Monday, January 15, 2024

யோகி 32

 

ந்தத் துறவி சொன்னது போலவே பத்து நிமிடம் கழித்து தானாக திவாகரனின் கால் கீழே இறங்கியது. அது வரை தொடர்ந்து ஏதேதோ முயற்சி செய்து கொண்டு இருந்தவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். திவாகரனுக்கும் அவன் நண்பர்களுக்கும் மட்டுமே அந்தச் சம்பவத்தின் பின்னணி தெரிந்திருந்தது. மற்றவர்கள் பிரச்சினை ஆரம்பித்தது எப்படி என்றோ, முடிவுக்கு வந்தது எப்படி என்றோ அறியாதவர்களாய் இருந்ததால் வியப்புடன் தங்களுக்குள் அது பற்றிப் பேசிக் கொண்டே கலைந்தார்கள்.   

 

தில்லு திவாகரனுக்குப் பேச முடிந்தாலும் எதுவும் பேசவில்லை. தலையைத் திருப்ப முடிந்தாலும் அந்தத் துறவியின் பக்கம் திரும்பவில்லை. அவனுக்கு அங்கிருந்து போனால் போதும் என்றிருந்தது. சிறிதும் பீதி குறையாதவனாய் அங்கிருந்து அவன் வேகமாய் நடக்க ஆரம்பித்தான். பரசுராமன் தவிர மற்றவர்களும் அந்தத் துறவியை பயத்துடன் பார்த்து விட்டுப் பின் தொடர்ந்தார்கள். பரசுராமன் மட்டும் அங்கேயே நின்றார். நண்பர்கள் திரும்பிப் பார்த்து சைகையால் அழைத்த போதுநான் வருகிறேன். நீங்கள் போங்கள்என்று அவர் பதிலுக்குக் கையால் சைகை செய்து சொன்னார். அவர்கள் போய் விட்டார்கள்.


பரசுராமன் மட்டும் போகாமல் அங்கேயே நின்று கொண்டிருந்ததைப் பார்த்து விட்டு அந்தத் துறவி அவனைஇனியும் என்ன?’ என்பது போல் பார்த்தார்.

 

பரசுராமன் பிரமிப்புடன் அவர் அருகே மண்டியிட்டு அமர்ந்து கேட்டார். “எப்படி?”

 

அவர் பரசுராமனைக் கூர்ந்து பார்த்தார். சிறுவன் விளையாட்டாகக் கேட்கவில்லை, உண்மையாகவே அறிந்து கொள்ளும் பேரார்வத்துடன் கேட்கிறான் என்பது அவருக்குப் புரிந்ததும் அவர் முகத்தில் சிறு புன்முறுவல் மலர்ந்தது. புன்னகையுடன் சொன்னார். “உனக்கு இப்ப சொன்னா புரியாது. நீ இன்னும் கொஞ்சம் பெரியவனாகணும்

 

பரசுராமன் சொன்னார். “நான் பெரியவனான பிறகு கேட்க நீங்க எனக்குக் கிடைக்க மாட்டீங்களே

 

அவர் எதுவும் சொல்லாமல் மௌனமாக இருந்தார். பரசுராமன் சிறிது பொறுத்து விட்டுச் சொன்னார். “எனக்கும் இதெல்லாம் கத்துக்க ஆசையாய் இருக்கு

 

அவர் மென்மையாகச் சொன்னார். “இதெல்லாம் கேட்கவும், பார்க்கவும் ரொம்ப சுவாரசியமாய் இருக்கும். ஆனா கத்துக்கற வழி சுவாரசியமா இருக்காது. நிறைய பயிற்சிகள் செய்யணும். நீண்ட காலம் செய்யணும். அது சீக்கிரமே அலுத்துடும்.”

 

எனக்கு அலுக்காதுபரசுராமன் உறுதியாகச் சொன்னார். வெறும் ஒரு பார்வையால் தில்லு திவாகரனைப் போன்றவர்களை சிலையாக நிற்க வைத்து பயமுறுத்தித் துரத்த முடிந்த அந்த சக்தியை அடைய எதுவும் எத்தனை காலமும் செய்யலாம் என்று பரசுராமனுக்குத் தோன்றியது.

 

அந்தத் துறவி கூர்ந்து பார்த்து விட்டு சொன்னார். “இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சும் உனக்கு இதே ஆர்வம் இருந்தால் என் கிட்டே வா

 

அவர் திருச்சூரில் இருக்கும் அவர் விலாசத்தையும் சொன்னார். சொல்லி விட்டு அவர் எழுந்து சென்று விட்டார். அந்த விலாசத்தை மனப்பாடம் செய்து கொண்ட பரசுராமன் வீட்டுக்குச் சென்றவுடன் முதல் வேளையாக ஒரு நோட்டுப் புத்தகத்தின் கடைசிப் பக்கத்தில் அந்த விலாசத்தை எழுதி வைத்துக் கொண்டார்.

 

இரண்டு வருடங்கள் கழித்து ப்ளஸ் டூ தேர்வு எழுதி முடித்து விட்டு பலத்த வாக்குவாதத்திற்குப் பின் தந்தையின் அனுமதி வாங்கி விட்டு பரசுராமன் திருச்சூர் புறப்பட்டார்.

 

திருச்சூரில் விலாசம் தேடி பரசுராமன் சென்ற போது, அந்தத் துறவி அவரைப் பார்த்து ஆச்சரியப்பட்டது போல் தெரிந்தது. ஏதோ அந்த நேர ஆர்வத்தில் தான் அந்தச் சிறுவன் அப்படிக் கேட்கிறானே ஒழிய, அவர் சொன்னபடி இரண்டு வருடம் காத்திருந்து சென்னையிலிருந்து இத்தனை தூரம் வர மாட்டான் என்று அவர் நினைத்திருந்தது போலத் தெரிந்தது. ஆனாலும் அவர் பரசுராமனை வரவேற்று தன்னுடன் தங்க வைத்தார். அங்கு சென்ற பிறகு தான் அவர் பெயர் சதானந்தன் என்று பரசுராமன் தெரிந்து கொண்டான்.

 

பரசுராமன் அங்கு சென்று சேர்ந்த போது சதானந்தனுடைய சிறிய ஆசிரமத்தில் அவரும் அவருடைய வேலையாள் ஒருவன் மட்டுமே இருந்தார்கள். அவர் பரசுராமனுக்கு அதிகாலையிலும், இரவு நேரத்திலும் மட்டுமே கற்றுத் தந்தார். மீதமுள்ள நாட்பொழுதில் நிறைய வேலைகள் செய்ய வைத்தார். ஏழு மணி நேரத்திற்கு மேல் உறங்க பரசுராமனை அவர் அனுமதிக்கவில்லை. ஆனாலும் பரசுராமனுக்கு அவர் மீது வருத்தம் இருக்கவில்லை. ஏனென்றால் அவர் கற்றுத் தருவதில் மிக வல்லவராக இருந்தார். எதையும் ஏன் செய்கிறோம், எப்படிச் செய்ய வேண்டும், அதில் உள்ள சிக்கல்கள், சிரமங்கள், ஆபத்துகள் எல்லாம் என்ன, அவற்றைத் தவிர்ப்பது எப்படி என்பதையெல்லாம் தெள்ளத் தெளிவாக அவர் பரசுராமனுக்கு விளக்குமளவுக்கு நிபுணராக இருந்தார். முக்கியமாக, எதையும் உள்ளதை உள்ளபடியே தெரிவிக்கக்கூடிய நேர்மை அவரிடம் பூரணமாக இருந்தது.

 

அவர் ஆரம்பத்திலேயே பரசுராமனிடம் சொன்னார். “நான் சித்தி அடைஞ்சது மந்திர, தந்திரங்கள்ல தான். இது ஞான மார்க்கம் அல்ல. ஞான மார்க்கத்தில் போகிறவன் செய்யற தவறுகள் அவனுக்கு ஞானம் கிடைக்கறதைத் தாமதிக்க வைக்கும். பழைய நிலைமையிலேயே அவனை அதிகம் உழல வைக்கும். அவ்வளவு தான். ஆனா அவனைத் தண்டிக்காது. ஆனா மந்திர தந்திரங்கள்ல ஒருத்தன் செய்யற தவறுகள் அவனைத் திருப்பித் தாக்கக்கூடியவை. தீ, மின்சாரம் இந்த ரெண்டையும் பயன்படுத்தறப்ப ஒருத்தன் எத்தனை ஜாக்கிரதையாய் இருக்கணுமோ, அத்தனை ஜாக்கிரதையாய் மந்திர, தந்திரங்கள்லயும் இருந்தாகணும். இதில நீ அஜாக்கிரதை காட்டினால் அந்த அஜாக்கிரதை உன்னை அழிக்கவும் செய்யும். இதை நீ எப்பவுமே மறக்கக்கூடாது.”  

 

 

தானந்தன் முதல் பாடமாக பரசுராமனிடம் சொன்னார். “உன் மனவலிமையும், மனக்கட்டுப்பாடும் தான் உனக்கு சக்திப் பிரயோகங்களின் அஸ்திவாரம். அது எந்த அளவு உறுதியாகவும், வலிமையாகவும் இருக்கோ அது தாங்கற அளவு தான் நீ சக்திகளை உன் வசப்படுத்த முடியும். அந்த அஸ்திவாரம் வலிமையா  இல்லாதப்ப அது  மேல கட்டப்படும் கட்டிடம், எதிர்ப்புகளால் சோதிக்கப்படறப்ப தானா சரிஞ்சுடும்.”

 

பரசுராமன் அங்கு சென்று சேர்ந்த முதல் வருடம் முழுவதும் மனக்கட்டுப்பாடும், ஒழுங்குமுறையும் மட்டுமே பல வழிகளில் கற்றுக் கொள்ள வேண்டி வந்தது. சதானந்தன் முன்பே எச்சரித்தது போல அது ஒரு மாதத்திலேயே அவருக்கு அலுத்துப் போய் விட்டது. அதையும் மீறி அங்கே அவர் தங்கி முயற்சிகளைக் கைவிடாமல் இருக்கக் காரணமாக இருந்தவர் சதானந்தன் தான். அவர் அவ்வப்போது செய்து காட்டிய சக்திப் பிரயோகங்கள் பரசுராமனுக்கு, பிரமிக்க வைக்கும் தூண்டுகோல்களாக இருந்தன.

 

சக்தி உபாசகரான சதானந்தன் பக்தர்களை செவ்வாய், வெள்ளி - இந்த இரண்டு நாட்கள் மட்டுமே சந்திப்பார். அந்த இரண்டு நாட்களில் குறைந்த பட்சம் ஐம்பது முதல் எழுபது வரை ஆட்கள் வருவார்கள். நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ஆட்கள் வருவார்கள். சிலர் எதையாவது தெரிந்து கொள்ள வந்தார்கள். தொலைந்த ஆட்கள், தொலைந்த பொருட்கள் பற்றி அதிகம் கேட்பவர்களாக அந்த வகையினர் இருந்தார்கள். சிலர் ஆவிகள், பேய் பிசாசுகள், பில்லி சூனியம் போன்ற பிரச்னைகளிலிருந்து தீர்வு கேட்டு வருபவர்களாக இருந்தார்கள். இந்த இரு வகை ஆட்களும் வந்த காரியம் முடிந்து திருப்தியுடன் செல்வதை பரசுராமனால் பார்க்க முடிந்தது. சதானந்தன் பக்தர்களிடமிருந்து இவ்வளவு வேண்டும் என்று கறாராய்க் கேட்டு வாங்காதவராய் இருந்தார். அங்கிருந்த பெரிய தாம்பாளத் தட்டில் பக்தர்கள் தங்கள் சக்திக்கும், விருப்பத்துக்கும் ஏற்ப பணத்தை வைத்து விட்டுப் போவார்கள்.. அது பெரும்பாலும் குறைவானதாக இருக்காது.

 

மூன்றாவது வகையினரும் வருவதுண்டு. அவர்கள் பில்லி, சூனியம் அடுத்தவர்களுக்கு வைக்க அவரை அணுகுவதுண்டு. பெரும்பாலும் அதை சதானந்தன் தவிர்த்து விடுவது வழக்கம். பாவப்பட்டவர்கள், மிக நல்லவர்கள், குழந்தைகள் ஆகிய மூன்று வகையினருக்கு எதிராக எதையும் செய்ய அவர் உறுதியாக மறுத்து விடுவார். காரணம் கேட்ட பரசுராமனிடம் அவர் சொன்னார். “இந்த மூனு வகை ஆளுகளுக்கு எதிராகச் செய்யற எதுவும் பல மடங்காய் ஒரு நாள் நமக்கே திரும்பி வந்துடும். அதிலருந்து எவனும் தப்பிக்க முடியாது”.

 

சில தீய மனிதர்களுக்கு எதிராக எதையாவது செய்ய அவர் ஒத்துக் கொள்வதுண்டு. ஆனால் முதலில் அந்த மனிதர்கள் தீயவர்கள் தான் என்று தனிப்பட்ட முறையில் உறுதி செய்யாமல் அவர் அவர்களுக்கு எதிரான பில்லி சூனியங்களில் ஈடுபட்டதில்லை.


(தொடரும்)

என்.கணேசன்




1 comment:

  1. பரசுராமன் சக்திகளை அடைந்த விதம் சுவாரஸ்யமாக உள்ளது... அதே நேரத்தில் எனக்கு பல பயனுள்ள விசயங்களும் கிடைக்கிறது...

    ReplyDelete