவ காத்திருக்கிறது. ஆனந்த் இருக்கிறான்....

வருண் பரிதாபமாகத் தாயைப் பார்த்தான். “நீ உதவிக்கு வாயேன்என்று பார்வையால் தாயை அழைத்தான். அக்‌ஷயை அவனை விட அதிகமாக அறிந்த சஹானா வாயைத் திறக்கவில்லை. அக்‌ஷய் முடிவு ஒன்றைச் செய்து விட்டான் என்றால், அதுவும் திருப்பித்  தரவேண்டிய உதவி என்று அவன் நினைக்கிறான் என்றால், கண்டிப்பாக அவன் தன் முடிவில் இருந்து மாற மாட்டான். மனதளவில் அவள் தன் மகன் நிலையிலேயே இருந்தாள். வாழ்க்கைக்கு இப்படி ஒரு இனிமை இருக்கிறது என்று அடையாளம் காட்டியவன் அக்‌ஷய். நடைப்பிணமாக வாழ்ந்த அவளை உயிர்ப்பித்தவன் அவன். அவனை ஆபத்திற்கு அனுப்புவது அவள் வாழ்க்கையையே தகர்க்கிற ஒரு விஷயம் தான். ஆனால் இயற்கையின் மகாசக்திகளை எப்படி ஒருவர் கட்டுப்படுத்த முடியாதோ அது போல அவள் கணவனையும் யாரும் கட்டுப்படுத்த முடியாது. அவன் முடிவை மறுத்து அதையும் மீறி அவன் செய்யப் போகும் போது அவனுக்கு மனக்கஷ்டம் ஏற்படுவதை அவள் விரும்பவில்லை.

வருண் மறுபடியும் ஆனந்தை உதவிக்கு அழைத்தான். “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் பெரியப்பா?

ஆனந்த் சொன்னான். “அரசாங்கம் ரகசியமாய் உதவுவதும், நான் உதவுவதும் இந்திய எல்லைக்குள் தான் முழுமையாக சாத்தியப்படும். திபெத்தில் எங்களால் பெரிதாக எதுவும் செய்ய முடியாது. அக்‌ஷய் தனியாகவே போய் தனியாகவே வருவதென்றால் அக்‌ஷயால் எந்த சூழ்நிலையையும் சமாளிக்க முடியலாம். ஆனால் கூட்டிக் கொண்டு வரும் மைத்ரேய புத்தரின் பாதுகாப்பையும் அக்‌ஷய் கவனிக்க வேண்டி வரும். அது கண்டிப்பாக அமானுஷ்யனுக்கேகூட சுலபமாக இருக்காது........

வருண் ஆனந்தை நன்றியுடன் பார்த்தான்.

ஆனந்த் மேலும் சொன்னான். “நான் இங்கே வருவதற்கு முன் மைத்ரேய புத்தர் சம்பந்தமாக ஆழமாக ஆராய்ச்சி செய்து விட்டு தான் வந்தேன். சீனாவில் பத்து வருடங்களுக்கு முன்பு மைத்ரேய புத்தர் என்று நம்பப்பட்ட ஒரு குழந்தை விபத்தில் சிக்கி இறந்த தகவல் கிடைத்தது. அந்தக் குழந்தை புத்தர் சிலையைப் பிடித்துக் கொண்டே இருந்தது என்று வதந்தி கிளம்பி இருந்ததாலும், மைத்ரேய புத்தர் தோன்றுவார் என்று குறிப்பிட்ட காலத்தில் பிறந்ததாலும் அந்தக் குழந்தையை மைத்ரேய புத்தர் என்று திபெத்தியர்கள் நம்பின மாதிரி தெரிகிறது. அந்த மரணம் விபத்து அல்ல என்று சிலர் நம்புகிறார்கள். அதனால் தலாய் லாமா சொல்கிற அந்தப் பையன் தான் மைத்ரேய புத்தர் என்று சிறிய சந்தேகம் வந்தாலும் அவனுக்கும் ஆபத்து. அவனைக் கூட்டிக் கொண்டு வரும் ஆளுக்கும் ஆபத்து. சீனாவில் மைத்ரேய புத்தரின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று தலாய் லாமாவே பயப்படுகிறார் என்றால் அக்‌ஷய் போகிற வேலையில் நாம் எதிர்பார்க்க முடியாத சிக்கல்கள் நிறையவே இருக்கிறது என்று அர்த்தம்.....

அக்‌ஷய் அமைதியாகக் கேட்டான். “சிக்கல்கள் அதிகம் இல்லா விட்டால் அவர்கள் என் உதவியை ஏன் எதிர்பார்க்கிறார்கள்?

ஆனந்துக்கும் ஏன் இப்படி இவன் பிரச்னைகளைத் தேடிப் போகிறான்என்று தம்பி மேல் கோபம் வந்தது. மனத்தாங்கலுடன் சொன்னான். அக்‌ஷய், நீ இப்போது தனிமனிதன் இல்லை. உனக்கு ஏதாவது ஆனால் இவர்கள் நிலைமை என்ன ஆகும் யோசி.

அக்‌ஷய் அமைதியாகச் சொன்னான். கடவுள் எனக்கு குறித்த நேரத்திலிருந்து ஒரு வினாடி முன்பும் என்னை யாரும் கொல்ல முடியாது. அதற்கு ஒரு வினாடி பின்பும் யாரும் என்னைக் காப்பாற்ற முடியாது. அப்படி இருக்கையில் நீங்கள் எல்லாம் ஏன் பயப்படுகிறீர்கள்?

ஏன் இன்னும் இந்த வசனம் வரவில்லை என்று யோசித்துக் கொண்டிருந்தேன்....என்று விரக்தியுடன் ஆனந்த் சொன்னான்.

அக்‌ஷய் போவது என்று முடிவு செய்து விட்டான் என்று புரிந்த போது வருணின் கண்கள் நிரம்பின. அவர்கள் அனைவர் முன்னல் அழ முடியாமல் அக்‌ஷய் கையை உதறி விட்டு அங்கிருந்து வேகமாக வருண் வெளியேறி தன் அறைக்குப் போனான்.

வருணின் துக்கம் அக்‌ஷய்க்கு சகிக்க முடியாததாக இருந்தது. ஆனந்தைப் பார்த்து லேசாய் புன்னகைத்து விட்டு அக்‌ஷயும் வருணைப் பின் தொடர்ந்தான்.

அறைக்குள் நுழைந்தவுடன் குமுறிக் குமுறி அழுத வருணை அணைத்தபடி அக்‌ஷய் சமாதானப்படுத்தினான். ஓரளவு வருணின் அழுகை குறைந்த பிறகு மெல்ல சொன்னான். “சின்னப் பையனாக இருந்த போது கூட என் மேல் உனக்கு நிறைய நம்பிக்கை இருந்தது. எந்த சூழ்நிலையிலும் நான் ஜெயித்து வருவேன் என்று நீ எல்லாரிடமும் பெருமைப்பட்டுக் கொள்வாய். ஆனால் இப்போது மட்டும் ஏன் பயப்படுகிறாய் வருண்...?

உடனடியாகப் பதில் எதுவும் சொல்லாத வருண் பின் மெல்ல விசும்பலுடன் சொன்னான். உங்களால் முடியும், முடியாது என்பதல்ல பிரச்னை அப்பா. நீங்களாய் போய் தேவை இல்லாமல் ஏன் ஆபத்தான வேலைகளுக்குப் போய் மாட்டிக் கொள்ள வேண்டும். உங்களுக்கு எதாவது ஆனால் எங்களால் தாங்கிக் கொள்ள முடியும் என்று நினைக்கிறீர்களா?... தயவு செய்து தத்துவம் மட்டும் பேசாதீர்கள்.

அக்‌ஷய் வருணை மேலும் இறுக்கமாய் அணைத்துக் கொண்டு மௌனமாக இருந்தான். உண்மைகள் எல்லாம் தத்துவமாக இந்த இளைய தலைமுறைக்குத் தோன்றினால் பின் என்ன தான் பேசுவது?

வருண் கண்களைத் துடைத்துக் கொண்டு சின்னக் கோபத்துடன் கேட்டான். அந்த மைத்ரேய புத்தர் கடவுளாக இருந்தால் அவருக்கு உங்கள் உதவி எதற்குத் தேவைப்படுகிறது? அதற்கு நீங்கள் பதிலே சொல்லவில்லை. தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாத கடவுள் எல்லாம் கடவுளா? யாரோ சில பேர் முட்டாள்தனமாய் ஒரு பையனைக் கடவுள் என்று நம்பி உங்களிடம் வேண்டினால் நீங்கள் உங்கள் உயிரைப் பணயம் வைத்து அந்தப் பையனைக் கூட்டிக் கொண்டு வரக் கிளம்புவீர்களா? அந்த முட்டாள்கள் சொல்வது போல் செய்வது எப்படி அந்த புனித மண்ணுக்கு நீங்கள் தரும் குருதட்சிணை ஆகும்? நீங்கள் என்ன இப்போது தனி ஆளா? எங்களைக் கொஞ்சமாவது நினைத்துப் பார்த்தீர்களா?

அக்‌ஷய் வருணையே லேசான பிரமிப்புடன் பார்த்தான். ‘என்னமாய் பேசுகிறான். இவனை இன்னும் பழைய சின்னப் பையன் என்றல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

“என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்?” வருண் கேட்டான்.

“சும்மா தான்.... சரி நான் முதலில் அவர்கள் சொல்வது போல் அந்தப் பையன் நிஜமான மைத்ரேய புத்தன் தானா? அப்படி புத்தரின் அவதாரமாக இருந்தால் அவனுக்கு ஏன் என் உதவி தேவை? என்றெல்லாம் விசாரித்து தெரிந்து கொள்கிறேன். அவர்கள் சொல்வதில் உண்மை இருக்கிறது என்று நம்பும் பட்சத்தில் மட்டும் ஒத்துக் கொள்வேன். இல்லா விட்டால் மறுத்து விடுகிறேன். சரி தானா?” அக்‌ஷய் கேட்டான்.

வருணுக்கு விசாரிப்பதே அனாவசியம் என்று பட்டது. கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு? ஆனால் இந்த அளவு அப்பா இறங்கி வந்ததே பெரிய விஷயம் என்று நினைத்தவனாய் சம்மதித்தான்.

(தொடரும்)
-என்.கணேசன்

  (அமானுஷ்யனின் விறுவிறுப்பான பூர்வீகக் கதையை முழுமையாகப் படிக்க, தற்போது வெளியாகியுள்ள 600க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட “அமானுஷ்யன்” நாவலைப் படித்து மகிழுங்கள். நூலை வாங்க  பதிப்பாளரை 9600123146 எண்ணில் அல்லது மின்னஞ்சல் blackholemedia@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.)
  

6 comments:

  1. லக்‌ஷ்மிSeptember 4, 2014 at 6:33 PM

    Nice going. I liked the line உண்மைகள் எல்லாம் தத்துவமாக இந்த இளைய தலைமுறைக்கு தோன்றினால் பின் என்ன தான் பேசுவது. எத்தனை அழகாக உங்களுக்கு வார்த்தைகள் விழுகின்றன. இன்னும் ஒரு வாரம் காத்திருக்க தான் கஷ்டமாக இருக்கு

    ReplyDelete
  2. சிக்கல்கள் அதிகம் இல்லாவிட்டால் அவர்கள் என் உதவியை ஏன் எதிர் பார்க்கிறார்கள்... சிக்கலை நோக்கி அமானுஷ்யன்...காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  3. Amanushyanin thathuvangal arumai

    ReplyDelete
  4. Akshay... Did not give explanations to varun's questions....

    ReplyDelete
  5. Feelings and talks of both Varun and Akshay written nicely. You give equal importance to human characters & feelings and thrilling parts in your novel. That differentiate you from many other writers who concentrate on any one aspect. After reading this chapter I took amanushyan novel and began to read it once again.

    ReplyDelete
  6. excellent understanding between husband and wife...... excellent script... super story...

    ReplyDelete