Thursday, November 7, 2024

சாணக்கியன் 134

 

சிறிது நேரம் பொறுத்துப் பார்த்த சாணக்கியர் மெல்லச் சொன்னார். “அன்பு பர்வதராஜனே. இது குறித்து நீ நீண்ட நேரம் ஆலோசனை செய்வதைப் பார்த்தால் முடிவெடுப்பதில் உனக்கு இருக்கும் சிக்கலை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அது அவசியமேயில்லை....”

 

அடுத்து சாணக்கியர் என்ன சொல்லப் போகிறார் என்றறியும் ஆவலுடன் பர்வதராஜன் கண்களைத் திறந்தான். சாணக்கியர் அமைதியாகச் சொன்னார். “நாங்கள் மற்ற மூன்று தேச மன்னர்களைச் சந்தித்துப் பேசுகிறோம். அவர்கள் ஒத்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. அவர்கள் எங்களுடன் இணைந்தால் பின் உன் படைகளுக்குப் பதிலாக வேறு படைகளின் உதவி கிடைக்குமா என்று பார்க்கிறேன். அதுவும் ஒரேயிடத்திலிருந்து எங்களுக்கு உதவி கிடைக்க வேண்டியதில்லை. வேறு புதிய இரண்டு மூன்று இடங்களில் இருந்து கிடைக்கும் உதவிகளும் சேர்ந்து உன்னிடமிருந்து கிடைக்கும் உதவிக்கு இணையாக அமையுமானால் அதை ஏற்றுக் கொண்டு நாங்கள் வேலையை ஆரம்பிக்கிறோம். அதனால் எங்களுக்கு எந்த வருத்தமுமில்லை. உன்னுடைய விருந்தோம்பலுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள். நாங்கள் கிளம்புகிறோம்.”

 

சொல்லி விட்டு சாணக்கியர் எழுந்து நிற்க, அதைப் பார்த்து விட்டு சந்திரகுப்தனும் எழுந்து நின்றான்.

 

இந்தப் பதிலையும், அவர்களது புறப்பாட்டையும் சிறிதும் எதிர்பார்த்திராத பர்வதராஜன் பதறியபடி தானும் எழுந்தான். “ஆச்சாரியரே, நீங்கள் என்னைத் தவறுதலாகப் புரிந்து கொண்டது எனக்கு வேதனையாக இருக்கிறது. தயவு செய்து இருவரும் அமருங்கள். நீங்கள் இங்கு வந்ததிலிருந்து இக்கணம் வரை எனக்கிருக்கும் ஒரே ஒரு யோசனை உங்களுக்கு நான் எப்படி உதவ முடியும் என்பது தான். என்ன பலன் கிடைக்கும் என்று நான் கேட்டது ஒரு தெளிவான புரிதலுக்குத் தானேயொழிய இலாப நஷ்டக் கணக்கைப் பார்த்து அல்ல. மேலும் இங்கிருந்து செல்லும் போது உங்கள் முழு உத்தேசமும் பூர்த்தியடைந்திருக்க வேண்டும் என்பது தான் என் விருப்பமாக இருந்ததால், மற்ற தேசங்கள் உதவி பற்றியும் நீங்கள் சொன்னது என்னை அதற்கும் சேர்த்து யோசிக்க வைத்து விட்டது. ஏன் இருவரும் இன்னமும் நிற்கிறீர்கள்? தயவு செய்து அமருங்கள். என் உதவி மட்டுமல்லாமல் அவர்கள் உதவியையும் பெற்றுத் தருவது என் பொறுப்பு. போதுமா?”

 

இந்தத் திடீர் மாற்றத்தைக் கண்டு திகைத்தவன் சந்திரகுப்தன் மட்டுமல்ல, மலைகேதுவும் தான். இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் அவனாலும் அவன் தந்தையை எல்லா நேரங்களிலும் புரிந்து கொள்ள முடிந்ததில்லை. எதோ ஒரு மனக்கணக்கு இல்லாமல் பெருந்தன்மையாக நடந்து கொள்ளும் மனிதர் அவன் தந்தையல்ல என்பதை அவனும் அறிவான். இப்போதைய அவர் மனக்கணக்கு அவனுக்கும் புரியவில்லை.

 

பர்வதராஜனின் திடீர் மாற்றம் சந்திரகுப்தன் மற்றும் மலைகேது அளவுக்கு சாணக்கியரை திகைக்க வைக்கவில்லை என்றாலும் ஒரு நிலையிலிருந்து அதற்கு நேர் எதிர்மாறான நிலைக்கு அவன் போக முடிந்த வேகம் அவரையும் சிறிது ஆச்சரியப்பட வைத்தது,   அவர் அமர்ந்தபடியே  பர்வதராஜனிடம் சொன்னார், ”நீ என்ன சொல்ல வருகிறாய் என்பது எனக்கு முழுவதுமாக விளங்கவில்லை, பர்வதராஜனே.”

 

பர்வதராஜன் பணிவின் திருவுருவமாக மாறிச் சொன்னான். “ஆச்சாரியரே. நீங்கள் ஒவ்வொருவரையாகச் சந்தித்து இதுகுறித்துப் பேசும் சிரமத்தை ஏற்க வேண்டாம் என்று சொல்கிறேன். குலு, காஷ்மீரம், நேபாள தேச மன்னர்கள் எனக்கு மிக நெருக்கமானவர்கள். அண்டைநாட்டு மன்னர்களான அவர்களை நான் இங்கேயே வரவழைக்கிறேன். அது கால தாமதத்தையும் தவிர்க்கும். என்னிடம் ஒரு காரியமாக நீங்கள் வந்த பிறகு இங்கிருந்து அந்தக் காரியம் முடிந்தவர்களாகத் தான் நீங்கள் செல்ல வேண்டும். அதுவே என்னுடைய ஆவல்.”

 

சாணக்கியர் சொன்னார். “உனது அன்பும், ஆர்வமும் என்னைப் பிரமிக்க வைக்கிறது பர்வதராஜனே. எங்கள் பணியை நீ இவ்வளவு எளிதாக்குவாய் என்று நாங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.”

 

பர்வதராஜன் எழுந்தபடி சொன்னான். “தங்கள் திருப்தி அடியேனின் பாக்கியம். நீங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். அண்டை மன்னர்களை வரவழைக்க ஏற்பாடுகள் செய்து விட்டு நான் தங்களைச் சந்திக்கிறேன். தற்போது விடைபெற்றுக் கொள்கிறேன்.”

 

இருவரையும் கைகூப்பி வணங்கி விட்டு பர்வதராஜன் செல்ல, மலைகேதுவும் எழுந்து அவர்களைக் கைகூப்பி வணங்கி விட்டு தந்தையைப் பின் தொடர்ந்தான்

 

தங்கள் மாளிகைக்குத் திரும்பி வந்தவுடன் மலைகேது தன் தந்தையைக் குழப்பத்துடன் கேட்டான். ”தந்தையே அந்த அந்தணர் தாங்கள் பாதி பங்கு கேட்டவுடன் மறுத்ததோடு இங்கிருந்து கிளம்பவும் சித்தமாகி விட்டார். அப்படி அவர் கறாராக இருக்கையில் நீங்கள் மற்ற மன்னர்களை இங்கேயே வரவழைத்துப் பேசுமளவு இத்தனை தூரம் இறங்கி வரும் அவசியம் என்ன இருக்கிறது?”

 

பர்வதராஜன் புன்னகைத்தான். “மகனே. நான் அந்த ஆளை ஆழம் பார்க்கத் தான் வென்றதில் பாதி பங்கு கேட்டேன். அந்த அந்தணர் தந்திரமாக மற்ற தேசங்களின் படையுதவியும் தேவைப்படுவதால் அவர்களிடம் பேசாமல் அந்த வாக்குறுதி தர முடியாது என்று மறுத்து விட்டார்.  அது மட்டுமல்ல நான் உதவி செய்யா விட்டால் கூடுதலாக யாராவது ஒருவர் அல்லது இருவர் உதவியைப் பெற்றுக் கொள்வது என்று தீர்மானித்துக் கிளம்பியும் விட்டார். அதனால் இறங்கி வருவதைத் தவிர எனக்கு வேறுவழி இருக்கவில்லை. அதிர்ஷ்டம் நம்மிடம் வரும் போது வறட்டு கௌரவம் பார்ப்பது முட்டாள்தனம். அறிவைத் தவிர வேறெந்த மூலதனமும் இல்லாத ஒரு தனி மனிதன் மாடு மேய்ப்பவனை அரசனாக்க முடிந்திருக்கிறது. அலெக்ஸாண்டரின் சத்ரப்களைக் கொன்று யவனர்களைத் துரத்த முடிந்திருக்கிறது. ஒவ்வொரு அடியையும் திட்டமிட்டு வைத்து இத்தனை சாதிக்க முடிந்த அந்த அந்தணர் தனநந்தனை வீழ்த்தத் திட்டமிட்டு விட்டார் என்றால் தனநந்தனின் வீழ்ச்சி உறுதி என்று பொருள். தனநந்தனின் செல்வம் குபேரனிடமிருக்கும் செல்வத்திற்கிணையானது. அவன் ஆளும் மகதமோ பரந்த சாம்ராஜ்ஜியம். அந்த அந்தணர் தனியாக அவனை வீழ்த்தி அவன் செல்வத்தையும் மகதத்தையும் அடைய முடியாததும், அதற்கு உதவி கேட்டு முதலில் நம்மிடம் வந்திருப்பதும் நம் பாக்கியம். இதைப் பயன்படுத்தி நாம் அவருடன் இணைந்து கொண்டு பாதி மகதத்தையும், தனநந்தனின் கணக்கற்ற செல்வத்தில் பாதியையும் பெற்று விட வேண்டும். அதற்காக எதையும் செய்ய நான் தயார்.”

 

மலைகேது கேட்டான். “பாதியை உங்களுக்குத் தரத்தான் அந்த ஆள் ஒப்புக் கொள்ளவில்லையே.”

 

மற்றவர்களுடன் பேசாமல் எனக்குத் தர முடியாது என்று தான் அவர் சொல்லி இருக்கிறார். அவர் ஒரேயடியாய் மறுப்பதற்கும், இப்படிச் சொல்வதற்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது மகனே, அதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மற்ற மன்னர்கள் வரட்டும். அவர்கள் மூவரையும் நான் மிக நன்றாக அறிவேன். அவர்களுடைய பலம், பலவீனம் இரண்டும் எனக்கு அத்துப்படி அவர்களை என் பக்கம் இழுத்துக் கொள்வது எனக்கு மிக எளிது. அவர்களையும் என்னுடன் சேர்த்துக் கொண்டு அவரிடம் பேரம் பேசினால் எனக்குப் பாதி தர அந்த அந்தணர் மறுக்க முடியாது.”

 

குலு, காஷ்மீர, நேபாள மன்னர்கள் இதற்கு ஒத்துக் கொள்வார்களா தந்தையே?”

 

எதையும் யாரிடமும் எப்படிச் சொல்கிறோம் என்பதை வைத்தே அதை அவர்கள் ஒத்துக் கொள்வதும், மறுப்பதும் நிகழ்கிறது. உன் தந்தையின் சாமர்த்தியத்தைப் பொறுத்திருந்து பார் மகனே.”   

 

ர்வதராஜனின் அழைப்பை ஏற்று முதலில் வந்து சேர்ந்தவன் நேபாள மன்னன். அவனை பர்வதராஜன் அதீத அன்புடன் வரவேற்று தனியொரு மாளிகையில் தங்க வைத்தான். நேபாள மன்னனை சந்திரகுப்தனோ, சாணக்கியரோ முதலில் சந்தித்துப் பேசுவதை பர்வதராஜன் விரும்பவில்லை. அவர்கள் வெளிப்படையாகப் பேசிக் கொள்வது தன் நிலையைப் பலவீனப்படுத்தும் என்று பர்வதராஜன் நினைத்தான்.

 

மாபெரும் பலனைத் தரக்கூடிய ஒரு மிக முக்கிய விஷயமாய் பேச வேண்டும் என்றும், அதனால் உடனடியாகக் கிளம்பி வர வேண்டும்  என்றும் பர்வதராஜன் அழைப்பு விடுத்திருந்ததால் நேபாள மன்னன் அவசரமாகக் கிளம்பி வந்திருந்தான். அந்த மாபெரும் பலன் என்னவென்று அறிய மிக ஆவலாய் இருந்த அவனிடம் பூடகமாய் பர்வதராஜன் பேச ஆரம்பித்தான்

 

நண்பனே விஷ்ணுகுப்தர் என்றும் சாணக்கியர் என்றும் பலரும் அழைக்கக்கூடிய தட்சசீல ஆசிரியரைப் பற்றி நீ கேள்விப்பட்டிருப்பாய்

 

நேபாள மன்னன் சொன்னான். “அவர் இப்போது ஆசிரியரல்லவே நண்பரே. அவர் சந்திரகுப்தனை வாஹிக் பிரதேச அரசனாக அரியணையில் அமர்த்தியதிலிருந்து அரசர்களை உருவாக்குபவர் என்றல்லவா பிரசித்தி பெற்று விட்டிருக்கிறார். அவரைக் கேள்விப்படாதவர்கள் யாருமிருக்க முடியாதே.”

 

அந்த அந்தணரும், சந்திரகுப்தனும் இப்போது இங்கே தானிருக்கிறார்கள்

 

நேபாள மன்னன் ஆர்வத்துடன் கேட்டான். “அப்படியா? எங்கே அவர்கள்? இருவரையும் சந்தித்துப் பேச ஆவலாய் இருக்கிறது”.

 

நேபாள மன்னன் இப்படிச் சொன்னவுடன் தந்தை எப்படி சமாளிக்கப் போகிறார் என்று மலைகேது பதற்றத்துடன் பார்த்தான்

 .

(தொடரும்)

என்.கணேசன்





1 comment:

  1. இவர்களை தன் வழிக்கு கொண்டு வர சாணக்கியர் ஏதேனும் திட்டம் வைத்திருப்பார்... ஆனால்,அது என்னவென்று தான் தெரியவில்லை....

    ReplyDelete