பரசுராமன் சிரித்துக் கொண்டே சொன்னார். “சுகுமாரனுக்கு
முப்பது சதவீதப் பிரயோகமே பைத்தியம் பிடிக்க வெச்சுடும். பாண்டியனுக்கு
ஐம்பது சதவீதப் பிரயோகத்தைப் பயன்படுத்தினால் பைத்தியம் பிடிச்சுடும். ஐம்பது
சதவீதத்திற்கு மேலான பிரயோகங்கள் உக்கிரப் பிரயோகங்கள். அதெல்லாம்
நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி தவறான கர்மாவை எனக்கு உருவாக்கிடும்...”
“தப்பு செய்யறவங்களோட
கர்மாவோட பலன்களை அவங்க அனுபவிக்கற கணக்குல அது சேர்ந்துடாதா?”
“எந்த அளவுல
அவங்க கர்மா பூஜ்ஜியம் ஆகுதுன்னும், எந்த அளவுக்கு மேல
அது அதிகமாகி இதை ஏற்படுத்தறவனோட தவறான கர்மா கணக்குல சேர ஆரம்பிக்குதுன்னும் கடவுளைத்
தவிர யாராலும் துல்லியமாய்ச் சொல்ல முடியாது ஷ்ரவன். அந்த நியாயக்
கணக்கு கடவுள் ஒருத்தருக்குத் தான் தெரியும். அதனால தான் பல மதங்கள்ல நியாயத் தீர்ப்பு வழங்க முடிஞ்சவராய்
கடவுளைத் தான் சொல்றாங்க.”
இதில் இத்தனை விஷயங்கள் இருக்கின்றதா
என்று ஷ்ரவன் வியந்தான். பரசுராமன் மேலும் விளக்கினார். “உதாரணத்துக்கு
நாம பண்ற உக்கிரப் பிரயோகங்களால சுகுமாரனுக்கோ, பாண்டியனுக்கோ
பைத்தியம் பிடிச்சுடுதுன்னு வெச்சுக்குவோம். பைத்தியம்
பிடிச்ச அவங்க செய்கைகளால மத்தவங்க பல விதமாய் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கு. பாதிக்கப்படற
ஆட்கள்ல நிறைய நல்லவங்களும் இருக்கலாம். அவங்க பாதிப்பெல்லாம்
என் கர்மாலயும் வந்து சேரும்.... அதனால தான் இவங்க ரெண்டு பேரும் நிம்மதியாய் இருந்துட முடியாத
அளவுக்கு மட்டும் தான் சக்திப் பிரயோகங்கள் செய்யப் போகிறேன். ஆரம்பத்துல
சில நேரங்கள்ல மட்டும் தான் அவங்களுக்கு அந்தச் சக்திப் பிரயோகங்கள் தெரியவரும். போகப் போக
அது தெரியவரும் பொழுதுகள் அதிகமாகும். அதுல இருந்து மீள்றதுக்காய்
கண்டிப்பாய் ஏதாவது செய்யாமல் இருக்க மாட்டாங்க. தப்பு பண்ணின
ஆட்கள் எல்லாம் கண்டிப்பாய் ஒன்னு சேர்ந்து யோசிப்பாங்க. கண்டிப்பாய்
செயல்படுவாங்க. இப்படி அவங்க சமநிலை இல்லாமல் செயல்படறப்ப நிச்சயமாய் தவறுகள்
செய்வாங்க. அது உங்களுக்கு சாதகமாய் இருக்கும்...”
ஷ்ரவனுக்கு அவருடைய நிலைப்பாடு இப்போது
தெளிவாகத் தெரிந்தது. ஒரு சந்தேகம் மெல்ல மனதில் எழ அவன் அதையும் அவரிடம் கேட்டான். “சுகுமாரனுக்கு
நீங்கள் பாதிப்பை ஏற்படுத்தின விதம் எனக்கு இப்ப புரியுது. ஆனால் அவர்
வீட்டு நாய் எப்படி....?”
“அந்த வீட்டு
மண் நமக்குக் கிடைச்சதால அந்தத் தோட்டத்துல ஒரு அமானுஷ்ய சக்தி அலையை நம்மால அனுப்ப
முடிஞ்சுது. எந்த அமானுஷ்ய சக்தியையும் விலங்குகளால மனிதர்களை விட சூட்சுமமாய்
அறிய முடியும்.”
ஷ்ரவன் பிரமிப்புடன் தலையசைத்தான். ’எத்தனை
பிரம்மாண்டமான விஷயங்கள் நமக்குத் தெரியாமலேயே இருக்கின்றன. என்னவெல்லாம்
இருக்கின்றன என்று தெரிந்து கொள்ளவே வாழ்க்கை போதாதே! இப்படி
இருப்பதையே தெரிந்து கொள்ளாமல் சில்லறை விஷயங்களிலேயே எப்படி மனிதன் தங்கி வாழ்ந்து
விட்டுப் போய் விடுகிறான்!’
பாண்டியன் போன பின்னும் இயல்பு நிலைக்குத் திரும்ப சுகுமாரனுக்கு
நிறைய நேரம் தேவைப்பட்டது. திடீரென்று எங்காவது சைத்ராவின் ஆவி தெரிய ஆரம்பித்து விட்டால்
என்ன செய்வது என்ற பயம் இருந்து கொண்டே இருந்தது. சுமார்
ஒரு மணி நேரம் பீதியடையும்படி எதுவும் நடக்காத பின் தான் தைரியம் வந்தவராய் தன் வேலைகளைச்
செய்ய ஆரம்பித்தார். ஆனாலும் கூட அவரால், டாமி போல், நிம்மதியாய்
உறங்கிவிட முடியவில்லை. உறங்கிக் கொண்டிருக்கையில் ஆவி கழுத்தை நெறித்து விட்டால்
என்ன செய்வது என்ற பயம் வந்து பாடாய் படுத்தியது. அப்படி ஒரு ஆங்கிலத் திரைப்படத்தை அவர் பார்த்திருக்கிறார். பாவிகள்
ஏன் இப்படி திரைப்படங்களை எடுத்து மனிதர்களைப் பீதியடையச் செய்ய வேண்டும்? என்றைக்கோ
பார்த்தது எல்லாம் இப்போது நினைவுக்கு வந்து பயமுறுத்துகிறதே!
சிறிது நேரத்தில் அவரால் எந்த வேலையிலும்
கவனம் செலுத்த முடியவில்லை. கண்கள் தானாகச் சொருக ஆரம்பித்தன. உறங்காமல்
தாக்குப் பிடிக்க முடியாது என்ற நிலை வந்தவுடன் யோசித்தவர், கூண்டிலிருந்து
டாமியை அறைக்கு அழைத்துக் கொண்டு வந்து “இங்கேயே இருடா” என்று சொன்னார். டாமி குரைத்து
சரியென்றது.
’இரவு வரை
ஆவி வராது. அப்படியே ஆவி இடையில் வந்தாலும் கண்டிப்பாக உடனடியாக டாமி
குரைத்து அவரை எழுப்பி விடுவான்.’ சுகுமாரன் கண்களை மூடியவர் உறங்கிப் போனார். அவர் கண்விழித்த
போது மதியம் மூன்று மணி ஆகியிருந்தது. அவருடைய கைபேசி 25
மிஸ்டு கால்கள் என்று காண்பித்தது. அதில் மூன்று
மட்டும் முக்கியமான அழைப்புகள். அந்த மூவரை மட்டும் அழைத்துச் சுருக்கமாகப் பேசி விட்டு இருட்டுவதற்காக
அவர் காத்திருந்தார்.
’பாண்டியனை
இருட்டியவுடனேயே வரச் சொல்லியிருக்கலாம். அவர் வருவதாகச்
சொல்லியிருந்த பத்து மணிக்கு முன் அந்தப் பெண்ணின் ஆவி வந்து விட்டால்...?’
என்ற எண்ணம் திடீரென்று அவர் மனதில் எழுந்தது.
உடனடியாக பாண்டியனை அழைத்து, சீக்கிரம்
வரச் சொல்ல அவர் மனம் துடித்தது. கைபேசியை எடுத்து அழைக்க முற்பட்ட போதோ பாண்டியன் எகத்தாளமாய்ப்
பேசுவார் என்ற யதார்த்தம் மனதில் உறைத்தது. ‘ஏன் ஆவி
சீக்கிரமாய் வர்றேன்னு சொல்லியிருக்கான்னு எகத்தாளமாய்க் கேட்பார். இந்தச்
சனியன் பிடித்த ஆவி மற்றவர்கள் முன் எப்படியெல்லாம் என்னைத் தலைகுனிய வைத்து விட்டது!’
இருட்டுவதற்கு முன் ஏதாவது தற்காப்பு
நடவடிக்கை எடுத்துக் கொள்ள முடியுமா என்று சுகுமாரன் யோசிக்க ஆரம்பித்தார். கூகுளில்
ஆவியைத் துரத்துவது எப்படி, ஆவி வராமல் தடுத்துக் கொள்வது எப்படி என்று தேட ஆரம்பித்தார்.
கூகுளில் கிடைத்த தகவல்கள் எதுவும்
சுகுமாரனுக்கு நம்பிக்கை தரவில்லை. வெளிநாட்டினர் பலரும்
ஆவி நெருங்காமல் தடுப்பவைகளாக சிலுவையையும், பைபிளையும்
சொல்லி இருந்தார்கள். உள்நாட்டுக்காரர்கள் பலரும் தாயத்து, திருநீறு
பற்றிச் சொல்லியிருந்தார்கள். சிலர் மந்திரித்த எலுமிச்சம்பழத்தையும், சிலர் விளக்குமாறையும்
கூடச் சொல்லியிருந்தார்கள். எல்லோரும் தெளிவாக ஒரே கருத்தை ஏன் சொல்ல மாட்டேன்கிறார்கள். பேய்கள்
பற்றிய அனுபவங்கள் மக்களுக்குப் போதாதோ?
ஒருவர் அறிவுபூர்வமாய் அலசுவது போல்
நீண்ட கட்டுரை எழுதியிருந்தார். முடிவில் அவர் மயான காளி படத்தை வீட்டில் வைத்திருந்தால்
ஆவி பேய்கள் வராது என்று சொல்லியிருந்தார். ஆவிகளையும், பேய்களையும்
ஆட்சி செய்பவள் அவளே என்பதால், மயான காளி பூஜிக்கப்படும் இடத்தில் அவை வர அஞ்சும் என்றும்
முடிவில் ஆணித்தரமாய்ச் சொல்லியிருந்தார். அந்தக்
கட்டுரைக்குக் கீழ் பலரும் கருத்து தெரிவித்திருந்தார்கள். அவர் சொன்னபடி
செய்து ஆவி, பேய்களின் தொந்தரவிலிருந்து விடுபட்டதாய் பலரும் நன்றியுடன்
சொல்லியிருந்ததைப் படிக்கையில் சுகுமாரனுக்கு அது சரியாக இருக்கலாம் என்று தோன்றியது.
சுகுமாரன் கடிகாரத்தைப் பார்த்தார். மணி நான்கரை. உடனே மயான
காளி படம் வாங்க அவர் கிளம்பினார். இருட்டுவதற்குள்
வீட்டுக்கு மயான காளி வந்து விட்டால் அதன் பின் ஆவி வரத் தயங்கலாம்...
மயான காளியின் படம் கிடைப்பது சுகுமாரனுக்கு எளிதாக இருக்கவில்லை. அவர் சாமிப்படங்கள்
விற்கும் பல கடைகளில் ஏறியிறங்கி சலித்தார். எல்லாக்
கடைகளிலும் கிட்டத்தட்ட மற்றெல்லா தெய்வப் படங்களும் இருந்தன. ஒரு கடைக்காரர்
கல்கத்தா காளியின் படம், மயான காளியின் படத்துக்கு இணையானது என்று சொல்லி அந்தப் படத்தை
விற்பனை செய்யப் பார்த்தார். ஆனால் சுகுமாரன் அது உண்மை தானா என்று சோதித்துப் பார்க்க
விரும்பவில்லை. ’நீ உன் இஷ்டத்துக்குச் சொல்லுவே. அந்த ஆவி
அப்படி நினைச்சு என் வீட்டுக்குள்ளே வராம இருக்கணுமே’
கடைசியாக ஒரு கடையில் இருந்த இளைஞன்
அவரிடம் சொன்னான். “சார், யாரும் அந்த மாதிரி படங்களை வீட்டுக்கு வாங்கிட்டு போறதில்லை. அதெல்லாம்
மந்திரவாதிகள் தான் அதிகமாய் பயன்படுத்தறாங்க. வேணும்னா
ஒன்னு செய்வோம். நெட்ல மயான காளி படங்களை காட்டறேன். அதுல உங்களுக்குப்
பிடிச்ச ஒரு படத்தை நீங்க தேர்ந்தெடுங்க. அதை கலர் ப்ரிண்ட்
எடுத்து ஃப்ரேம் போட்டுக் குடுத்துடறேன். என்ன சொல்றீங்க?”
சுகுமாரனுக்கு அது நல்ல ஆலோசனையாகத்
தோன்றியது. சரியென்றார்.
(தொடரும்)
என்.கணேசன்
“தப்பு செய்யறவங்களோட கர்மாவோட பலன்களை அவங்க அனுபவிக்கற கணக்குல அது சேர்ந்துடாதா?”
ReplyDeleteஇந்த வரிகளை இன்னும் தெளிவாக புரியும்படி எழுதியிருக்கலாம்...அனுபவிக்கிறவங்க கணக்குல சேருமா? அனுபவிக்க காரணமானவங்க கணக்குல சேருமா??