Thursday, May 16, 2024

சாணக்கியன் 109

 

ந்திரகுப்தன் படையோடு கிளம்புவதற்கு முன் தினம் சாணக்கியர் அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான். அவன் ஒவ்வொரு முறையும் தன் வாழ்வின் மிக முக்கியமான வேலைகளில் ஈடுபடுவதற்கு முன்பு அவருடன் பேசிக் கொண்டிருப்பதை ஒரு முக்கிய சடங்கு போல் கருதினான். அவருடன் பேசிக் கொண்டிருக்கையில் மனம் தெளிவடைவது போலவும், மாபெரும் சக்தி பெறுவது போலவும் உணர்வான். அது அந்த முக்கிய வேலையை முடித்து வரும் வரை போதுமானதாக இருக்கும்.   

 

சாணக்கியர் அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தார். ”சந்திரகுப்தா. நாம் ஒரு இலக்கில் முழுமையாக நம் கவனத்தைக் குவித்து வாழும் போது அந்த இலக்கு நிறைவேற நமக்கு வேண்டிய சூழ்நிலைகளை இயற்கை நமக்கு அமைத்துக் கொடுக்கிறது. மகதம் நம் சக்திக்கு மீறிய வலிமை படைத்தது என்றாலும் நாம் நம் இலக்கை கைவிட்டு விடவில்லை. அதை மெச்சி நம் வலிமையை அதிகரிக்க உதவுவது போல் கேகயத்தில் நிகழ்ச்சிகள் நடந்தேறி இருக்கின்றன. யூடெமஸ் கேகயத்தை நம் பக்கம் தள்ளியிருக்கிறான். நாமாக எத்தனை முயற்சி செய்திருந்தாலும் இது நடந்திருக்க வாய்ப்பில்லை. இந்த வாய்ப்பை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.”

 

“ஆம்பி குமாரன் யூடெமஸுடன் சேர்ந்து நம்மை எதிர்க்க வராத வரை நாம் வலிமையான நிலையிலேயே இருக்கிறோம் ஆச்சாரியரே. அவன் ஒரு சத்ரப் என்ற நிலைப்பாட்டை எடுத்து தன் சகா யூடெமஸுக்கு உதவ வேண்டிய நிர்ப்பந்த்தத்துக்கு தள்ளப்பட்டு விடமாட்டான் அல்லவா?”

 

சாணக்கியர் சொன்னார். “நாம் அவனுக்குப் பிரச்சினை ஆகாத வரை ஆம்பி குமாரனும் நமக்குப் பிரச்சினை ஆக மாட்டான். அதனால் அந்தச் சந்தேகம் உனக்குத் தேவையில்லை. ஆனால் எந்தக் காரணத்தைக் கொண்டும் போகின்ற பாதையில் எங்கேயும் நம் படைகள் காந்தாரப் பகுதிக்குள் நுழையாமல் செல்வது அவசியம். அப்படி நுழைந்தால் தான் அவன் வேறு வழியில்லாமல் நம்முடன் போரிட வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுவான்.”

 

“கண்டிப்பாக அந்தத் தவறைச் செய்யப் போவதில்லை.” என்றான் சந்திரகுப்தன். ஆச்சாரியர் சொல்வது போல மனிதன் மனம் சிதறாமல் ஒரு இலக்கை நோக்கிப் பயணிக்கையில் எத்தனையோ உதவிகளும், அனுகூலங்களும் வந்து சேர்கின்றன என்று எண்ணிக் கொண்டான். ஒரு காலத்தில் அவர்களுக்குப் பரம எதிரியாக இருந்த ஆம்பி குமாரன், ஆச்சாரியரைக் கொல்லவும் துணிந்தவன், பின் எப்படி ரகசிய நண்பனாக மாறிவிட்டான்! ஆம்பி குமாரன் மனம் மாறி ஆச்சாரியரை நேரடியாகச் சந்தித்து மன்னிப்பு கேட்டுப் பேசி விட்டுச் சென்றதை முதலில் அவர் தெரிவித்த போது அவனுக்கு ஆம்பி குமாரனை முழுமையாக நம்பக் கஷ்டமாகவே இருந்தது.    

 

அதை அவன் முகபாவனையிலேயே உணர்ந்து அப்போது சாணக்கியர் சொன்னார். “அவன் மாறியிருப்பது உண்மை சந்திரகுப்தா. பிலிப்பின் மரணம் அவனுக்குப் பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று நினைக்கிறேன். பிலிப்பை நாம் தான் கொன்றோம் என்று அவன் எண்ணியிருக்கிறான். அதை மாற்ற வேண்டும் என்று நானும் நினைக்கவில்லை. அந்தப் பயம் மட்டுமல்லாமல் அவன் அறிவு இப்போது சிறிது சிறிதாக வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறது என்று நினைக்கிறேன். காந்தாரத்திற்குள் நாம் எந்தப் பிரச்சினையும் செய்யாத வரை நமக்கு நிதியுதவி கூடச் செய்ய அவன் தயாராக இருப்பதாகவும் சொன்னான். அவனுடைய பழைய சூழ்ச்சி எதுவும் தென்படவில்லை. பார்ப்போம். காலம் தான் நம் அனுமானங்கள் சரியா என்பதைத் தெரிவிக்க வேண்டும்.”

 

காலம் அவர் அனுமானம் சரியென்றே காட்டியது. ஆம்பி குமாரன் அதன் பிறகு உதவிகரமாகவே இருந்தான். புருஷோத்தமனும் அவனைப் போல் இருந்தால் தங்கள் நிலைமை மேலும் வலுவடையும் என்று சந்திரகுப்தன் பல முறை எண்ணியிருக்கிறான். புருஷோத்தமன் அலெக்ஸாண்டரிடம் தோற்றதால் வேறு வழியில்லாமல் யவனர்களைச் சகித்துக் கொண்டு இருக்கிறாரேயொழிய யாருக்கும் அடிபணியும் ரகம் அல்ல அவர். மற்றவர்கள் தனக்கு அடிபணிய வேண்டும் என்று நினைப்பவர் அவர். அவர் இருந்த போது முடியாதது இறந்ததால் முடிந்திருக்கிறது. கேகயம் அவர்கள் பக்கம் வந்திருக்கிறது. ஆச்சாரியர் சொன்னது போல இலக்கில் ஒருவன் உறுதியாக இருந்து உழைப்பானேயானால் விதி எதிர்பாராத விதங்களில் உதவி செய்கிறது என்று எண்ணித் திருப்தியுடன் சந்திரகுப்தன் புன்னகைத்தான்.

 

யூடெமஸ் ஆம்பி குமாரனின் கடுமையான பதிலால் அதிர்ச்சியடைந்தான். அலெக்ஸாண்டர் அந்த அற்பப்பதருக்கு சத்ரப் பதவியை எப்படிக் கொடுத்தான் என்று மனம் புழுங்கினான். அன்னியர்களை ஓரளவுக்குத் தான் நம்ப வேண்டும். அலெக்ஸாண்டர் நண்பன் என்ற பட்டத்தை முதலில் தந்து, பின் சத்ரப் பட்டத்தையும் தந்ததற்கு யவனர்களுக்கு ஆம்பி குமாரன் தகுந்த பாடம் புகுத்தி விட்டான். இதுவே ஒரு யவனன் அந்தப் பதவியில் இருந்திருந்தால், எதிரிகளுடன் கைகோர்த்து எதிர்க்கத் துணிந்த கேகயத்தின் போக்கைக் கண்டு ரத்தம் கொதித்திருப்பான்.  வாயு வேகத்தில் படைகளைக் கிளப்பிக் கொண்டு உதவிக்கு இங்கு வந்திருப்பான்.   

 

எதற்கும் இருக்கட்டும் என்று முன்னெச்சரிக்கையாக யூடெமஸ் படை உதவி கேட்டு சசிகுப்தனுக்கும் கடிதம் அனுப்பியிருந்தான். சசிகுப்தன் அங்கு நிலவரம் சரியில்லை என்றும் என்னேரமும் பாரசீகத்தில் மறுபடி கிளர்ச்சிகள் நடக்கும் அறிகுறிகள் தெரிகிறதென்றும், அப்படி அங்கு எதாவது கிளர்ச்சிகள் நடக்குமானால் முதலில் பாதிக்கப்படுவது அருகிலிருக்கும் அவன் தான் என்பதால் முழுப்படையுடன் விழிப்பாக இருக்க வேண்டிய நிலையில் இருப்பதாகவும், அதனால் படைகளை அனுப்ப முடியாத துர்ப்பாக்கிய நிலையில் இருப்பதாகவும் உடனடியாகப் பதில் அனுப்பியிருந்தான்.

 

அலெக்ஸாண்டரின் உதவி பெற்று நல்ல நிலைக்கு உயர்ந்த இந்த இழிபிறவிகள் அலெக்ஸாண்டர் நியமித்த சத்ரப்பான அவனுக்கு நன்றி கெட்டத்தனமாய் உதவ மறுத்தது யூடெமஸுக்குக் கடுங்கோபத்தை ஏற்படுத்தியது. அவன் படைத்தலைவன் போர் யுக்திகள் குறித்து அவனைக் கலந்தாலோசிக்க வந்த போது அவன் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் நடுங்கிக் கொண்டு இருந்தான். ஆம்பி குமாரனையும், சசிகுப்தனையும் நாக்கூசும் வார்த்தைகளில் அவன் சலிக்காமல் திட்டியதை படைத்தலைவன் பரிதாபமாகக் கேட்க நேர்ந்தது.     

 

அந்த நேரத்தில் ஒற்றன் வந்ததால் படைத்தலைவன் காதுகள் தப்பின. ஒற்றன் யூடெமஸிடம் சொன்னான். “வாஹிக் பிரதேசத்திலிருந்து சந்திரகுப்தன் படையோடு கிளம்பி விட்டான் சத்ரப்”

 

கடுத்த முகத்துடன் யூடெமஸ் படையின் எண்ணிக்கை வலிமை குறித்தெல்லாம் ஒற்றனைக் கேட்க ஒற்றன் மாறாத முகபாவத்துடன் பதில் சொன்னான்.

 

யூடெமஸ் கேட்டான். “அவன் கேகயம் சென்று அவர்களோடு இங்கே வரப் போகிறானா, இல்லை நேராக இங்கே வருகிறானா?”

 

“நேராக இங்கே வருவது போல் தான் தோன்றுகிறது. ஏனென்றால் கேகயத்தில் இருந்தும் படைகள் கிளம்பியிருக்கின்றன. சேர்ந்து வருவதாக இருந்தால் அவர்களுக்காக இவர்கள் காத்திருந்திருப்பார்கள்.”

 

கேகயத்திலிருந்து படைகள் கிளம்பியிருக்கும் தகவல் யூடெமஸை மேலும் கோபமூட்டியது. “என் அதிகாரத்திலிருக்கும் படைகளே எனக்கெதிராகக் கிளம்பி வருகின்றனவா? அங்கே எல்லாருக்கும் தங்கள் அடையாளங்கள் மறந்து போய் விட்டனவா? உப்பிட்ட கைகளை வெட்டுமளவு கயவர்களாக அனைவரும் மாறி விட்டார்களா? நான் எந்த மாதிரியான காட்டுமிராண்டிக் கூட்டங்களுக்கு சத்ரப்பாக இருக்கிறேன். அங்கிருக்கும் யவன வீரர்கள் இந்த அராஜகத்தை எப்படிச் சகித்துக் கொள்கிறார்கள்”

 

ஒற்றன் தயக்கத்துடன் சொன்னான். “யவன வீரர்களை கேகயத்தின் பாதுகாப்புக்கு விட்டு விட்டு மற்றவர்களைக் கிளப்பிக் கொண்டு தான் மலயகேது வருகிறான்.”

 

“அந்தப் பாதுகாப்புக்கு வேலைக்கு அவர்கள் எப்படி ஒத்துக் கொண்டு அங்கே இருக்கிறார்கள். அவர்களுடைய சத்ரப்புக்கு எதிராகப் படைகள் கிளம்புகின்றன என்றால் அங்கேயே அவர்களை வெட்டி வீழ்த்த அவர்கள் வீறுகொண்டு எழ வேண்டாமா? அத்தனை பேருக்கும் புத்தி பேதலித்து விட்டதா?”

 

ஒற்றன் இதற்கு பதில் சொல்வதா வேண்டாமா என்று யோசித்தான். யூடெமஸ் அதற்கும் கோபப்பட்டான். “என்ன நீ ஊமையாகி விட்டாயா?”

 

ஒற்றன் தயங்கிக் கொண்டே மெல்லச் சொன்னான். “சக்கரவர்த்தி அலெக்ஸாண்டரே மதிப்புடன் நடத்திய ஒருவரை நீங்கள் சதி செய்து கொன்று விட்டீர்களாம். அலெக்ஸாண்டரே இருந்திருந்தாலும் உங்களைத் தண்டித்திருப்பாராம்.... அப்படியெல்லாம் சொல்லி நம் யவன வீரர்களின் மனதைத் தங்கள் பக்கம் கேகயத்தில் மாற்றியிருக்கிறார்கள்”

 

யூடெமஸ் கோபமிகுதியில் கத்தினான். “ஒரு கிழவன் இறந்ததற்கு இத்தனை முக்கியத்துவம் தர என்ன இருக்கிறது? புருஷோத்தமன் இறந்தாலும் அவன் மகன் அரியணை ஏற நான் எந்த மறுப்பும் சொல்லவில்லையே. நாட்டையேவா நான் பிடுங்கிக் கொண்டேன். ஆள் மாறினாலும் அரியணை அவர்களிடமே அல்லவா இருக்கிறது? என் அதிகாரத்திற்கு உட்பட்ட அங்கிருந்து இங்கு ஐநூறு யானைகளை மட்டுமல்லவா நான் நகர்த்தியிருக்கிறேன். ஒரு சத்ரப்புக்கு அந்த அதிகாரம் கூட இல்லையா? இதைக் கேட்க அங்கே அறிவுள்ளவர்கள் யாருமில்லையா?”

 

ஒற்றன் தூண் போல் உணர்ச்சிகள் காட்டாமல், அசையாமல் நின்றான்.  ஆனால் படைத்தலைவன் சிரிக்காமல் இருக்க மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது.

 

(தொடரும்)

என்.கணேசன்  

6 comments:

  1. சாணக்கியர் தன் இலக்கில் உறுதியாக இருப்பதால் தான்.... பிலிப்பின் கொலை முதல், புருஷோத்தமன் கொலை வரை அனைத்தும்.... அவர்களுக்கு அனுகூலமாகவே உள்ளது....

    ReplyDelete
  2. Hi sir, i read sathurangam novel, it's great as usual. Are you writing next one now ? I'm eagerly waiting for that.

    ReplyDelete
    Replies
    1. Started writing "Ratchakan" and the hero is Amanushyan Akshay.

      Delete
    2. Again " *AMANUSHYAN AKSHAY* " meet pandrathula romba santhosham sir..

      Delete
  3. 500 elephants going to be turned against him. Hope Chanak changed their mind also. It is important to set a narrative for each instance

    ReplyDelete