குருஜி அந்த வேத பாடசாலைக்கு விஜயம் செய்வதென்று கடைசியில் முடிவெடுத்தார்.
தன் உதவியாளனிடம் நாலைந்து நாட்களுக்கு கொடுத்திருந்த அப்பாயின்மெண்ட்கள்
அனைத்தையும் ரத்து செய்யச் சொன்னார்.
“நாளைக்கு மத்திய அமைச்சர் ஸ்ரீவத்சாவை
சந்திக்க ஒப்புக் கொண்டிருக்கிறோம். நாளை மறு நாள் கவர்னரின் தம்பி....” என்று அவன் சொல்லச் சொல்ல அவர் இடை மறித்துச் சொன்னார்.
”அவசர வேலையா வெளியூர் போயிட்டார். அடுத்த முறை
பார்க்கலாம்”னு சொல்லிடு”
உதவியாளன் தலையாட்டி விட்டுச் சென்ற பிறகு
அந்த மனிதன் அவரிடம் கேட்டான். ”என்ன செய்யறதாய் இருக்கீங்க?”
”முதல்ல கணபதி கிட்ட பேசி அந்த பூ சமாச்சாரத்தைத்
தெரிஞ்சுக்கணும். நாலைஞ்சு நாள் வேதபாடசாலையிலேயே தங்கறதா முடிவு செஞ்சுட்டேன்..”
’சிவலிங்கத்தின் கூடவேவா’ என்று கேட்க
நினைத்த அந்த மனிதன் மாற்றிக் கேட்டான். “கணபதி கூடவேவா?”
”இல்லை. நான் வழக்கமாய் தங்கற இடத்துல தான். ரெண்டு நாள்
தயார்ப்படுத்திக்க வேண்டி இருக்கு. அதுக்குப் பிறகு சிவலிங்கத்து கூட ஒரு நாள்
தங்க நினைச்சிருக்கேன்..”. அவர்
அவன் கேட்க நினைத்த கேள்விக்கே பதில் சொன்னார்.
ஒவ்வொரு வருடமும் அந்த
வேதபாடசாலையில் குருஜி பத்து நாட்கள் தங்குவதுண்டு. அங்கே அவருக்கென்று தனியாக ஒரு
வீடு இருக்கிறது. அவரைத் தவிர வேறு யாரும் அங்கே தங்க அவர் அனுமதித்தது கிடையாது. அங்கே
தங்கும் நாட்களில் உயர் வகுப்புகளுக்கு அவர் பாடம் சொல்லித் தருவார். சிறப்புரைகள்
ஆற்றுவார். அவர் மற்ற இடங்களில் பேசுவதைக் காட்டிலும் அங்கு பேசுவது த்த்துவ
ரீதியாக மேலும் சிறப்பாக இருக்கும் என்பதால் அந்த சிறப்புரைகள் கேட்க நாட்டின் பல
பாகங்களில் இருந்தும் அறிஞர்கள் வந்து கூடுவதுண்டு.
ஆனால் இந்த முறை
அங்கு அவர் செல்வது ரகசியமாக வைக்கப்படும் என்பதில் அந்த மனிதனுக்கு சந்தேகமில்லை.
அவர் சிவலிங்கத்தைப் பார்க்கும் முன் எப்படி தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்கிறார்
என்பதை அறிய அவனுக்கு ஆவலாக இருந்தது. ஆனால் சில விஷயங்களை எத்தனை
நெருக்கமானவர்களிடமும் அவர் சொல்வதில்லை என்பதை அவன் நன்றாகவே அறிந்திருந்ததால்
அதைக் கேட்கவில்லை.
குருஜி மறுநாள்
அதிகாலையில் வேதபாடசாலைக்குப் புறப்பட்டுச் சென்றார்.
குருஜியின்
இயற்பெயர் ராமகிருஷ்ணன். கும்பகோணத்தைச் சேர்ந்த வேத விற்பன்னர்களின் பரம்பரையில்
பெற்றோருக்கு நான்காவது மகனாகப் பிறந்தவர். அவருக்குச் சிறு வயதிலிருந்தே அறிவு
தாகம் அதிகமாக இருந்தது. எல்லாவற்றையும் அவர் மிக ஆழமாகத் தெரிந்து கொள்ள
விரும்பினார். அவர் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் அவருடைய
தந்தையார் அவரை சிறு வயதிலேயே ஒரு நாள் நூலகத்திற்குக் கொண்டு போய் விட்டார். ”நீ கேட்கறதுக்கெல்லாம் இதுல ஏதாவது ஒரு புஸ்தகத்துல பதில் இருக்கும்.
படிச்சுக்கோ”
அன்றிலிருந்து அந்த
நூலகம் அவருக்கு இன்னொரு வீடு போல ஆகியது. சிறிது நேரம் கிடைத்தாலும் அங்கு போய்
புத்தகங்களில் மூழ்கி விடுவார். எல்லாத் துறைகளிலும் அவருக்கு நிறைய ஆர்வம் இருந்த
போதும் ஆன்மிகம், தத்துவம், விஞ்ஞானம் ஆகிய துறைகளில் அவருக்கு மேலும் அதிக ஆர்வம்
இருந்தது.
படிப்பில் முதல்
மாணவனாக ஆரம்பம் முதலே இருந்த அவர் பட்டப்படிப்பு முடிந்த பிறகு மேற்கொண்டு
கல்லூரிகளில் படிக்க விரும்பாமல் ஆன்மிக அறிவை நேரடியாகக் கற்க காசி, ஹரித்வார்,
ரிஷிகேஷ் போன்ற இடங்களில் இருந்த யோகிகளையும், குருமார்களையும் நாடிச் சென்றார். பல
குருமார்களுக்கு இவரே சொல்லித் தர வேண்டி இருந்தது. ஆனாலும் ஒருசில உண்மையான
குருமார்களும், யோகிகளும் அவருக்குக் கிடைத்தார்கள். தேனீ பல்வேறு மலர்களிலிருந்து
தேன் சேகரித்துக் கொள்வது போல அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியதை எல்லாம்
அவர் கற்றுக் கொண்டார்.
எதைக் கற்றுக்
கொள்ளும் போதும் அவருக்குச் சோர்வு இருந்ததில்லை. அலுப்பு இருந்ததில்லை. பல
குருமார்கள் அவரைத் தங்களிடத்திலேயே இருத்திக் கொள்ள ஆசைப்பட்டார்கள். தங்கள்
ஆசிரமங்களில் தங்களுக்கு அடுத்தபடியாக அவரை நியமிக்க விரும்பினார்கள். ஆனால் அவர்
எங்கேயும் தங்கி விடவில்லை.
ஒரு குரு அவரிடம்
கேட்டார். “ஏன் இங்கிருந்து போக எண்ணுகிறாய்?”
“ஒரு வகுப்பு படித்து தேர்ந்தவன் பின் அங்கேயே தொடர்ந்து இருப்பது வீண் அல்லவா?” என்றார்.
கடைசியாக சுமார்
ஏழாண்டுகள் ரிஷிகேசத்திலும் அதைச் சுற்றி உள்ள இமயமலைப் பிரதேசங்களிலும் அவர்
கற்றுக் கொண்ட வித்தைகளும், பெற்ற அறிவும் சாதாரணமாக இருக்கவில்லை. தியானத்திலும்
அபூர்வசக்திகளிலும் அவர் அடைந்த நிலைகள் அவருடைய சகாக்கள் பலருக்கு கனவிலும்
நினைத்துப் பார்க்க முடியாததாக இருந்தது.
நாற்பத்தைந்தாவது
வயதில் திரும்பி வந்தவர் பத்திரிக்கைகளில் எழுதவும், பொதுக் கூட்டங்களில் பேசவும்
ஆரம்பித்த பின் பிரபலமாக ஆரம்பித்தார். அப்போது கிடைத்த குருஜி பட்டம் அவருக்கு
நிரந்தரமாகத் தங்கி விட்டது. இந்தியாவில் பிரபலமாகிய அவர் சிறிது சிறிதாக
வெளிநாடுகளிலும் பிரபலமாக ஆரம்பித்தார். பின் அவர் போகாத நாடில்லை, அவரை அறியாத
ஆன்மிகவாதிகள் இல்லை என்ற நிலை வந்து விட்டது.
துறவியாக அவர் தன்னை
எப்போதும் காட்டிக் கொண்டதில்லை. துறவியாக அவர் வாழவும் இல்லை. அவ்வப்போது சில
பெண்கள் அவர் வாழ்க்கையில் இருந்தாலும் அவர் யாரையும் திருமணம் செய்து
கொள்ளவில்லை. திருமணம், பிள்ளைகள், குடும்பம் எல்லாம் சிறைகள் என்று அவர்
நினைத்தார். குருஜி அளவுக்கு ஆன்மிக நூல்கள் எழுதியவர் இல்லை என்று பெயரெடுத்தார். அவருக்குத் தெரியாத விஷயங்கள்
இல்லை என்று அவரிடம் வந்தவர்கள் வியந்தனர். ஒரு முறை அவரிடம் வந்து பேசியவர்கள்
திரும்பத் திரும்ப அவரிடம் வர விரும்பினர்.
எல்லா மதங்களைப்
பற்றியும் ஆழமாக அவர் அறிந்திருந்தார். அந்த மத நூல்களை எல்லாம் கரைத்துக்
குடித்திருந்தார். அனாயாசமாக அவற்றில் இருந்து மேற்கோள்கள் எடுத்துக் காட்டினார். மணிக்கணக்கில்
அவரால் பெரும் தத்துவங்களைப் பேசவும் முடியும். மணிக்கணக்கில் மௌனமாக தியானத்தில்
அமர்ந்திருக்கவும் முடியும். அவரிடம் வாதிட வந்தவர்கள் எப்போதும் வென்றதில்லை. அவர்
பேச விரும்பாத நேரங்களில் ஒரு வார்த்தையை அவரிடம் இருந்து பிடுங்க முடிந்தவர்களும்
இல்லை.
ஆன்மிக உலகில் முடிசூடா
மன்னர் போல திகழ்ந்த அவர் தனிப்பட்ட வாழ்வில் புதிராக இருந்தார். அவர் தன்
ஐம்பதாவது வயதுக்குப் பின் எந்தக் கோயிலுக்கும் சென்றதில்லை. அவர் வீட்டில் எந்த
இறைவனின் திருவுருவப் படமும் இருக்கவில்லை. எல்லா மதக் கடவுள்களைப் பற்றியும்
மணிக்கணக்கில் விளக்க முடிந்த அவர் எந்தக் கடவுளையும் வணங்கியதில்லை. தன்
தனிப்பட்ட கடவுள் மற்றும் மத நம்பிக்கைகள் பற்றி அவர் யாரிடமும் விளக்கியதோ,
விவாதித்ததோ இல்லை. ஆர்வக் கோளாறுடன் அது பற்றிக் கேட்டவர்களுக்கு அவர் அது தன்
தனிப்பட்ட விஷயம் என்று சொல்லி முற்றுப் புள்ளி வைப்பதை வழக்கமாகக்
கொண்டிருந்தார்....
குருஜி வேதபாடசாலைக்கு
வந்திருக்கிறார் என்றும் அவனை சந்திக்க விரும்புகிறார் என்றும் கேள்விப்பட்டவுடன் கணபதிக்கு
மகிழ்ச்சி தாங்கவில்லை. ”எங்கே இருக்கிறார்?”
தகவல் தெரிவித்தவன் அவனை அழைத்துக் கொண்டு
போய் வீட்டைக் காண்பித்து வெளியே நின்று கொண்டு கணபதியை உள்ளே போகச் சொன்னான். வேதபாடசாலையின் இன்னொரு ஒதுக்குப் புறத்தில்
இருந்த அந்த வீடு சிறியதாக இருந்தாலும் பிரத்தியேக அழகுடன் இருந்தது. அந்த
வீட்டின் உள்ளே நுழையக் கூடிய பாக்கியம் வெகுசிலருக்கே வாய்க்கும் என்பதும் அந்த
வெகுசிலரில் தானும் ஒருவன் என்பதும் அறியாத கணபதி உள்ளே போய் அவர் காலில் விழுந்து
சாஷ்டாங்கமாக வணங்கினான்.
”எப்படி இருக்காய் கணபதி?”
”உங்க தயவுல நல்லா இருக்கேன் குருஜி”
”உனக்கு இங்கே சௌகரியத்துக்கு எதுவும் குறைவில்லையே?”
“அப்படிச் சொன்னா நாக்கு வெந்துடும் குருஜி”
குருஜி அவனை புன்முறுவலுடன் பார்த்துக்
கொண்டிருந்தார். அவன் எதைக் கேட்டாலும் வாங்கித் தரும் படி அவர்
அங்கிருந்தவர்களிடம் சொல்லி இருந்தாலும் அவன் எதையுமே கேட்கவில்லை என்பதுடன் கொடுத்த
சாதாரண சௌகரியங்களை கூட மறுத்து விட்டான் என்று அவர்கள் அவரிடம்
தெரிவித்திருந்தார்கள். காலையில் இட்லி, மதியமும், இரவும் எளிமையான சாப்பாடு மட்டுமே
கேட்டான் என்றும் படுக்கக் கொடுத்த மெத்தையைக் கூட மறுத்து விட்டு பாயும்
தலையணையும் போதும் என்று சொல்லி வாங்கிக் கொண்டதாக அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.
”மெத்தை கூட வேண்டாம்னு சொல்லிட்டதா பசங்க சொன்னாங்க. ஏன் கணபதி?”
“குருஜி நான் இங்கே இருக்கப் போறதோ சில
நாள் தான். இங்கே ரொம்ப சௌகரியத்தைப் பழகிட்டா அப்பறம் எங்க வீட்டுக்குப் போன
பிறகு எனக்கு கஷ்டமாயிடும். மெத்தை இல்லாட்டி தூக்கம் வராது. எது கடைசி வரைக்கும் கிடைக்குமோ
அது போதும் குருஜி”
கள்ளங்கபடம் இல்லாமல் கணபதி சொன்னதை
புன்னகையோடு அவர் கேட்டுக் கொண்டார். அந்த சிவலிங்கம் போலவே இவனும் அபூர்வமானவனே, ஆராய்ச்சி
செய்யப்பட வேண்டியவனே என்று அவருக்குத் தோன்றியது.
“பூஜை எல்லாம் எப்படி போய்கிட்டிருக்கு
கணபதி?”
”எனக்குத் தெரிஞ்ச அளவுல செஞ்சுகிட்டிருக்கேன். நீங்க
அங்க வந்து நான் செய்யறதுல இருக்கற தப்புகளை சொன்னா நான் திருத்திக்குவேன் குருஜி”
“அந்த சிவனுக்கே புகார் எதுவும் இல்லைன்னா
நான் வந்து திருத்த என்ன இருக்கு கணபதி?”
”புகார் இருக்கா இல்லையான்னு அவரைக் கேட்டாத் தான்
தெரியும். ஏதோ கொஞ்ச நாளைக்கு தானே, அது வரைக்கும் இவனை அனுசரிச்சுப் போலாம்னு கூட
சிவன் நினைச்சிருக்கலாம்” என்று சொல்லிய கணபதி வாய் விட்டு சிரித்தான்.
அவன் சிரித்ததை ரசித்தபடியே
குருஜி அடுத்ததாக இயல்பாகக் கேட்பது போல் கேட்டார். “பூஜைக்கு வேண்டிய பூ,
வில்வம், துளசி எல்லாம் உனக்கு தாராளமா கிடைக்குதில்லையா கணபதி”
”தாராளமா கிடைக்குது குருஜி. நான் இங்கே இருந்து
போகிறப்ப எங்க பிள்ளையாருக்கும் கொஞ்சம் எடுத்துகிட்டு போகட்டுமா குருஜி” கணபதி ஆர்வத்துடன் கேட்டான்.
”எவ்வளவு வேணுமோ அவ்வளவு எடுத்துட்டு போ கணபதி” என்றவர் தான் எதிர்பார்த்த தகவல் அவனிடம் இருந்து வராததால் தொடர்ந்து
சொன்னார். “சில சமயம் வடநாட்டுல மலைப்பகுதில கிடைக்கற பூவும் யாராவது கொண்டு வந்து
தர்றதுண்டு. பார்க்க அழகா வித்தியாசமா இருக்கும்”
கணபதி உற்சாகத்துடன் சொன்னான். ”ஆமா. நேத்து கூட அந்த பூ கிடைச்சுது. உங்களுக்கு நல்லா பழக்கமானவர் தான்
கொண்டு வந்து தந்தார்”
குருஜி சாதாரணமாய் திகைப்படைபவர் அல்ல
என்றாலும் அவன் சொன்னதைக் கேட்டு திகைத்தே போனார். ”எனக்கு
பழக்கமானவரா. யாரது?”
”பேரைக் கேட்கறதுக்குள்ளே மாயமாயிட்டார். எங்கே போனார்னு
தெரியலை”
”அவரை எங்கே பார்த்தாய், பார்க்க எப்படி இருந்தார்,
எனக்கு நல்லா பழக்கமானவர்னு எதை வச்சு சொல்றே கணபதி.”
கணபதி விளக்கமாகச் சொன்னான். அவர் சொன்னதாக
அவன் சொன்ன ”உங்க குருஜியைத் தெரியும்... பல வருஷங்களுக்கு முன்னால்
பழக்கம்” வாசகத்தை இன்னொரு தடவை சொல்லச் சொல்லி அவர் கேட்டார்.
எதையும் இரண்டாவது முறை அவர் கேட்டதாக சரித்திரமே இல்லை. முதல் தடவையே பல
சந்தர்ப்பங்களில் அவருக்கு அதிகம். பாதியிலேயே சொல்ல வந்ததைப் புரிந்து கொள்ளக்
கூடியவர் அவர். ஆனால் இன்று முதல் தடவையாக அவர் அப்படிக் கேட்டுத் தெரிந்து
கொண்டார். அவன் எல்லாம் சொல்லி முடித்த போது அவர்
சிலை போல அமர்ந்திருந்தார்.
”அவர் யாருன்னு தெரியுமா குருஜி?” கணபதி கேட்டான்.
அவன் சொன்ன
அடையாளங்களும், அந்த வாசகமும் அவர் ரிஷிகேசத்தில் இருந்த நாட்களில் அறிந்த ஒரு
வித்தியாசமான சித்தரை அவருக்கு நினைவுபடுத்தின. அந்த சித்தர் அவருக்குக் குருவாக
சில வருடங்கள் இருந்திருக்கிறார்... அந்த சித்தர் இன்னமும் இருப்பார் என்று அவர் எண்ணியிருக்கவில்லை....
அவன் அவருடைய
பதிலுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்து குருஜி சொன்னார். “நீ
சொல்ற அடையாளங்கள் இருக்கற ஒரு சித்தரை எனக்கு பல வருஷங்களுக்கு முன்னாடி
தெரியும். ஆனால் நீ சொல்ற ஆளும், நான் நினைக்கிற ஆளும் ஒன்னு தானான்னு எனக்குத்
தெரியலை கணபதி....”
தான் பார்த்த மனிதர் ஒரு சித்தராக
இருக்க முடியுமா என்று யோசித்த கணபதிக்கு விடை கிடைக்கவில்லை. அவன் குருஜியைக் கேட்டான். “நீங்க சொல்ற
சித்தரோட பேர் என்ன குருஜி”
மிகத் தாழ்ந்த குரலில் குருஜி சொன்னார்.
“அவருக்குப் பேர் இல்லை...”
பெயர் இல்லாத மனிதர்களும் இருப்பார்களா
என்று திகைத்தான் கணபதி.
குருஜி சகஜ நிலைக்கு வந்து அவனிடம்
சொன்னார். “சரி கணபதி நீ போய் உன் வேலையைப் பார்..”
“நீங்க எப்ப குருஜி அங்கே வர்றீங்க?”
”ரெண்டு நாள் வேற வேலை இருக்கு கணபதி. அதை முடிச்சுட்டு
வர்றேன்.. எனக்கு நீ இன்னொரு உதவி செய்யணும் கணபதி”
“என்ன குருஜி இப்படி உதவிங்கற பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிகிட்டு. என்ன செய்யணும் சொல்லுங்க?”
“அடுத்த தடவை அந்த சித்தரைப் பார்த்தால் நான் அவரைப் பார்க்க ஆசைப்படறேன்னு சொல்லு. எந்த நாளானாலும் சரி. எந்த நேரமானாலும் சரி.....”
“என்ன குருஜி இப்படி உதவிங்கற பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிகிட்டு. என்ன செய்யணும் சொல்லுங்க?”
“அடுத்த தடவை அந்த சித்தரைப் பார்த்தால் நான் அவரைப் பார்க்க ஆசைப்படறேன்னு சொல்லு. எந்த நாளானாலும் சரி. எந்த நேரமானாலும் சரி.....”
அவனை அனுப்பி விட்டு கண்களை மூடி
யோசித்தபடி மணிக்கணக்கில் குருஜி அமர்ந்திருந்தார். அவர் பாதையும்
அவர் குருவின் பாதையும் குறுக்கிடும் காலம் ஒன்று வரும் என்று அவர் கனவிலும்
நினைத்துப் பார்த்ததில்லை.. ஆனாலும் அந்தக் காலம் வந்திருக்கிறது....
(தொடரும்)
-என்.கணேசன்
குறையாத சுவாரசியம். ஆழமான கேரக்டரைசேஷன். பாராட்டுக்கள்.
ReplyDeleteபாஸ் இன்னைக்கு நான் லேட்.........................
ReplyDeletevery interesting,
ReplyDeleteகனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை.. ஆனாலும் அந்தக் காலம் வந்திருக்கிறது.... அபூர்வமான கதை ..!
ReplyDelete
ReplyDeleteReally very nice..
Ganeshan sir, how to order your book through online. Have any option ?
This novel is being written every Thursday. It is not completed and it is not published as book. Thank you
DeleteGaneshan Sir,
DeleteHe/She might be asking about your other (published) books. Is there any online option?
Thanks.
நிலாச்சாரலில் என் மின் நூல்கள் கிடைக்கும்.
Deleteமனிதரில் எத்தனை நிறங்கள் (நாவல்)
http://www.nilashop.com/product_info.php?cPath=64&products_id=1680
நீ நான் தாமிரபரணி (நாவல்)
http://www.nilashop.com/product_info.php?cPath=64&products_id=1679
பார்வைகள் (சிறுகதைத் தொகுப்பு)
http://www.nilashop.com/product_info.php?cPath=64&products_id=644
Hi Sir, very interesting novel..
ReplyDeleteமுடிச்சுக்களை மேலும் மேலும் சுவாரசியமாக்கிக் கொண்டே போடுகிறீர்கள். அருமை. தொடருங்கள். (சித்தரும் ரசித்து குருஜியும் ரசிக்கும் கணபதியின் வெள்ளந்தி மனதுக்கு நானும் அடிமையாகி விட்டேன். நல்ல கதாபாத்திரம்)
ReplyDeleteDear Ganeshan, I live in UK and working as Scientist (Cancer). My wife introduced your blog to me and since i have been addicted to reading your blog.
ReplyDeleteWell done!!!
Thanks for the very interesting stories!
Thamizhl
வாரத்துக்கு 2 தடவைனாலும் போடுங்களேன்.....ஒன்னும் நீங்க கொடுக்கிற தீனி பத்தமாட்டேன்கிது...தினமும் இப்படி ஒரு நாவல் எழுதினா கூட படிக்கலாம்....பேசாம முழுநேரமா எழுத ஆரம்பிச்சுடுங்க......வாரத்துக்கு ஒரு நாவல் வெளியிடுங்க ....கண்டிப்பா மக்கள் ஆதரவு இருக்கும்.....உங்கள் சூழ்நிலை எப்படியோ.....முடிந்தால் இன்னொரு நாளும் வெளியிட முயற்சி பண்ணுங்க ப்ளிஸ்.....
ReplyDeleteUr writing way is good.. We are waiting more...
ReplyDelete“குருஜி நான் இங்கே இருக்கப் போறதோ சில நாள் தான். இங்கே ரொம்ப சௌகரியத்தைப் பழகிட்டா அப்பறம் எங்க வீட்டுக்குப் போன பிறகு எனக்கு கஷ்டமாயிடும். மெத்தை இல்லாட்டி தூக்கம் வராது. எது கடைசி வரைக்கும் கிடைக்குமோ அது போதும் குருஜி”
ReplyDeleteMeaningful lines about life..
பரமனின் ரகசியம் கண்பதி கதாபாத்திரம்தான் - பற்றற்று, பற்றற்றான் பற்றிணை பற்றும் பாத்திரம் அற்புதம்!
ReplyDeleteVery interesting and expecting
ReplyDeleteMr G,
ReplyDeleteThe charecters are playing with mind and heart, pure and correpted feelings.... so beautifull fabirication of story...