Thursday, December 14, 2023

சாணக்கியன் 87

 

லெக்ஸாண்டரின் மரணம் எல்லா யவனர்களையும் போலவே புஷ்கலாவதியில் இருந்த யூடெமஸையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்றாலும் அவன் க்ளைக்டஸைப் போலவோ, மற்ற பல யவன வீரர்கள் போலவோ சோகத்தில் ஆழமாக ஆழ்ந்து விடவில்லை. ’இனி இங்கு நம் நிலைமை என்ன?’ என்று அவன் யோசிக்க ஆரம்பித்தான். அலெக்ஸாண்டரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்றாலும் அதிகாரத்திற்கு யாராவது உரிமை கொண்டாடி வரக்கூடும். அப்படி அதிகாரத்திற்கு வருபவர்கள் பாரதத்தில் அலெக்ஸாண்டர் வென்ற பகுதிகளையும், அங்கு யார் சத்ரப்பாக இருக்கிறார்கள் என்பதையும் பற்றிக் கவலைப்படுவார்களா என்று தெரியவில்லை. அப்படியே அதிகாரத்திற்கு வரும் நபர் பாரதம் குறித்து ஆர்வம் காட்டினாலும் இங்கு வந்து ஆதிக்கம் செலுத்த வாய்ப்புகள் குறைவு. அதனால் இங்கு இருக்கும் நிலைமையை ஸ்திரப்படுத்திக் கொண்டால் இங்கேயே ஒரு அரசனைப் போல் இருந்து விடலாம் என்று அவனுக்குத் தோன்றியது.

 

முதலிலேயே புத்திசாலித்தனமாக அவன் சிந்துப் பிரதேசத்திற்கு வடக்கில் தானும், தெற்கில் ஆம்பி குமாரனும் பார்த்துக் கொள்ளலாம் என்று ஆம்பி குமாரனுக்குத் தெரிவித்திருந்தது இப்போது யூடெமஸுக்கு மிக நன்மையாகப் பட்டது. ஆனால் அவன் முன்பு கேள்விப்பட்டது போல ஆம்பி குமாரன் முட்டாள் அல்ல. தெற்கில் கவனித்துக் கொள்வது என்றால் அதற்கேற்றபடி வாஹிக் பிரதேசத்தில் இழந்த பகுதிகளை மீட்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுக்க அவன் தயாராக இல்லை என்பதைத் தெளிவாகவே தெரிவித்து விட்டான். ’அப்படி மீட்க வேண்டுமானால் நீயும் படையுடன் வா, நாம் சேர்ந்து போவோம்என்று சொல்லி விட்டுச் சும்மா இருக்கிறான். அவனைச் சொல்லியும் தப்பில்லை. உயிர்ப்பயம் யாரை விட்டது?     

 

இங்கே நிலைமையை ஸ்திரப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால் கூடுதல் படைபலம் இருப்பது நல்லது என்று யூடெமஸ் நினைத்தான். ஆம்பி குமாரனிடம் கேட்பது எந்தப் பலனும் தராது என்பது புரிந்து விட்டது. ஏற்கெனவே அவன் தன் படைகளை யவனர்கள் அதிகம் எடுத்துக் கொண்டு போய் விட்டதாய் புலம்பிக் கொண்டிருக்கிறான் என்று சில படைத்தலைவர்கள் யூடெமஸிடம் சொல்லியிருக்கிறார்கள். மேலும் ஆம்பி குமாரனும் ஒரு சத்ரப் ஆக இருப்பதால் அவனை அதிகாரம் செய்து கேட்க வழியில்லை.

 

காந்தாரத்திற்கு அதிகப்படியாக படைபலம் இருப்பதும், அடுத்து இருப்பதும் கேகயம் தான். யானைப்படை முதற்கொண்டு கேகயத்தின் படைகள் மிக வலிமையானவை. அந்தப் படைகளைப் பார்த்து அலெக்ஸாண்டரே அசந்து போனதாக யூடெமஸ் கேள்விப்பட்டிருக்கிறான். அதனால் கேகயத்திலிருந்து படைகளைத் தருவிக்கலாம். சத்ரப் ஆன அவன் ஆணையிட்டால் அனுப்ப வேண்டிய நிலையில் இருப்பவன் புருஷோத்தமன்....  இந்த சிந்தனைகளின் முடிவில் யூடெமஸ் புருஷோத்தமனுக்கு ஆணை பிறப்பித்து ஒரு கடிதம் அனுப்பி வைத்தான்.

 

யூடெமஸின் ஆணையைப் படித்த புருஷோத்தமன் ஆத்திரமடைந்தார். ஆணையைக் கொண்டு வந்த தூதனை அவர் பார்த்த பார்வை எரித்து விடுவதாக இருந்தது. ஆனால் தூதனிடம் கோபித்துக் கொள்வதில் அர்த்தம் இல்லை என்பதை உணர்ந்த அவர்நாளை வந்து என் பதிலைப் பெற்றுக் கொண்டு போஎன்று மட்டும் சொல்லி அனுப்பி வைத்தார்.

 

அவன் வெளியேறும் வரை கஷ்டப்பட்டு அமைதி காத்த புருஷோத்தமன் பின் கொதித்தபடி இந்திரதத்திடம் சொன்னார். “யூடெமஸ் என்னை என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறான். அலெக்ஸாண்டரின் காலைக் கழுவிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் சத்ரப் ஆகி விட்டால் அலெக்ஸாண்டரை விடத் தங்களை உயர்வாக நினைக்க ஆரம்பித்து விடுவார்கள் போல் தெரிகிறது. தெற்கில் நடப்பது போல கலவர பூமியாக கேகயம் ஆகி விடாமல் திறம்பட நாம் பார்த்துக் கொண்டதற்கு இவன் தரும் பரிசா இது?...”

 

இந்திரதத் புரியாமல் விழிக்க அந்த ஓலையை புருஷோத்தமன் நீட்டினார். ஓலையைப் படித்துப் பார்த்த இந்திரதத்துக்கும் அது அநியாயமான ஆணையாகத் தான் தோன்றியது. சிந்துப் பிரதேசத்தை இந்தச் சூழ்நிலையில் வலிமைப்படுத்துவது மிகவும் அவசியம் என்பதால் உடனடியாக ஐநூறு யானைகள், ஆயிரம் குதிரைகள், இரண்டாயிரம் வீரர்களை சிந்துப் பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கும்படி யூதிடெமஸ் ஆணையிட்டிருந்தான்.

 

புருஷோத்தமன் சொன்னார். “சத்ரப்பாக இரண்டு பேர் நியமிக்கப்பட்ட செய்தி கேட்ட பிறகு நான் ஆம்பி குமாரனிடமிருந்து தான் அதிகப் பிரச்னைகளை எதிர்பார்த்தேன். அவன் குறைந்த பட்சம் இங்கு ஒரு முறையாவது சத்ரப் ஆக வந்து அதிகாரம் செய்துவிட்டுப் போவான் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அதிசயமாக அவன் எந்தத் தொந்திரவும் செய்யாமல் அமைதியாக இருக்கிறான். ஆனால் யூடெமஸ் பிரச்சினை தர ஆரம்பித்து விட்டான்.  புரட்சிக்காரர்கள் அதிகம் இருப்பது நம் அருகில் தான். நம்மையும், காந்தாரத்தையும் தாண்டாமல் யாரும் சிந்துப் பிரதேசத்தைத் தாக்க முடியாது. அப்படி இருக்கையில் அதிகம் படைகள் வேண்டியது இந்த இரண்டு இடங்களில் தானே ஒழிய சிந்துப் பிரதேசத்தில் அல்ல.  உண்மையில் நிலைமை இப்படி இருக்கையில் யூடெமஸ் எதை வைத்து சிந்துப் பிரதேசத்தை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்று சொல்கிறான்? நியாயமாக அவன் அங்கிருந்து நமக்குக் கூடுதல் படைகளை அனுப்ப வேண்டும். ஏனென்றால் நம் பாதுகாப்பில் தான் அவன் பாதுகாப்பு அடங்கியிருக்கிறது. அவன் அதைச் செய்யாமல் நம்மிடமிருந்து யானைகளையும், குதிரைகளையும், வீரர்களையும் கேட்கிறான் என்றால் அதைப் பொறுப்பற்ற திமிர் என்று சொல்லாமல் வேறெப்படி சொல்வது இந்திரதத்?”   

 

இந்திரதத் அமைதியாகச் சொன்னார். “அவன் கேட்டவுடன் நாம் அனுப்ப வேண்டும் என்ற அவசியம் இல்லை அரசே. இங்குள்ள நிலைமையை விவரித்து நாமும் அவனுக்கு எழுதுவோம். இங்கே மக்கள் மனதில் புரட்சிக் காரர்களுக்கு ஆதரவு இருக்கிறது, புரட்சி இங்கே வெடிக்குமானால் மக்களும் கண்டிப்பாக அவர்களை ஆதரிக்கவும், அவர்களுடன் சேர்ந்து கொண்டு போராடவும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் இங்கு எப்போதும் படைபலம் குறைவில்லாமல் தயார்நிலையில் இருக்க வேண்டியிருக்கிறது. ஏற்கெனவே படைகளில் கணிசமான ஒரு பகுதி அலெக்ஸாண்டர் இருக்கும் போதே மற்ற இடங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அதனால் குறைந்திருக்கும் படைபலம், அலெக்ஸாண்டரின் மரணத்திற்குப் பிறகு நிறைய யவன வீரர்கள் தாயகம் போய் விட்டதால் மேலும் குறைந்திருக்கிறது. இந்தக் காரணங்களால் நாம் அவன் கேட்டுக் கொண்டபடி படைகளை அனுப்பி வைக்க முடியாத நிலையில் இருக்கிறோம் என்று பதிலை அனுப்பி வைப்போம்.”

 

புருஷோத்தமன் மெல்லத் தலையசைத்தார். இந்திரதத் சொன்னதில் மிகைப் படுத்தல் சிறிதும் இல்லை. உண்மை நிலையே அது தான். “அப்படிப் பதில் அனுப்பினால் அவன் ஏற்றுக் கொண்டு சும்மா இருந்து விடுவானா?” என்று தன் சந்தேகத்தை அவர் எழுப்பினார்.

 

இந்திரதத் சொன்னார். “அதற்கு வாய்ப்பு குறைவு தான். ஆனாலும் மறுபடி அவன் வற்புறுத்திக் கேட்டால்  ஐம்பது யானை, நூறு குதிரை, இருநூறு வீரர்களை அனுப்பி வைப்போம். வணிகத்தில் பேரம் பேசுவது போலப் பேசித் தான் அவனைச் சமாளிக்க வேண்டியிருக்கும். வேறு வழியில்லை”

 

புருஷோத்தமன் பெருமூச்சு விட்டார். அருகிலிருக்கும் மலைப்பகுதிகளை எல்லாம் வென்று பர்வதேஸ்வரன் என்று பெயர் பெற்ற அவர் நிலைமை யூடெமஸ் போன்றவனை எல்லாம் சமாளிப்பதையே பெரிய விஷயமாக நினைக்கும்படியாகி விட்டதே. ஒரு தோல்வி எது வரை அவரை இழுத்து வந்து விட்டது! அலெக்ஸாண்டர் பாரதம் விட்டுச் செல்லாமல் இருந்திருந்தால், இப்படி அற்பாயுசில் இறந்து போகாமல் இருந்திருந்தால், பாரத மண்ணில் புரட்சிகள் வெடிக்காமல் இருந்திருந்தால், என எத்தனையோ இருந்திருந்தால்களை அவர் மனம் யோசிக்க ஆரம்பித்தது.    

 

ஆனால் எந்த ஆசை அனுமானத்திலும் அர்த்தமில்லை என்பதும் அவருக்குப் புரியாமல் இல்லை. நிஜங்களை சந்திக்க மறுப்பது புத்திசாலித்தனமல்ல. யூடெமஸுக்கு இந்திரதத் சொன்னது போல ஒரு கடிதம் எழுதி அனுப்புவது என்று முடிவெடுத்த அவர் மனம் அடுத்ததாக புரட்சி வீர்ர்களைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தது, அவர் கேட்டார். “அடுத்ததாய் புரட்சிக்காரர்கள் என்ன செய்வார்கள் என்று நீ நினைக்கிறாய் இந்திரதத்?”

 

“அவர்கள் என்ன செய்வார்கள் என்பது விஷ்ணுகுப்தரின் ஆலோசனையைப் பொறுத்துத் தான் இருக்கும் அரசே. அவர் திட்டம் என்னவாக இருக்கும் என்பது தெரியவில்லை.”

 

“அவர் உன் நண்பரல்லவா இந்திரதத்? நீ ஒரு முறை அவரைச் சந்தித்து நிலவரம் அறிந்து வரலாமே”

 

“அவர் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை அரசே.  அவர் சில நாட்களுக்கு முன் தட்சசீலத்திற்குத் திரும்பி வந்திருந்தார் என்று சொன்னார்கள். சில நாட்கள் இருந்து விட்டு மறுபடி எங்கோ போய் விட்டதாய்ச் சொல்கிறார்கள். அப்படி ஒரு வேளை அவரை நான் சந்தித்தாலும் அவர் என்னிடமே கூட அனைத்தையும் சொல்வார் என்று நான் எதிர்பார்க்க முடியாது. யாரிடமும், தேவையானதை மட்டும், தேவைப்படும் நேரத்தில் மட்டும் சொல்லி மீதத்தைத் தன் மனதுக்குள்ளே பூட்டிக் கொள்வதில் அவர் கெட்டிக்காரர்”

 

(தொடரும்)

என்.கணேசன்

 

2 comments:

  1. Chanakya's emergence of power is beautifully explained. Feeling as if we are witnessing the events.

    ReplyDelete
  2. அலெக்சாண்டர் இறப்புக்கு பின் சாணக்கியரின் திட்டம் என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை..
    ஒருவேளை அலெக்சாண்டரின் இறப்பையும் சாணக்கியர் முன்கூட்டியே கணித்திருப்பாரோ....?

    ReplyDelete