தனநந்தன் கங்கைக் கரைக்குச் செல்லவிருக்கும் தகவல் அவன் கிளம்புவதற்கு முன்பே ஜீவசித்திக்குச் சொல்லப்பட்டது. மன்னரின் பாதுகாப்புக்கு காவல்வீரர்களை ஒதுக்க வேண்டியிருந்ததால் இது போன்ற பயணங்கள் எப்போதுமே அவனுக்கு முன்கூட்டியே சொல்லப்படும். மிக அருகில் உள்ள இடங்களுக்குச் செல்லும் போது மன்னரின் ரதத்தின் முன்னும் பின்னும் செல்ல பத்து குதிரை வீரர்களை அவன் எப்போதும் நியமிப்பது வழக்கம். இந்த முறை பத்து குதிரை வீரர்களில் ஒருவனாக அவனே சென்றான். தனநந்தனின் ரதத்தின் பின்னால் செல்லும் வீரர்களில் ஒருவனாகச் சென்றவன் கங்கைக் கரையில் ரதத்தில் இருந்து தனநந்தன் இறங்கிய கணம் முதல் அவனையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
தனநந்தன் ஏதோ கவலையாலும்
யோசனைகளாலும் பாதிக்கப்பட்டவன் போலத் தெரிந்தான். கங்கையில் மூழ்கிக் குளிக்கும் போது
அவன் பார்வை கரையில் இருக்கும் யாகசாலை பக்கம் அடிக்கடி சென்றது. குளித்து முடித்த
பின் அவன் சற்று பதற்றத்துடனே யாகசாலையை நோக்கிச் செல்வதையும் ஜீவசித்தி கவனித்தான்.
யாகசாலையின் சாவியை தேரோட்டியிடம் தந்த தனநந்தன் அவன் பூட்டைத் திறக்கும் வரை கூடப்
பொறுமை இல்லாமல் தவிப்பதை ஜீவசித்தியால் கவனிக்க முடிந்தது. ஆனால் உள்ளே போன தனநந்தன்
உடை மாற்றி வெளியே வந்த வேளையில் கவலை, யோசனை, பதற்றம் அனைத்தும் தொலைத்து அமைதியாக
மாறி விட்டிருந்தான்.
ஜீவசித்தியிடம்
சாணக்கியர் சொல்லியிருந்தார். “அவனைப் போல் செல்வத்தின் மீது பித்து பிடித்தவனுக்கு
இவ்வளவு தொலைவில் ஒளித்து வைக்கும் செல்வம் பத்திரமாக இருக்கிறதா என்று அவ்வப்போது
வந்து பார்க்காமல் இருக்க முடியாது. ஏதாவது ஒரு காரணம் சொல்லிக் கொண்டு அவன் அடுத்த
முறை அப்படிப் பார்த்து விட்டுப் போனவுடனேயே நீ என் ஆட்களிடம் தெரிவிக்க வேண்டும்.”
ஜீவசித்தி தனநந்தன்
பின் அரண்மனை வரை போய் விட்டு மன்னன் பாதுகாப்பாய் அரண்மனைக்குள் புகுந்தவுடன், வேகமாகத் தன் வீட்டுக்குப் போனான். அவன் வீட்டின்
முன்னிருந்த துளசிச் செடியில் சிறிய மஞ்சள் துணியைக் கட்டினான். அது தான் ஒரு புதிய
செய்தி இருக்கிறது என்று சாணக்கியரின் ஆட்களுக்கு அவன் தெரிவிக்கும் சங்கேதக் குறிப்பு.
வணிகர்களாகவும், யாத்திரீகர்களாகவும் பாடலிபுத்திரம் வரும் அந்த ஆட்கள் அவன் வீட்டு
முன் உள்ள துளசி செடியில் மஞ்சள் துணி கட்டியிருந்தால் பார்த்து விட்டு அவனைத் தொடர்பு
கொள்வார்கள்.
மூன்று நாட்கள்
கழித்து வணிகன் வேடத்தில் இருந்த சாரங்கராவ் ஜீவசித்தியைத் தொடர்பு கொண்டான். “என்ன
தகவல் நண்பரே?”
ஜீவசித்தி சொன்னதைக்
கவனமாகக் கேட்டுக் கொண்டு விட்டு சாரங்கராவ் சொன்னான். “நன்றி நண்பரே. இந்தச் செய்திக்காகத்
தான் ஆச்சாரியர் காத்துக் கொண்டிருந்தார். இனி நாம் இங்கே செய்ய வேண்டிய வேலையை ஆரம்பிக்கலாம்
என்று நினைக்கிறேன். எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு ஒரு வாரத்தில் தங்களைச் சந்திக்கிறேன்”
சந்திரகுப்தனும் சாணக்கியரும் பேசிக் கொண்டிருந்த வேளையில்
காவலன் வந்து சொன்னான். “ஆச்சாரியரைச் சந்தித்துப் பேச காந்தார அரசரிடமிருந்து தூதன்
வந்திருக்கிறான்”
சந்திரகுப்தன் ஆச்சாரியரைப்
பார்த்தான். சாணக்கியர் காவலனிடம் ”வரச் சொல்” என்று சொல்லிவிட்டு சந்திரகுப்தனிடம்
சொன்னார். “மிக முக்கியமான தகவல் இருந்தால் ஒழிய ஆம்பி குமாரன் தூதனை நம்மிடம் அனுப்பியிருக்க
மாட்டான்.”
சற்று நேரத்தில்
சந்திரகுப்தனையும், சாணக்கியரையும் வணங்கி நின்ற தூதன் சாணக்கியரிடம் ஆம்பி குமாரன்
அனுப்பிய செய்தியைச் சொல்ல ஆரம்பித்தான். ஆம்பி குமாரன் எழுத்து மூலமாகச் செய்தி அனுப்புவது
மிக ஆபத்தான செயல் என்று எண்ணி தன் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஊழியனிடம் வாய்மொழியாகவே
சொல்ல வேண்டிய செய்தியைச் சொல்லி அனுப்பியிருந்தான்.
”வணக்கத்திற்குரிய
ஆச்சாரியருக்கு காந்தார அரசர் ஆம்பி குமாரர் தன் வணக்கங்களை அனுப்பியுள்ளார். அலெக்ஸாண்டரின்
தளபதியாக இருந்த செல்யூகஸுக்கு பாபிலோன், பாரசீகம், பாரதம் ஆகிய பகுதிகளை ஆளும் அதிகாரம்
தரப்பட்டிருப்பதாகத் தகவல் வந்திருந்தது. அதனால் சத்ரப் என்ற நிலையில் ஆம்பி குமாரர்
பாரதப்பகுதிகளில் நடந்த சமீப கால நிகழ்வுகளைத் தெளிவுபடுத்தி யவன அதிகாரியான க்ளைக்டஸை
செல்யூகஸிடம் தகவல் அனுப்பியிருந்தார். செல்யூகஸிடம் பேசி விட்டு வந்த க்ளைக்டஸ் செல்யூகஸ்
பாரத நிகழ்வுகளில் கடும் அதிருப்தி அடைந்திருப்பதாகச் சொல்கிறான். அதிலும் முக்கியமாக
காந்தார அரசர் மீது அதிருப்தியுடன் இருப்பதாகச் சொல்லி பயமுறுத்துகிறான். நேரடியாகச்
சொல்லா விட்டாலும் காந்தாரத்தையும் கூட செல்யூகஸ் கையகப்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக
க்ளைக்டஸ் சூசகமாகச் சொல்கிறான். அங்கு போய் வந்ததிலிருந்து க்ளைக்டஸின் போக்கில் தெரியும்
மாற்றங்களும் அதற்கு வாய்ப்பு இருப்பதாக காந்தார மன்னரை எச்சரிக்கின்றன. பாபிலோனிலும்
பாரசீகத்திலும் உள்ள பணிகளை முடித்து விட்டு செல்யூகஸ் பாரதம் வரவிருப்பதாகவும், யவனர்களுக்கு
எதிராக நடந்து கொண்டவர்களைத் தண்டித்து இழந்த பகுதிகளை மீட்டு யவன சாம்ராஜ்ஜியத்தை
இங்கு அமைக்கப் போவதாகவும் களைக்டஸ் கூறுகிறான். அதற்காக செல்யூகஸ் பெரும்படையுடன்
இரண்டு மாதங்களுக்குள் பாரதம் வரவிருக்கிறான் என்றும் சொல்கிறான். மாறவிருக்கும் சூழ்நிலையை உங்கள் கவனத்திற்குக் கொண்டு
வந்து காந்தார அரசர் அடுத்து செய்ய வேண்டியது என்ன என்று வழிநடத்தும்படி தங்களை வேண்டிக்
கொள்கிறார்.”
சாணக்கியர் சிறிது
யோசித்து விட்டு சந்திரகுப்தனைப் பார்த்தார். ’நீங்கள் என்ன சொன்னாலும் சரி’ என்று
சந்திரகுப்தன் பார்வையிலேயே சொன்னான். சாணக்கியர் காந்தார தூதனிடம் சொன்னார். “காந்தார
அரசருக்கு என் ஆத்மார்த்தமான ஆசிகளைத் தெரிவிப்பாயாக தூதனே! யார் நமக்குரிய மரியாதையும்
கௌரவமும் தருவதில்லையோ அவர்களைப் பொறுத்துப் போக வேண்டிய அவசியமும் நமக்கில்லாமல் போகிறது.
பொறுத்துக் கொண்டு போனால் பாதாளம் வரை சிறுமைப்படுத்தவும் எதிரிகள் தயங்க மாட்டார்கள்.
அன்னியர்களான யவனர்கள் எத்தனை பெரிய படையோடு வந்தாலும் நாம் அவர்களுக்கு அடிமைப்பட
வேண்டியதில்லை. காந்தாரத்தைக் கைப்பற்றுவேன் என்ற அச்சுறுத்தலைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை.
ஒன்றிணைந்த பாரதம் என்ற என் கனவுக்கு ஆதரவு தரத் தயாராக காந்தார அரசன் இருந்தால், வெளிப்படையாகவே
யவனர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சந்திரகுப்தனின் உதவியை எப்போதும் நாடலாம். கேகயத்திற்கு
உதவியது போல காந்தாரத்திற்கும் உதவ சந்திரகுப்தன் தயாராகவே இருக்கிறான் என்று உன் அரசரிடம்
தெரிவி. தேவைப்பட்டால் செல்யூகஸ் வரும் போது அவனை எதிர்கொள்ள படையோடு அங்கே வர சந்திரகுப்தன்
தயாரென்று சொல்வாயாக!”
“அப்படியே சொல்கிறேன் ஆச்சாரியரே.” என்று தலைதாழ்த்தி வணங்கி விட்டு தூதன் சென்றான்.
சந்திரகுப்தன்
சாணக்கியரிடம் கேட்டான். “ஆம்பி குமாரன் வெளிப்படையாக யவனர்களை எதிர்க்கத் துணிவானா
ஆச்சாரியரே?”
“சில வருடங்களுக்கு
முன் அவன் அப்படிச் செய்ய வாய்ப்பில்லை. ஆனால் இப்போது அவன் மாறி விட்டான் சந்திரகுப்தா.
இல்லாவிட்டால் அவனுக்கு விடுக்கப்படும் மிரட்டல்களையும் கூட நமக்குத் தெரிவிக்க ஆளனுப்பி
இருக்க மாட்டான். நாம் உதவுவோமா, மாட்டோமா என்று தெரிந்து கொள்ள விரும்பி தான் அவன்
தூதனுப்பியிருக்கிறான். நாம் உதவிக்கு வரத் தயார் என்று நிச்சயமாகத் தெரிந்த பின்னும்
யவனர்களை அவன் பொறுத்துக் கொள்ள மாட்டான்.”
சந்திரகுப்தன் தலையசைத்து
விட்டுக் கேட்டான். “செல்யூகஸைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ஆச்சாரியரே?”
சாணக்கியர் சொன்னார்.
“அவன் சிறந்த வீரன். அலெக்ஸாண்டருடன் சேர்ந்து
பல போர்களில் போராடியவன். புத்திசாலி. யூடெமஸ் போல எடுத்தேன் கவிழ்த்தேன் என்று தான்தோன்றித்
தனமாக நடந்து கொள்ளக் கூடியவன் அல்ல. அவன்
தெரிவித்தபடி பெரும் படையுடன் வந்தால் அவனை எதிர்த்து வெல்வது நமக்கும் சுலபமாக இருக்காது.”
சந்திரகுப்தன் புன்னகைத்தான்.
உள்ள நிலைமையை உள்ளது போலவே எப்போதுமே பார்க்க முடிந்த அவர் அதை வெளிப்படையாகச் சொல்லவும் என்றும்
தயங்கியதில்லை. “அப்படியானால் நாம் அதற்குத் தகுந்தாற்போல் நம்மை மேலும் வலிமைப்படுத்திக்
கொள்ள வேண்டும். அவ்வளவு தானே?” என்று ஆச்சாரியரைப் புன்னகையுடன் கேட்டான்.
“அவ்வளவே தான் சந்திரகுப்தா”
என்று சாணக்கியரும் புன்னகையோடு சொன்னார். “விழித்த நிலையில் கனவு காணும் மனிதர்கள்
கனவை நிறைவேற்ற எளிதான சூழ்நிலைகளே அமைய வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. சூழ்நிலைகள்
கடுமையாகும் போது தங்களை மேலும் வலிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதனால் நாமும் அதையே
செய்வோம். நம் வலிமை பாரதத்தை ஒன்றிணைக்கும் அளவுக்கு வளரட்டும்”
(தொடரும்)
என்.கணேசன்
ஒவ்வொரு முறை பிரச்சினை ஏற்படும் போதும் சாணக்கியர்... சந்திரகுப்தனை வலிமையாக்கிக் கொண்டே போகிறார்....
ReplyDeleteஇம்முறை ஆம்பிக்குமாரன் யவனர்களோடு நட்பு பாராட்ட மாட்டான் ...அவர்களை எதிர்த்து சந்திரகுப்தனோடு சேர்ந்து நிற்பான்.