கீதை
காட்டும் பாதை 22
முடிந்தவுடன் நிறுத்து!
கீதையின் ஆறாவது அத்தியாயமான தியான யோகத்தை ஸ்ரீகிருஷ்ணர் இவ்வாறு
தொடங்குகிறார்.
”எவனொருவன் கர்ம பலனில் பற்றில்லாமல், செய்ய
வேண்டிய கர்மங்களைச் செய்கிறானோ அவனே துறவி. அவனே யோகி. அக்கினியைப் பற்ற வைக்காததாலோ
கர்மங்களைத் துறந்ததாலோ ஒருவன் துறவியாக மாட்டான்.
துறவு என்று எதனைச்
சொல்கிறார்களோ அதுவே யோகமென்று அறி. கர்மபலன் பற்றிய எண்ணத்தைத் துறக்காதவன் யோகி
ஆக மாட்டான்.
யோகமாகிய சிகரத்தைத்
தாண்ட விரும்புபவனுக்கு கர்மம் ஒரு சாதனமாகக் கூறப்படுகிறது. அந்த சிகரத்தை அடைந்த
பின் அவனுக்கு மன அமைதியே சாதனமாகும்.
புலன்களிலும் கர்மங்களிலும்
பற்றில்லாமல் எல்லா கோட்பாடுகளையும் துறந்தவனே யோக நிலையைச் சேர்ந்தவன் என்று
கூறப்படுகிறான்.”
தன் கடமையைச்
செய்வதைக் காட்டிலும் துறவறம் போவது மேல் என்று ஆரம்பத்தில் நினைத்தவன் அர்ஜுனன்.
அது அவனுடைய தனிப்பட்ட குணாதிசயம் அல்ல. நம்மில் பெரும்பாலானோருக்கும் ஒருசில
நேரங்களில் அந்த எண்ணம் வராமல் இருப்பதில்லை. வாழ்க்கையின் பிரச்சினைகள் நம்மால்
சமாளிக்க முடியாததாகப் போகும் போது இந்த வாழ்க்கையில் இருந்தே ஒதுங்கி துறவியாகப்
போவது நல்லதல்லவா என்ற எண்ணம் தோன்றுகிறது.
ஆனால் ஓடி ஒளிவது
துறவல்ல. வேலை செய்யாமலேயே இருப்பதும் துறவல்ல. துறவு என்பது செய்ய வேண்டியதை,
பலனில் பற்றில்லாமல்-அதே நேரத்தில் அலட்சியமும் இல்லாமல், முறையாகச் செய்து பிறகு
அதை முற்றிலும் மறந்து அமைதியடைவது தான். அப்படி அமைதியடையா விட்டால் செயலும் உபயோக
நிலையைக் கடந்து நம்மைப் பிணைத்து வைக்கும் சங்கிலியாகி விடும்.
சிலர் காரியம்
முடிந்த பின்னரும் அடங்க மாட்டார்கள். அந்தக் காரியத்தின் மீது இருக்கும்
ஈடுபாட்டை அவர்களால் விட முடியாது. அது கர்மம் ஆகாது. கடமையும் ஆகாது. ஒன்றை விட
முடியாத பலவீனமே ஆகும். தேவை இருக்கும் வரை தான் செயலுக்கு மகத்துவம் உண்டு.
அவசியமும் உண்டு. தேவை முடிந்த பின்னும் ஒன்றை செய்து கொண்டே இருக்கத் தூண்டுதல்
நம்முள் எழுமானால் அதைப் பைத்தியக்காரத்தனம் என்று நாம் அடையாளம் காண வேண்டும்.
அதைத் தான் ஸ்ரீகிருஷ்ணர் சிகரத்தை அடையும் வரை நடக்க வேண்டிய செயல் அவசியம்.
அதற்குப் பின் தேவை அமைதியே என்கிறார். அதற்கு மேலும் நடந்தால் அதல பாதாளத்தில்
தான் விழ வேண்டி இருக்கும்.
எத்தனையோ செயல்வீரர்கள்
இந்த உண்மையை உணரத் தவறி விடுகிறார்கள். முடிவுக்குப் பின்னும் முன்னேறுதல்
முன்னேற்றம் அல்ல. அது அழிவுக்கான வழி என்பதை மறந்து விடுகிறார்கள். இதைத் தான்
திருவள்ளுவரும் அழகாகக் கூறுகிறார்.
நுனிக்கொம்பர்
ஏறினார் அஃதிறந்து ஊக்கின்
உயிர்க்கு இறுதிஆகி
விடும்.
(மரத்தின் உச்சியில்
ஏறி நின்றவர் மேலும் ஏற முயலக் கூடாது. அவ்வாறு முயன்றால் கீழே விழுந்து உயிர்
துறக்க நேரிடும்).
புலன்களின் மீது
வைக்கும் பற்று ஒருவனை எந்த நிலைக்குக் கொண்டு வரும் என்பதை ஏற்கெனவே வேண்டிய அளவு
விளக்கி விட்டோம். கர்மபலனில் பற்று வைப்பதும் கவலையில் தான் முடியும் என்பதையும்
நாம் பார்த்து விட்டோம். இங்கு ஸ்ரீகிருஷ்ணர் அடுத்ததாகச் சொல்லும் கோட்பாடுகள்
மீது வைக்கும் பற்றைப் பார்ப்போம்.
நாம் ஒவ்வொருவரும்
ஒவ்வொரு கோட்பாட்டை நம்புகிறோம். அது தான் சரி என்று நினைக்கிறோம். அது தான் சரியாக
இருக்குமேயானால் மற்றவை எல்லாம் தவறாகத்தான் இருக்க வேண்டும் என்கிற எண்ணம்
நம்மில் வலுப்பெறுகிறது. அதன் பிறகு அது எவ்வளவு தான் உயர்ந்த கோட்பாடாக இருந்தாலும்
அது நன்மையை விடத் தீமையே அதிகம் விளைவிக்கிறது.
இன்றைய காலத்தில்
மதங்கள் தீமை ஆவதும் இந்த விதத்தில் தான். ஒரு இறைத் தூதுவர் தான் உணர்ந்த
பேருண்மைகளால் உலகமும் பலனடைய வேண்டும் என்ற என்ற உன்னதமான நோக்கத்தில் அவற்றைச் சொல்லி
விட்டுப் போகிறார். அந்தப் பேருண்மைகளும் பின்பற்றுபவர்களுக்குப் பலன் அளிக்கவே
செய்கிறது அது அவர்கள் பற்று வைக்கும் கோட்பாடுகளாக மாறும் வரை.
பற்று என்று ஒன்று
எதன் மீது வந்து விட்டாலும் அது நம் சிந்திக்கும் சக்திக்கு ஒரு திரையைப் போட்டு
விடுகிறது. பின் நாம் எதைக் காண விரும்புகிறோமோ அதையே காண்கிறோம். எதைக் காண
விரும்பவில்லையோ அதைக் காண்பதில்லை. உண்மை பின்னுக்குத் தள்ளப்பட்டு பற்று
முன்னுக்குப் பிரதானமாக மாறி விடுகிறது.
கோட்பாடுகள் மீது
வைக்கும் பற்றும் அப்படித் தான். நாம் நினைப்பதே சரி, நாம் நம்புவதே உண்மை என்று
எண்ண ஆரம்பிக்கும் போது மாறாக நினைக்கும் அடுத்தவர் நினைப்பது தவறு, பொய் என்று
தோன்ற ஆரம்பிக்கும். பின் அடுத்தவர்களே பொய்யர்கள், தவறானவர்கள் என்று தோன்ற
ஆரம்பிக்கும். பின் நம் கோட்பாடுகளை நிலைநாட்டவும், காப்பாற்றவும், போராடவும்
தோன்றும். அதன் பின் நடப்பதெல்லாம் அனர்த்தங்களே. இன்று மதங்கள் பெயரில் நடக்கும் கலவரங்கள்
எல்லாம் இப்படி ஆரம்பிப்பவையே.
இதுவும் ஒரு வகையில்
சிகரம் தாண்டியும் போகும் முயற்சி தான். ஒரு கோட்பாடு பின்பற்றப்பட்டு அது
உங்களுக்கு நல்ல உயர்வைத் தரலாம். அதை நான்கு பேருக்குப் பயன்படலாம் என்று எண்ணி
நீங்கள் தேவைப்படுபவர்களுக்குச் சொல்லியும் தரலாம். அதோடு நிறுத்திக் கொள்ள
வேண்டும். அது பயனடையும் வழி. அமைதியின் வழி. அதற்கு மேல் போய் அந்தக்
கோட்பாட்டில் பற்று வைத்து அதன் காவலனாக மாறி விடுவதோ அடுத்தவர் மீது அதைத்
திணிக்க முயல்வதோ மேன்மையான யோக நிலைக்கு ஏற்றதல்ல. அது அமைதிக்கும் உகந்ததல்ல.
எனவே தான் ஒரு செயலை
முடிந்தவுடன் நிறுத்தச் சொல்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.
பாதை நீளும்..
-
என்.கணேசன்.
உங்கள் வார்த்தைகளில் கீதை அழகாய் புரிகிறது. வித்தியாசமாயும், பாமரனுக்கும் ப்ராக்டிகலாய் புரியும்படியும் எழுதுகிறீர்கள். அந்த கண்ண பரமாத்மா உங்கள் எழுத்திற்கு மேலும் வலுவைத் தந்து வளர்த்தட்டும். வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉபயோகமான பதிவுக்கு மிக்க நன்றி.
ReplyDeleteநல்ல கருத்துக்கள்.
ReplyDeleteNalla Karuthugal.....
ReplyDeleteநல்ல பதிவுகழை செய்கிற உங்கழுக்கு கடவுள் நல்ல ஆசிகளை வழங்கட்டும்.
ReplyDeleteWow!
ReplyDeleteதிரு கணேசன் அவர்களுக்கு
ReplyDeleteதங்களின் கீதைக் காட்டும் பாதை ஒரு புதிய வழியினையும் வாழ்க்கையின் மீது ஒரு பிடிப்பினையும் ஏற்படுத்துகிறது. தங்களின் மிகவும் அழகான எளிய உரை கீதையின் மீதான மதிப்பை மேலும் உயர்த்துகிறது.நன்றிகள் பல மேலும் தொடரட்டும் உங்கள் பணி
முதலில் கூறிய துறவு என்றால் என்ன? எனும் கருத்து அருமை...
ReplyDeleteபற்றுதல் பற்றிய கருத்தும் அருமை...