சுகுமாரன் யோகாலயத்துக்குப் போய்ச் சேர்ந்த போது அதிகாலை மணி
4.05. இரண்டாவது ’கேட்’டையும் தாண்டி பார்க்கிங்கில் காரை நிறுத்தி விட்டுக் கீழே
இறங்கிய போது டாமியும் அவருடன் சேர்ந்து இறங்க முயன்றது. “நோ டாமி. நீ இங்கேயே
இரு” என்று அன்புடன் அதட்டலாகச் சொன்னார்.
டாமி லேசாக உறுமி தன் அதிருப்தியைத்
தெரிவித்தாலும், அமைதியாக காரிலேயே அமர்ந்து கொண்டது. ”குட் பாய்” என்று சொல்லி
விட்டு அங்கே சுற்றிலும் இருந்த சிறிய கட்டிடங்களைப் பார்த்தார். தூரத்தில்
ஒரு கட்டிடத்தின் முன்னால் நின்றிருந்த ஒரு உருவம் கையை உயர்த்தி அசைத்தது அரையிருட்டில்
மங்கலாகத் தெரிந்தது.
‘இவன் என்ன
இந்த நாட்டுக்குப் பிரதமரா? இருக்கற இடத்துல இருந்தே கை ஆட்டறான்...”
என்று சுகுமாரன் மனம் பொருமினார். யோகி பிரம்மானந்தா
அப்படிச் செய்திருந்தால் அவர் அதைப் பெரிதுபடுத்தியிருக்க மாட்டார். ஆனால் எங்கும், இரண்டாம்
நிலை ஆள்கள் அவருக்கு மரியாதை தருவதைக் குறைத்துக் கொண்டால் அவரால் தாங்க முடிவதில்லை. பல்லைக்
கடித்துக் கொண்டு அந்த மனிதரை நோக்கி சுகுமாரன் நடக்க ஆரம்பித்தார்.
அவர் நெருங்கும் வரை அசையாமல் சிலை
போல் நின்று இருந்த அந்த மனிதர், அவர் நெருங்கியவுடன் “குட்மார்னிங்
டாக்டர்” என்று மிகவும் தாழ்ந்த குரலில் சொல்ல, சுகுமாரனும்
அதிருப்தியை மறைத்துக் கொண்டு “குட்மார்னிங் பாண்டியன்” என்று சொன்னார்.
“மெல்லப்
பேசுங்க டாக்டர். நீங்க வந்திருக்கிறது இங்கே எல்லாருக்கும் தெரிய வேண்டியதில்லை” என்று பாண்டியன்
மறுபடியும் தாழ்ந்த குரலில் சொன்னது சுகுமாரனுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் பாண்டியன்
சொன்னதிலும் தப்பில்லை என்பதும் அவருக்குப் புரிந்தது. ’ஏற்கெனவே
இங்கே ஒரு கருப்பு ஆடு இருப்பது இவர்களுக்குத் தெரிய வந்திருக்கிறது. அது சைத்ராவின்
அப்பனுக்கு ஒரு மொட்டைக் கடிதம் எழுதியது தான் பெரிய பிரச்சினையாக பின்னர் வெடித்திருக்கிறது. அதனால் தான் இவன் எச்சரிக்கையாக இருக்கிறான்...’
பாண்டியன் அவரை அந்தக் கட்டிடத்திற்குள்
அழைத்துச் சென்றார். பாண்டியனுக்கு
வயது சுமார் ஐம்பது இருக்கும். வெள்ளைச் சட்டையும், வேட்டியும் அணிந்திருந்தார்.
இதற்கு முன் அவர்களுக்குள் நடந்த இரண்டு சந்திப்புகளிலும் கூட அவர் இதே
போல் தான் வெண்ணிற உடையில் இருந்தது சுகுமாரனுக்கு நினைவுக்கு வந்தது. ஆனால் இந்த அதிகாலை சந்திப்பிலும் கூட பாண்டியன் அப்படி இருந்தது வினோதமாய்த்
தோன்றியது.
தன் அலுவலக அறைக்கு சுகுமாரனை அழைத்துப் போன பாண்டியன் அவரை
அமர வைத்து விட்டு அமைதியாகக் கேட்டார்.
“சொல்லுங்க டாக்டர், என்ன விஷயம்?”
சுகுமாரன் பாண்டியனிடம் தன் அனுபவத்தை
வரிசையாகவும், விரிவாகவுமே சொல்ல ஆரம்பித்தார். ஆரம்பிக்கும்
போதே அவர் சொன்னார். “முதல்ல ஒரு உண்மையை நீங்க புரிஞ்சுக்கணும். நான் நாத்திகன். கடவுளையே
நம்பாதவன், பேய், ஆவி, சூனியம் மாதிரியான விஷயங்களை எப்படி நம்புவேன்? அப்படிப்பட்ட
எனக்கு நேத்து ராத்திரியிலிருந்தே நம்ப முடியாத அமானுஷ்ய அனுபவம்...”
நேற்றிரவு நண்பர் ஒருவர் தந்த விருந்தில்
கலந்து கொண்டுவிட்டு வீடு திரும்புவதில் இருந்து ஆரம்பித்த சுகுமாரன் தன் வயிற்றில் எரிச்சலை உணர்ந்தது, காதில்
ரீங்காரம் கேட்டது, வீட்டில் டாமி விடாமல் குரைத்துக் கொண்டிருந்தது எல்லாம்
சொல்லி விட்டு வீட்டில் காரை நிறுத்தி இறங்கும் போது சைத்ராவைப் பார்த்ததைச் சொன்னவுடன்
பாண்டியனின் உணர்ச்சியில்லாத முகத்தில் கட்டுப்பாட்டையும் மீறி லேசான சிரிப்பு எட்டிப்
பார்த்தது.
பாண்டியன் சொன்னார். “நான் சொல்றேன்னு
தப்பா நினைக்காதீங்க டாக்டர். பார்ட்டில ட்ரிங்க்ஸ் சாப்டுருப்பீங்க. காரமாய்
எதாவதும் சாப்டிருப்பீங்க. அதோட விளைவுகள் தான் உங்க அனுபவங்கள்னு எனக்குத் தோணுது.”
சுகுமாரன் பொங்கியெழுந்த கோபத்தை மிகவும் கஷ்டப்பட்டு அடக்கிக்
கொண்டு சொன்னார். “நான் டாக்டர். அதுவும் நாத்திகன்னும்
சொல்லியிருக்கேன். நடக்கிறது எது பிரமை, எது நிஜம்னு
எனக்குத் தெரியாதா பாண்டியன்? நான் சொல்றதை முழுசா கேட்டுகிட்டு உங்க அபிப்பிராயம் சொல்லுங்க
போதும், சரியா?”
பாண்டியன் முகத்தில் சிரிப்பு மறைந்து
பழையபடி உணர்ச்சியின்மை தெரிந்தது. தலையை லேசாக அசைத்தார். சுகுமாரன்
இங்கே வந்து சேர்ந்தது வரையான தன் அனுபவங்களைச் சொல்லி விட்டுச் சொன்னார். “நான் அந்தக்
காட்சியைப் பார்த்த இடத்தைப் பார்த்து தான் டாமியும் குரைச்சான். காவித்
துணி எரிஞ்சது எங்களுக்கு மட்டுமல்லாமல் கூர்க்காவுக்கும் தெரிஞ்சுது. நான் வீட்டை
விட்டு வந்த பிறகு தானா வயிற்றுல எரிச்சல் குறைஞ்சுது. காதுல கேட்ட
ரீங்காரம் குறைஞ்சு போச்சு.”
பாண்டியன் தலையை அசைத்தாலும், தன் பழைய
சிந்தனை ஓட்டத்தில் இருந்து மாறிவிடவில்லை. இந்த முறை
சிறிதும் சிரிப்பில்லாமல் அவர் கேட்டார். “சார் நீங்க சைத்ராவைப்
பத்தியே நினைச்சுகிட்டு இருந்தீங்களோ?”
சுகுமாரன் கோபத்தில் வெடித்து விடாமல்
இருக்க பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டி வந்தது. ‘இந்த மரமண்டையனுக்கு
உண்மையைப் புரிய வைப்பது எப்படி?’ என்ற சலிப்பும் வந்தது. பிரம்மானந்தா
மதுரைக்குப் போகாமல் இங்கேயே இருந்திருந்தால் இந்த மரமண்டையனிடம் பேச வேண்டிய துர்ப்பாக்கியம்
வந்திருக்காதே என்றும் மனம் சலித்தது. ஒரு பெருமூச்சு
விட்ட சுகுமாரன் பாண்டியனைக் கடுமையாகப் பார்த்தபடி சொன்னார். “சைத்ராவை
எரிச்ச நாளோட நான் மறந்தாச்சு. நான் பிஸி மேன் பாண்டியன். எனக்கு
இந்த சில்லறை விஷயங்களை எல்லாம் நினைக்க நேரம் கிடையாது. அவள் உருவத்தை
என் வீட்டுத் தோட்டத்துல நான் பார்க்கிற வரைக்கும் ஒரு தடவை கூட நினைச்சதில்லை, போதுமா?”
வர வர பைத்தியங்கள் சமூகத்தில் அதிகமாகி
வருகின்றன என்று பாண்டியன் எண்ணிக் கொண்டார். நேற்று
அந்த இன்ஸ்பெக்டர், இன்று இந்த டாக்டர். இவர்களுக்குப்
பைத்தியம் பிடித்தவுடன் அவரைத் தேடி வருவது தான் பாண்டியனுக்குப் பிரச்சினையாகத் தோன்றியது. இன்ஸ்பெக்டர்
செல்வத்திடம் கறாராக நடந்து கொண்டது போல் சுகுமாரனிடம் நடந்து கொள்ள முடியாது என்பதால்
பாண்டியன் பொறுமையாகச் சொன்னார். “நான் ஏழாம்
கிளாஸ் வரைக்கும் தான் படிச்சவன் டாக்டர். உங்கள மாதிரி
வெளிநாட்டுக்குப் போய்ப் பெரிய படிப்பு படிச்ச ஆளில்லை. எங்க கிராமத்துல
எங்கெல்லாம் பேய் உலாவுது, ஆவி தெரியுதுன்னு சொல்றாங்களோ அங்கெல்லாம் நான் ராத்திரி 12
மணிக்குப் போய் அதிகாலை வரைக்கும் பல நாள் காத்திருந்திருக்கேன். ஆனால் எத்தனையோ
பேருக்கு காட்சி குடுத்த பேயும், ஆவியும் எனக்கு அந்த பாக்கியத்தை ஒரு தடவையும் குடுத்தது
கிடையாது. அதுக்குன்னு
உங்க அனுபவம் பொய்யின்னும் சொல்ல மாட்டேன். இதுல யாரோ
உங்க கிட்ட வேணும்னே விளையாடறாங்கன்னு எனக்குத் தோணுது. ஏன்னா மாயா
ஜாலத்துல காவித் துணி எரிய வாய்ப்பு இல்லைங்கறதை நானும் ஒத்துக்கறேன். ஆனா பேய், ஆவியோட
வேலையா இதை நினைக்கறதை விட எவனோ உங்களை பயமுறுத்த நினைக்கிற முயற்சியா தான் எனக்குப்
படுது.”
“காவித்துணி
எரிஞ்சது வேணும்னா அப்படி இருந்திருக்கலாம். எவனோ துணியில நெருப்பை பத்த வெச்சு வெளியே இருந்து உள்ளே வீசியிருப்பான்னே
வெச்சுக்குவோம். ஆனா மத்தது?”
பாண்டியன் இந்தப் படித்த முட்டாளுக்கு
எப்படிப் புரிய வைப்பது என்று யோசித்தார். ’வெளிநாட்டுச்
சரக்கடித்து, கண்டதையும் சாப்பிட்டு வந்த இந்த டாக்டருக்குப் போதையில்
தெரிஞ்சதையும், காரத்தைத் தின்னு வயிறெரிஞ்ச சமாச்சாரத்தையும் புரிய வைக்கிறது
கஷ்டம் தான். நல்லா பயந்து போயிருக்கற சமயத்துல ஒருத்தனுக்கு நாத்திகமும்
உதவாது, படிச்ச படிப்பும் உதவாதுங்கறது இவரைப் பார்த்தாலே தெரியுது. பகுத்தறிவாவது
உதவுதான்னு பார்ப்போம்...’.
பாண்டியன் பொறுமையாகச் சொன்னார். “சைத்ராவோட
ஆவி இங்கே வராம உங்களை மட்டும் தேடி வந்திருக்கிறது எதனாலன்னு நினைக்கிறீங்க டாக்டர்? எங்களை
விட அவ ஆவிக்கு உங்க மேல கோபம் அதிகமா, இல்லை பிரியம் அதிகமா? அதை எப்படி
எடுத்துக்கறது? அவ செத்து எத்தனை நாளாச்சு? அவ ஆவி
இத்தனை நாள் என்ன செஞ்சுகிட்டு இருந்தது? டூர் எதாவது போயிடுச்சா? இத்தனை
லேட்டா ஏன் வந்துச்சு?”
(தொடரும்)
என்.கணேசன்
Sir, sathurangam novel, weekly publish aaguma...
ReplyDeleteஆகும். சாணக்கியன் முடிந்த பிறகு.
Delete'சுகுமாரன் சொல்வது உண்மையல்ல' என்று பாண்டியனுக்கு தோன்றினாலும்.... இச்சமயத்தில் சுகுமாரன் பிரச்சினையை சரிசெய்ய பாண்டியன் உதவ வேண்டும்..
ReplyDeleteஇச்சமயத்தில் பாண்டியன் கைவிரிப்பது அவர்களுக்கு எதிராக மாறிவிடும்...