குருஜி மீண்டும் பேச முடிந்த போது அவர் குரல் மிகவும் தாழ்ந்திருந்தது.
“அந்த சிடியை ஆரம்பத்தில் இருந்து போடு” என்றார். கணபதி-சிவலிங்கம் சம்பந்தப்பட்ட
எந்தத் தகவலையும் தவற விடக்கூடாது என்பதில் அவர் மிகவும் கவனமாக இருந்தார்.
அந்த மனிதன் அவர்
சொன்னபடியே செய்தான். குருஜி திரையில் ஓடிய காட்சிகளைக் கூர்ந்து பார்க்க
ஆரம்பித்தார்....
கணபதி இந்த
சில நாட்களில் அந்த சிவலிங்கத்திற்கு ஒரு நண்பனாகி விட்டிருந்தான். அதைப் பார்த்த
முதல் கணத்தில் ஒரு இனம் புரியாத சிலிர்ப்பையும், பின் ஒரு ஈர்ப்பையும்
சிவலிங்கத்திடம் உணர்ந்திருந்த அவன் பின் அதை நேசிக்க ஆரம்பித்திருந்தான். மிகவும்
சக்தி வாய்ந்த சிவலிங்கம் என்று குருஜி சொல்லி இருந்ததால் ஏற்பட்டிருந்த ஒரு பயம் கலந்த பக்தி
இங்கு வந்த பின் பயம் போய் அன்பு கலந்த பக்தியாக மாறி விட்டிருந்தது. அதனை நெருங்கும்
போதெல்லாம், அதன் அருகில் இருக்கும் போதெல்லாம் ஒரு பேரமைதியையும், பேரன்பையும்
அவன் உணர ஆரம்பித்தான்.
அந்த வேதபாடசாலையில்
அவனிடம் அதிகம் யாரும் பேசவில்லை. சிவலிங்கம் வைக்கப்பட்டிருந்த கட்டிடம் ஒரு 18
ஏக்கரில் ஒரு ஒதுக்குப் புறத்தில் இருந்தது மட்டுமல்ல வேதபாடசாலையில் படிக்கும் மாணவர்களும்
சொல்லித் தரும் ஆசிரியர்களும் அந்தப்பகுதிக்கு வரத் தடை செய்யப் பட்டிருந்தது. அந்தப்
பகுதிக்கு ஏழெட்டு பேர் மட்டுமே வர அனுமதி இருந்தது. அவர்களும் கணபதியிடம் அதிகம்
பேசவில்லை. வேளா வேளைக்கு அவனுக்கு நல்ல சுவையான உணவு கொண்டு வந்து தந்தனர்.
அவனுக்கு பூஜை சாமான்கள் ஏதாவது வேண்டி இருந்தால் வாங்கிக் கொண்டு வந்து தந்தனர். வேறெது
தேவைப்பட்டாலும் கேட்கச் சொன்னார்கள். அவனுக்கு எதுவும் தேவைப்படவில்லை.
அந்த வேதபாடசாலையில்
சுற்றிலும் நிறைய பூச்செடிகளும், துளசிச் செடிகளும், வில்வமரங்களும் இருந்தன.
தினமும் அதிகாலையிலும் மாலையிலும் சென்று பூஜைக்காகத் தானே சென்று பூக்கள், துளசி,
வில்வ இலைகள் எல்லாம் கணபதி பறித்துக் கொண்டு வருவான். அப்போது பல மாணவர்களும்,
ஆசிரியர்களும் எதிர்படுவார்கள். அடிக்கடி பார்த்துப் பரிச்சயமானதால் அவர்கள் அவனைப்
பார்த்து புன்னகைப்பதுண்டு. அதோடு சரி. அவர்களாக அவனிடம் பேச முற்படவில்லை. அவர்கள்
எல்லாம் மெத்தப் படித்தவர்கள், அறிவாளிகள் என்றும் தனக்கு அதிகம் எதுவும் தெரியாது
என்றும் அவனுக்கு அபிப்பிராயம் இருந்ததாலும் யாரிடமும் அதிகம் பேச வேண்டாம் என்று
குருஜி முன்பே சொல்லி இருந்ததாலும் அவனுக்கும் அவர்களிடம் பேசத் தயக்கமாக
இருந்தது. எனவே அவன் தனியனாகவே அங்கும் இருந்தான்.
சில சமயங்களில்
பகலில் மரங்களின் நிழலில் அமர்ந்து கொண்டு வகுப்பறைகளில் படிக்கும் மாணவர்களின்
வேத கோஷத்தைக் கேட்கும் போது அவனுக்குப் புல்லரிக்கும். அர்த்தங்கள் புரியா
விட்டாலும் அந்த இசையோடு கூடிய ஸ்பஷ்டமான உச்சரிப்புகள் அவனை ஏதோ ஒரு உலகத்திற்கு
அழைத்துச் செல்வது போல் இருக்கும். மனம் மிக லேசாக அமைதியாக அமர்ந்திருந்து விட்டு
வருவான். சிவலிங்கத்தை வணங்கி விட்டு அதன் முன் அதே அமைதியுடன் சிறிது நேரம் உட்கார்வான்.
அமைதி நெடு நேரம்
நீடிக்காது. அவனுக்குப் பேச வேண்டும் என்று தோன்றி விடும். அவன் பூஜை செய்து
கொண்டிருந்த பிள்ளையாரிடமும் கூட அவன் பூஜை செய்ததை விடப் பேசிய நேரம் அதிகம். இங்கும்
அவனால் பேசாமல் இருக்க முடியவில்லை. வெளியாட்கள் யாருமே அவனுக்குப் பேசக் கிடைக்காததால்
அவன் போய்ச் சேர்ந்த இரண்டாவது நாளே பேச ஆரம்பித்து விட்டான். மனம் விட்டு அவன்
பேசிய போது பிள்ளையாரைப் போலவே இந்த சிவலிங்கமும் கவனமாகக் கேட்பது போல
உணர்ந்தான். ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொன்றைப் பேசினான்....
“பிள்ளையாரோட அப்பனே
நான் வாங்கற ஐநூறு ரூபாய்க்கு பொருத்தமா பூஜை செய்யறேனான்னு தெரியலை.. ஏதாவது
குறையிருந்தால் மன்னிச்சிக்கோ. இங்கே படிக்கற பசங்க எல்லாம் எவ்வளவு அழகாய் வேதம்
படிக்கிறாங்க. கேட்கறதுக்கே இனிமையாய் இருக்கு... அவங்கள்ள ஒருத்தர் வந்து
உனக்குப் பூஜை செஞ்சா கூட என்னை விட நல்லாவே செய்வாங்கங்கறதுல எனக்கு சந்தேகமே
இல்லை... ஏதோ குருஜி என் மேல இரக்கப்பட்டு இந்த வேலையை எனக்குத் தந்திருக்கார்னு
நினைக்கறேன். உன் பிள்ளையோட நண்பன் நான்... நானும் உன் பிள்ளை மாதிரி தான்
பொறுத்துக்கோ....”
”அந்த சுப்புணி உன் பிள்ளைக்கு எப்படி பூஜை செய்யறானோ
தெரியலை. அவன் என்னை விட மோசம். ஏனோ தானோன்னு செய்வான். வாங்கற எழுபது ரூபாய்ல
இருக்கற அக்கறை பூஜைல இல்லை.. இங்கே வர்றதுக்கு முந்தின நாள் அவன் கிட்ட அரை மணி
நேரமாவது பிள்ளையாருக்கு ஒழுங்கா பூஜை செய்டா, நான் வர்ற வரைக்கும் நல்லா
பார்த்துக்கோடான்னு சொல்லி இருப்பேன். எகத்தாளமா என்னைப் பார்த்துட்டு
சிரிக்கிறான் அவன். என்ன சொல்றது? பிறகு சொல்றான். “உலகத்துலயே கடவுளைப் பத்தியே
கவலைப்படற ஒரே ஆளு நீ தான்”. எப்படி இருக்கு?.....”
“கடன் நிறைய இருக்கு கடவுளே. அதைத் தீர்க்க
வேண்டி இருக்கு. கல்யாணமாகாத அக்கா ரெண்டு பேர் இருக்காங்க.... அம்மாவுக்கு
சாகறதுக்குள்ளே அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் செய்து தந்துடணும்னு ஆசை... ”கவலைப்படாதே
அம்மா நான் இருக்கேன்”னு தைரியம் சொல்லிப் பார்த்துட்டேன். அம்மா “நீயே
குழந்தை மாதிரி.. உன்னைப் பார்த்துக்கறதுக்கே வேறொரு ஆள் வேணும்”னு சொல்றா. என்னைப் பார்த்துக்க பிள்ளையார் இருக்கார்னு சொன்னேன்.
கேட்டுட்டு ஏனோ கண்கலங்கறா. எனக்காகவும் அம்மா நிறைய கவலைப்படறா. இங்கே வரக்
கிளம்பினப்ப கூட அவளுக்குப் பயம் தான். “ஏண்டா பூஜை செய்ய ஐநூறு ரூபாய் தர்றதுங்கறது
நிஜம் தானா... எதுவும் ஏமாத்திட மாட்டாங்களே...”ன்னு கேட்கறா. நான்
“ஏமாத்த எங்கிட்டே என்னம்மா இருக்கு”ன்னு கேட்டேன். “எங்கயாவது ஆஸ்பத்திரில அட்மிட்
செஞ்சுட்டு கிட்னி ஏதாவது எடுத்துடப் போறாங்க”ன்னு சொல்லி
பயப்படறா...”
சொல்லி விட்டு கலகலவென சிரித்தான் கணபதி.
கண்களில் நீர் தளும்பும் வரை சிரித்து விட்டு சொன்னான். “ஏழைகளுக்கு தான்
பயப்படவும், கவலைப்படவும் எத்தனை விஷயங்க இருக்கு கடவுளே...! ”அம்மா குருஜி
சாதாரண ஆள் இல்லை.... அவர் நினைச்சா ஒருநாள்ல பல கோடி ரூபாய் அவர் காலடில கொட்ட
எத்தனையோ பேர் இருக்காங்க.... இந்தக் கணபதி கிட்ட கிட்னி திருடற நிலைமை அவருக்கு
இல்லை.... கடவுள் கண்ணைத் திறந்துட்டான்னு சந்தோஷப்படறதை விட்டுட்டு ஏம்மா
பயப்படறே”ன்னு சொன்னேன். அப்படியும் அவளுக்கு பயம் முழுசா போகலை.
“உன்னை வெள்ளந்தியாவே வளர்த்துட்டேண்டா. உனக்கு உலகம் இன்னும் சரியா தெரியலை”ன்னு சொல்லி வருத்தப்பட்டா. நான் சொன்னேன். “எனக்கு உலகம் சரியா தெரியாம
இருக்கலாம். ஆனா கடவுளை நல்லா தெரியும்மா. அவர் கை விட மாட்டாரும்மா” ன்னு சொல்லி சமாதானப்படுத்தினேன். சரி தானே கடவுளே...”
தினமும் கடவுளிடம் பேச அவனுக்கு ஏதாவது
விஷயம் இருந்தது. பூஜை செய்யும் நேரங்களில் சிரத்தையுடனும் பக்தியுடனும் பூஜை
செய்தான். மற்ற நேரங்களில் ஸ்தோத்திரம் படித்தான். பேசினான். வெளியே அமர்ந்து வேத
கோஷங்கள் கேட்டான். அங்கு வந்து போன ஆட்கள் எல்லாம் மிகவும் எட்ட நின்றே அந்த
சிவலிங்கத்தைப் பயத்துடன் பார்ப்பதைக் கவனிக்க நேர்ந்த போது அவனுக்கு ஆச்சரியமாக
இருந்தது.
ஒருவனிடம் அவன் வாய் விட்டு சொல்லியே
விட்டான். “பயப்படாதீங்க. சாமி கிட்ட போய் யாராவது பயப்படுவாங்களா? உங்க அம்மா
அப்பா மாதிரி தான் சாமியும்”
அந்த ஆள் கணபதியை ஒரு மாதிரி பார்த்தான்.
அதற்கப்புறம் அவன் வரவே இல்லை. அதன் பின் மற்றவர்களிடம் அவன் எதுவும் சொல்லப்
போகவில்லை.
ஒரு நாள் மாலையில் பூக்கள் பறித்து விட்டு
ஒதுக்குப் புறமாக இருந்த ஒரு சிமெண்ட் பெஞ்சில் கணபதி உட்கார்ந்தான். வெகு
தூரத்தில் பாடசாலை மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். வேடிக்கை பார்த்துக்
கொண்டு இருந்தான். சிறிது நேரத்தில்
நான்கு அடிகள் தள்ளி இருந்த இன்னொரு சிமெண்ட் பெஞ்சில் யாரோ வந்து அமர்வது
போலிருக்கத் திரும்பிப் பார்த்தான்.
வந்து உட்கார்ந்தவர் முதியவராகத்
தெரிந்தால் இன்ன வயது தான் என்று ஊகிக்க முடியாத தோற்றத்தில் இருந்தார். காவி
வேட்டி கட்டி இருந்தார். தோளில் ஒரு காவித் துண்டு இருந்தது. நீண்ட தாடி வைத்திருந்தார்.
அவன் இது வரை அவரை அங்கு பார்த்ததில்லை.
அவரும் அவனைத் திரும்பிப் பார்த்தார். அவரது
கண்களின் தீட்சண்யம் அவனை ஒரு கணம் கண்களை மூடிக் கொள்ள வைத்தது. கண்கள் தீப்பிழம்பாய்
ஜொலிப்பது போல் இருந்தது. அவன் மறுபடியும் கண்களைத் திறந்து பார்த்த போது அவர்
சாதாரணமாகவே தெரிந்தார். அவர் கண்களில் ஒருவித கூர்மை இன்னமும் தெரிந்தாலும் அக்னி
காணாமல் போயிருந்தது. கணபதி ஏதோ ஒரு பிரமை தான் அப்படிக் காண வைத்ததோ என்று
சந்தேகப்பட்டான்.
அவன் அவரைப் பார்த்து சினேகத்துடன்
புன்னகைத்தான். அவர் லேசாகத் தலை அசைத்தார். அப்போது தான் அவர் கையில் இருந்த
ப்ளாஸ்டிக் பையில் நிறைந்திருந்த அந்த அபூர்வப் பூக்களைப் பார்த்தான். அவன் முதல்
முதலில் அந்த சிவலிங்கத்தின் மீது பார்த்த பூக்கள் அவை. அவற்றை வட நாட்டுக்காரர்
ஒருவர் கொண்டு வந்து தந்ததாக அவனை அழைத்து வந்தவன் சொன்னது நினைவுக்கு வந்தது.
கணபதி உற்சாகத்துடன் எழுந்து வந்து அவர்
அருகில் அமர்ந்தான். “ஓ... நீங்க தானா அந்த வட நாட்டுக்காரர்” என்று கேட்க அவர்
ஒன்றும் சொல்லாமல் அவனையே பார்த்தார்.
அவன் புன்னகையுடன் சொன்னான். “இந்தப்
பூக்களை வைத்து சொன்னேன். இந்த மாதிரி பூக்கள் இங்கே கிடைக்கிறதில்லை. நீங்க
வடநாட்டில இருந்து வர்றீங்களோ? நீங்க உங்க சாமிக்கு கொண்டு வந்திருக்கீங்க போல
இருக்கு. எங்க சிவனுக்கும் கொஞ்சம் தர்றீங்களா? பதிலுக்கு இந்தப் பூக்கள்ல கொஞ்சம்
எடுத்துக்குங்க”
அவர் முகத்தில் சிறிதாய் ஒரு புன்னகைக்
கீற்று வந்து போனது. அவர் தலை அசைத்தார். அவன் ஒரு கை நிறைய அவர் பையிலிருந்து
அந்தப் பூக்களை எடுத்து விட்டு இன்னொரு கை நிறைய தன்னிடமிருந்த பூக்கூடையில்
இருந்த பூக்களை எடுத்து மாற்றிப் போட்டுக் கொண்டான். அவர் பையில் பூக்கள் சிறிது
குறைந்திருப்பது போலத் தோன்றவே தன் பூக்கூடையில் இருந்து மறுபடி இரண்டு பூக்களை எடுத்து
அவர் ப்ளாஸ்டிக் பையில் போட்டான். பின் திருப்தியுடன் நிமிர்ந்த போது அவர் அவனையே
ஒரு சுவாரசியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
அவர் அவனைக் கேட்டார். “அந்த
சிவலிங்கத்துக்குப் புதுசா பூஜை செய்ய வந்திருக்கிறது நீ தானா?”
அவருக்கு அந்த சிவலிங்கத்தைப் பற்றியும்
அதற்குப் பூஜை செய்ய அவன் வந்திருப்பது பற்றியும் தெரிந்திருந்ததால் அவர்
குருஜியின் ஆளாக இருக்க வேண்டும் என்று கணபதி நினைத்துக் கொண்டான். ”ஆமாம்” என்றான்.
”பூஜை எல்லாம் சரியாய் செய்கிறாயா?”
”தெரியலை. எனக்குத் தெரிஞ்ச அளவுக்கு செய்யறேன்”
”பூஜை செய்யறதை விட அதிகமாய் பேச்சு சத்தம் தான்
கேட்குது”
கணபதிக்கு திகைப்பாய் இருந்தது. அவன்
பேசிக் கொண்டிருக்கும் நேரமாய் பார்த்து அவர் அந்தப் பக்கம் வந்திருக்க வேண்டும்
என்று நினைத்துக் கொண்டான். அந்த அளவுக்கா சத்தமாய் பேசுகிறோம் என்று நினைத்த போது
வெட்கம் பிடுங்கித் தின்றது.
வெட்கம் மாறாமல் சொன்னான். “எனக்கு நான்
பூஜை செய்யற பிள்ளையார் கிட்டப் பேசிப் பேசிப் பழக்கமாயிடுச்சு. அதான் அப்படி....”
அவர் ஒன்றும் சொல்லவில்லை. அவனாகத் தொடர்ந்து சொன்னான். “எனக்கும் இங்கே படிக்கிற பசங்க மாதிரி ஸ்பஷ்டமாய் ஸ்தோத்திரங்கள் சொல்லணும்னு ரொம்ப ஆசை. ஆனா நான் அதிகம் படிச்சதில்லை... சம்ஸ்கிருத சுலோகங்களைத் தமிழ்ல எழுதிப் படிக்கலாம்னா உச்சரிப்பு கொஞ்சம் மாறினாலும் அர்த்தம் முழுசா மாறிடும்னு சொல்றாங்க. அதனால பயமாய் இருக்கு...”
”உச்சரிப்பை விட பாவனை முக்கியம். சொல்ற மனநிலை
முக்கியம். அது சரியா இல்லாட்டி உச்சரிப்பு சரியாய் இருந்தாலும் பிரயோஜனம்
இல்லை...”
“அப்படித் தான் குருஜியும் சொன்னார்...
நீங்க குருஜிக்கு ரொம்ப வேண்டப்பட்டவரா?”
அந்தக் கேள்விக்கு அந்த முதியவர்
உடனடியாகப் பதில் சொல்லவில்லை. தூரத்து வானத்தையே வெறித்துப் பார்த்துக்
கொண்டிருந்து விட்டுச் சொன்னார். ”ம்ம்ம்.... உங்க குருஜியைத் தெரியும்... பல
வருஷங்களுக்கு முன்னால் பழக்கம். அவ்வளவு தான்”
”அப்புறமா அவரைப் பார்க்கலையா?”
இல்லை என்பது போல் அவர் தலையசைத்தார். கணபதிக்குப்
புரிந்தது. குருஜியைப் பார்க்கப் பல முறை போய் காத்திருந்து அவரும் பலரைப் போல
குருஜியைப் பார்க்க முடியாமல் போயிருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் ஒரு கொடுப்பினை வேண்டும்...
”உனக்கு குருஜின்னா ரொம்பப் பிடிக்குமா?” அவர் கேட்டார்.
”பிடிக்கும். அவர் எங்கேயாவது ஃப்ரீயா பேசறார்னு
தெரிஞ்சா நான் முதல் ஆளா போய் நிப்பேன்... அவர் பேசறது பெரிய பெரிய விஷயங்களாய்
தான் இருக்கும். அதனால முக்கால் வாசி எனக்குப் புரியாது. ஆனாலும்
கேட்டுகிட்டிருக்கப்ப மனசு லேசாயிடும். கடவுளே என்னோட மரமண்டையில இதுல கொஞ்சமாவது
ஏறாதான்னு ஏக்கமாய் இருக்கும்... ஒரு தடவை
இசையும் இறைவனும்கிற தலைப்புல அவர் பேசினதுல கொஞ்சம் புரிஞ்சுது. கடவுளை நெருங்க
எல்லாத்தையும் விட இசை வேகமாய் உதவும்னு சொன்னார். நானும் போய் பிள்ளையார் கிட்ட
பாட்டாய் பாடினேன். அன்னைக்குக் கனவுல பிள்ளையார் வந்து “கணபதி, பாட்டு மட்டும் வேண்டாம்”னு சொன்னார். அதுக்கு முன்னாடியும் பிள்ளையார் என் கனவுல
வந்ததில்லை. அப்புறமும் என் கனவுல அவர் வந்ததில்லை. அப்படின்னா என் பாட்டு எப்படி
இருந்திருக்கும்னு நீங்களே புரிஞ்சுக்கலாம்....”
சொல்லி விட்டு கணபதி குலுங்கக் குலுங்க
சிரித்தான். அவர் அவன் சிரிப்பதையே புன்முறுவலுடன் பார்த்தார்....
இருட்ட ஆரம்பித்தது. அதைக் கவனித்த கணபதி
அவசரமாக எழுந்தான். “ஐயோ பூஜை செய்ய நேரமாயிடுச்சு. நான் கிளம்பறேன். நீங்களும்
வர்றீங்களா?”
“இல்லை நீ போப்பா. எனக்கும் போக
நேரமாயிடுச்சு...”
கிளம்பும் முன் கேட்டான். “நீங்க இங்கே
அடிக்கடி வருவீங்களா?”
“எப்பவாவது தான் வருவேன்....”
அந்த சமயத்தில் அவன் பூக்கூடையில் இருந்து
ஒரு பூ கீழே விழ அதை எடுத்தபடியே அவன் கேட்டான். “குருஜியைப் பார்த்தால் உங்களைப்
பத்தி சொல்றேன். யாருன்னு சொல்லட்டும்...”
பதில் எதுவும் அவரிடமிருந்து வரவில்லை.
அவன் நிமிர்ந்து பார்த்தான். அவர் எதிரில் இல்லை. சுற்றும் முற்றும் பார்த்தான்.
அவர் எங்குமே தென்படவில்லை.
திகைப்புடன் ஒரு நிமிடம் நின்று பார்த்து
விட்டு கணபதி நகர்ந்தான்.
(தொடரும்)
- - என்.கணேசன்
சூப்பர் ...என்ன பொறுமைதான் குறையுது.....
ReplyDeleteதிகைக்க வைக்கிறது ...
ReplyDeleteகணபதி கேரக்டர் மனதை தொடுகிறது. இந்த முதியவர் அந்த சிவலிஙகம் சம்பந்தப்பட்ட சித்தர் போல தோன்றுகிறதே. அவருக்கும் குருஜிக்கும் கூட தொடர்பு இருப்பது போல சொல்லி இருக்கிறீர்கள். ஒரே பரபரப்பாக இருக்கு கணேசன் சார். வாசகர்கள் கோரிக்கை ஏற்று வாரம் இரண்டு தடவை அப்டேட் செய்யுங்கள் ப்ளீஸ்.
ReplyDeleteதிகைப்புடன் ஒரு நிமிடம் நின்று பார்த்து விட்டு கணபதி நகர்ந்தான்///// எங்களையும் கணபதி ரேஞ்சுக்கு திகைப்புடன் அலையவிடுகிறீர்களே.....
ReplyDeleteகணேசன் சார் கதை சூப்பரா போகுது! படிக்க படிக்க இன்னும் ஆவல் அதிகமாகி கொண்டே போகிறது!
ReplyDelete// வாசகர்கள் கோரிக்கை ஏற்று வாரம் இரண்டு தடவை அப்டேட் செய்யுங்கள் ப்ளீஸ்.//
Consider please
நண்பர்களே! இந்த நாவல் தவிர மற்ற எழுத்துப்பணிகளும், அலுவலகப் பணிகளும், மற்ற பல பணிகளும் இருப்பதால் வாரம் இரு முறை அப்டேட் செய்ய இப்போதைக்கு இயலாது. வியாழனுக்குள் இதை அப்டேட் செய்யவே சில சமயங்களில் சிரமம் இருக்கிறது. எத்தனை அலுவல் இருந்தாலும் வியாழன் அன்று கண்டிப்பாக அப்டேட் செய்கிறேன். சரியா?
ReplyDeleteஉங்கள் தொடர்ந்த பின்னூட்டங்களுக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி. ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும் நன்றி தெரிவிக்கா விட்டாலும் உங்கள் பின்னூட்டங்கள் நல்ல ஊக்க சக்தியாக இருக்கின்றன என்பதை திரும்பவும் தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் நன்ற்கள்.
-என்.கணேசன்
Ok, I Understand.
DeleteWe can feel the pain and effort you take to make it publish on Thursday without fail. Hats off for the efforts and for your great writing..
DeleteNice....
ReplyDeleteகதை மிக நன்றாகசெல்கிறது
ReplyDeleteSir, ganapathi characterla edhuvum tragedy varama
ReplyDeletepaarthukkonga sir. Paavam ganapathi..
Really story was so interesting .
ReplyDeletePrevoiusly we will wait for sunday but now a days ,Because of ur story we are waiting for Thurs day .
One more thing because of this story u reduced other updates .
We need other updates also...
நண்பர் சொன்னது ரொம்ப சரி. இப்போது எல்லாம் வியாழக்கிழமைக்கு தனி மவுசு வந்துள்ளது உங்கள் பரமன் ரகசியம் நாவலால். அதுவும் மாலை ஆறு மணி எப்போது ஆகும் என்று காத்திருக்க வைக்கிறது. ஒவ்வொரு கேரக்டரும் அற்புதம். மனதில் நிற்கிற மாதிரி எழுதுகிறீர்கள். அடுத்தது என்ன என்று ஆர்வத்தைத் தூண்டும்படி கதையைக் கொண்டு போகிறீர்கள். பாராட்டுக்கள்.
Deleteஅருமையா இருக்கு...
ReplyDeleteதொடருங்கள்... தொடர்கிறோம்.
அற்புதம்
ReplyDeleteஅற்புதமான படைப்பு ஆசிரியரே
ReplyDeleteதங்களின் படைப்பில் சரித்திர புதினம் உள்ளதா?
இருந்தால் தெரியபடுத்துங்கள்.
தங்களின் எழுத்து பணி தொடர ஆவலுடன் தொடர்கிறேன்.
அன்பு வாசகன்
கருணாகரன்
திருப்பூர்
இது வரை சரித்திர புதினம் எழுதியதில்லை நண்பரே.
DeleteGanapathy seems to be pure in his heart....lively and lovely characterisation...
ReplyDeleteஅவன் கடவுளிடம் பேசுவதை படிக்கும், போது.....எனக்கும் அந்த மாதிரி கடவுளிடம்
நட்புடன் பேச எண்ணம் எழுகிறது.....