Monday, November 11, 2024

யோகி 76

 

மாயவரம் மாதவன், சந்திரமோகனின் மனைவி முகத்தில் பரவிய திகிலைக் கவனித்ததாய் காட்டிக் கொள்ளவில்லை.

 

அப்ப அவர் என்னை, சேலம் வந்தால் கண்டிப்பா வீட்டுக்கு வரணும்னு கட்டாயப்படுத்தி சொல்லியிருந்தார். அவர் வீட்டுல இருக்காரில்லையா?”

 

இல்லை. அவர் போன ஜுன் மாசம் சென்னைக்குப் போயிட்டு வர்றதாய் போனவர் திரும்பி வரலை. என்ன ஆனார்னு தெரியலை. அவர் பத்தி எந்த தகவலும் கிடைக்கலை

 

என்ன சொல்றீங்க?” என்று சொன்ன அந்த ஆள், தன் முகத்தில் அதிர்ச்சியைக் காட்டினார்.

 

அவள் ஈரமான தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

 

அவர் சொன்னார். ”சென்னைக்குப் போனால் யோகாலயம் போகாமல் திரும்பி வர மாட்டாரே. அங்கே விசாரிச்சீங்களா?”

 

மறுபடி அவள் முகத்தில் பயம் தெரிந்தது. அவள் பலவீனமான குரலில் சொன்னாள். “விசாரிச்சேன். ஆனால் அவர் அங்கே வரலைன்னு அவங்க சொல்லிட்டாங்க

 

ஆச்சரியமாய் இருக்கே. போலீஸ்ல புகார் கொடுத்தீங்களா?”

 

கொடுத்திருக்கோம். அவங்களாலயும் கண்டுபிடிக்க முடியலை.”

 

முகத்தில் வருத்தம் காட்டி, சில ஆறுதல் வார்த்தைகள் சொல்லி விட்டு, மாயவரம் மாதவனாய் வந்திருந்த போலீஸ் இளைஞன் கிளம்பினான்.

 

அவன் ஷ்ரவனுக்குப் போன் செய்து சொன்ன தகவல்கள் ஷ்ரவனின் சந்தேகத்தை அதிகரித்தன. யோகாலயத்தில் சந்திரமோகனைச் சந்தித்தேன் என்று சொன்னதற்கும், சென்னை போனால் யோகாலயம் போகாமல் வரமாட்டாரே என்று சொன்னதற்கும் சந்திரமோகன் மனைவி எதிர்க்கருத்து சொல்லவில்லை. அப்படியானால் சந்திரமோகனுக்கும் யோகாலயத்துக்கும் முன்பே ஏதோ ஒரு தொடர்பு இருந்திருக்கிறது என்பது ஊர்ஜிதமாகிறது. ஆனால் யோகாலயம் என்ற பெயரைச் சொல்லும் போதே அவள் பயப்படுகிறாள். கணவர் சென்னையில் யோகாலயத்துக்குச் செல்வதாகச் சொல்லி தான் சென்றார் என்பதை ஆரம்பத்தில் சொன்னவள்,  பின் யாரிடமும் சொல்லவும் கூடப் பயப்படுகிறாள்.

 

அந்த போலீஸ் இளைஞன் சேலம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்த தன் நண்பன் ஒருவன் மூலமாக, சந்திரமோகன் மனைவி போலீஸ் ஸ்டேஷனில் தன் கைப்பட எழுதித் தந்திருந்த கடிதத்தின் நகலையும் ஷ்ரவனுக்கு அனுப்பி வைத்தான். அந்தக் கடிதத்தில் யோகாலயம் செல்வதாகச் சொல்லி விட்டுச் சென்ற தன் கணவர் பின் என்ன ஆனார் என்று தெரியவில்லை என்று தான் அவள் எழுதித் தந்திருந்தாள்.  பின் அதைச் சொல்லவே விடாமல் அவளைத் தடுப்பது எது?

 

சேலம் போலீஸ் ஸ்டேஷனில் யோகாலயத்திற்கு போன் செய்து விசாரித்திருக்கிறார்கள். சந்திரமோகன் என்ற பெயருடைய ஆள் யாரும் அங்கு வரவில்லை என்று யோகாலயத்தில் தெரிவித்ததாய் போலீஸார், சந்திரமோகன் மனைவி எழுதித் தந்த கடிதத்தில் குறிப்பு எழுதி வைத்திருந்தனர். அதையும் ஷ்ரவன் படித்தான்.

 

அதோடு அந்த விசாரணை கிணற்றில் போட்ட கல் போல் ஆகிவிட்டது.   சந்திரமோகன் காணாமல் போன விவகாரத்திற்கும், சைத்ரா கொலைக்கும் சம்பந்தம் உள்ளதா, இல்லையா என்று தெரியவில்லை....

 

சேலத்தில் விசாரிக்கச் சென்றிருந்த போலீஸ் இளைஞர் அங்கே விசாரித்து இன்னொரு தகவலையும் எழுதியிருந்தார். சந்திரமோகன் தீவிரமான ஆன்மீகவாதி அல்லவாம். திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரரின் பக்தர், அந்தக் கோயிலுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை போய் வருபவர் என்பதைத் தவிரப் பெரிதாக எதிலும் ஆன்மீக ஈடுபாடு காட்டாதவர், என்பதையும் எழுதியிருந்தார். பின் எந்த வகையில், அப்படிப்பட்ட மனிதர்  யோகாலயத்துடன் சம்பந்தப்படுகிறார் என்பதும் மூடுமந்திரமாகவே இருந்தது. 

 

அதன் பின் ஷ்ரவனுக்குக் கிடைத்த இரண்டு தகவல்கள் யோகாலயத்தில் எதிரிகள் எச்சரிக்கை அடைந்து விட்டதைத் தெரிவித்தன. முதல் தகவல் சேதுமாதவனின் வீட்டை எதிரிகள் கண்காணிப்பது. இரண்டாவது தகவல், யோகாலயத்தை அவர்கள் கண்காணிப்பதை எதிரிகள் கண்டுபிடித்து விட்டது. துறவிகள் உடையில் யோகாலயத்து ஒற்றர்கள் யோகாலயத்தின் உள்ளே நடமாடுவது போல, வெளியேயும் நடமாட ஆரம்பித்து விட்டார்களாம். கண்காணிப்பவர்களைக் கண்காணிக்க ஆரம்பித்து விட்டார்களாம்...

 

தேவானந்தகிரி வந்து போன பின் சுகுமாரன் வீட்டில் அமைதி நிலவியது தெரிந்தது. சுகுமாரன் வீட்டிலேயே தூங்கினார் என்றாலும் அவர் இரவு நேரங்களில் அதிகம் வெளியே வராதவராய் இருந்தார்.  அவர் கையிலும், டாமியின் கழுத்திலும் கட்டப்பட்டு இருந்த தாயத்து தேவானந்தகிரி கட்டியதாய் இருக்க வேண்டும் என்பதை ஷ்ரவனால் அனுமானிக்க முடிந்தது. தேவானந்தகிரியை விசாரித்தால் அவர் பூஜையின் போது அறிந்ததையும், சொன்னதையும் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் விசாரித்தது அவர் மூலம் யோகாலயத்துக்கும் தெரியவரும் என்பதால் அவன் அதற்கு முயற்சி செய்யவில்லை. ஆனால் இரண்டு நாட்களில் சுகுமாரன் பாண்டியனிடம் போனில் பேசுகையில் கேட்ட ஒரு கேள்வி அதிர்ச்சியூட்டும் மூன்றாவது முக்கியத் தகவலைத் தெரிவித்தது.

 

சுகுமாரன் பாண்டியனிடம் பேச்சு வாக்கில் கேட்டார். “ஒரு நிஜ யோகியைத் தேடிகிட்டு இருக்கற நம்ம எதிரி யாருன்னு தெரிஞ்சுதா?”

 

ஷ்ரவனுக்கு இதயம் ஒரு கணம் துடிக்க மறந்தது.

 

பாண்டியன் சுருக்கமாகஇல்லைஎன்று மட்டும் சொன்னார். இன்னொரு அழைப்பு தன் அலைபேசிக்கு வந்து கொண்டிருக்கிறது என்று சொல்லி அவர் இணைப்பைத் துண்டித்தார்.

 

ஷ்ரவனுக்குத் திகைப்பாய் இருந்தது. அவன் ஒரு நிஜ யோகியைத் தேடுவது அவர்களுக்கு எப்படித் தெரிந்தது? அதனுடன் வேறு என்ன தகவல் அவர்களுக்குத் தெரியும் அல்லது தெரிய வரும் என்று தெரியவில்லை. யோசித்த போது பெரிதாய் கவலைப்பட எதுவுமில்லை என்று தோன்றியது. எல்லா அமானுஷ்ய சக்திகளும் ஒரு சாராருக்கு மட்டுமே சொந்தமானதல்ல. இரண்டு பக்கமும் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதற்கு இது உதாரணம் என்று ஷ்ரவன் நினைத்துக் கொண்டான். அவர்கள் தேவானந்தகிரியிடம் தங்களது எதிரி யார் என்று கேட்டிருக்கலாம். பரசுராமன் அவனைப் பற்றிய சில தகவல்கள் சொன்னது போலவே, தேவானந்தகிரிக்கும் அவனைப் பற்றி இந்தத் தகவல் தெரியவந்திருக்கலாம். தேவானந்தகிரி யோகாலயத்தில் இருந்த அந்த இரவில் அவன் அந்த யோகி பற்றி எதாவது தெரிய வருகிறதா என்று இணையத்தில் தேடிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. அவர் அந்தத் தகவலைச் சொல்லியிருக்கலாம். கூடுதலாக அவனைப் பற்றி எதாவது தெரிய வந்திருந்தால் அவர்கள் பேச்சில் கண்டிப்பாகத் தெரிய வந்திருக்கும் என்று எண்ணி ஷ்ரவன் மனசமாதானமடைந்தான்.

 

ஷ்ரவன் சேதுமாதவனுக்குப் போன் செய்து அவர் கண்காணிக்கப்படுவதைத் தெரிவித்தான். அவர் எங்கு செல்கிறார், என்ன பேசுகிறார் என்பதெல்லாம் எதிரிகளுக்குத் தெரியவரலாம் என்பதால் மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்படி சொன்னான். எக்காரணம் கொண்டும் முதல்வரைச் சந்திக்கவோ, நண்பர்களுடன் பேசுகையில் முதல்வர் பற்றியோ, இந்த விசாரணை பற்றியோ பேச வேண்டாம் என்றும் சொன்னான். மற்றபடி அவரை இயல்பாக இருக்கச் சொன்னான். கண்காணிப்பாளர்களையும், பின் தொடர்பவர்களையும் அவர் கண்டு கொண்டதாகக் காட்டிக் கொள்ள வேண்டாம் என்று சொன்னான். ஏதாவது மிக முக்கியமான தகவல் சொல்ல வேண்டியிருந்தால் அதை மட்டும் சொல்ல ஒரு அலைபேசி எண்ணையும் தந்தான். அந்த எண்ணிலிருந்து பதில் எதுவும் வராது என்றும், அவர் சொல்லும் தகவல் அவனுக்கோ ராகவனுக்கோ வந்து சேரும் என்றும் சொன்னான்.

 

சேதுமாதவன் அவன் சொன்ன விஷயங்களால் பெரிதாகப் பாதிக்கப்படவில்லை. அவரைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்றும், அவனை மிக எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும்படியும் சொன்னார். அவருடைய அன்பும், அக்கறையும் அவனை நெகிழ வைத்தன. உயர்ந்த மனிதர்கள் எத்தனை கஷ்டங்களிலும் தங்கள் மேன்மைகளைத் தக்க வைத்துக் கொள்கிறார்கள் என்று அவன் எண்ணிக் கொண்டான்.

 

ஷ்ரவன் குமரேசனுக்கும் போன் செய்து மிக எச்சரிக்கையாக இருக்கும்படி சொன்னான். சரியென்ற குமரேசன் யோகாலயத்தில் வெளியிலிருந்து வரும் வேலைக்காரர்கள் இப்போதெல்லாம் இரட்டிப்பாக கண்காணிக்கப்படுகிறார்கள் என்பதைத் தெரிவித்தான்.

 

ஷ்ரவன் யோகாலயத்துக்குச் சென்றால் அவனையும் தீவிரமாக அவர்கள் கண்காணிப்பார்கள். அதையும் மீறி அவனால் என்ன செய்ய முடியும் என்பதை அங்கு சென்று தான் அவன் பார்க்க வேண்டும்.   


(தொடரும்)

என்.கணேசன்




4 comments:

  1. Interesting. Please try to give 2 Episodes per Week sir.

    ReplyDelete
  2. அற்புதமான எழுத்துக்கள் சார் உங்களுடையது. உங்கள் சிறுகதைகள் படித்தேன் மறந்துபோன ஞானிகளையும்யோகிகளையும் சித்தர்களையும் அற்புதமாக நினைவூட்டி உள்ளீர்கள். நன்றி சார். ஆண்டவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும், சகலசம்பத்தையும் அருளட்டும்.

    ReplyDelete
  3. ஆதியோகி எனப்படும் சிவனையே தன்னுடன் வைத்திருக்கும் யோகிஜி .....இந்த மாதிரி சின்ன விசயத்துக்கு பயந்து பாதுகாப்பை அதிகப்படுத்தலாமா!!!!🤣🤣🤣🤣🤣

    ReplyDelete
  4. உயர்ந்த மனிதர்கள் தங்கள் மேன்மைகளை எப்போதும் தக்க வைத்து கொள்கிறார்கள். அற்புதமான உண்மையான வரிகள்

    ReplyDelete