Monday, December 29, 2025

யோகி 136

 

சைத்ராவின் மரணத்தோடு ஏதோ ஒரு வகையில் தொடர்பு இருக்கக்கூடிய தகவல் இந்த ஆடிட்டரிடம் உள்ள தகவல்களில் இருக்கலாம் என்று ஷ்ரவன் நம்புவதாக ராகவன் தெரிவித்திருந்ததால், ஸ்ரேயா அவற்றை ஆராய்ந்து கொண்டிருக்கிறாள். ஆடிட்டர் திவாகரனின் டைரியின் பக்கங்களைத் தான் அவள் முதலில் ஆராய்ந்தாள். அதிகமாக அலைபேசி, தொலைபேசி எண்களும் அவற்றில் எழுதப்பட்டிருந்தன. அந்த எண்களுடன் சில இடங்களில் பெயர்கள், சில இடங்களில் ஆங்கில எழுத்துக்கள், சில இடங்களில் தேதிகள் எழுதப்பட்டு இருந்தன. எதிலும் யோகாலயம் பெயரோ, பிரம்மானந்தா உட்பட அவளுக்குத் தெரிந்த யோகாலயத்தின் முக்கியஸ்தர்கள் பெயர்களோ எழுதப்பட்டு இருக்கவில்லை. சில பக்கங்களில் சில பெயர்கள் மட்டும் இருந்தன. ஆட்களின் பெயர்கள், அல்லது நிறுவனங்களின் பெயர்கள் அல்லது பெயர்ச்சுருக்கங்கள் இருந்தன. அவர் சிலவற்றின் அருகே கேள்விக்குறி, அல்லது நட்சத்திரம் அல்லது பெருக்கல் குறி இருந்தன. அவையெல்லாம் முக்கியமானவையா என்று தெரியவில்லை. முக்கியமானவையாக இருந்தால் அந்தக் குறிகளின் அர்த்தம் என்ன என்று யோசிக்க வேண்டும்

அடுத்ததாக அவருடைய கம்ப்யூட்டரிலிருந்து எடுக்கப்பட்ட கோப்புகள் நிறைய இருந்தன. பெரும்பாலானவை தனிநபர்களின் விவரங்கள். ஒவ்வொன்றுக்கும் மூன்று அல்லது நான்கு ஆங்கில எழுத்துகளில் பெயர் வைக்கப்பட்டு இருந்தன. அதே போல் நிறைய ஆட்களின் வரவு செலவுக் கணக்கு, வருமானவரிக் கணக்கு கோப்புகளும் இருந்தன. சிலவற்றைத் திறந்து பார்த்தாள். பல லட்சங்கள், பல கோடிகளில் வரவு செலவு இருந்தன. கிட்டத்தட்ட எல்லாமே கருப்புப்பண கணக்குகளாக இருக்கலாம். ஆனால் இந்த தகவல் மலையில் சைத்ரா வழக்குக்குப் பயன்படும்படியான ஒருசில தகவல்கள் இருக்கலாம், இல்லாமலும் போகலாம். அப்படி இருந்தாலும் அதைப் பிரித்தெடுப்பது ராகவன் சொன்னது போல் மிகப் பெரிய வேலை தான்.  அந்தத் தகவல்களிலிருந்து கூடுதல் தகவல்கள் தேவைப்பட்டால் அவள் இணையத்தில் அவற்றைத் தேடிப் பெற வேண்டும். அதற்கு மேலும்  தேவைப்பட்டால் இணையத்தில் இன்னும் ஆழமாய்ப் போக வேண்டும். ஆனால் அதே வேலையென்று கவனத்தைக் குவித்து விட்டால் அவளால் அது முடியாத காரியமல்ல என்று நினைத்தாள்.

ஷ்ரவனே பாராட்டும்படி இதிலிருந்து உபயோகமாய் ஏதாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று அவள் உறுதியாக இருக்கிறாள். அவள் வேலைக்கு ஒரு வாரம் லீவு போட்டு விட்டாள்.  தோழிகளிடம் ஒரு வாரம் அழைத்துப் பேசக்கூடாது என்று சொல்லி விட்டாள். ஷ்ரவனின் அம்மா தினமும் பேசும் அரை மணி நேரப் பேச்சு தவிர வெளியாட்கள் வேறு யாருடனும் அவள் தொடர்பில் இல்லை. அவருடன் பேசும் அரை மணி நேரப் பேச்சு இந்த வேலைக் களைப்பிலிருந்து விடுவித்து அவளுக்கு உற்சாகம் தந்தது. ஷ்ரவனின் அம்மாவுக்கு மகனைப் பற்றிச் சொல்ல நிறைய இருந்தது. அவன் சிறு பிள்ளையாக இருந்த காலத்தில் செய்த குறும்புகளிலிருந்து தற்காலத்தில் செய்திருக்கும் குறும்புகள் வரை அவனைப் பற்றிய நிறைய சுவாரசியமான தகவல்களைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சொன்னாள். அவனைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருப்பதே ஸ்ரேயாவுக்கு சந்தோஷத்தைத் தந்தது. ஷ்ரவனின் அம்மா அரை மணி நேரத்திற்கு மேல் அவளைத் தொந்தரவு செய்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள். ஒரேயடியாக மருமகளுக்குச் சலித்து விடும்படி பேசுவது நல்லதல்ல என்று அவள் எச்சரிக்கையாக இருந்தாள்

ஸ்ரேயாவுக்கு இடையிடையே ஷ்ரவனுக்கு ஏற்பட்டு விடக்கூடிய ஆபத்துகள் பற்றிய பயம் வரும். எவ்வளவு சீக்கிரம் கண்டுபிடித்துத் தருகிறோமோ, அவ்வளவு சீக்கிரம் அவன் யோகாலயத்திலிருந்து வெளியே வர முடியும் என்ற நினைவே பல நாட்களில் இரவு ஒன்றரை அல்லது இரண்டு மணி வரை அவளை வேலை செய்ய வைக்கும்.

ஆடிட்டர் திவாகரனின் கோப்புகள் குறித்த ஒரு தெளிவான புரிதல் வருவதற்கே அவளுக்கு முதல் இரண்டு நாட்கள் தேவைப்பட்டன. எதிலும் அவர் வாடிக்கையாளரின் பெயரை முழுவதுமாக பயன்படுத்தியதில்லை. N.கிருஷ்ணன் என்பவருடைய கோப்புக்கு NK என்று பெயர் வைப்பார். அந்தக் கோப்பில் உள்ள தனிநபர் விபரங்கள் ஆதார், வருமானவரி எண் ஆகியவற்றைத் திறந்து பார்த்தால் தான் அது N.கிருஷ்ணனின் கோப்பு என்பது தெரியும். N.கிருஷ்ணன் என்ற பெயரை வைத்துத் தேடினால் அதனுள்ளே உள்ள வரவு செலவுக் கணக்கு, வருமானவரி தாக்கல் ஆகியவற்றைப் பார்த்தால் தான் அது எந்த வருடத்தியது என்ற விவரம் தெரியவரும். வரவு செலவுக் கணக்கிலும் கூட அவர் முழுப்பெயர் எழுதாமல் NK என்று தான் எழுதியிருப்பார். அதனால் பெயர், வருடம் கண்டுபிடிப்பதற்குக் கூட அவள் ஒவ்வொன்றின் உள்ளே போய் தான் பார்க்க வேண்டியிருந்தது 

ஆனாலும் ஸ்ரேயா சலிக்காமல் மும்முரமாய் அந்த வேலையைச் செய்து கொண்டிருந்தாள்

 

ன்றிரவு சித்தானந்தா கழிவறைக்குச் சென்றிருந்த சமயத்தில் தான், கல்பனானந்தா சொன்னதை ஷ்ரவன் முக்தானந்தாவிடம் தெரிவித்தான். சைத்ரா ஒரு கொலையை இங்கே பார்த்தது தான் அவளுக்கு எமனாயிற்று என்ற தகவல் முக்தானந்தாவை அதிர்ச்சிக்கும், வருத்தத்திற்கும் உள்ளாக்கியது. எப்படியெல்லாம் கனவு கண்டு இந்த யோகாலயத்தை ஆரம்பித்தோம், அது இப்போது எப்படியெல்லாம் ஆகிவிட்டிருக்கிறது என்ற எண்ணம் பெரிய பாறை போல் அவர் இதயத்தை அழுத்தியது. கல்பனானந்தாவிடமிருந்து முழு விவரத்தைப் பெற முடியவில்லை என்று ஷ்ரவன் சொன்ன போது அவர் விரக்தியுடன் தலையசைத்தார். முழு விவரம் தெரிந்து கொண்டு பாரத்தைக் கூட்டிக் கொள்ளுமளவு மனதில் திராணியில்லை.

ஷ்ரவனிடம் அவர் வறண்ட குரலில் சொன்னார். “நடந்ததை எல்லாம் நம்மால் மாற்ற முடியாது. நடக்கப் போவதில் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் ஷ்ரவன். நீங்கள் பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள். உங்கள் உயிர் பத்திரம். கவனக்குறைவாய் தவறாக ஒரு சிறிய அடி எடுத்து வைத்தாலும், பாண்டியன் கண்டுபிடித்து விடுவான். இன்றைக்கு நீங்கள் தப்பித்ததே பெரிய விஷயம்.”

சித்தானந்தா வந்து விட்டதால் அவர்களுக்கு மேற்கொண்டு பேசிக் கொள்ள முடியவில்லை. அன்றிரவு ஷ்ரவன் மந்திரஜபம் செய்கையில் அவனைப் பனி சூழ்ந்து அவனைச் சுற்றியும் பனியின் வெண்மையே தெரிவது போன்ற காட்சி அவன் மனக்கண்ணில் தோன்றி மறைந்தது. ஓநாய் தெரியவில்லை. இந்தக் காட்சியும் வரவிருக்கும் ஆபத்தை எச்சரிப்பது போல் இருந்தது.  

ஷ்ரவன் கண்ணுக்குத் தெரியாத அந்த ஓநாயிடம் சொன்னான். “எனக்கு ஆபத்து வரலாம். ஆனால் நீ இருக்கையில் நான் பயப்பட எதுவுமில்லை. என் பாதுகாப்புக்கு நீ இருக்கிறாய் என்று நான் உன்னை நிச்சயமாக நம்புகிறேன்.”

அதன் பின்னும் ஓநாய் அவனுக்குக் காட்சி தரவில்லை. ஆனால் பரசுராமன் சொன்னபடி இந்த மந்திர ஜபம் அவனைக் காக்கும் என்று நம்பினான். இறை சக்திகள் மனிதனிடம் வளவளவென்று பேசிக் கொண்டிருப்பதில்லை. அவனுடைய அர்த்தமற்ற தினசரி பயங்களுக்கு, அவ்வப்போது பதிலளித்துக் கொண்டிருப்பதில்லை. ஆனால் மனிதன் சரியான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து வாழும் போது, அவன் எப்போதும் கைவிடப்படுவதில்லை.

இந்த எண்ணம் ஷ்ரவனை அமைதிப்படுத்தியது. அவனுடைய முகத்தில் தெரியும் அமைதியைக் கண்ட முக்தானந்தா அவனை மிகுந்த கனிவுடன் பார்த்தார். அவரும் அவனுக்காகப் பிரார்த்தனை செய்தார். ”கடவுளே இவனுக்கு நீண்ட ஆயுளும், கடைசி வரை இந்த அமைதியும் தந்து காப்பாற்று!”

(தொடரும்)

என்.கணேசன்



No comments:

Post a Comment